கோட்டுரு (கணிதம்)

6 உச்சிகளையும், 7 விளிம்புகளையும் கொண்ட பெயரிட்ட கோட்டுரு ஒன்றைக் காட்டும் வரைபடம்.

கணிதத்தில் கோட்டுரு (Graph) என்பது, சில இணைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்களின் பண்புருப் பதிலீட்டைக் (abstract representation) குறிக்கும். இவ்வாறு கணிதப் பண்புருவாக்கத்தினால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பொருட்கள் கணுக்கள் அல்லது முனைகள் எனப்படுகின்றன. இவற்றை இணைக்கும் இணைப்புகளை விளிம்புகள் என்கின்றனர். பொதுவாகக் கோட்டுருக்கள் வரைபட வடிவில் காட்டப்படுகின்றன. இவற்றில் புள்ளிகள் கணுக்களையும், அவற்றை இணைக்கும் நேர் கோடுகள் அல்லது வளை கோடுகள் விளிம்புகளையும் குறிக்கின்றன. கோட்டுரு பிரிநிலைக் கணிதத்தின் ஆய்வுப் பொருட்களுள் ஒன்றாக அமைகின்றது.

விளிம்புகள் திசையுள்ளனவாகவோ (சமச்சீரற்ற) அல்லது திசையற்றனவாகவோ (சமச்சீர்) இருக்கலாம். எடுத்துக்காட்டாக, புள்ளிகள் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆட்களைக் குறிப்பதாக வைத்துக்கொள்ளலாம். இங்கே இருவர் கைகுலுக்கிக் கொள்ளும்போது ஒரு விளிம்பு (இணைப்பு) உருவாகிறது. ஆள் A, B யுடன் கைகுலுக்கும் போது B யும் A யுடன் கை குலுக்குகிறார். இதனால் இக் கோட்டுரு திசையற்றது. இன்னொரு வகையில் பார்க்கும்போது, A க்கு B யைத் தெரியும் எனில் அங்கும் ஒரு விளிம்பு உருவாகிறது. ஆனாலும் B க்கு A யைத் தெரிய வேண்டியதில்லை ஆதலால் இங்கு உருவாகும் கோட்டுரு திசையுள்ளது ஆகும். இதன் விளிம்புகள் திசையுள்ள விளிம்புகள்.

உச்சியைக் "கணு", "புள்ளி" ஆகிய சொற்களாலும், விளிம்பைக் "கோடு" என்றும் குறிப்பதுண்டு. கோட்டுருவியலின் அடிப்படையான விடயம் கோட்டுரு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டுரு_(கணிதம்)&oldid=2971887" இருந்து மீள்விக்கப்பட்டது