சபரிமலை அய்யப்பன் கோயில்

கேரளத்திலுள்ள அய்யப்பன் கோயில்

சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் நோன்பு மேற்கொண்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். மேலும் மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் கோயில் நடை திறக்கப்படுகிறது.[1][2][3] சபரிமலை அய்யப்பன் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1535 அடி உயரத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயில்

பூப்படையாத சிறுமிகளையும், மாதவிடாய் நின்ற பெண்களையும் மட்டுமே சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது. [4]

மலைப் பாதைகள் தொகு

  1. எருமேலிருந்து அடர்ந்த காட்டுப் பாதை வழியாக 61 கிலோ மீட்டர் நடைப்பயணம்
  2. பம்பை ஆற்றிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் நடைப்பயணம்

நிர்வாகம் தொகு

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பூசை செய்யும் அதிகாரம் மட்டுமே தந்திரிகளிடம் உள்ளது. கோயிலுக்கு வெளியே நிர்வாகம் செய்யும் உரிமை திருவாங்கூர் தேவஸ்தானம் குழுவிடம் உள்ளது.

பிரசாதம் தொகு

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் சார்பாக பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்படுகிறது.

நெய் அபிசேகம் தொகு

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தலையில் சுமந்து வரும் இருமுடியில் ‎காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு அய்யப்பனுக்கு நெய்யபிசேகம் செய்யப்படும். ‎சீவாத்மாவும்பரமாத்மாவும் (சீவ - ஈஸ்வர) ஐக்கியத்தை குறிக்கும் தத்துவமாக கருதப்படுகிறது.

மண்டல பூசை தொகு

கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி 41 நாட்கள் தொடர்ந்து மண்டல பூசை நடைபெறும். மண்டல பூசை நாட்களில் அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிசேகம் உள்பட அனைத்து பூசைகளும் நடைபெறும். மண்டல பூசை முடிவதை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். தங்க அங்கி ஆரான்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக் கொண்டு வரப்பட்டு, 18 படிகள் வழியாக கடந்து, தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். பின் அன்று இரவே கோயில் நடை மூடப்படும். பின் இரண்டு நாட்கள் கழித்து மகர விளக்கு பூசைக்காக கோயில் நடை திறக்கப்படும்.

மகரவிளக்கு பூசை தொகு

இந்து புராணகால நிகழ்வின்படி, ஒரு முறை இலக்குவனுடன் ராமன் சபரிமலை காட்டிற்கு வரும் போது சபரி எனும் வயது முதிர்ந்தவரை சந்திக்கிறார். சபரி வழங்கிய காய் கனிகளை இராமர் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார். பின் அங்கு தெய்வீகக்களை பொருந்திய இளைய தவசியைக் கண்டு, சபரியிடம், தவசியை யார் எனக் கேட்டதற்கு, இவரே தர்மசாஸ்தா என உரைக்க, இராமர் தவசியிடம் செல்ல, தவசியான அய்யப்பன் இராமரை வரவேற்றார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் மகரவிளக்கு அன்று சபரிமலையில் இன்றும் கொண்டாடப்படுகிறது. மகரவிளக்கு அன்று அய்யப்பன் தன் தவத்தை நிறுத்தி, தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நாளையே மகரசங்கராந்தி எனக் கொண்டாடுகிறார்கள்.

தத்துவமசி தொகு

சபரிமலை அய்யப்பன் கோயிலின் முகப்பில் தத்துவமசி என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. அத்வைத வேதாந்த தத்துவ வாக்கியமான தத்துவமசி என்ற சொல்லை சமசுகிருத மொழியில் தத்+துவம்+அஸி எனப் பிரித்தால் தத் = அது (பிரம்மம்), துவம் = நீ, அஸி = இருக்கிறாய் எனப் பொருள். அதாவது, 'நீ அதுவாக (பிரம்மமாக) இருக்கிறாய்' என்பதை சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அய்யப்பன் உபதேச வாக்கியமாக அருள்கிறார்.

மாளிகைபுரத்து அம்மன் தொகு

மாளிகைபுரத்தம்மன் , அய்யப்பன் கோயிலில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஒரு சிறு குன்றில் வீற்றுள்ளாள். பகவதி சேவை எனும் சடங்கின்போது கண் மை, பட்டுப்பாவாடை, குங்குமம், வளையல் போன்றவைகள் பக்தர்களால் காணிக்கையாக மாளிகைப்புரத்து அம்மனுக்கு அளிக்கப்படுகிறது. தேங்காய் உருட்டு எனும் தனித்தன்மையான சடங்கும் செய்விக்கப்படுகிறது.

பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொகு

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனும் தீர்ப்பினை இந்திய உச்ச நீதிமன்றம் 28 செப்டம்பர் 2018 அன்று வழங்கியது.[5]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு