முதன்மை பட்டியைத் திறக்கவும்

சபீர் பாடியா

வரலாறுதொகு

பாட்டியா ஓர் இந்து பஞ்சாபி குடும்பத்தில் இந்திய நகரம் சண்டிகரில் பிறந்தவர். அவரது தந்தை பல்தேவ் பாட்டியா இந்தியப்படையில் அதிகாரியாகவிருந்து பின்னர் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி புரிந்து வந்தார். அவரது அன்னையார் தாமன் பாட்டியா இந்திய மத்திய வங்கியில் (CBI) உயரதிகாரியாகப் பணியாற்றினார்.[1] பாட்டியா தமது பள்ளிக்கல்வியை பெங்களூருவில் உள்ள புனித யோசஃப் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் கற்றார். 1986ஆம் ஆண்டு இராசத்தானின் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கத் துவங்கினார். இரண்டாண்டுகளிலேயே தமது படிப்பை கலிபோர்னியாவின் கல்டெக்கில் மாற்றிக்கொண்டு பட்டம் பெற்றார். பின்னர் மின்னியல் பொறியியலில் தமது பட்டமேற்படிப்பிற்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1989ஆம் ஆண்டு சேர்ந்தார்.அங்கு அதி குறை மின்னாற்றல் சில்லுகளை வடிவமைப்பில் பங்கேற்றார்.

இசுடான்ஃபர்ட்டில் படிக்கும்போதே தொழில்முனைவோர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்காட் மக்நெல்லி போன்றவர்களால் கவரப்பட்டு தானும் ஓர் தொழில் முனைவராக விரும்பினார். முதுநிலைப்படிப்பிற்குப் பிறகு முனைவர் படிப்பிற்கு செல்வதற்கிருந்த திட்டத்தை கைவிட்டு ஆப்பிளில் வேலைக்குச் சேர்ந்தார்.

ஹாட்மெயில் உருவாக்கம்தொகு

ஆப்பிள் நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்தபின்னர், சபீர் ஓர் புதியதாகத் துவங்கப்பட்ட ஃபயர்பவர் சிஸ்டம்ஸ் இன்க் என்ற நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார். 1994ஆம் ஆண்டு தனது ஆப்பிள் நிறுவன சக ஊழியர் ஜாக் ஸ்மித் என்பவருடன் இணைந்து இணையத்திற்கான புதிய கருத்துக்களை ஆய்ந்து வந்தார்.

இருவரும் இணைந்து ஜாவாசாஃப்ட் என்று பெயரிட்ட, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தரவுதளம் ஒன்றிற்கான கருத்தாக்கத்தை உருவாக்கினர். இதனை தொடர்ந்து ஆய்ந்து வருகையில் இணையத்தில் இயங்கும் மின்னஞ்சல் சேவை ஒன்றினை அமைதிடக் கூடிய வாய்ப்புக் கூறுகள் உள்ளதை உணர்ந்தனர். அதுவரை மின்னஞ்சல் சேவைகள் அவரவர் நிறுவனங்களில் நிறுவப்பட்டிருந்த வழங்கிகள் மூலமோ இணையச்சேவை நிறுவனங்களின் வழங்கிகள் மூலமாகவோத்தான் வழங்கப்பட்டு வந்தது. இணையத்தில் அணுகக்கூடிய பொதுத்தளத்தில் மின்னஞ்சல் சேவை வழங்கிட ஹாட்மெயில் என்ற பெயருடன் ஓர் அமைப்பை நிறுவினர். இதன் ஆங்கிலப் பெயரில் உள்ள - HoTMaiL - பேரெழுத்துக்களைக் கூட்டினால் வலைப்பக்கத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் மீயரை மொழியின் ஆங்கிலச் சுருக்கம் -HTML - வருமாறு பெயரிட்டிருந்தது சிறப்பாகும்.தங்களது சேவையை விரைவாக பரவலாக்க இச்சேவையை இலவசமாகக் கொடுத்தனர். வலைத்தளத்தைப் பராமரிக்கத் தேவையான வருவாய்க்கு வலைத்தளத்தில் விளம்பரங்கள் மூலம் பெற்றனர். டிரேப்பர் ஃபிஷர் வென்சர்ஸ் என்ற நிறுவனம் $300,000 முதலீடு செய்ய சூலை 4,1996 அன்று இச்சேவையைத் துவங்கினர்.[2]

ஆறு மாதங்களுக்குள்ளாகவே இத்தளம் ஒரு மில்லியன் பயனர்களைக் கவர்ந்தது. இணையவழி மின்னஞ்சல் சேவைக்கான தேவையும் ஆர்வமும் கூடுதலாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இதில் ஈடுபாடு கொண்டு திசம்பர் 30, 1997, பாட்டியாவின் 29வது பிறந்தநாள் அன்று $400 மில்லியனுக்கு வாங்கியது.

பிற தொழில்முனைவுகள்தொகு

ஹாட்மெயிலை விற்றபிறகு, ஓராண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் ஏப்ரல் 1999ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி அர்சூ.இன்க் என்ற வலைச்சேவை நிறுவனத்தைத் துவக்கினார். இருப்பினும் வலைச்சேவை நிறுவனங்கள் நொடித்த அந்த காலகட்டத்தில் இவரது நிறுவனமும் மூடப்பட்டது. 2010இல் இதனை பயணச்சேவை தளமாக அர்சூ மீண்டும் துவங்கியுள்ளார்.

சிராசு கங்கா மற்றும் விராஃப் சாக் என்பவர்களுடன் இணைந்து பிளாக் எனிவேர் (எங்கும் பதிவெழுதுக) என்ற வலைச்சேவையை துவங்கினார்.

2006ஆம் ஆண்டு, பிணைய காப்பு மென்பொருள்கள் உருவாக்குனர் நியோஏக்செல் நிறுவனத்தின் துவக்கநிலைமுதலீட்டாளராக பங்காற்றினார்.

நவம்பர் 2007, மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்கு மாற்றாக இணையத்தில் எங்கிருந்தாலும் அணுகக்கூடிய, தொகுக்கக்கூடிய மற்றும் இணையத்தின் வெளியிலும் செயல்படுத்தக்கூடிய லைவ் டாக்குமென்ட்ஸ் என்ற மென்பொருளை வடிவமைத்துள்ளார்.

சனவரி,2008 சபீர் மற்றுமொரு வலைச்சேவையாக சப்சேபோலோ.கொம்,[3] என்ற இலவச இணையவழி தொலைநிலை அரங்க அமைப்பினை துவங்கியுள்ளார்("சப் சே போலோ" என்ற இந்தி வரிகள் "அனைவருடன் பேசு" எனப் பொருள்படும்). இது 14 சூன் 2009 அன்று புதிய இணையத் தொலைபேசிச்சேவை தரும் ஜாக்ஸ்டர்(Jaxtr) என்ற நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.[4][4]

தனது தொலைநோக்குத் திட்டமாக பாட்டியா அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கினைப் போல கட்டமைப்பும் துடிப்பும் உள்ள ஓர் நகரை இந்தியாவிலும் நனோசிடி என்ற பெயரில் அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.

தனிவாழ்வுதொகு

பாட்டியா 2008ஆம் ஆண்டு வைத்தியநாத் குழுமத்தின் வாரிசான தானியா சர்மாவை திருமணம் செய்துகொண்டார். இருவரும் எட்டாண்டுகள் நண்பர்களாகப் பழகி காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் மலேசியாவிலுள்ள லங்காவியில் நடந்தது.

விருதுகள்தொகு

  • "ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர்" விருது புதுமுயற்சி முதலீட்டாளர் டிரேப்பர் ஃபிஷர் ஜுர்வெட்சன் நிறுவனத்தால் வழங்கப்பட்டது (1998)
  • அப்சைடு (Upside) இதழின் புதிய பொருளாதாரத்தில் முன்னோடி போக்கு நிறுவுபவர்களில் தலைசிறந்த 100 Elite 100 பட்டியலில் இடப்பட்டது.
  • அடுத்த பத்தாண்டுகளில் உருவாகவிருக்கும் தொழில்நுட்பத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 100 இளம் கண்டுபிடிப்பாளர்களாக எம்.ஐ.டி வழங்கிய TR100 விருது.
  • பன்னாட்டு வணிகத்தில் கவனிக்கப்படவேண்டிய மக்கள் ("People to Watch") என்று டைம் இதழ் அடையாளம் கண்டவர்களில் ஒருவர் (2002)

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபீர்_பாடியா&oldid=2220148" இருந்து மீள்விக்கப்பட்டது