சவேமாவதாவ் அடுக்குத் தூபி

சவேமாவதாவ் அடுக்குத் தூபி (ஆங்கிலம்: Shwemawdaw Pagoda; பர்மியம்: ရွှေမောဓော ဘုရား) மியான்மாரில் உள்ள பாகோ மாகாணத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பெளத்த மதக் கோவிலாகும். இது தேரவாத பௌத்தம் வழிபின்பற்றுபவர்களின் கோவிலாக உள்ளது. மக்களால் எப்போதும் தங்கக் கடவுளின் கோவில் என்றழைக்கப்படுகிறது. இந்தத் தூபியின் உயரம் 114 மீட்டர் (374 அடி) ஆகும். இதுவே மியான்மாரில் உள்ள எல்லா தூபிகளின் உயரத்தை விட மிக உயர்ந்த தூபி என்ற சாதனைக்குரியது. ஆனால் பொதுவாக மியான்மாரின் உயர்ந்த தூபி என்றால் அனைவரும் சவேடகன் அடுக்குத் தூபி (இதன் உயரம் 98 மீட்டர் (322 அடி)) என்று தான் தவறாகக் கூறுவார்கள். உண்மையில் சவேமாவதாவ் அடுக்குத் தூபிதான் மிக உயர்ந்த தூபியாகும். மேலும் சவேடகன், கியாகடியோ தூபிகளுடன் சவேமாவதாவ் தூபியும் சேர்ந்து மோன் இனத்தவர் உருவாக்கிய மிகவும் புகழ்பெற்ற தூபிகளாகும். சவேமாவதாவ் தூபித் திருவிழா ஒவ்வொரு பர்மிய ஆண்டின் டாகு மாதத்தில் 10 நாட்களுக்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[1]

சவேமாவதாவ் அடுக்குத் தூபி
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்17°20′13″N 96°29′49″E / 17.3368744°N 96.496954°E / 17.3368744; 96.496954
சமயம்பௌத்தம்
மண்டலம்பாகோ பிராந்தியம்
மாநகராட்சிபாகோ, மியான்மர்
செயற்பாட்டு நிலைசெயல்பாட்டில் உள்ளது

வரலாறு

தொகு

சவேமாவதாவ் தூபி அல்லது பாயா 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பூகம்பங்களின் காரணமாக இந்த தூபி பல முறை இடிந்து அழிந்து போனது, பூகம்பங்களில் ஒன்று 1917 ஆம் ஆண்டும் மற்றொன்று 1930 ஆண்டும் ஏற்பட்டது. 1917 ஆண்டிற்கு முந்தைய தூபியின் இடிந்தபோன பகுதிகள் இன்றும் உள்ளன. தூபி மோன் இனத்தவரால் கட்டப்பட்ட போது ஆரம்பகால உண்மையான உயரம் 21 மீட்டர் (69 அடி) உயரமாக மட்டுமே இருந்தது. மேலும், அதில் புத்தர் கொடுத்த இரண்டு முடிகளும் வைக்கப்பட்டிருந்தது. இந்த முடிகள் இரண்டும் மஹாசலா மற்றும் குல்லசலா என்ற பர்மிய வியாபரிகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது புத்தரை சந்தித்து அவரிடமிருந்து பெற்றதாக கூறப்படுகிறது. 982 மற்றும் 1385 ஆம் ஆண்டுகளில் தூபியில் புத்தரின் பற்களும் சேர்க்கப்பட்டது. இதனோடு கூடுதலாக மன்னர் தம்மாசிதி ஒரு மணியும், அரசர் பாயிந்நாங் ஒரு கிரீடமும் மற்றும் மன்னர் போதாவபாயாவால் சுருள் குடையும் வழங்கப்பட்டு கோவில் மேலும் சிறப்புப்பெற்றது. தற்போதைய தூபி, அதன் மிக அண்மைய மீளமைப்பின் மூலம், 374 அடி உயரத்தில், மியான்மரின் மிக உயரமான தூபியாக உள்ளது.

கட்டிட அமைப்பு

தொகு

இந்தத் தூபி மோன் வம்சாவழியினரால் கட்டப்பட்ட ஒரு அழகிய தூபியாகும். பர்மாவில் உள்ள மற்ற தூபிகளைப் போன்ற ஒத்த அமைப்பாக உள்ளது. தூபியின் நுழைவு வாயில் இரண்டு புறமும் இரண்டு மிகப்பெரிய சின்தி (சிங்கம்) என்ற காவல் விலங்குகள் வாயிலை காக்கின்றன. 114 மீட்டர் உயரமான தூபியை சுற்றிலும் எண்ணற்ற சிறிய தூபிகள் உள்ளன. தூபியின் மேல் பகுதியில் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட ஹதி என்றழைக்கப்படும் ஒரு அமைப்பு வைக்கப்பட்டுள்ளது.[2]

இந்தத் தூபியைச் சுற்றியுள்ள மொட்டை மாடியில் நாட் ஆவிகள் மற்றும் புத்த பிட்சுகள் வழிபடும் புத்தர் சிலைகள் கொண்ட எட்டு ஆலயங்கள் உள்ளன. வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலிலும் புதன் கிழமையில் இரண்டு கோவில்களிலும் வழிபாடு நடைபெறும். ஒவ்வொரு கோவிலின் சன்னதியும் கிழக்கு ஆசிய மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு கோள் அல்லது கிரகத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பர்மிய மக்கள் தங்களது பிறந்தநாளுக்குச் சொந்தமான கோவிலின் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்கின்றனர்.[2]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Zaw Winn (28 April 2008). "Shwemawdaw Pagoda welcomes in the New Year". Myanmar Times இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111108234136/http://www.mmtimes.com/no416/n017.htm. பார்த்த நாள்: 5 March 2012. 
  2. 2.0 2.1 https://www.renown-travel.com/burma/bago/shwemawdawpagoda.html

வெளிப்புற இணைப்புகள்

தொகு