சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில்

சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் சிங்கப்பூரில் கடற்கரையை ஒட்டிய காத்தோங் என்னும் இடத்தில் அமைந்திருக்க்கும் இந்துக் கோயில் ஆகும்.

ஆலய வரலாறு தொகு

செண்பக விநாயகர் ஆலயம் 1800 இறுதியில் காத்தோங் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டதாக வாய்மொழி வரலாறு கூறுகிறது. இப்பகுதியிலிருந்த நீர்த்தேக்கத்தில் ஒரு விநாயகர் சிலை கண்டு எடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை அருகிலிருந்த செண்பக மரத்தடியின் கீழ் வைத்து வழிபட தொடங்கினார்கள். [1]


பெயர்க் காரணம் தொகு

அவ்வட்டாரத்தில் வாழ்ந்த இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் செண்பக மரத்தடியின் கீழ் இருந்த காரணத்தால் இந்த விநாயகருக்கு செண்பக விநாயகர் என்ற காரணப் பெயரும் அமைந்தது. 1875 இலிருந்து இப்பகுதியில், இலங்கையிலிருந்து வந்த தியாகராஜா எதிர்நாயகம்பிள்ளை என்பவரும் அப்பகுதியில் வாழ்ந்த இலங்கை தமிழர்களும் சேர்ந்து இந்த செண்பக விநாயகருக்கு நாள்தோறும் பூஜைகள் செய்து வந்தார்கள். ஆரம்ப காலத்தில் வெட்ட வெளியில் அமர்ந்திருந்த செண்பக விநாயகருக்கு மரத்தைச் சுற்றி ஒரு சின்னக் கூரை குடிசை அமைத்து அமைத்துள்ளார்கள்.

இப்போது அமைந்துள்ள சிலோன் ரோடும் காரணப் பெயராகவே அமைந்தது. இலங்கைத் தமிழர்கள் அதிகமாக இங்கு தங்கியிருந்தனர். மற்றப் பகுதியிலிருந்த செண்பக விநாயகர் ஆலயம் வருபவர்களுக்கு அறிவிக்க ஓர் அறிவிப்புப் பலகையில் சிலோன் ரோடு என்று குறித்து வைத்தார்கள். அதுவே பிற்காலத்தில், காலவோட்டத்தில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

இலங்கைத் தமிழர் சங்கம் தொகு

இலங்கை தமிழர் சங்கம் 1909-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1923இல் இந்த ஆலயத்தின் சார்பில் இலங்கையில் இருந்து வந்த முன்னோடி ஒருவரால் இப்போதுள்ள நிலம் வாங்கப்பட்டது. பிறகு இந்த ஆலயம் இலங்கை தமிழர் சங்க அமைப்பின் அறங்காவர்கள் பொறுப்பின் கீழ் வந்தது. இலங்கை தமிழர் சங்க அமைப்பின் தலைவராக இருந்த வைதியக் கலாநிதி ஜே. எம். ஹண்டி (Dr.J.M.Handy) என்பவரின் நன்கொடையால் 11 ஹாண்டு சாலையில் இலங்கை தமிழர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது.

பின்னர் 1977-இல் இந்த நிலம் மறுசீரைமப்பு காரணத்தால் அரசாங்கம் கையகப்படுத்தியதால், இப்போதிருக்கும் 'பாலிஸ்டர் சாலைக்கு' இலங்கை தமிழர் சங்கம் கொண்டு வரப்பட்டது.

குடமுழுக்கு தொகு

சாதாரணக் கூரையுடன் வேயப்பட்ட ஆலயமாக இருந்த செண்பக விநாயகர் சோமநாதர் முத்துக் குமாருபிள்ளை என்பவரின் தலைமையில் செங்கல், சிமெந்துக் கட்டடமாக அமைப்பட்டது. இதன் முதலாவது குடமுழுக்கு 1930 ஜனவரி 3 இல் நடைபெற்றது.

1939இல் இங்கு நூல் நிலையம், பணியாளர்களுக்கு தங்கும் வசதி ஆகியவை செய்யப்பட்டன. இந்து சமுதாயத்தினருக்கான சமயக் கல்வியின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு 1937இல் சமயக் கல்வி வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. 1940- இல் செண்பக விநாயகர் ஆலயத் தமிழ்ப் பள்ளி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு சமய நிகழ்ச்சிகள், வகுப்புகள் நடைபெற்றன.

உலகப்போரில் கோயில் சேதம் தொகு

இரண்டாம் உலகப்போரில் 1942 ஜனவரி 22- ஆம் நாள் ஜப்பானியரின் குண்டு வீச்சால் ஆலயமும் அதன் சொத்துக்களும் சேதமடைந்தன. எனினும் மூலஸ்தான விக்கிரத்திற்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.[2]

மறு சீரமைப்பு தொகு

1955 ஜூலை 7இல் ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதே ஆண்டில், சண்டேஸ்வரர் சந்நிதி அமைக்கப்பட்டது. 1960 இன் பிற்பகுதியிலிருந்து 1980 வரை, ஆலயத்தின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்தன. 1970 ஜனவரியில் ஆலயத்தில் 60 அடி உயர இராஜகோபுரம் கட்டப்பட்டு மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்தபட்டது. 1983 ஆம் ஆண்டு புதிதாக ஒரு முத்து மணவறை மண்டபம் அமைத்து 1983 இல் 11 நாள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூன்று மாடியுடன் பல் நோக்கு மண்டபம், திருமணம் மண்டபம், புதிய ஏழு வகுப்பறைகள், நூலகம் எனப் புதிப்பிக்கப்பட்டு 1989 நவம்பர் 8 இல் திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு இனமக்களின் நன்கொடைகளின் மூலம் 72 அடி உயரமும் 5 நிலைக்கொண்ட கோபுரம் கட்டப்பட்டது.

அமைப்பு தொகு

கோயிலில் மூலவராக விநாயகரும் வலது பக்கம் சிவலிங்கமும், இடது பக்கம் மனோன்மணி அம்மையும் இருக்கிறார்கள். ஆலயச் சுற்று வட்டத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தனி மண்டப ஆலயத்தில் இருக்கிறார்கள். திருச்சபை மண்டபத்தில் நடராஜரும், சிவகாமி அம்மையும் வீற்றிருக்கிறார்கள். பைரவர், பஞ்ச முக விநாயகர் உடன் உறைகிறார்கள். இராசகோபுரத்தில் விஷ்ணு, விநாயகர், முருகன், சிவன், அம்பாள், பிரம்மா என 159 சிலைகள் இடம் பெற்றுள்ளன.

ஐந்தாவது மகா கும்பாபிஷேகம் 2003 பெப்ரவரி 7 இல் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள், பொங்கல், சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷ விரதம், கார்த்திகை விரதம், சித்திரா பெளர்ணமி, திருவிளக்கு பூஜை, மகோற்சவம், வைரவர் பூஜை, ஆடி வெள்ளி, நவராத்திரி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி போன்ற சிறப்பு விழாக்களும், பூஜைகளும் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில்
  2. சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு