வீர. லெ. சிந்நயச் செட்டியார்
வீர. லெ. சிந்நயச் செட்டியார் (1855 - 1900) 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர், சைவ சித்தாந்த வித்தகர். ஆசுகவி என்று போற்றப்பட்டவர்.[1]
வீர. லெ. சிந்நயச் செட்டியார் | |
---|---|
பிறப்பு | வீர.லெ.லெட்சுமணன் செட்டியார் 1855 தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | 1900 தேவகோட்டை |
சமயம் | இந்து |
பெற்றோர் | வீர.லெட்சுமணன் செட்டியார் - லெட்சுமி ஆச்சி |
வாழ்க்கைத் துணை | மீனாட்சி ஆச்சி |
விருதுகள் | ஆசுகவி , வித்வத் சிகாமணி |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுசிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சாதியில் "மேலவீடு' எனப்படும் செல்வக் குடும்பத்தில் 1855-ஆம் ஆண்டு வீர.லெட்சுமணன் செட்டியார் - லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். சிந்நயச் செட்டியாரின் மனைவி பெயர் மீனாட்சி. இவர்களின் ஒரே பிள்ளை காசி மூன்றாண்டுகளில் இறந்து போனது.
சிந்நயச் செட்டியாரின் குரு, தேவகோட்டை 'வன்றொண்டர்' நாராயணன் செட்டியார். இந்த வன்றொண்டர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். சிந்நயச் செட்டியாரின் மானசீக குரு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். "சிலேடைப் புலி' பிச்சுவையர், காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம், இராமநாதபுரம் ரா.ராகவையங்கார் ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்கள்.
இவருடைய உருவத் தோற்றம் யாரையும் ஈர்க்கக் கூடியது. நல்ல சிவப்பு நிறம், விபூதி, ருத்ராட்சம் அணிந்து பஞ்சகச்ச மேலாடையில் சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். கையில் எப்பொழுதும் ஓலைச்சுவடி இருக்கும். ரத்தினக் கம்பளத்தில் வீற்றிருப்பார்.
பாண்டித்துரைத் தேவர் சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர். இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ. வே. சாமிநாதையர் போன்றோர் இவரைப் பாராட்டியுள்ளனர். 'வன்றொண்டர்' நாராயணன் செட்டியார், "தன் மாணவர்களில் 'ஆசுகவி' பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே" என்று தன்னிடம் கூறியதாக உ.வே.சா., தமது வாழ்க்கை வரலாற்றில் கூறியிருக்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்த "வயிநாகரம்' குடும்பத்தைச் சேர்ந்த இராமநாதன் செட்டியார், தமது "கவிதைமலர்' என்ற நூலில், சிந்நயச் செட்டியாரைப் போற்றிப் பாடல் எழுதியுள்ளார்.
சேவைகள்
தொகுதிருவாரூரில் இவர் வாழ்ந்த காலத்தில் 'திருவிளம்பல்' என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலை புதுப்பித்தார்.
திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை தேவகோட்டைக்கு அழைத்து வந்து, தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் உள்ள தண்டபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார்.
வேலங்குடிக் கல்வெட்டில் இருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை எழுதி வெளியிட்டார்.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம்
- நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம்(1994)
- திருவொற்றியூர்ப் புராணம்
- குன்றக்குடி மயின்மலைப் பிள்ளைத் தமிழ்
- தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி
- இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி
- திருவண்ணாமலை அருணைச் சிலேடை வெண்பா
- காசி யமக அந்தாதி
- வெளிமுத்திப் புராணம்
- கும்பாபிஷேக மகிமை
- ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு
- கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல்
உசாத்துணை
தொகு- அரு. சோமசுந்தரன் (8 நவம்பர் 2009). "வித்வத் சிகாமணி சிந்நயச் செட்டியார்". தினமணி. Archived from the original on 29 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2009.
- http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=305&pno=227
- ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள “19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்“, பக்கம் 289, முதல் பதிப்பு 2003)
- ↑ நகரத்தார் கலைக்களஞ்சியம்(1998), பக்-182, மெய்யப்பன் பதிப்பகம்.