சிம்மக்கல், மதுரை
சிம்மக்கல் (Simmakkal)[1] என்ற புறநகர்ப்பகுதி, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் சாலைகள் சந்திக்கும் இடத்தில் கல்லினாலான சிம்ம (சிங்க) உருவக் கல் ஒன்று உள்ளது. இதன் காரணமாகவே இவ்வூருக்கு 'சிம்மக்கல்' என்ற பெயர் ஏற்பட்டது.
சிம்மக்கல், மதுரை Simmakkal, Madurai | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 9°55′34.0″N 78°07′17.4″E / 9.926111°N 78.121500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 158 m (518 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625 001 |
தொலைபேசி குறியீடு | 0452 |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, கீழ வாசல், செல்லூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், செனாய் நகர், யானைக்கல், நெல்பேட்டை, ஆரப்பாளையம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 158 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிம்மக்கல் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள்: 9°55'34.0"N, 78°07'17.4"E (அதாவது, 9.9261°N, 78.1215°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
தொகுமதுரை, யானைக்கல், கோரிப்பாளையம், செல்லூர், நெல்பேட்டை, கீழ வாசல், ஆரப்பாளையம் ஆகியவை சிம்மக்கல் பகுதிக்கு அருகிலுள்ள ஊர்கள் ஆகும்.
பள்ளிகள்
தொகுஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் மாநகராட்சி உமறுப்புலவர் பள்ளி ஆகியவை சிம்மக்கல் பகுதியிலுள்ள முக்கிய ஆரம்பப் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத் தொடக்க விழா, மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 15.09.2022 அன்று நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உமறுப்புலவர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கிருந்து பள்ளிகளுக்கு காலை உணவு கொண்டு செல்லும் வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்குச் சென்ற முதல்வர் அங்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.[2]
வைகை ஆறு
தொகுமதுரையில் பாய்ந்தோடும் ஆறான வைகை ஆறு சிம்மக்கல் பகுதியை ஒட்டிச் செல்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மழை அதிகமாக பெய்யும் போது, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால், வைகை ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இந்த 2022ஆம் ஆண்டும் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போக்குவரத்தும் அதனால் பாதிக்கப்பட்டது. நீர் உயர்ந்துள்ளதால், சிம்மக்கல் தரைப்பாலத்தை உரசியவாறே நீர் செல்கிறது.[3]
வழிபாட்டுத் தலங்கள்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுஅருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலேயே அமைந்துள்ளது. அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், அருள்மிகு வடக்குவாசல் அனுமன் திருக்கோயில், அருள்மிகு செல்லாத்தம்மன் திருக்கோயில்,[4] அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் ஆகியவை சிம்மக்கல் பகுதியிலுள்ள மற்ற முக்கிய கோயில்களாகும்.
சிறீசெயவீர ஆஞ்சநேயர் கோயில்
தொகுமீனாட்சி அம்மனின் ஒரு பக்த தம்பதிகள் தங்களுக்குப் பிறக்கும் தலைமகவை மீனாட்சியம்மன் சேவைக்கென விட்டு விடுவதாக சுமார் 159 ஆண்டுகளுக்கு முன் வேண்டிக் கொண்டனர். பிரார்த்தனையில் பிறந்த முதல் ஆண் குழந்தையை, நேர்ந்த கொண்டபடி, மீனாட்சி சந்நிதியில் விட்டுச் சென்றனர். அக்குழந்தை கோயிலில் வளர்ந்த நிலையில், உலகத்தைப் புரிந்து கொண்டு தன்னலம் இல்லாமல் அடுத்தவருக்காக செயலாற்றும் சுத்தயோகியாக வாழத் தொடங்கினான். மீனாட்சியின் பிள்ளையாக வளர்ந்த அவரை 'குழந்தை சுவாமி' என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். கோயிலில் பணிகள் ஏதுமில்லாத போது கிருதமாலா நதிக்கரையில் மரத்தடியில் தங்கி வந்தார். பொதுமக்கள் அவரை குருவாக நினைத்து வழிபடத் தொடங்கினர். தினமும் நீராடல், தவம், மக்களுடன் கூட்டு வழிபாடு என இருப்பார். மக்கள் அவருக்கு உணவு கொண்டு வருவார்கள். வேண்டும் உணவை மட்டும் சிறிது உண்டு பசியாறுவார். சில நாட்களில் உபவாசத்துடன் தவத்திலேயே இருப்பார். பல பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் நல்ல ஆலோசகராக, வழிகாட்டியாக இருந்து வந்தார். ஊர்மக்கள் பலரின் கனவில் ஒருநாள் சிறீஆஞ்சநேயர் தோன்றினார். அவர் விக்கிரக வடிவில் கிருதுமால் நதியில் இருப்பதாகவும், தன்னை எடுத்து வழிபட்டு கலியுகத்தில் ஏற்படும் அல்லல்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். அதே போன்ற கனவு, அதே நாளில் பல பேருக்கும் ஒரே மாதிரியான நிலையில் வந்ததால், பெரும்பாலோனோர் அதனைப் பற்றியே பேசினர். அனைவரும் சிலையைத் தேடி எடுக்க வழிகாட்டும் படி 'குழந்தை சுவாமி'யிடம் கேட்டனர். தவத்திலிருந்த குழந்தை சுவாமி கண்விழித்து, மக்கள் கூட்டத்துடன் நதிக்கரைக்குச் சென்றார். ஓரிடத்தில் இறங்கி தேடச் சொன்னார். நீண்ட நேரத் தேடலுக்குப் பின் முதலில் சிறீநரசிம்மர் விக்கிரகமும், பிறகு ஆஞ்சநேயர் விக்கிரகமும் கிடைத்தன. மக்கள் ஆனந்தக் கூத்தாடினர். மேலும் அதே இடத்திலிருந்து மகாலட்சுமி, கருடாழ்வார் விக்கிரகங்களும், இரண்டு விநாயகர் விக்கிரகங்களும் கிடைத்தன. கிருதமாலா நதியில் கிடைத்த சிறீஆஞ்சநேயரை இலுப்பை மரத்தின் கீழ் தன் கையாலேயே நிறுவினார் குழந்தை சுவாமி. அருகிலேயே மற்ற விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்தார். பட்டுப் போய் வெறும் கிளைகளாய் நின்ற இலுப்பை மரம் புதியதாகத் துளிர் விட்டு தழைத்தது. வெளிறிக் கிடந்த அந்தப் பகுதி முழுவதும் பசுமை செழிக்கத் தொடங்கியது. குழந்தை சுவாமி காலை, மாலை இருவேளையும் அனைத்து விக்கிரகங்களுக்கும் பூசை செய்யத் தொடங்கினார். மக்கள் குழந்தை சுவாமிக்கு கொண்டு வந்த உணவுகளை தெய்வங்களுக்குப் படைத்து, மக்களுக்குக் கொடுத்துத் தானும் உண்டார். மக்களுக்கும் ஆஞ்சநேயரிடம் வேண்டியதெல்லாம் நடந்தது. வேண்டுதல்கள் அனைத்தும் வெற்றியில் முடிந்ததால் 'செயம் தரும் வீரஆஞ்சநேயர்' என வழங்கப்பட்டார். மக்களும், குழந்தை சுவாமியும் அங்கு ஓர் ஆலயம் அமைத்து வழிபாட்டைத் தொடர்ந்தனர். குழந்தை சுவாமி ஓர் அர்ச்சகரை நியமனம் செய்து, தான் இல்லாத போதிலும் பூசைகள் நடைபெற ஏற்பாடுகளைச் செய்தார். மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்து நிலையம் செல்லும் வழியில் வைகை பாலத்தை அடுத்துள்ள சிம்மக்கல் பகுதியில் சிறீசெயவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Find link". edwardbetts.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
- ↑ "காலை உணவுத் திட்டம் இலவச சலுகை அல்ல; அரசின் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/sep/16/the-breakfast-plan-is-not-a-free-offer-3916640.html.
- ↑ "வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து பாதிப்பு!". The Indian Express Tamil. https://tamil.indianexpress.com/tamilnadu/flooding-in-madurai-vaigai-river-501226/.
- ↑ "Arulmigu Chellathamman Temple, Simmakkal, Madurai>திருக்கோயில்கள் பட்டியல்". Hindu Religious & Charitable Endowments Department, Government of Tamil Nadu.
- ↑ "சிம்மக்கல்லின் சின்னத்திருவடி". Dinamani. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2021/jan/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-3540125.html.