கீழ வாசல், மதுரை
கீழ வாசல் (ஆங்கில மொழி: Keelavasal) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] புகழ்மிக்க மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கீழ வாசல் பகுதியிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலேயே அமைந்திருக்கிறது. மதுரை நகரானது, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பகுதியை நடுநாயகமாகக் கொண்டு, அதைச் சுற்றி நான்கு திசைகளிலும், ஊர்களையும், வீதிகளையும் அமையப் பெற்றுள்ளது. அம்முறையில், கிழக்குத் திசையில் கீழவாசல், தெற்குத் திசையில் தெற்கு வாசல் என ஊர்கள் அமைந்துள்ளன. மேலும், கீழ வெளி வீதி, மேல வெளி வீதி, வடக்கு வெளி வீதி, தெற்கு வெளி வீதி மற்றும் கீழ் மாசி வீதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி என திசைகளுக்கு ஒப்பாற் போல் வீதிகள் அமையப் பெற்றுள்ளன.
கீழ வாசல், மதுரை East Gate, Madurai | |
---|---|
ஆள்கூறுகள்: 9°55′08″N 78°07′35″E / 9.918853°N 78.126450°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 159 m (522 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625001 |
தொலைபேசி குறியீடு | 0452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, செல்லூர், கோரிப்பாளையம், சிம்மக்கல் யானைக்கல், நெல்பேட்டை மற்றும் தெற்கு வாசல் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | மு. பூமிநாதன் |
இணையதளம் | https://madurai.nic.in |
கி.பி. 1636-ஆம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற, மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை, கீழ வாசல் பகுதியில்தான் அமையப் பெற்றுள்ளது. கி.பி. 1629-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1636-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனையின் உட்புற சுவர்களில் சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் கலந்த கலவை பூசப்பட்டு மெருகேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.[2]
மதுரை மாநகரின் விரிவாக்கத்திற்காக செயல் திட்டம் செயல்படுத்தி உதவிய அன்றைய பிரித்தானிய ஆட்சியராகப் பணியாற்றிய ஜான் பிளாக்பர்ன், 1847-ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்று சொந்த ஊர் திரும்பும் காலத்தில், அவருக்கு மதுரை மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில், கீழ வாசல் பகுதியில், கீழ மாசி வீதியும் தெற்கு மாசி வீதியும் சந்திக்கும் இடத்தில், எஃகினாலான வேலைப்பாடுகள் நிறைந்த விளக்குத் தூண் ஒன்று நிறுவப்பட்டது.[3]
2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கர்நாடகா மாநிலத்தில் சித்திரதுர்க்கா மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்ட, 2014-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தொகுதியினரான திவ்யா பிரபு என்பவர் கீழ வாசல் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[4]
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கீழவாசல் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9°55'07.9"N, 78°07'35.2"E (அதாவது, 9.918853°N, 78.126450°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
தொகுமதுரை, கோரிப்பாளையம், செல்லூர், சிம்மக்கல், யானைக்கல், நெல்பேட்டை மற்றும் தெற்கு வாசல் ஆகியவை கீழ வாசலுக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.
போக்குவரத்து
தொகுசாலைப் போக்குவரத்து
தொகுமதுரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிக அளவில் பேருந்து சேவைகள் கீழ வாசல் பகுதி வழியாக நடைபெறுகின்றன. கீழ வெளி வீதி, தெற்கு வெளி வீதி, கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி போன்றவை மக்கள் நெருக்கம் மிக்க முக்கியமான வீதிகளாகும்.
தொடருந்து போக்குவரத்து
தொகுஇங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
வான்வழிப் போக்குவரத்து
தொகுஅவனியாபுரத்தில் அமைந்துள்ள மதுரை வானூர்தி நிலையம், இங்கிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவிலுள்ளது.
கல்வி
தொகுபள்ளி
தொகுகீழ வெளி வீதியில் அமைந்துள்ள புனித மரியன்னை மேனிலைப் பள்ளி, 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 114 ஆண்டுகள் கடந்து சாதனை புரிந்து வருகிற தனியார் பள்ளியாகும்.
கல்லூரி
தொகுசி. எஸ். ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் நர்சிங் கல்லூரி என்ற தனியார் கல்லூரி ஒன்று கீழவாசலில் அமைந்துள்ளது.[5]
ஆன்மீகம்
தொகுகோயில்
தொகுகீழவாசலில் அமையப் பெற்றுள்ள தென்திருவாலவாய சுவாமி கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[6]
தேவாலயம்
தொகுகீழ வாசல் பகுதியில், கீழ வெளி வீதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித மரியன்னை பேராலயம் ஒன்று உள்ளது.
தொழில்
தொகுதுணிகள், ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள் கீழ வாசல் பகுதியில் ஏராளம். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்பகுதியில் வியாபாரம் களைகட்டும்.[7] மேலும், வீட்டு உபயோகப் பொருட்கள், நெகிழி சார்ந்த பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் போன்றவை கீழ வாசல் பகுதியில் சாலை ஓரக் கடைகளில் பண்டிகை நாட்களில் அதிக விற்பனையாகும்.[8]
அரசியல்
தொகுகீழ வாசல் பகுதியானது, மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் மு. பூமிநாதன். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Keelavasal - Find link". edwardbetts.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
- ↑ "வெல்லம், கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றால் கட்டப்பட்டது...! பிரம்மிப்பூட்டும் மதுரை திருமலை நாயக்கர் மஹாலின் சிறப்புகள்..!". News18 Tamil. 2022-10-07. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
- ↑ வர்த்தினி, பர்வத. "மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 5". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
- ↑ "மதுரையை சேர்ந்த திவ்யா பிரபு ஐ.ஏ.எஸ்., கர்நாடகாவின் சித்ரதுர்கா கலெக்டரானார் - Dinamalar Tamil News" (in ta). https://m.dinamalar.com/detail.php?id=3152256.
- ↑ India Directorate General of Health Services (1978). Directory of Medical Colleges in India (in ஆங்கிலம்). Bright Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7199-508-0.
- ↑ "Arulmigu Thenthiruvalavaya Swamy Temple, Keelavasal, Madurai - 625001, Madurai District [TM031970].,sivan,Thenthiruvalavaya swamy,Meenakshi amman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-09.
- ↑ மாலை மலர் (2022-10-23). "மதுரை ஜவுளிக்கடைகளில் அலைமோதிய கூட்டம்" (in ta). https://www.maalaimalar.com/news/district/madurai-news-madurai-textile-shops-throng-527803.
- ↑ "மதுரை > விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிக்கட்ட தீபாவளி விற்பனை; நடைபாதை வியாபாரிகள் மகிழ்ச்சி" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/886807-final-sale-of-diwali-clothes-in-madurai-villagers-flock-to-platform-shops.html.