சிற்பனை முருகன் ஆலயம், வேலணை
|
வேலணை சிற்பனை முருகன் ஆலயம் | |
---|---|
வேலணை சிற்பனை முருகன் ஆலயம் நுழைவாயில். | |
ஆள்கூறுகள்: | 9°38′14″N 79°54′04″E / 9.6372°N 79.9011°E |
பெயர் | |
பெயர்: | வேலணை சிற்பனை முருகன் ஆலயம் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வட மாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முருகன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1855 |
அமைத்தவர்: | கந்தவுடையார் |
அமைவிட சிறப்பு
தொகுசிற்பனை முருகன் ஆலயம் வேலணையில் ஓர் சிறப்பு வாய்ந்த அமைவிடத்தில் உள்ளது. விமானம் ஒன்றிலிருந்து வேலணையை நோக்கின், அங்கே ஏறத்தாழ ஒரு வட்டப்பாதையில் "வேலணையின் பராக்கிரம சமுத்திரங்கள்" என வர்ணிக்க தோன்றும் பாரிய குளங்கள் இருப்பதையும், அவ் வட்டத்தின் மத்தியில் இவ் ஆலயம் இருப்பதையும் காணமுடியும். ஆம், ஆலயத்தின் தென் கிழக்காக பெருங்குளமும், தென் மேற்கில் வேனாக்குளமும் வடமேற்கில் தெங்கங்குளமும் ஏறத்தாழ வடக்கில் சிலுந்தாவிற்குளமும் நீர் நிலைகளாக ஆலய அமைவிட பிரதேசத்தை அலங்கரிக்கின்றன. வேலணைக் கிராமத்தின் 6ஆம் 7ஆம் வட்டார எல்லைக்கோட்டிலுள்ள சிற்பனைவீதி-தாமோதரர் வீதிசந்தியின் தென்மேற்குக் குடாவில் இவ்வாலயம் உள்ளது. இதைச் சூழவுள்ள பிரதேசம் சிற்பனை என அழைக்கப்படுகின்றது.
ஆலய பின்புலம்
தொகுஆலயத்தின் ஆரம்பகாலகட்டம் பெரும்பாலும் சுயசார்பு விவசாயத்தில் தங்கி வாழ்ந்த மக்களைப் பின்புலமாக கொண்டிருந்தது. சுதந்திரத்திற்கு பின்னரான இலவசக்கல்வி, போக்குவரவு. தொடர்புசாதன வசதிகள் போன்றன இம்மக்களின் வருமான வளங்களை பன்முகப்படுத்தி மேம்படுத்த உதவின. தென்னிலங்கையில் சந்தைப்படுத்துவதற்கான புகையிலைச் செய்கை, அதனைத் தொடர்ந்து தாமதமாக வந்த மிளகாய், வெங்காய பயிர் செய்கைகளும், அத்தோடு இப் பகுதிக்கு வெளியேயான வர்த்தக முயற்சிகளும் ஆலய பின்புல மக்களின் வருமானத்தில் மாற்றங்களை கொண்டுவரலாயின. ஆலய வளங்களை உயர்த்தும் முயற்சிகள் அதன் பின்புலத்தின் தன்மைக்கு இசைவானதாக ஒருசமயம் பிடியரிசித் தொண்டை உள்ளடக்கியதாகவும், பின்னர் புகையிலை சேகரிப்பு திட்டம் போன்ற பலவற்றை கொண்டிருந்தன.
ஆலயத்தின் பிறப்பு
தொகுஒரு பூசை மடம் பெரிய ஆலயமாக வளர்ந்தது தான் இவ் ஆலயத்தின் சுருங்கிய வரலாறு. ஏறத்தாழ நூற்றெண்பது ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்தவர் தான் கந்தவுடையார் என்பவர். "ஏ செண்டர்" எனும் மாகாண தலைமையின் கீழ் மணியக்காரர், உடையார், விதானை எனும் இறங்குநிலைப் பதவிகளைக் கொண்ட ஆட்சிக்கட்டமைப்பை உடையது அவர் காலம். அன்று உடையார்,விதானைமார் பதவிகளிற்கு நிலச்சொத்துடைமையும் மக்கள் மத்தியில் செல்வாக்கும் அவசிய தகைமைகளாக கருதப்பட்டன. இத்தகைமைகளில் குறைவற்றிருந்த கந்தவுடையார் பெரும் சைவபக்தனும் கூட. அவர் சிற்பனைப்பகுதியில் அமைந்த பூசைமடத்தில் வேல் ஒன்றைத் தாபனம் செய்து வழிபட்டு வந்தார். இம்மடம் வேற்கோவிலாக மாறி சிற்பனை முருகன் ஆலயமாக பெருவளர்ச்சி பெற்றது.
ஆலய தனிச் சிறப்பு
தொகுசிற்பனை ஆலயம், தீவுப்பகுதியில் கந்தசஷ்டியை முன்னிலைப்படுத்துவது தனிச்சிறப்புடையது. இவ்வாலயம் அதிகளவில் கந்தசஷ்டி விரதகாரர்களால் பூசிக்கப்படுவது. சூரன்போர், தீக்குளிப்பு, திருக்கல்யாணவிழாவும் அதனோடு கூடிய கந்தனின் ஊர் உலாவும் போன்ற நிகழ்வுகள் பக்தர்களை வெகுவாக ஈர்ப்பனவாக இருந்து வருகின்றன.
ஆலயம் ஊரின் சமூக அமைப்புக்களைத் தழுவிச் செல்வதோடல்லாமல் அவற்றை வளர்த்து விடுவதும், அவை ஆலயத்தை வளர்த்து விடுவதும் இங்கு அவதானிக்கக்கூடிய இன்னுமொரு சிறப்பாகும்.உதாரணத்திற்கு இன்று தனது சொந்த ஆதனத்தில் கால் பதித்து கம்பீரமாக எழுந்து நிற்கப்போகும் ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தை குறிப்பிடலாம். இந்தநிலையம் 17/07/1957ல் சைவ ஆசானும் அரசியல் விஞ்ஞான பட்டதாரியும் வேலணை மத்திய கல்லூரி ஆரம்பகால ஆசிரிய பெருந்தகையுமான திரு.திருநீலகண்டன் எனும் தூய சிந்தனையாளனால் ஆலய மடப்பள்ளியில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. மடப்பள்ளியில் வளர்ந்த நிலையம் ஆலய நிருவாகத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு வீதியில் கட்டிடம் அமைத்து தன் செயற்பாடுகளில் சரித்திரம் படைத்ததும் நிலைய நிருவாகிகள் ஆலய மறுமலர்ச்சிக்கு முன்னின்று உழைத்ததும் மறக்கக்கூடிய சரித்திரமன்று.
ஆலய முகாமைத்துவத்தில் பணி புரிந்தவர்கள்
தொகுகந்தவுடையார்
சுப்பிரமணிய விதானையார்(விக்கல் விதானை)
திரு.வைத்தியநாதர் செல்லையா
திருமதி கார்த்திகேசு இலட்சுமிப்பிள்ளை (பிள்ளைச்சாமி)
திரு.துரையப்பா பொன்னம்பலம்
திரு.சோமாஸ்கந்தன்
புணருத்தான சபை
தொகு09/06/1984ல் "சிற்பனை முருகன் ஆலய புணருத்தான சபை" என்ற அமைப்பை உருவாக்கினார். இச்சபை ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்து அதன் கும்பாபிஷேக மண்டலாபிஷேக பணிகளைப் பூர்த்தி செய்வதோடு கலைதற்கான மட்டுப்படுத்தப்பட்ட நோக்கத்தைக் கொண்டிருந்தது. புதிதாக ஆலய நிருவாகக் கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலான இம் முதற்கட்ட வெற்றிக்கான காரணிகள் பல. திரு.சே.க.நாகையா அவர்களின் இராசதந்திர செயற்பாடு, எவரும் சந்தேகப்படமுடியாத நேர்மை, நடுநிலைமை கொண்ட திரு.வை.க.பொன்னம்பலம் அவர்கள் சபையின் தலைமைப் பதவியை ஏற்பதற்கு ஒப்புதல் தந்தமை, தலைமைப் பொறுப்பை தானே பெறக்கூடிய தகைமையிருந்தும் அதனை எதிர்பாராது திரு.வை.க.பொன்னம்பலம் அவர்களைத் தலைவராக முன்மொழிந்த திரு.வா.அருணகிரி JP அவர்களின் பெருந்தன்மை, ஆலய நிருவாகப் பொறுப்பிலிருந்து வந்த திரு.வை.செ.சோமாஸ்கந்தன் அவர்கள் தந்த ஒத்துழைப்பு, திரு.தி.பாலசந்திரன், திரு.மு.சண்முகலிங்கம் ஆகியோர் பின்னணியில் நின்று ஆற்றிய அரும்செயற்பாடுகள் ஆகியன வெற்றிக்கான காரணிகளில் முதன்மை பெறுவன.
ஆலயத்தின் உள்வீதி முகப்புக்கொட்டகையின் ஒருபகுதி மட்டும் எஞ்சி இருக்கும் வகையில் ஆலயத்தை புதிதாகவே கட்டியெழுப்பும் நிருமாணப்பணிகளை புணருத்தான சபை கடுகதிப்படுத்தியது. பல இலட்ச ரூபா செலவிலான ஆலய நிருமாணத் திட்டத்தைத் தயாரித்து அதனைப் பூர்த்தி செய்வதற்கான தெளிவான நிதி சேகரிப்புத் திட்டத்தையும் புணருத்தான சபை வகுத்தது. புதிய வடிவமைப்பிலான தரிசன மண்டபம், தெற்குப்பக்க புறவீதியில் நின்று தரிசிக்கவோ அதன் வழி உட்புகவோ வழிசெய்யும் வில்லுவாசல்கள் என புதிய பல அம்சங்கள் திட்டத்தில் அமைந்தன. பதினைந்திற்கு குறையாத நிருமாண அலகுகளை அடியார்கள் தம்தம் உபயமாக செய்ய முன்வந்தனர். மற்றைய அடியவர்கள் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்தனர். நிருமாணப் பணிகள் 1991ன் நடுப்பகுதியில் பூர்த்தியுற்று ஆலயம் கும்பாபிஷேகம் காணும் வகையில் வேகமாக நகர்த்தப்பட்டன.
பரிபாலன சபை
தொகுஒன்றரை வருடகாலம் புனருத்தாரணசபை இயங்கிய நிலையில், பாரிய வளர்ச்சி கண்டு வரும் ஆலயத்தின் எதிர்கால நிருவாகக் கட்டமைப்பு பற்றிய சிந்தனை தலைதூக்கியது. இயங்கிவரும் புனருத்தாரணசபை கலையும் வரை காத்திருக்காமல் எதிர்கால நிருவாகக் கட்டமைப்பிற்கான முயற்சியில் அபிமானிகள் உடனடியாக இறங்கினர். இதன் பயனாக 15/12/1985ல் "சிற்பனை முருகன் ஆலய பரிபாலன சபை" அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சபை அங்குரார்ப்பண பிரேரணை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய பரிபாலன சபையின் அமைப்பு விதிகள் 29/06/1986ல் அமுலுக்கு வந்தன. முன்னராகவே ஆலயத்துடன் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அடியார்கள் நிருவாகத்திலிருந்து அந்நியப்படுத்தப்படாத வகையில் நான்கு பிரிவுகளைக் கொண்ட உறுப்புரிமைக்கும், அங்குரார்ப்பண கூட்டத்தில்தெரிவான தலைவர் மட்டும் தம் பதவியில் ஆயுட்காலம் வரை தொடர்வதற்கும், முகாமைத்துவப் பொறுப்புக்களை இலகுவாக்கி விரைவுபடுத்தவல்ல துறைசார் ரீதியில் அமைந்த மூன்று உதவி முகாமையாளர் பதவிகளுக்கும், சற்று சிரமமான நிருவாக சபைத் தேர்தல் முறைக்கும், நவீன நிதி முகாமைத்துவத்திற்கும் வழி செய்வதற்கான ஏற்பாடுகளே அமைப்பு விதிகளின் சிறப்பு அம்சங்கள் எனலாம். இவ்வமைப்பு விதிகளின் அமுலாக்கல் மூலம் முன்னர் ஆலயப் பொறுப்பிலிருந்த திரு.வை.செ.சோமாஸ்கந்தன் அவர்கள் பரிபாலன சபையின் ஆயுட்காலத் தலைவராக உள்வாங்கப்பட்டார்.
கும்பாபிஷேகம் பின்தள்ளிப்போதல்
தொகுதன் முயற்சியில் தளராத புனருத்தாரணசபை, அதன் திட்டத்திற்கமைய 1991 பருவமழைக்கு முன்னராக கும்பாபிஷேகத்தை நடாத்த எடுத்த பணிகளில் முன்னேறியவேளை எதிர்பாராத இராணுவ நகர்வுகளால் ஆலய பிரதேசம் பாரிய உயிர் இழப்புக்களையும் இடம்பெயர்வுகளையும் சந்தித்தது. ஆகஸ்ட் 1990லும், அக்டோபர் 1991லும் இலங்கை இராணுவ நகர்வு காலங்களிலும் அதனையடுத்து 1998ல் இந்திய இராணுவ நகர்வைச் சந்தித்தும் ஆலயமும் பிரதேச மக்களும் பட்ட துயர் சொல்லிலடங்காது. 1991அனர்த்தத்தின் போது 99% ஆலய பிரதேசம் சூனியமான போதும் நகரமறுத்து சிற்பனையானைச் சிக்கெனப்பிடித்திருந்த பரிபாலன சபைக்காப்பாளருமான ஆலய மூலஸ்தான அர்த்த மண்டப நிதிக்காகத் தன் காணியை விற்று பணம் உதவியவருமான திருமதி குமாரவேலு சிவஞானச்செல்வி, பரிபாலன சபையின் உபதலைவர்களிலொருவருமான ஆசிரியர் திரு பொ.சண்முகநாதன், இவரது சகோதரி ஆசிரியை செல்வி பொ.அன்னபூரணி (இவர் கிராம மக்களின் நகர்வின்பின் இருள்கவ்விய ஆலயத்திற்குத் திருவிளக்கேற்றி வந்தவர்) ஆகிய மூவரதும் உயிர் பிரிந்த செய்தி நீண்ட நாட்களிற்கு பின்னர் தான் உறவினர்களிற்கும் பிறரிற்கும் தெரியவந்தது. இது ஆலய சரித்திரத்தில் தாங்க முடியாத கொடுமை. இச் சூழ்நிலைகள் ஆலயப் பணிகளனைத்தையும் பின்தள்ள வைத்தன.
கும்பாபிஷேக நிறைவேற்றம்
தொகுபல இழப்புக்கள், நாச வேலைகளைச் சந்தித்த நிலையில் ஏறத்தாழ ஐந்து வருடங்களாக நித்திய பூசைகள் திருவிழாக்கள் ஏதுமின்றி ஆலயம் இருந்தது. இடம்பெயர்விலிருந்து சிறிது சிறிதாக மீண்ட மக்கள் 1996ல் இருந்து ஆலயத்தில் நித்திய பூசையை மட்டும் நடாத்தினர். அடியார்களின் அயராத முயற்சியால் திருத்த வேலைகள் மற்றும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல வருடங்களாக ஆவலோடு எதிர்பார்த்த கும்பாபிஷேகம் 16/09/1999ல் நிறைவேறியது. சரித்திரத்தில் நினைக்க முடியாத நெருக்கடியான காலகட்டங்களை கடந்து நிறைவேறிய இந்நிகழ்ச்சியால் அடியார்களின் மனமகிழ்விற்கு அளவே கிடையாது.
ஆலயச் சுற்றாடலில் இருந்த மக்களில் 75வீதத்திற்கு குறையாதோர் இன்னும் இடம்பெயர் நிலையில் உள்ள போதும் ஆலயத்தின் மீதான ஈர்ப்பு விசையால் அவர்களில் ஒருபகுதியினர் தம் தற்காலிக வதிவிடங்களிலிருந்து பயணித்து மாத பூசைகளையோ மகோற்சவ மற்றும் விசேட விழாக்களையோ கும்பாபிஷேகத்தின் பின்னர் நடத்தத் தவறவில்லை.
சோதனைகள் மத்தியில் ஆலயப்பணிகள் தொடரப்பட்டன. அவை முன்னைய கும்பாபிஷேகம் நிறைவேறி ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளின் பின் புதிய கும்பாபிசேகத்திற்கு வழிசமைத்தன. அதுவே சிற்பனை முருகன் ஆலய பரிபாலன சபையினரால் 07/06/2015ல் சிறப்புற நடாத்தப்பட்ட இரண்டாயிரமாம் ஆண்டின் முதற் கும்பாபிஷேகம் ஆகும். இப்பெரு வைபவத்தோடு இன்று ஆலயத்தில் மண்டலாபிஷேக நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவ்வைபவங்களிற்குக் காரணமாக அமைந்த ஆலயப் பணிகளில் மூலஸ்தான மறுசீரமைப்பு , பலிபீட முற்பகுதியோடு உள்வீதியின் பெரும் பகுதி ரெறாசோ பதிக்கப்படடமை ஆலய அனைத்து கட்டிட பகுதிகளும் வர்ணம் தீட்டி அழகூட்டப்பட்டமை ஆகியன அடங்குகின்றன.
[2] <ref>www.velanaiyoor.com </ref
உசாத்துணைகள்
தொகு- ↑ https://www.google.lk/maps/place/Murugan+Kovil/@9.6376671,79.8977012,16z/data=!4m5!3m4!1s0x0:0x6f6f2e748b7d6659!8m2!3d9.6388161!4d79.9028617
- ↑ ஆலய பரிபாலன சபை (2015). வேலணை மேற்கு சிற்பனை முருகன் ஆலயம் கும்பாபிஷேக மலர் 2015. விகடன் பதிப்பகம்.