சீர்காழி இரா. அரங்கநாதன்

இந்திய கணிதவியலாளர் மற்றும் நூலகர்

சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் (S. R. Ranganathan, 9 ஆகத்து 1892 - 27 செப்டம்பர் 1972) இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர்.[1] கோலன் வகைப்படுத்தல் முறையை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் பெயர் பெற்றவர். நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. இவரது பிறந்த நாளை, இந்தியாவில் தேசிய நூலக தினமாக அறிவித்துள்ளனர்.

சீர்காழி இரா. அரங்கநாதன்
S. R. Ranganathan
ஐதராபாத், நகர நடுவ நூலகத்தில் உள்ள அரங்கநாதனின் படம்.
பிறப்பு(1892-08-09)9 ஆகத்து 1892
சீர்காழி, பிரித்தானிய இந்தியா, (தற்போது - தமிழ்நாடு, இந்தியா)
இறப்புசெப்டம்பர் 27, 1972(1972-09-27) (அகவை 80)
பெங்களூர், இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விசென்னை கிறித்தவக் கல்லூரி
பணிநூலகவியலாளர்
அறியப்படுவதுநூலகவியலின் ஐந்து விதிகள்
சமயம்இந்து
பெற்றோர்இராமாமிருதம்
சீதாலட்சுமி
விருதுகள்பத்மசிறீ

இவர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் நூலகராகவும், நூலகத் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நூலகவியலில் உயர் பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்திய நூலகவியல் பள்ளியில் பணிப்பாளராகவும் பணியாற்றினார். தவிர, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற் கழகங்களில், உறுப்பினராக இருந்து உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு

தொகு

இளமைக் காலம்

தொகு

அரங்கநாதன் 09 ஆகத்து 1892 ஆம் ஆண்டு அக்காலத்துச் சென்னை மாகாணத்தின், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த சீர்காழியில் பிறந்தார். இவரது தந்தை இராமாமிருதம் மற்றும் தாயார் சீதாலட்சுமி ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்தார். இராமாமிருதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உபயவேதாந்தபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த, படித்த பண்பாடுள்ள மனிதர் ஆவார். இவர் நடுத்தர அளவில் நிலமொன்றை வைத்து நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தார். மக்களுக்கு இராமாயணக் கதைகூறும் வல்லமை பெற்ற இவருக்கு சுற்றாரிடம் நல்ல மதிப்பு இருந்தது. இராமாமிருதம் 1898 ஆம் ஆண்டில், அவரது 30 ஆவது வயதில் திடீரெனக் காலமானார்.[2] அப்போது அரங்கநாதனுக்கு ஆறு வயது. பின்னர் இவர் பள்ளி ஆசிரியராக இருந்த பாட்டனாரிடம் வளர்ந்தார். இவர் மூலமாக இந்து நூல்கள் பற்றி அரங்கநாதனுக்குப் பயிற்சி ஏற்பட்டது. இதனால், நூலகவியல் தொடர்பான இவரது ஆக்கங்களிலும் ஆங்காங்கே இந்து நூல்களின் தாக்கங்கள் காணப்பட்டன.[3]

கல்வி

தொகு

சீர்காழியில் இருந்த பள்ளி ஒன்றில் தனது கல்வியைத் தொடங்கிய அரங்கநாதன், பின்னர் அதே ஊரில் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1908/1909இல் இடம்பெற்ற மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். 1909இல் சென்னை கிறித்தவக் கல்லூரியில் (Madras Christian College) சேர்ந்த அரங்கநாதன் 1913இல் இளங்கலைப் பட்டத்தையும், 1917 ஆம் ஆண்டில் கணிதத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று வெளியேறினார். பின்னர் சைதாப்பேட்டையில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.[4]

திருமணமும் குடும்ப வாழ்க்கையும்

தொகு

அரங்கநாதன் 1907 ஆம் ஆண்டில் அவருக்கு 15 வயதாக இருக்கும்போது ருக்மணி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1928இல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளத்தில் குளிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ருக்மணி இறந்துவிட்டார். இந்தத் திருமணம் மூலம் அரங்கநாதனுக்குப் பிள்ளைகள் இல்லை. அரங்கநாதன் 1929இல் இரண்டாவது முறையாக சாரதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்தார். பின்னர் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தொழில்

தொகு

கல்வியை முடித்துக்கொண்ட அரங்கநாதன், மங்களூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்த அரசாங்கப் பள்ளிகளிலும், பின்னர் மதராசு பிரெசிடென்சி கல்லூரியிலும் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்தார். ஆசிரியத் தொழிலில் அவருக்கு விருப்பம் இருந்தது. ஆனாலும், வருமானம் போதியதாக இருக்கவில்லை.

நூலகர்

தொகு

தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் மதராசுப் பல்கலைக்கழகத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய நூலகர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். 1924 சனவரியில் மதராசுப் பல்கலைக்கழகத்தில் நூலகராக நியமனம் கிடைத்தது. இவருக்கு நூலகருக்கான கல்வித் தகைமையோ, அனுபவமோ இருக்கவில்லை. அத்துடன், பள்ளிகளில் காணப்பட்ட கலகலப்பான சூழலுக்கு எதிராக நூலகத்தின் அமைதியான சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் ஆசிரியத் தொழிலுக்கே செல்ல முடிவு செய்தார். ஆனாலும், பிரெசிடென்சிக் கல்லூரியின் அதிபரின் ஆலோசனையின்படி, நூலகர் பயிற்சிக்காக இலண்டனுக்குச் சென்று திரும்பும்வரை அந்த முடிவை நிறுத்தி வைத்தார்.

9 மாதங்கள் பயிற்சிக்காக இலண்டனுக்குச் சென்ற அரங்கநாதன் 1925 ஆம் ஆண்டில் நாடு திரும்பினார். அக்காலத்தில் மதராசுப் பல்கலைக்கழக நூலகம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சரியான ஒழுங்கமைப்போ போதிய ஊழியர்களோ இருக்கவில்லை. நூலகத்தைப் பயன்படுத்துவோரும் மிகவும் குறைவாகவே இருந்தனர். இந்த நிலையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட அரங்கநாதன், நூலகத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காகப் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதுடன், அங்கிருந்த நூல்களை வகைப்படுத்தி, விபரப் பட்டியல்களையும் தயாரித்தார்.

குறிப்புகள்

தொகு
  1. Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7: 38, 39
  2. Sarada Ranganathan Endowment for Library Science, Memorabilia Ranganathan, Ranganathan Centenary Series 5, Bangalore, 1994. பக். V.
  3. Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7, 1984, பக். 38, 39
  4. Sarada Ranganathan Endowment for Library Science, Memorabilia Ranganathan, Ranganathan Centenary Series 5, Bangalore, 1994. பக். VI.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்காழி_இரா._அரங்கநாதன்&oldid=4120429" இலிருந்து மீள்விக்கப்பட்டது