சுந்தர புருஷன் (1996 திரைப்படம்)

சபாபதி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சுந்தர புருஷன் (Sundara Purushan) 1996 ஆம் ஆண்டு லிவிங்ஸ்டன் மற்றும் ரம்பா நடிப்பில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். கட்டாயப்படுத்தித் திருமணங்கள் செய்யும் வழக்கத்தைச் சாடும் கதைக்களம் ஆகும் லிவிங்ஸ்டன் கதை மற்றும் திரைக்கதை எழுதி உள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்தர். ஏ .வில்சனின் முதல் திரைப்படம். இத்திரைப்படம் 1999இல் கன்னட மொழியில் பி. சி. பட்டில் நடிப்பில் சாணப்ப சண்ணேகவுடா என்ற பெயரிலும், தெலுங்கு மொழியில் 2006 இல் சுனில் வர்மா மற்றும் ஆர்த்தி அகர்வால் நடிப்பில் அந்தால ராமுடு என்ற பெயரிலும், ஒடியா மொழியில் 2012 இல்அனுபவ் மொகந்தி மற்றும் வர்ஷா பிரியதர்ஷினி நடிப்பில் சம்திங் சம்திங் என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.

சுந்தர புருஷன்
இயக்கம்டி. சபாபதி[1]
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைலிவிங்ஸ்டன்
சிவராம் காந்தி (வசனம்)
திரைக்கதைலிவிங்ஸ்டன்
இசைசிற்பி
நடிப்புலிவிங்ஸ்டன்
ரம்பா
வடிவேலு
ஒளிப்பதிவுஆர்தர் ஆ. வில்சன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
விநியோகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுசூலை 12, 1996 (1996-07-12)
ஓட்டம்149 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

கணேசன் (லிவிங்ஸ்டன்) தன் உறவுப்பெண் வள்ளியை (ரம்பா) சிறுவயதிலிருந்து விரும்புகிறான். அவன் தாய் இறந்தபின்பு, அவனது தந்தை வேறுபெண்ணைத் திருமணம் செய்ததால் வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. தந்தை இறந்த பின்பு 12 வருடங்கள் கழித்து இளைஞனாகத் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிவந்து தன் பாட்டியுடன் வசிக்கிறான். தந்தையின் இரண்டாவது மனைவியின் மகனை (வடிவேலு) தன் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான்.

வள்ளியைத் திருமணம் செய்யும் விருப்பத்துடனேயே அவன் பாட்டி வீட்டிற்குத் திரும்புகிறான். ஆனால் வள்ளி, அந்த ஊரைச்சேர்ந்த வேலை தேடிக்கொண்டிருக்கும் ஆதரவற்ற ரகுவைக் (சவுமியன்) காதலிக்கிறாள். வள்ளியின் தந்தை ரகுவிற்கு வேலை கிடைத்தால் மட்டுமே திருமணம் செய்து வைப்பதாகக் கூறுகிறார்.

ரகுவிற்கு வேலை பெற்றுத்தரும் கணேசன், வள்ளிக்கு ரகுவுடன் திருமணம் நடைபெறப் போவதை அறிந்து ஏமாற்றமடைகிறான். வள்ளியைத் தன் அண்ணனுக்குத் திருமணம் செய்துவைப்பதற்காக ரகுவின் மீது கொலைப்பழி சுமத்தி திருமணத்தன்று சிறைக்கு அனுப்புகிறான் வடிவேலு. வள்ளியின் தந்தை கணேசனை வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுகிறார். கணேசன் வள்ளியைத் திருமணம் செய்துகொள்கிறான்.

குற்ற உணர்ச்சியின் காரணமாக வள்ளியை விட்டு விலகியே இருக்கும் கணேசனை தொடக்கத்தில் வள்ளிக்குப் பிடிக்காவிட்டாலும் சிறிதுசிறிதாக விரும்பத் தொடங்குகிறாள். மூன்று மாதங்களுக்குப் பிறகு கணேசன் அவன் சகோதரனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கும் வள்ளிக்கு தான் ஏமாற்றப்பட்ட உண்மை தெரிந்து கோபப்படுகிறாள். வள்ளியை சமாதானப்படுத்தும் கணேசனின் முயற்சிகள் அனைத்தும் வீணாவதால் கணேசன் காவல்துறையில் ரகு நல்லவன் என்ற உண்மையைச் சொல்லி அவனை சிறையிலிருந்து விடுவிக்கிறான். வள்ளியுடன் மூன்று மாதங்களாக எந்த உறவுமின்றி வாழும் உண்மையைச் சொல்லி ரகு வள்ளியைத் திருமணம் செய்ய சம்மதிக்க வைக்கிறான்.

கிராம மக்கள் அனைவரது முன்னிலையிலும் வள்ளியின் கழுத்திலுள்ள கணேசன் கட்டிய தாலியைக் கழற்றமுனையும்போது வள்ளி வாந்தி எடுக்கிறாள். இதனால் வள்ளி கர்ப்பமாக இருப்பதாக என்னும் ரகு திருமணத்திற்கு மறுக்கிறான். ரகு தன்னை முழுமையாக நம்புகிறானா? என்பதைச் சோதிக்கவே இப்படி செய்ததாகக் கூறும் வள்ளி, கணேசன் மட்டுமே தன்னை முழு நம்பிக்கையுடன் நேசிப்பதாகக் கூறி, தானும் கணேசனையே விரும்புவதாகக் கூறுகிறாள். கணேசனும் வள்ளியும் மகிழ்ச்சியுடன் இணைகின்றனர்.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

தினமலர்: சாதனை புரிந்த தமிழ்ப் படங்கள் என்ற வரிசையில் சுந்தர புருஷன் படத்தையும் பட்டியலிட்டது. மேலும் "சுந்தர புருஷன் கதை­யைக் கேட்ட பல தயா­ரிப்­பா­ளர்­க­ளும் ‘லிவிங்ஸ்­டன் படத்தை இயக்­க­லாம். ஆனால் கதை நாயக­னாக நடிக்­கக்­கூ­டாது’ என்று நிபந்தனை விதித்­தார்­கள். ஆனால், தயாரிப்பா­ளர் ஆர்.பி.சவுத்ரி மட்­டும் லிவிங்ஸ்­டன் நடிப்ப­தற்கு சம்­ம­தம் தெரிவித்து அவரை உற்சா­கப்­ப­டுத்­தி­யதால் அவர் கதை நாயகனாக நடித்­தார்"[4].

மெக்ஸ்டர்.காம் திருப்புமுனைத் திரைப்படங்கள் 100 என்ற வரிசையில் சுந்தர புருஷன் படத்தையும் பட்டியலிடப்பட்டது.[5]

குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்த லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம்.[6]

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தது மட்டுமின்றி, "கெட்டப்ப மாத்தி செட்டப்ப மாத்தி" என்ற பாடலையும் எழுதினார்.[7]

இசை தொகு

இப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களை எழுதியவர்கள் வைரமுத்து, காளிதாசன், எஸ். ஜே. சூர்யா, சரவணஞானம் ஆவர்.

வ.எண் பாடல்கள் பாடகர்(கள்) கால நீளம்
1 ராஜ ராஜனே மனோ, சிற்பி, சுவர்ணலதா 4:28
2 ஈரக்காத்து சுஜாதா மோகன் 4:44
3 வெண்ணிலா வெண்ணிலா கே.எஸ்.சித்ரா மற்றும் குழுவினர் 4:32
4 செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி சுரேஷ் பீட்டர்ஸ் , சுவர்ணலதா 4:57
5 மருத அழகரோ கே.எஸ்.சித்ரா 4:40
6 ஆடிப்பட்டி அம்முக்குட்டி மால்குடி சுபா , சிற்பி 4:48

மேற்கோள்கள் தொகு

  1. "Sundara Purushan". cinesouth. Archived from the original on 2013-10-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
  2. "பசி நாராயணன்".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "பயில்வான் ரங்கநாதன்".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "சாதனை புரிந்த தமிழ்த் திரைப்படங்கள்". Archived from the original on 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 2019-01-24.
  5. "திருப்புமுனைத் திரைப்படங்கள்". Archived from the original on 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-01-24.
  6. "சுந்தர புருஷன்".
  7. "interesting facts".[தொடர்பிழந்த இணைப்பு]