செஞ்சிக் கோட்டை
செஞ்சிக் கோட்டை (Gingee Fort, Senji Fort) (இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.
செஞ்சிக் கோட்டை Gingee Fort | |
---|---|
பகுதி: தமிழ்நாடு | |
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | |
ஆள்கூறுகள் | (12°15′50″N 79°02′40″E / 12.2639°N 79.0444°E) [1] |
வகை | கோட்டைகள் |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தமிழ்நாடு அரசு |
நிலைமை | சிதைந்தவை |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 12ம், 13ம் நூற்றாண்டு |
கட்டியவர் | ஆனந்த கோன் கி.பி. 1190–1240
கிருஷ்ணா கோன் 1240–1270 கோனேரி கோன் கோவிந்த கோன் வலிய கோன் அல்லது புலிய கோன் 1300 |
கட்டிடப் பொருள் |
கருங்கல் (பாறை) பாறைகள்]], சுண்ணக் கலவை |
நிகழ்வுகள் | தேசிய நினைவுச் சின்னம் (1921) |
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
வரலாறு
செஞ்சிக்கோட்டையை பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றை கூறும் மெக்கன்சி சுவடித்தொகுப்புகளில் இது தொடர்பான பல தகவல்கள் உள்ளன.
காடவர்கோன் தொடர்பான சான்றுகள்
வரலாற்றறிஞர் திரு க. அ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தன்னுடைய சோழர்கள் நூலில் விக்கிரம சோழன் உலா காடவனைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. அக் காடவன் வலிய போர் யானைகளைக் கொண்டவன். அவன் வலிமையான கோட்டைகளையும் மதில்களையும் கொண்ட செஞ்சியார் கோன் என்பவன் ஆவான் எனக் குறிப்பிடுகிறார்.[1] விக்கிரம சோழன் உலாவில்,
கடியரணச் செம்பொற் பதணஞ் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும் - (விக்கிரம சோழன் உலா - கண்ணி 79 & 80) பொருள் : காவல் கொண்ட மதிலையுடைய சிவந்த பொன்னாலாகிய மேடைகள் நெருங்கிய கோட்டை சுற்றிய செஞ்சியர்கோனாகிய தூணிற் கட்டப்படுஞ் செருக்குடைய யானையைக்கொண்ட காடவன் என்பவனும்.
என்றுள்ளது. செஞ்சிக்கோட்டையைப் பற்றி கிடைக்கும் இந்தச் சான்றே மிகப் பழமையான சான்றாகும் என்பதாக அவர் தெரிவிக்கிறார்.
ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன் காலத்திலும் தொடர்ந்து அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும், அவன் மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த காடவன் கோப்பெருஞ்சிங்கன், சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜ சோழனை சிறை பிடித்த செய்தி வயலூர் கல்வெட்டின் மூலம் நமக்கு தெரியவருகிறது.[2] மூன்றாம் ராஜராஜனை செஞ்சியை அடுத்த அன்னமங்கலம் எனும் ஊரின் மலைக்குகையில் சிறை வைத்ததற்கு ஆதாரமாக அக்குகையில் காணப்படும் சிற்பமும் அதில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் உறுதிபடுத்துகின்றன. எனவே செஞ்சிக்கோட்டையைக் கட்டிய செஞ்சியர் கோன் காடவனின் 12ஆம் நூற்றாண்டு மற்றும் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சிக்காலமான 13ஆம் நூற்றாண்டிலும் செஞ்சிக்கோட்டை காடவர்களின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[சான்று தேவை] அதன் பிறகு விசயநகர நாயக்கர்கள், மராட்டியர், முகலாயர், ஆற்காடு நவாப்புகள் பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறி மாறி இருந்து வந்துள்ளது.
அனந்த கோன் தொடர்பான சான்றுகள்
நாராயணன் என்ற வரலாற்று ஆய்வாளர் கருத்தின்படி செஞ்சிக்கு அருகிலுள்ள மேலச்சேரி கிராமத்தில் கி.பி. 1200ஆம் ஆண்டருகில் அனந்த கோன் என்னும் இடையர் குலத்தை சேர்ந்தவர் தன் ஆடுகளை மேய்க்கையில் மேற்கு மலைகளில் இருந்த பொந்துகளில் புதையலை கண்டறிந்ததாகவும் அதன்பிறகு அதைச்சுற்றிய பல கிராமங்களில் உள்ள சிறு ஆட்சியாளர்களை தோற்கடித்து கமலகிரி என்னும் கோட்டையை கட்டியதாகவும் கூறுகிறார்.[3] பின்னர் தன் பெயரில் அதை அனந்த கிரி என்று பின்னர் பெயர் மாற்றியதாகவும் கூறுகிறார். கோனார் குலத்தவர்கள் 1190 முதல் 1130 வரை செஞ்சியை ஆண்டதாகவும் பின்னர் குறும்பர் குலத்தைச்சேர்ந்த கோபலிங்க கோன் சோழர்களின் கீழ் இந்த பகுதியை ஆண்டதாகவும் வரலாற்று நூல்களில் தகவல்கள் உள்ளன..[4]
- ஆனந்த கோன் கி.பி. 1190-1240[5]
- கிருஷ்ணா கோன் 1240–1270
- கோனேரி கோன்
- கோவிந்த கோன்
- வலிய கோன் அல்லது புலிய கோன் 1300- (?)[6]
- கோபலிங்க கோன் அல்லது கோட்டியலிங்க கோன் 1320–1330. மேலுள்ளவர்கள் வரையும் ஆனந்த கோன் வாரிசுகள். இவர்களுக்கு பின்னால் வேறு பகுதி கோனார்கள் குறும்ப இடையர் ஆண்டனர்.
பிற்காலம்
தமிழகம் நாயக்கர் வம்ச ஆட்சியின் கீழ் வந்த பிறகு செஞ்சிக் கோட்டைப் பகுதியை செஞ்சி நாயக்கர்கள் ஆளத் துவங்கினர். செஞ்சி நாயக்கர்களில் குறிப்படத்தக்கவரான பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் தற்போதைய செஞ்சிக்கோட்டை வடிவமைக்கபட்டது. செஞ்சியில் உள்ள மூன்று குன்றுகளை இணைத்து எழுப்பபட்ட மதில் சுவர் இவர் காலத்தில் கட்டபட்டதே.[7] கி பி 1649-இல் செஞ்சியை பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றும் வரை செஞ்சி நாயக்கர்கள் ஆண்டனர். 1677ல் பேரரசர் சிவாஜி, பிஜப்பூர் சுல்தானிடமிருந்து செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றி மராத்தியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.
முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் சுல்பிகர் அலி கான் தலைமையில், ஆற்காடு நவாப், மதுரையின் ராணி மங்கம்மாள் ஆகியோர் இணைந்து, செஞ்சிக் கோட்டையில் தங்கியிருந்த சத்திரபதி இராஜாராம் மற்றும் தாராபாய் உள்ளிட்ட மராத்தியப் படைகளை விரட்டியடிக்க செப்டம்பர், 1690ல் செஞ்சியை முற்றுகையிட்டனர்.[8] எட்டாண்டுகள் நீடித்த முற்றுகையின் முடிவில் 1698 இல் கோட்டை முகலாயர் வசம் வந்தது.
கோட்டை முகலாயர் வசம் வந்த பிறகு கோட்டையின் தலைவராக புத்தோல்கண்ட் ராஜ்புத் இனத்தவரான சரூப் சிங்கை நியமித்தார். 1907 இல் அவுரங்கசீப் இறக்கும்வரை ஆற்காடு நவாப்பிடம் செலுத்திவந்த கப்பத்தை நிறுத்திவிட்டார். 1714 இல் சரூப் சிங் இறந்த பிறகு இவரின் மகன் தேசிங்கு தன் 22 வயதில் பட்டத்துக்கு வந்தார். இதனையடுத்து ஆற்காடு நவாப் நிலுவை கப்பத்தையும், அதற்கான வட்டியையும் மொத்தமாக செலுத்தவேண்டும் என்று தேசிங்கிடம் ஆள் அனுப்பி கேட்டார். இனிமேல் கப்பம் கட்ட முடியாத என்று தேசிங்கு ராஜன் தெரிவித்துவிட்டார். போரில் தேசிங்கு வீர மரணம் அடைந்தார். கோட்டை ஆற்காடு நவாப்பின்கீழ் வந்தது. இதன்பிறகு கோட்டையானது பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆளுகையில் மாறி மாறி இருந்து வந்து. 1780 இல் இந்தக் கோட்டையை ஐதர் அலி கைபற்றினார். இறுதியில் 1799 இல் கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்து சேர்ந்தது.
அமைப்பு
செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
கீழ்க் கோட்டைக்கு செல்ல இரண்டு வாயில்கள் உள்ளன. அதில் வடக்கில் உள்ள வாயில் வேலூர் வாயில் என்றும், கிழக்கில் உள்ளது பாண்டிச்சேரி வாயில் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டில் எதன் வழியாக சென்றாலும் 24 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்லவேண்டும். செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் கோட்டைச் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இதில் எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளை இணைக்கும்விதமாக இவற்றுக்கு இடையில் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட கீழ்க்கோட்டைச்யானது கட்டபட்டுள்ளது. இந்தக் கீழ் கோட்டையில் ஒரு பள்ளிவாசல், வெங்கட்ரமணசாமி கோவில் போன்றவை உள்ளன. இராஜகிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டபட்டுள்ளது. இராஜகிரியில் போர் முற்றுகைக்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் உள்ளது, போர்காலத்தில் கோட்டைக் காவலர்கள் இந்த பாலத்தை அகற்றிவிடுவர் அப்போது எதிகள் உள்ளே நுழைய இயலாமல் திண்டாடுவர்.
தற்போதைய நிலை
இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில் இந்தியச் சுற்றுலாத்துறை பொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது.
மேற்கோள்கள்
- ↑ சோழர்கள், க. அ. நீலகண்ட சாத்திரி – Vikkramasolan-ula mentions the Kadava who rode a rutting elephant and was Lord of the Senjiyar of the Strong Embattled Fortress. This is perhaps the earliest mention of the Fortress of Gingee, பக்கம் 347 & 362
- ↑ Epigraphia Indica, Vol-XXIII, Page No.180-181
- ↑ Hiltebeitel 1991, p. 4
- ↑ Hiltebeitel 1991, p. 17
- ↑ Chidambaram S. Srinivasachari (1943 (2003)). செஞ்சியின் வரலாறு. ? பல்கலைக்கழகம் (சந்தியா பதிப்பகம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் ? (9381343411, 9789381343418).
{{cite book}}
: Check|isbn=
value: invalid character (help); Check date values in:|year=
(help) - ↑ C. S. Srinivasachari (1943). History of_Gingee_And_Its_Rulers. Andhra University. pp. 31–32.
- ↑ எஸ். ராமகிருஷ்ணன் (2017). எனது இந்தியா. சென்னை: விகடன் பிரசுரம். p. 233.
- ↑ https://books.google.co.in/books?id=KOk6mmMssHoC&pg=PA65&lpg=PA65&dq=Siege+of+Jinji&source=bl&ots=_1zS23sqtD&sig=zG9FauCA0BiFcyeQ3Pp0cL1AZUI&hl=ta&sa=X&ved=0ahUKEwi2pIrmt6PaAhVKN48KHUbTA5IQ6AEIZjAI#v=onepage&q=Siege%20of%20Jinji&f=false
உசாத்துணைகள்
- Hiltebeitel, Alt (1991). The cult of Draupadī: Mythologies : from Gingee to Kurukserta, Volume 1. Motilal Banarsidass Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120810006.
வெளி இணைப்புகள்