செரெங்கெட்டி தேசியப் பூங்கா

செரெங்கெட்டி தேசியப் பூங்கா, தான்சானியாவின் செரெங்கெட்டிப் பகுதியில் உள்ள பெரிய தேசியப் பூங்கா ஆகும். இது இங்கு ஆண்டுதோறும் நிகழும் விலங்குகளின் இடப்பெயர்வு தொடர்பில் புகழ் பெற்றது. இந் நிகழ்வின் போது ஒன்றரை மில்லியன் வெண்தாடிக் காட்டுமாடுகளும் (wildebeest), 200,000 வரிக்குதிரைகளும் இடம் பெயர்கின்றன. 1981ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலக மரபுச் சின்னமாக இந்த பூங்கா அறிவிக்கப் பட்டது[1].

செரெங்கெட்டி தேசியப் பூங்கா
செரெங்கெட்டி தேசியப் பூங்காவின் நிலத்தோற்றம்
அமைவிடம்தான்சானியா
பரப்பளவு14,763 கிமீ2
நிறுவப்பட்டது1951
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
செரெங்கெட்டி தேசியப் பூங்கா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைஇயற்கை
ஒப்பளவுvii, x
உசாத்துணை156
UNESCO regionஆப்பிரிக்கா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1981 (5வது தொடர்)

வரலாறு தொகு

தம்மால் முடிவற்ற வெளி என அழைக்கப்பட்ட இப்பகுதிப் புல்வெளிகளில் மசாய் இன மக்கள் 2000 ஆண்டுகளுக்கு மேலாகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். செரெங்கெட்டி என்பது மசாய் மக்கள் இப்பகுதிக்கு வழங்கிய பெயரை அண்ணளவாக ஒத்தது. செருமானியப் புவியியலாளரும், தேடலாய்வாளருமாகிய முனைவர் ஆஸ்கார் போமென் (Oscar Baumann) 1892 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு வந்தார். இவர் இப்பகுதியில் தங்கியிருந்தபோது மூன்று காண்டாமிருகங்களைக் கொன்றார். இப்பகுதிக்கு வந்த முதல் பிரித்தானியர் "இசுட்டெவார்ட் எட்வார்ட் வைட்" (Stewart Edward White) என்பவராவார். இவர் 1913 ஆம் ஆண்டில் வடக்கு செரெங்கெட்டியில் தான் கண்டவை பற்றி எழுதியுள்ளார். இவர் 1920 ஆம் ஆண்டில் மீண்டும் செரங்கெட்டிக்கு வந்து செரொனீரா பகுதியில் மூன்று மாதம் தங்கியிருந்தார். இக் காலத்தில் இசுட்டெவார்டும் அவரது நண்பர்களும் 50 சிங்கங்களைச் சுட்டுக் கொன்றனர்.

வேட்டையாடுவதன் மூலம் சிங்கங்கள் அருகி வந்ததால் பிரித்தானிய அரசு 1921 ஆம் ஆண்டில், இப்பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவில் ஒரு பகுதியான வேட்டைவிலங்கு ஒதுக்ககம் ஒன்றை ஏற்படுத்தியது. இது பின்னர் 1929 ஆம் ஆண்டில் முழுமையான ஒதுக்ககம் ஆனது. இந்த நடவடிக்கைகளே 1951 ஆம் ஆண்டில் செரெங்கெட்டி தேசியப் பூங்கா அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்தன. 1950 களில், பெர்னாட் கிரிசிமெக் என்பவரும் அவரது மகன் மைக்கேல் என்பவரும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக செரெங்கெட்டி புகழ் பெறத் தொடங்கியது. இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நூலையும், "செரெங்கெட்டி அழியக்கூடாது" (Serengeti Shall Not Die) என்னும் தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டனர். இது, இயற்கைப் பாதுகாப்புத் தொடர்பில் உருவாக்கப்பட முந்திய ஆவணப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

தேசியப் பூங்கா உருவாக்கத்தின் ஒரு பகுதியாக அப்பகுதிகளில் வாழ்ந்த மசாய் இன மக்கள் இன்கோரொங்கோரோ மேட்டுநிலப் பகுதிகளுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். இது தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவில் சர்ச்சைகள் இன்றும் நிலவுகின்றன. இம் முயற்சியின்போது மக்களைக் கட்டாயப்படுத்தியதாகவும், வஞ்சகமாகச் செயற்பட்டதாகவும் குடியேற்றவாத அரசு மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

செரெங்கெட்டி தான்சானியாவின் மிகப் பழைய தேசியப் பூங்காவாகும். இன்றும் இது நாட்டின் சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது.

புவியியல் தொகு

இப்பூங்கா 14,763 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இதற்குள் புல்வெளிகள், ஐதான மரங்களைக் கொண்ட புற்றரைகள், ஆறுசார்ந்த காடுகள் என்பன அடங்கியுள்ளன. இப்பூங்கா நாட்டின் வட பகுதியில் தான்சானிய - கெனிய எல்லையில் அமைந்துள்ளது. இப் பகுதியில் இது மசாய் மாரா தேசிய ஒதுக்ககத்துடன் தொடர்ச்சியாக உள்ளது. இதன் தென்கிழக்குப் பகுதியில் இங்கோரொங்கோரோ பாதுகாப்புப் பகுதியும், தென்மேற்கில் மாசுவா வேட்டைவிலங்கு ஒதுக்ககமும், மேற்கு எல்லையில் இக்கோரோங்கோ மற்றும் குருமெட்டி வேட்டைவிலங்கு ஒதுக்ககமும் உள்ளன. வடகிழக்கில் லொலியோண்டோ வேட்டைவிலங்குக் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. http://whc.unesco.org/en/list/156
  • Homewood, K.W. and Rodgers, W.A., Maasailand Ecology: Pastoralist Development and Wildlife Conservation in Ngorongoro, Tanzania, New York: Cambridge University Press, 1991 ISBN 0521400023
  • Turner, Myles, My Serengeti Years: the Memoirs of an African Games Warden, New York: W. W. Norton & Co Inc, 1988 ISBN 0393025764

வெளியிணைப்புகள் தொகு