ஜெராண்டுட்
ஜெராண்டுட் (ஆங்கிலம்: Jerantut; மலாய்: Jerantut; சீனம்: 而连突) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள நகரம் ஆகும். இந்த நகரம் அமைந்து இருக்கும் மாவட்டத்திற்கும் ஜெராண்டுட் என்று பெயர்.
ஜெராண்டுட் | |
---|---|
நகரம் | |
Jerantut | |
ஆள்கூறுகள்: 3°56′N 102°22′E / 3.933°N 102.367°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | ஜெராண்டுட் |
உருவாக்கம் | 1914 |
அரசு | |
• வகை | நகராண்மைக் கழ்கம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,561 km2 (2,919 sq mi) |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 90,000 |
• அடர்த்தி | 12/km2 (31/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 27xxx |
மலேசியத் தொலைபேசி | 08 |
ஜெராண்டுட் நகரம் கோலாலம்பூரில் இருந்து 220 கி.மீ., குவாந்தான் நகரில் இருந்து 180 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. ஜெராண்டுட் மாவட்டத்தின் தலைப்பட்டணமாகவும் விளங்குகிறது.
பகாங் மாநிலத்தின் வடக்கே அமைந்து இருக்கும் ஜெராண்டுட், தேசிய வனப்பூங்காவான தாமான் நெகாராவின் நுழைவாயில் பட்டணம் என்றும் அழைக்கப் படுவது உண்டு. தாமான் நெகாராவிற்குச் செல்வதற்கு முன்னர், பெரும்பாலான வெளிநாட்டுப் பயணிகள் இங்கு தங்கிச் செல்வது உண்டு.[1]
பொது
தொகுபகாங் மாநிலத்தின் ஆகப் பெரிய மாவட்டமான ஜெராண்டுட்டின் வட எல்லையில் கிளாந்தான், திராங்கானு மாநிலங்கள் உள்ளன. தெற்கே தெமர்லோ மாவட்டம், மாரான் மாவட்டம்; மேற்கே லிப்பிஸ் மாவட்டம், ரவுப் மாவட்டம்; கிழக்கே குவாந்தான் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. ஜெராண்டுட் மாவட்டத்தில் தான் தெம்பிலிங் ஆறு ஓடுகிறது.
இந்த ஆற்றின் வழியாகத் தேசிய வனப்பூங்காவான தாமான் நெகாராவைச் சென்று அடையலாம். தெம்பிலிங் ஆறு; ஜெலாய் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளும் இணைந்துதான், தீபகற்ப மலேசியாவின் மிகப் பெரிய ஆறான பகாங் ஆற்றை உருவாக்குகின்றன. பகாங் ஆறு தென்சீனக் கடலில் கலக்கிறது.
வரலாறு
தொகுபகாங் மாநிலத்தின் முதல் அரசரான சுல்தான் அகமட் வான் அகமட் காலத்திலேயே, ஜெராண்டுட் எனும் பெயர் புழக்கத்தில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
ஜெராண்டுட்டின் பழைய பெயர் சிம்பாங் அம்பாட் (Simpang Empat). அதன் பின்னர், பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் ‘ஜங்சன் 4’ (Junction 4) என்று அழைக்கப்பட்டது. பகாங் ஆற்றின் ஜெராண்டுட் பகுதியில் நீர் வீரியம் ஏற்படுவது உண்டு. மீன் பிடிப்பவர்கள் அதை ‘அவாங் துட்’ என்று அழைத்தார்கள். அதுவே, காலப் போக்கில் ஜெராண்டுட் என்று பெயர் பெற்றது.
அமைவு
தொகுஜெராண்டுட் நகரம், மலேசியாவின் முதல் தேசிய வனப்பூங்காவான தாமான் நெகாராவின் நுழைவாயில் நகரமாக அமைகின்றது. 'கோத்தா கெலாங்கி' (ஜெராண்டுட்) குகைகள் ஜெராண்டுட் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றன. இந்தக் குகைகள், தொல்பொருளியல் துறையினர் ஆய்வு செய்யும் இடமாக இருக்கின்றது.
ஜெராண்டுட் மாவட்டம் பத்து துணை மாவட்டங்களைக் கொண்டது. 125 கிராமங்கள் உள்ளன.[2] சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களாக லதா மெராவுங் நீர்வீழ்ச்சி, மலேசியப் பழங்குடியினர் குடியிருப்புகள், குனோங் தகான், குனோங் பெனோம், ராபிள்சியா பாதுகாப்பு மையம் (ஆங்கிலம்: Rafflesia Conservation Center) போன்றவை அமைகின்றன. பகாங் மாநிலத்தின் பெரிய மாவட்டமான ஜெராண்டுட், அண்மைய காலங்களில் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி
தொகுஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி (மலாய்: Sekolah Jenis Kebangsaan Tamil Jerantut), ஜெராண்டுட் நகரத்தின் ஜாலான் பெந்தாவில் அமைந்து உள்ளது. 14 ஆசிரியர்கள் பணிபுரியும் இப்பள்ளியில் 182 மாணவர்கள் பயில்கின்றனர். 96 ஆண்கள். 86 பெண்கள்.