தமிழச்சி தங்கப்பாண்டியன்

கவிஞர், பேச்சாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி

தமிழச்சி தங்கப்பாண்டியன் (Thamizhachi Thangapandian, பிறப்பு: 25 சூலை 1962) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கவிஞரும், சமூக ஆர்வலரும் அரசியல்வாதியும் ஆவார்.[1]

தமிழச்சி தங்கப்பாண்டியன்
Thamizhachi Thangapandian
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
மே 2019 – பதவியில்
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜே. ஜெயவர்த்தன்
தொகுதிதென் சென்னை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சுமதி

25 ஏப்ரல் 1962 (1962-04-25) (அகவை 62)
மல்லாங்கிணறு, விருதுநகர், இந்தியா
அரசியல் கட்சிRising Sun-DMKதிராவிட முன்னேற்றக் கழகம்
பிள்ளைகள்2
பெற்றோர்தங்கபாண்டியன் (முன்னாள் சமஉ)
உறவினர்கள்தங்கம் தென்னரசு (தம்பி)
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வேலைஎழுத்தாளர்
அரசியல்வாதி
விருதுகள்பாவேந்தர் பாரதிதாசன் விருது - 2009
இணையத்தளம்ithamizhachi.com

பிறப்பு தொகு

தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுமதி ஆகும். இவர் தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான தங்கப்பாண்டியனின் மகளும், தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான (13.5.2006 – 15.5.2011) தங்கம் தென்னரசின் அக்காவும் ஆவார்.[2]

கல்வி தொகு

சுமதி தான் பிறந்த மல்லாங்கிணற்றில் தொடக்கக் கல்வியும் விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பெற்றார்.[3] மதுரையில் உள்ள மீனாட்சி அரசுப் பெண்கள் கல்லூரியில் பயின்று புதுமுக வகுப்பில் தேறினார். பின்னர் மதுரை தியாகராயர் கல்லூரி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.[4] ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

ஆசிரியர் பணி தொகு

சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.

குடும்பம் தொகு

தமிழச்சி என்னும் சுமதி, காவல்துறை அதிகாரி சந்திரசேகர் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

அரசியல் தொகு

தமிழச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தற்போது திமுகவின் மகளிரணியில் முக்கிய பதவி வகித்து வருகிறார். இவரது தொகுப்புகள் விகடன் இதழில் வெளிவந்துள்ளன. இளவயதில் பரதநாட்டியம் கற்றவர். 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு, அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெ. ஜெயவர்தனை விட 2,62,223 கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[5]

படைப்புகள் தொகு

தமிழச்சி தன் தந்தை தங்கபாண்டியன் இறந்தபொழுது கையறுநிலைப் பாடல் ஒன்றை எழுதினார். குங்குமம் இதழில் வெளிவந்த இக்கவிதையே இவருடைய முதற்படைப்பாகும். பின்னர் தொடர்ந்து பல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை, த. சுமதி என்கிற தன் இயற்பெயரிலே எழுதுகின்ற இவர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் முனைப்பு கொண்டு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் இவை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கின்ற இவரது சிறுகதைகள் சில ஆனந்த விகடன் மற்றும் அவள் விகடனில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்ந்த கவித்துவம், சொல்வளம், தொடர்ச்சியான கவிதை இயக்கம், அரசியல் உள்ளீடு கொண்ட படைப்பு பலம், தொன்மையும் நவீனமும் இணையும் பாங்கு, அடித்தட்டு மக்களின் மீதான அக்கறை, தமிழ் தேசிய நலனில் கரிசனம், உலகமயமாக்கலின் அடையாள அழிப்பிற்கு எதிர்திசையில் தமிழின் பன்முக அடையாளங்களை தேடிப் படைக்கும் ஆற்றல் -  என விரிவான கவித்தளத்தில் இவரது கவிதைகள் இயங்குகின்றன. பரதநாட்டியத்தினை முறையாகப் பயின்றிருக்கின்ற இவருக்கு, அரங்கம் எனப்படுகின்ற மேடை நாடகத் தளத்தில் ஆர்வமும், பங்கேற்பும் உண்டு. பிசாசு என்ற திரைப்படத்தில் 'போகும் பாதை தூரமில்லை' என்ற பாடலை எழுதியுள்ளார். கவிதைகள், சிறு பத்திரிக்கைகளிலும், வெகுஜனப் பத்திரிக்கைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பன்னாட்டு அரங்குகளின் இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கு பெற்றிருக்கின்றார். இவரது படைப்புகளில் சில  பின்வருமாறு

கவிதைகள் தொகுப்புகள் தொகு

 • எஞ்சோட்டுப் பெண் (சனவரி 2004)
 • வனப்பேச்சி (திசம்பர் 2007)
 • மஞ்சணத்தி (திசம்பர் 2009)
 • அருகன் (திசம்பர் 2011)
 • அவளுக்கு வெயில் என்று பெயர் (திசம்பர் 2015)

கட்டுரைத் தொகுப்புகள் தொகு

 • பாம்படம் (திசம்பர் 2010)
 • சொல் தொடும் தூரம் (திசம்பர் 2010)
 • மயிலறகு மனசு (மே 2012)
 • மண்வாசம் (சூலை 2013)
 • நவீனத்துவவாதி கம்பன் (திசம்பர் 2010)
 • உறவுகள் - எஸ்.பொ. (திசம்பர் 2004)
 • பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை (திசம்பர் 2015)
 • சொட்டாங்கல் (திசம்பர் 2018)

ஆராய்ச்சி தொகுப்புகள் தொகு

 • நிழல் வெளி (சனவரி 2018)

சிறுகதை நூல் தொகு

 • முட்டு வீடு (சனவரி 2019)

ஆங்கில நூல்கள் தொகு

 • Island to Island (The Voice of Sri Lankan Australian Playwright-Ernest Thalayasingham Macintyre) (Jan 2013)
 • Internal Colloquies, translated by C.T.Indra of selected poems from Vanapechi by Dr.Thamizhachi Thangapandian (Feb 2019)

விமர்சன நூல்கள் தொகு

 • காலமும் கவிதையும் - தமிழச்சியின் படைப்புலகம் (திசம்பர் 2010)
 • காற்று கொணர்ந்த கடிதங்கள் (திசம்பர் 2010)

நேர்காணல் தொகுப்பு தொகு

 • பேச்சரவம் கேட்டிலையோ (சனவரி 2009)

தமிழ் நாடக அரங்கில் பங்களிப்புகள் தொகு

 • தமிழ் நாடக அரங்கின் தனித்துவமிக்க இயக்குநர், கலைத்துவத்துடன் அரசியலை முன்வைக்கின்ற நாடக நெறியாளர் பிரசன்னா ராமஸ்வாமியின் பாரதியார் கவிதைகள் குறித்த நாடகத்தில் இவரது பங்களிப்பு கலாஷேத்ராவிலும், சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் பரவலான கவனத்தைப் பெற்றது. அவரது இயக்கத்தில் சேரன், சுகுமாறன் ஆகியோரது கவிதைகள் குறித்த நிகழ்த்துகலை நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.
 • தமிழ் நாடகப் பரப்பிலே குறிப்பிடத்தகுந்த நாடக நெறியாளரான அ.மங்கை அவர்களது இயக்கத்தில், கவிஞர். இன்குலாப் அவர்களது குறிஞ்சிப் பாட்டு எனும் இரண்டு மணி நேர நாடகத்தில் பங்கேற்றுள்ளார். சென்னை மற்றும் சேலத்தில் இந்நாடகம் நடத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட மரபுகளையும், பழம்பெரும் கலாச்சார வேர்களையும் மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நாடகம் அறியப்பட்டது.
 • 'வெளி' ரங்கராஜன் அவர்களுடைய நாடகவெளி சார்பாக சென்னை அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் தமிழின் பழம்பெரும் எழுத்தாளர் கு.ப.ரா.வின் அகலிகை நாடகத்தில் அகலிகையாகப் பங்கேற்று நடித்திருக்கின்றார். நவீனப் பெண்ணிய குரலாக இந்நாடகம் பாராட்டப்பட்டது.
 • இவர் சூர்ப்பநகையாக நடித்த, கு. அழகிரிசாமியின் வஞ்சமகள் எனும் நவீன நாடகம், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் அரங்கேற்றப்பட்டு, நன்கு வரவேற்கப்பட்டது.
 • இன்னொரு ஏதோ எனும் நவீன நாடகத்தை, கனடா வாழ் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சிறீசுவுடன் அரங்கேற்றியுள்ளார்.
 • தியேட்டர் லேப் என்கின்ற நாடகக் குழுவினருடன் இணைந்து சென்னை, அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து விநாடிகள் எனும் மொழிபெயர்ப்பு நாடகத்தில் (தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி) சி.ஜெயராவின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். அதிகாரத்திற்கு எதிரான அமைதியின் குரலாக இந்நாடகம் பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்டது.
 • தமிழச்சியினுடைய நூல் வெளியீட்டு நிகழ்வுகளின் துவக்க நிகழ்வாக அவரது கவிதைகளை நாடக வடிவில் சிறந்த அரங்கக் கலைஞர் கருணா பிரசாத்தின் நெறியாள்கையில் மூன்றாம் அரங்கு குழுவினர் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.
 • விஸ்டம் பதிப்பகத்தாரின் சிறந்த இளவயது நாடகக் கலைஞர் விருது, நிகழ்த்துதல் கலைக்காக இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தொகுப்புகள் தொகு

தமிழச்சி தன்னுடைய படைப்புகளைப் பற்றி பிறர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து காலமும் கவிதையும் - தமிழச்சியின் படைப்புலகம் என்னும் தலைப்பில் நூலாக 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இதில் கல்யாண்ஜி, கலாப்ரியா, தமிழவன், இமையம், ந.முருகேச பாண்டியன், அ.ராமசாமி, பிரம்மராஜன், த.பழமலய், அறிவுமதி, க.பஞ்சாங்கம், பிரபஞ்சன், சுதிர் செந்தில், வெங்கட்சாமிநாதன், சுகுமாரன், யவனிகா ஸ்ரீராம், பத்மாவதி விவேகானந்தன், கே.ஆர்.மீரா ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.[6]

தமிழச்சிக்கு பிறர் எழுதிய கடிதங்களைத் தொகுத்து காற்று கொணர்ந்த கடிதங்கள் என்னும் தொகுப்பை 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.[7]

மேற்கோள்கள் தொகு

 1. "தமிழச்சி தங்கப்பாண்டியன்". விகடன். பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2019.
 2. "பகுத்தறிவு பாசறை குடும்பத்தினரின் குடும்ப விழா... ஹோமம் வளர்த்து திருமணம்.... தமிழச்சி தங்கப்பாண்டியனின் 60 ஆம் கல்யாணம்.!!". asianetnewstamil. 27 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2019.
 3. "கண்ணீர்விட்டு அழுத தமிழச்சி தங்கப்பாண்டியன்! தந்தை சமாதியில் அஞ்சலி !!". ஆசியாநெட்நியூஸ் தமிழ். 29 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2019.
 4. "தமிழச்சி தங்கபாண்டியன்". Archived from the original on 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் 2012-10-24.
 5. "Lok Sabha Elections 2019 - Constituency Wise Election Results (Winner/Runner Up)". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2019.
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-28. பார்க்கப்பட்ட நாள் 2013-05-30.

வெளியிணைப்புகள் தொகு