தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் (Tamilnadu Warehousing Corporation), தமிழக அரசு கொள்முதல் செய்த உணவு தானியங்களை சேமிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் 2 மே 1958-இல் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் மேலாண்மை இயக்குநர் இ ஆ ப அதிகாரி ஆவார். மேலும் இந்நிறுவனத்திற்கு தலைவர் உள்ளடக்கிய 11 இயக்குநர்களைக் கொண்ட குழு உள்ளது. இதன் குழுமத் தலைவர் மற்றும் 5 இயக்குநர்கள் தமிழ்நாடு அரசாலும், 5 இயக்குநர்கள் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பாகவும் நியமனம் செய்யப்படுகின்றனர். இதன் தலைமையிடம் 82, அண்ணா சாலை, கிண்டி, சென்னை (அசுஎ) 600032-இல் இயங்குகிறது. இந்நிறுவனத்திற்கு காஞ்சிபுரம், கடலூர், மேட்டுப்பாளையம், திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி நகரங்களில் உள்ள ஏழு மண்டல அலுவலகங்களை நிர்வகிக்க மூத்த மண்டல அதிகாரிகள் உள்ளனர். இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 57 இடங்களில் பெரிய அளவிலான 256 சேமிப்புக் கிடங்கிகள் உள்ளது. இந்நிறுவனத்தின் சேமிப்புத் திறன் 7.34 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும்.

நோக்கம் தொகு

நவீன வசதிகளுடன் கூடிய சேமிப்பு வசதிகளை விவசாயிகள் மற்றும் பிற வியாபார நிறுவனங்களுக்கு வழங்குவதற்காகவும், விவசாயிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் பொருட்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காகவும் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் பொருட்களின் சேமிப்பு இழப்பினை கட்டுப்படுத்தவும், பொருட்களின் சேமிப்புத் திறனை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, சேமிப்புக் கிடங்குகளைக் கட்டியும், இயக்கியும் வருகிறது. மேலும், சந்தை வாய்ப்புகளை ஆய்வு செய்து மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள விவசாயிகள் மற்றும் இதர வியாபார நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை சேமிப்பதற்காக, சேமிப்புக் கிடங்குகள் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன.

கிடங்கியின் பெரிய பயன்பாட்டாளர்கள் தொகு

இந்நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளை பெருமளவில் இந்திய உணவுக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பாடநூல் கழகம், ஆவின், தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம், சர்க்கரை ஆலைகள், உர உற்பத்தி நிறுவனங்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், இந்திய புகையிலை நிறுவனம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தேசிய கூட்டுறவு விற்பனை இணையம், தனியார் வியாபார நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சலுகைகள் தொகு

அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு சேமிப்பு கிடங்கில் தங்கள் பொருட்களை இருப்பு வைப்புக் கட்டணத்தில் 10% முதல் 30 வரை தள்ளுபடி வழங்குகிறது.

மேற்கோள்கள் தொகு


வெளி இணைப்புகள் தொகு