தாள் அளவு

தாளின் அளவினை நிர்ணயம் செய்தல்

ஆவணங்களுக்கும், வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய தாள் அளவுகள், தொடர்பான சீர்தரங்கள், நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. ஆனால் இன்று, முக்கியமாக இரண்டு வகையான சீர்தரங்களே அனைத்துலக அளவில் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று, அனைத்துலக சீர்தர நிறுவனத்தின் அளவுகள், மற்றது வட அமெரிக்க அளவுகள்.

அனைத்துலக சீர்தரம்: ஐஎஸ்ஓ 216

தொகு
 
ஐஎஸ்ஓ A அளவுகள்.

அனைத்துலகத் தாள் அளவுச் சீர்தரமான, ஐஎஸ்ஓ 216, தாள் அளவுகளுக்கான ஜெர்மானியச் சீர்தரமான டிஐஎன் 476 ஐ அடிப்படையாகக் கொண்டது. மீட்டர் அளவை முறையில் அமைந்த இது, ஒரு சதுரமீட்டர் பரப்பளவையும், 1 : 1.4142 என்ற அளவு விகிதத்தையும் கொண்ட தாளை அடிப்படை அளவாகக் கொண்டது. இந்த அடிப்படையான தாள் அளவு A0 எனப்படுகின்றது. இந்த A வரிசைத் தாள் அளவு முறையில் A0 என்பதே மிகப் பெரிய அளவாகும். குறைந்து செல்லும் ஏனைய அளவுகள் A1, A2, A3, A4, ..... எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றில் ஒவ்வொன்றும், அதற்கு முன்னுள்ளதைக் குறுக்குவாட்டில் மடித்து வரும் பாதி அளவாகும். மிகப் பரவலாகப் பயன்படும் தாள் அளவு A4 (210 x 297 மிமீ) ஆகும்.

இந்த அளவு முறை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகியவை தவிர்ந்த உலகின் எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையை, மெக்சிக்கோ, கொலம்பியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அமெரிக்க முறை இன்னும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது.

ஐஎஸ்ஓ தாள் அளவுகள் 1 : 2 இன் வர்க்கமூலம் (அண்ணளவாக 1 : 1.4142) என்னும் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த விகிதத்தின் நன்மைகள் குறித்து, 1768 ஆம் ஆண்டிலேயே, ஜெர்மானிய அறிவியலாளரான ஜோர்ஜ் லிச்டென்பர்க் (Georg Lichtenberg) என்பவர் குறிப்பிட்டிருந்தார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், டாக்டர் வால்ட்டர் போர்ஸ்ட்மான் (Walter Porstmann) என்பவர் லிச்டென்பர்க்கின் எண்ணக்கருவை பல்வேறு தாள் அளவுகளைக் கொண்ட முறைமையாக உருவாக்கினார். போர்ஸ்ட்மான் முறை 1922 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் டிஐஎன் சீர்தரமாக (டிஐஎன் 476) அறிமுகப்படுத்தப்பட்டது.

இச் சீர்தர அளவுகள் மிக விரைவாக மற்ற நாடுகளுக்கும் பரவியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே இது பெல்ஜியம் (1924), நெதர்லாந்து (1925), நார்வே (1926), சுவிட்சர்லாந்து (1929), சுவீடன் (1930), சோவியத் ஒன்றியம் (1934), ஹங்கேரி (1938), இத்தாலி (1939) ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. போர்க் காலத்திலேயே உருகுவே (1942), ஆர்ஜெண்டீனா (1943), பிரேசில் (1943) ஆகிய நாடுகளுக்கும் இம்முறை பரவியது.

1975 ஆம் ஆண்டளவில் இவ்வளவு நாடுகள் ஜேர்மன் முறையைப் பின்பற்றியதன் காரணமாக ஐஎஸ்ஓ சீர்தரமாக ஆக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணங்களுக்கும் இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1977 ஆம் ஆண்டளவில், 148 நாடுகளில் 88 நாடுகளில் A4 அளவே கடிதங்களுக்குப் பயன்பட்டது. இன்று அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் மட்டுமே இம்முறையைக் கைக்கொள்ளவில்லை.

மில்லிமீட்டரிலும், அங்குலத்திலும், ஐஎஸ்ஓ/டிஐஎன் தாள் அளவுகள்.
A தொடர் B தொடர் C தொடர்
size மிமீ இல் அங்குலத்தில் மிமீ இல் அங்குலத்தில் மிமீ இல் அங்குலத்தில்
0 841 × 1189 33.1 × 46.8 1000 × 1414 39.4 × 55.7 917 × 1297 36.1 × 51.1
1 594 × 841 23.4 × 33.1 707 × 1000 27.8 × 39.4 648 × 917 25.5 × 36.1
2 420 × 594 16.5 × 23.4 500 × 707 19.7 × 27.8 458 × 648 18.0 × 25.5
3 297 × 420 11.7 × 16.5 353 × 500 13.9 × 19.7 324 × 458 12.8 × 18.0
4 210 × 297 8.3 × 11.7 250 × 353 9.8 × 13.9 229 × 324 9.0 × 12.8
5 148 × 210 5.8 × 8.3 176 × 250 6.9 × 9.8 162 × 229 6.4 × 9.0
6 105 × 148 4.1 × 5.8 125 × 176 4.9 × 6.9 114 × 162 4.5 × 6.4
7 74 × 105 2.9 × 4.1 88 × 125 3.5 × 4.9 81 × 114 3.2 × 4.5
8 52 × 74 2.0 × 2.9 62 × 88 2.4 × 3.5 57 × 81 2.2 × 3.2
9 37 × 52 1.5 × 2.0 44 × 62 1.7 × 2.4 40 × 57 1.6 × 2.2
10 26 × 37 1.0 × 1.5 31 × 44 1.2 × 1.7 28 × 40 1.1 × 1.6
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாள்_அளவு&oldid=1462469" இலிருந்து மீள்விக்கப்பட்டது