திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (ஆங்கில மொழி: Sri Sowmya Narayana Perumal Thirukovil) தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.[1]

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°03′39″N 78°12′09″E / 10.060914°N 78.202499°E / 10.060914; 78.202499
பெயர்
பெயர்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்கோட்டியூர்
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சௌமியநாராயணன்
தாயார்:மகாலெட்சுமி
தீர்த்தம்:தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா மற்றும் நவராத்திரி.
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
விமானம்:அஷ்டாங்க விமானம்
தொலைபேசி எண்:(அர்ச்சகர்) 8825444211

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°03'39.3"N, 78°33'37.1"E (அதாவது, 10.060914°N, 78.560314°E) ஆகும்.

போக்குவரத்து

தொகு

மதுரையிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைதிருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

 
கோபுரத்தின் ஒரு தோற்றம்
 
கோயிலின் சந்நதிகள்
 
கோயிலின் குளம்

கருவறை

தொகு

கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

அஷ்டாங்க விமானம்

தொகு

ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.

மகாமக கிணறு

தொகு

புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூவன். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்தக் கிணற்றை "மகாமக கிணறு' என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.

ராமானுஜருக்கு உபதேசம்

தொகு

திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து திருமந்திர உபதேசம் பெற ராமானுஜர் வந்த போது, யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி வீட்டிற்குள்ளிருந்தவாறே, "நான் செத்து வா!' என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். அவரை அழைத்த நம்பி, ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார். அந்த மந்திரத்தை உபதேசித்துவிட்டு இதை மாற்று சாதியினருக்கு சொல்லக்கூடாது என்றும் அவர் கட்டளையிட்டார். ஏன் என்று ராமானுஜர் கேட்ட பொழுது இதைச் சொன்னால் கேட்பவர் வைகுண்டம் செல்வர், சொல்லும் நீ நரகம் செல்வாய் என்றார். அதைப் பொருட்படுத்தாத ராமானுஜர் திருக்கோஷ்ட்டியூர் மதில் மீது ஏறி நின்று அனைத்து சாதி மக்களையும் அழைத்து "நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கவிருக்கிறேன்" என்றுச் சொல்லி ஓம் நமோ நாராயணாய என்று உபதேசித்தருளினார். அப்போது அவரது குரு ஏன் இதை செய்தாய் என்றுக் கேட்ட பொழுது இராமானுஜர் "இதைக் கேட்டு இவர்கள் எல்லாரும் நாராயணன் திருவடிகளை அடைவாராயின் இவர்கள் பொருட்டு நான் நரகம் செல்லத் தயார்" என்றுச் சொன்னார். இச்சிறப்பான நிகழ்வு நடந்தது இத்தலத்தில் தான்.

தல வரலாறு

தொகு

இரணியகசிபு என்ற அரக்கன் தன்னையே கடவுளாக வழிபட வேண்டுமென அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்துக் கொடுமை செய்து வந்தான். அவனைக் கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் தங்கள் குறைகளைக் கூற நல்லதொரு இடத்தினைத் தேடினார்கள். இரணியனை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார். தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

கோபுர விமானத்தின் சிறப்பம்சம்

தொகு

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஒரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது.

விளக்கு நேர்த்திக்கடன்

தொகு

மகப்பேறு கிடைக்க, திருமகள் தாயாருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் அப்பேறு கிடைப்பதாக தொன் நம்பிக்கை.

பொதுவான தகவல்

தொகு

பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் உள்ளது. அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மருக்கு அருகில் ராகு, கேது உள்ளனர்.

மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்

தொகு
  1. பெரியாழ்வார்
  2. திருமங்கையாழ்வார்
  3. திருமழிசையாழ்வார்
  4. பூதத்தாழ்வார்
  5. பேயாழ்வார்

விழாக்கள்

தொகு
  • மாசியில் தெப்பத்திருவிழா
  • வைகுண்டஏகாதசி
  • நவராத்திரி

இதனையும் காண்க

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. அருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில்

வெளி இணைப்புகள்

தொகு