திருச்செந்துறை
திருச்செந்துறை (Tiruchendurai), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருச்செந்துறை ஊராட்சியில் உள்ள மூன்று கிராமங்களில் ஒன்றாகும். இக்கிராமம் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவிலும் , முக்கொம்பு அருகே காவேரி ஆற்றின் தெற்கு கரையில் உள்ளது. இக்கிராமத்தில் 390 ஏக்கரில் மூன்று போகம் நெல் விளையும் வயல்கள் உள்ளது.
திருச்செந்துறை கிராமத்தில் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் மற்றும் ரங்கநாதர் மண்டபம் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 639101 ஆகும். இக்கிராமம் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
சர்ச்சை
தொகுசெப்டம்பர், 2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த அனைத்து நிலமும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உரிமையானது என தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு துறை அறிவித்தது. இதனால் திருச்செந்துறை கிராமத்தின் விளைநிலம், காலிமனை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 652 வீடுகள் கொண்ட திருச்செந்துறை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2,418 ஆகும். இதில் ஆண்கள் 1,192 மற்றும் பெண்கள் 1,226 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.27% ஆகும்.
திருச்செந்துறை கிராம நில உரிமை சர்ச்சைகள்
தொகு390 ஏக்கர் விளைநிலம் கொண்ட திருச்செந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், செப்டம்பர் 2022 துவக்கத்தில், தனது விளைநிலத்தை மற்றொருவருக்கு கிரய ஆவணம் மூலம் விற்பதை பதிவு செய்ய, பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் சென்ற போது, சார்-பதிவாளர் நிலத்தை விற்பது குறித்து தமிழ்நாடு வக்பு வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்று பெற்று வருமாறு பணித்தார். விற்பனை செய்யப்படும் நிலம் தனது பெயரில் பட்டா, சிட்டா, அடங்கள் போன்ற வருவாய்த் துறையின் ஆவணங்கள் மற்றும் நில உரிமைப் பத்திரம் தன்னிடம் உள்ள போது, ஏன் மற்றவரிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் எனத்திருப்பி கேட்டபோது, பத்திரப் பதிவு சார்-பதிவாளர், தமிழ்நாடு வக்பு வாரியத்திடமிருந்து தங்களுக்கு தடையில்லா சான்று பெற்றவர்களுக்கே கிரய ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் எனக் கடிதம் வரப்பெற்றதால்[1] இந்த திடீர் நடைமுறை துவக்கப்பட்டுள்ளது எனக்கூறி, நிலக் கிரய விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய மறுத்தார்.
15 செப்டம்பர் 2022 அன்று திருவரங்கம் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் வக்பு வாரிய அதிகாரி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெறாமலேயே தற்காலிக அடிப்படையில் இக்கிராமத்தின் நிலங்களை விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனை குறித்து பதிவுத் துறை தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி பிரச்சனை நிரந்தரமாக முடித்து வைப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ திருச்சியில் 8 கிராமங்கள் முழுமையாக வக்பு வாரியத்துக்கு சொந்தம்: வாரியத்தின் கடிதத்தால் நில உரிமையாளர்கள் அதிர்ச்சி
- ↑ Wakf Board claim: Thiruchendurai villagers get temporary exemption for registering title deeds
- ↑ Tamil Nadu Waqf Board claims ownership of entire Thiruchendurai village, villagers protest