திருமதி கெளல்டு தேன்சிட்டு

பச்சை வால் தேன்சிட்டு
ஏ. கோ. கெளல்டியே நேபாளத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. கெளல்டியே
இருசொற் பெயரீடு
ஏதோபைகா கெளல்டியே
(விகோர்சு, 1831)

திருமதி கெளல்டு தேன்சிட்டு (Mrs. Gould's sunbird; ஏதோபைகா கோல்டியே) என்பது ஒரு தேன்சிட்டு குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது இமயமலையின் தெற்கு அடிவாரக் காடுகள் மற்றும் புதர் நிலங்கள் முதல் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்

தொகு

திருமதி கெளல்டு தேன்சிட்டு முதன்முதலில் 1831ஆம் ஆண்டில் அயர்லாந்து விலங்கியல் நிபுணர் நிக்கோலசு விகர்சால் விவரிக்கப்பட்டது. இங்கிலாந்து பறவைக் கலைஞர் எலிசபெத் கெளல்டு நினைவாகப் பெயரிடப்பட்டது.[2][3]

நான்கு துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன:[4][5][6]

  • ஏ. கோ. அன்னமென்சிஸ் (இராபின்சன் & குளோசு, 1919)
  • ஏ. கோ. டாப்ரியி வெர்ராக்சு, 1867)
  • ஏ. கோ. கெளல்டியே (விகோர்சு, 1831) (பரிந்துரைக்கப்பட்ட துணையினம்)
  • ஏ. கோ. ஐசோலாட்டா (ஈ. சி. எசு. பேக்கர், 1925)

இந்தச் சிற்றினம் பச்சை வால் தேன்சிட்டுடன் நெருக்கமாகத் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.[7]

 
திருமதி கெளல்டு தேன்சிட்டுட் ஆண் மற்றும் பெண் ஒன்றாக.

விளக்கம்

தொகு

திருமதி கெளல்டு தேன்சிட்டு ஒரு சிறிய சூரிய பறவை ஆகும். இது கீழ் நோக்கி வளைந்த கூர்மையான அலகினைக் கொண்டுள்ளது. இது தேனை உண்ணும் பறவை ஆகும். கண்ணின் கருவிழிகள் பொதுவாக ஆழ்ந்த பழுப்பு நிறமாகவும். இமை மூடி கருப்பு நிறமாகவும் இருக்கும்.

திருமதி கெளல்டு தேன்சிட்டு ஆண் பறவை பிரகாசமாகவும் வண்ணமயமாகவும் இருக்கிறது. சூரிய பறவையின் நெற்றி முதல் உச்சி வரை, சூப்பர்சிலியம் மற்றும் தொண்டை ஆழமான ஊதா நிறத்தில் காணப்படும். முகட்டலகு, காதுமடல் மற்றும் கன்ன எலும்பு, கழுத்து, மென்மூடி மற்றும் பக்கங்கள் சிவப்பு வண்ணத்தில் பிரகாசமாகவோ ஆழ்ந்தோ காணப்படும். பிரகாசமான நீல நிறங்கள் காதுமடல் மற்றும் பக்கங்களில் காணப்படும். முதன்மை இறகுகளின் மறைப்புகள் மற்றும் இறக்கைகள் பழுப்பு அல்லது ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கும். வயிறும் வயிற்றுப் பகுதியும் மஞ்சள்-பச்சை நிறத்தில் இருக்கும். வால் மறைப்பு பிரகாசமான நீல நிறத்தில் உள்ளது. வால் முனையில் அடர் ஊதா நிறத்திலிருக்கும்.

ஆண் பறவைகளுடன் ஒப்பிடும்போது பெண் பறவையின் நிறம் மங்கலாக இருக்கும். பெண் புறணி பின்புறத்தில் ஆலிவ் பச்சை நிறத்திலும், வயிற்றுப்பக்கத்தில் சாம்பல்-மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.

வெவ்வேறு துணையினங்களின் நிறமும் அமைப்பும் வேறுபட்டுக் காணப்படும். உதாரணமாக, ஏ. கோ. டாப்ரியின் மார்பு முற்றிலும் கருஞ்சிவப்பு நிறத்திலும் ஏ. கோ. கெளல்டியே சிவப்பு பட்டை இல்லாமல் பிரகாசமான மஞ்சள் மார்பகமாகக் காணப்படும்.

ஆண் பறவையின் எடை 4 முதல் 12 கிராம் வரையிலும் நீளம் 131 முதல் 160 மிமீ வரையிலும் இருக்கும். இறக்கை நீளம் 51 முதல் 58 மி.மீ. வரையிலும், வாலின் நீளம் 64 முதல் 88 மி.மீ வரையிலும் காணப்படும்.[4]

பெண் பறவையின் எடை 5 முதல் 8 கிராம் வரையிலும், நீளம் 91 முதல் 111 மிமீ வரையிலும் இருக்கும். இறக்கை நீளம் 45 முதல் 54 மி.மீ. வரையிலும், வாலின் நீளம் 30.5 முதல் 40 மி.மீ. வரையிலும் இருக்கும்.[4][5]

வாழிடம்

தொகு

திருமதி கெளல்டு தேன்சிட்டு வங்காளதேசம், பூட்டான், லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, இந்தியா, வியட்நாம் மற்றும் தெற்கு சீனாவில் பரவலாகக் காணப்படுகிறது.[1][5] இது கடல் மட்டத்திலிருந்து 1000-3500 மீ உயரத்தில் பசுமையான பரந்த-இலைகள் கொண்ட காடு, பருவமழை காடு மற்றும் இலையுதிர் பரந்த-இலைகள் கொண்ட காடுகளில் காணப்படுகிறது. இது எப்போதாவது பழத்தோட்டங்கள் மற்றும் அதன் எல்லைக்குள் உள்ள மூங்கில் காடுகளிலும் காணப்படும். இனப்பெருக்கம் செய்யாத மக்கள் தொகை ஆங்காங்கில் உள்ளது.[5]

சூழலியல்

தொகு

உணவு

தொகு

பொதுவாகத் தேன்சிட்டுக்கள் போன்று, திருமதி கெளல்டு தேன்சிட்டு அமிர்தத்தை உண்கிறது. குழாய் வடிவப் பூக்களிலிருந்து அமிர்தத்தை உறிஞ்சுவதற்காக நீளமாகக் குழாய் போன்று இதன் நாக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்களையும் உணவாக உட்கொள்ளும். சிச்சுவான் மற்றும் யுன்னானில் உணவில் சிலந்திகள், சிறிய வண்டுகள் மற்றும் கெமிப்ட்டிரா இளம் பூச்சிகளும் அடங்கும்.[5]

நடத்தை

தொகு

திருமதி கெளல்டு தேன்சிட்டு பொதுவாக இடர்பெயர்வின்றி ஓரிடத்தில் வசிக்கும். ஆனால் சிறிய அளவிலான பருவகால இடம்பெயர்வுகளை மேற்கொள்ளலாம்.[8] இது பொதுவாகத் தனிமையாகவோ அல்லது இணையாகவோ காணப்படுகிறது. இருப்பினும் 3 முதல் 5 அல்லது 10க்கும் மேற்பட்ட தனிநபர்களைக் கொண்ட தற்காலிகக் குழுக்கள் உருவாகலாம். இது விரைவாக நகர்ந்து குறுகிய தூரத்திற்குப் பறக்கிறது. அழைப்புகளில் உயர் மெல்லிய "ட்சீ" மற்றும் கூர்மையான "ட்சிட்" ஆகியவை அடங்கும்.[9]

இனப்பெருக்கம்

தொகு

திருமதி கெளல்டு தேன்சிட்டு இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் முதல் சூன் வரை ஆகும். பெண்கள் ஏப்ரல் நடுப்பகுதியில் கூடு கட்டுகின்றன. இந்த கூட்டில் பாசி, புல், தாவர இழைகள் மற்றும் சிலந்தி வலை உள்ளிட்ட பொருட்களால் கட்டப்பட்டுள்ளது. இது 15 முதல் 18 செ.மீ நீளமும் 10 முதல் 11.5 செ. மீ அகலமும் உடையது. பொதுவாகக் கடல் மட்டத்திலிருந்து 1000-3000 மீ உயரத்தில் இலையுதிர் பரந்த-இலைகள் கொண்ட காடுகளில் கட்டப்படும். இனப்பெருக்கக் காலத்தில், ஆண்கள் "சிகாய்-சிகாய்-சிகாய்" என்ற இனச்சேர்க்கை அழைப்புகளுடன் பெண்களைக் கவருகின்றன. கூட்டில் 2 முதல் 3 முட்டைகள் வரை இடப்பட்டிருக்கும். முட்டைகள் வெள்ளை மற்றும் செம்பழுப்பு நிறப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். அடைகாக்கும் காலம் சுமார் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். குஞ்சுகள் 15 முதல் 16ஆம் நாட்களுக்குப் பிறகு பறக்கின்றன. இந்த காலகட்டத்தில், பெற்றோர் இருவரும் குஞ்சுகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். பெரியவர்கள் மூலம் இளம் குஞ்சுகளுக்குத் தேன் ஊட்டப்படும்.[10]

பாதுகாப்பு

தொகு

இந்தச் சிற்றினம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

திருமதி கெளல்டு தேன்சிட்டு சீனாவின் ஆபத்தான மற்றும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் இல்லை. இருப்பினும், இது சீன மக்கள் குடியரசில் பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்குகளின் பட்டியலில் உள்ளது. இவை பொருளாதாரம் மற்றும் அறிவியலுக்கு நன்மை பயக்கும் அல்லது அதிக மதிப்புடையவை.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 BirdLife International (2016). "Aethopyga gouldiae". IUCN Red List of Threatened Species 2016: e.T22718077A94565475. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718077A94565475.en. https://www.iucnredlist.org/species/22718077/94565475. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Lederer, Roger J. (2019). The Art of the Bird: The History of Ornithological Art Through Forty Artists. Chicago, IL: University of Chicago Press. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-67505-3.
  3. Gill, Frank B.; Wright, Minturn T. (2006). Birds of the World: Recommended English Names (in ஆங்கிலம்). Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-12827-6.
  4. 4.0 4.1 4.2 赵正阶 (2001). 中国鸟类志: 雀形目. 下册 (in சீனம்). 吉林科学技术出版社. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-5384-2407-2.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "中国动物志 : 鸟纲. 第十三卷. 雀形目(山雀科-绣眼鸟科)". book.sciencereading.cn. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  6. "ITIS Standard Report Page: Aethopyga gouldiae". www.itis.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  7. Wang, Ning; Liang, Bin (2016-07-03). "Complete mitochondrial genome of a sunbird, Aethopyga gouldiae (Aves: Passeriformes), the first representative of Nectariniidae". Mitochondrial DNA Part A 27 (4): 2356–2358. doi:10.3109/19401736.2015.1025262. பன்னாட்டுத் தர தொடர் எண்:2470-1394. பப்மெட்:25990041. https://doi.org/10.3109/19401736.2015.1025262. 
  8. "蓝喉太阳鸟 - 中国自然保护区生物标本资源共享平台". www.papc.cn. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  9. "Mrs. Gould's Sunbird - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  10. 刘九江 (2017). "蓝喉太阳鸟". 林业与生态 (2): 45. http://www.cqvip.com/QK/85652A/201702/671470238.html. 
  11. "List of Wild Animal that Protected by PRC with Beneficial and High Value of Economy and Science". Ministry of Natural Resource of the People's Republic of China. 2020-10-13.