துலாக் காவேரி நீராடல்
துலாக் காவேரி நீராடல், ஐப்பசி மாதம் முதல் நாளன்று காவேரி ஆற்றில் புனித நீராடலைக் குறிக்கும். துலா மாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி ஆற்றில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றது. துலாம் மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். மேலும் அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டுமென்று துலாக் காவேரி மகாத்மிய புராணம் கூறுகிறது.[1] [2] [3]
ஐப்பசி மாதம் கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீராடலை "கடை முகம்/கடை முழுக்கு" என்றும், கார்த்திகை மாதம் முதல் நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடல் "முடவன் முழுக்கு" என்றும் அழைக்கப்படுகிறது.[4][5][6][7]
காவிரி ஆற்றிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடச் செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் ஆற்றையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது.
துலாக் காவேரி நீராடும் தலங்கள்
தொகுஐப்பசி முதல் நாளன்று திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், மூன்றாவது நீராடலை மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.
மேலும் தலைக்காவிரி, ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தான தலங்களான திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றது.
துலாக் காவிரி நீராடுபவர்கள் காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்கி, அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டால் புண்ணிய பலன்களைத் தரும்.
தொன்மம்
தொகுஒரு சமயம் சிவன் தன் வாகனமான இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார். அப்போது இடப வாகனம் செருக்கடைந்து சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது. அதன் கர்வத்தை அடக்க சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார். பிறகு இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும் மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார். வானர அரசன் வாலி சிறந்த சிவபக்தன். அவன் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற சிவனை வழிபட்டு வந்தான் என்றும், அவனே பிற்காலத்தில் இராவணனை ஒடுக்கியவன் என்றும் திருஞானசம்பந்தர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ {https://temple.dinamalar.com/margazhi/detail.php?id=99148 காவிரி துலா ஸ்நானம்]
- ↑ எண்ணத்தை ஈடேற்றித் தரும் காவிரி துலா ஸ்நானம்; புண்ணியமும் பித்ரு ஆசியும் தரும் துலா ஸ்நானம் பண்ணியாச்சா?
- ↑ கங்கைக்கு நிகரான காவிரி துலா ஸ்நானம்
- ↑ மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு!
- ↑ புண்ணிய நதிகள் நீராடும் காவிரி துலா கட்டம்..காவிரி கடை முழுக்கு கோலாகலம்..இன்று முடவன் முழுக்கு
- ↑ மயிலாடுதுறையில் முடவன் முழுக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
- ↑ ஐப்பசி துலாஸ்நானம் செய்யவில்லையா? வருத்தம் வேண்டாம்! முடவன் முழுக்கு இருக்கிறது!