துளசி விவாகம்
துளசி விவாகம் (Tulsi Vivah) அல்லது துளசி கல்யாணம் (Tulasi Kaḷyaṇam) என்பது ஒரு இந்துப் பண்டிகையாகும். இதில்சாளக்கிராமம் அல்லது நெல்லி மரக் கிளையுடன் துளசிக்கு சம்பிரதாயத் திருமணம் நடைபெறுகிறது. துளசி விவாகமானது இந்து மதத்தில் பருவமழையின் முடிவையும் திருமண பருவத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.[1] [2]
துளசி விவாகம் | |
---|---|
துளசி கல்யாணச் சடங்கு | |
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | மத வழிபாடு |
கொண்டாட்டங்கள் | 1 நாள் |
தொடக்கம் | பிரபோதினி ஏகாதசி |
முடிவு | கார்த்திகை பூர்ணிமா |
நிகழ்வு | ஆண்டுக்கொருமுறை |
பிரபோதினி ஏகாதசி (இந்து மாதமான கார்த்திகை வளர்பிறையின் பதினைந்து நாட்களில் பதினொன்றாவது அல்லது பன்னிரண்டாவது சந்திர நாள்), கார்த்திகை பூர்ணிமா (மாதத்தின் முழு நிலவு) ஆகியவற்றுக்கு இடையே எந்த நேரத்திலும் இந்தச் சடங்கு விழா நடத்தப்படுகிறது. பிராந்திய ரீதியாக நாள் மாறுபடும்.[3] [4]
புராணக் கதை
தொகுதுளசியானது, இந்து மதத்தில் ஒரு தெய்வமாக போற்றப்படுகிறது. சில சமயங்களில் விஷ்ணுவின் மனைவியாகவும் கருதப்படுகிறது. "விஷ்ணுப்ரியா", "விஷ்ணுவிற்கு பிரியமானது" எனவும் அழைக்கப்படுகிறது. துளசி விவாகத்தைப் பற்றிய புராணக்கதையும், அதன் சடங்குகளும் பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.[5]
இந்து வேதத்தின் படி, துளசி செடியானது "பிருந்தா" (பிருந்தா; துளசியின் இணைச்சொல்) என்ற பெண்ணாவாள். அவள் சலந்தர் என்ற அசுர மன்னனை மணந்தாள். அவள், விஷ்ணு மீதுள்ள பக்தியாலும், ஈடுபாட்டாலும் யாராலும் வெல்ல முடியாதவளாக ஆனாள். தேவர்களாலும் சலந்தரை தோற்கடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் மும்மூர்த்திகளில் பாதுகாவலரான விஷ்ணுவிடம் இதற்கான ஒரு தீர்வைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். சலந்தர் போருக்குப் புறப்படும் போது பிருந்தா அவனது வெற்றிக்கு வேண்டிக் கொண்டாள். அதே சமயம் விஷ்ணு சலந்தர் போல மாறுவேடமிட்டு அவளை நாடினார். அவள் வந்திருப்பது சலந்தர் என எண்ணி விஷ்ணுவின் பாதங்களைத் தொட்டாள். அவளது உறுதி குழைந்து போனதால், சலந்தர் தனது சக்தியை இழந்து சிவனால் கொல்லப்பட்டான். மேலும், அவனது தலை பிருந்தாவின் அரண்மனையில் விழுந்தது. இதைப் பார்த்த அவள், தன்னுடன் இருப்பது தன் கணவன் அல்ல, விஷ்ணு என்பதை உணர்ந்தாள். இதனால் கோபடைந்த பிருந்தா விஷ்ணுவை சாலிகிராமமாக மாறவும், அவரது மனைவி லட்சுமியைப் பிரிந்து செல்லவும் சபித்தாள். இதனாலதான் தனது இராமாவதாரத்தில், அசுர மன்னன் இராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவி சீதையிடமிருந்து பிரிக்கப்பட்டார். பிருந்தா பின்னர் கடலில் மூழ்கி இறந்தாள். மேலும் தேவர்கள் (அல்லது விஷ்ணுவே) அவளது ஆன்மாவை ஒரு தாவரத்திற்கு மாற்றினர். அது பின்னர் துளசி என்று அழைக்கப்பட்டது.[6]
அடுத்த பிறவியில் பிருந்தாவை மணக்க விஷ்ணுவின் ஆசீர்வாதத்தின்படி, விஷ்ணு - சாளகிராமம் வடிவில் - பிரபோதினி ஏகாதசி அன்று- துளசியை மணந்தார். இந்த நிகழ்வின் நினைவாக, துளசி விவாகம் நடத்தப்படுகிறது.[1] [2]
வைணவ புராணக்கதை துளசியை சமுத்திர மந்தனத்துடன் தொடர்புபடுத்துகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் அமுதத்தை எடுக்க முற்படுகின்றனர். கடலிலிருந்து தன்வந்திரி அமிர்தத்துடன் எழுந்தார். இறுதியில் தேவர்கள் வெற்றி பெற்ற போது விஷ்ணுவிற்கு ஏற்பட்ட சந்தோச மிகுதியால் ஏற்பட்ட கண்ணீர்த் துளியானது துளசிச் செடியை உருவாக்கியது. இது தவிர வேறு இதிகாசக் கதைகளும் காணப்படுகின்றன.[7] இந்த நாளில் இலட்சுமி ஒரு அரக்கனைக் கொன்று பூமியில் துளசி செடியாக இருந்ததாக மற்றொரு சிறு புராணக்கதை கூறுகிறது.[3]
கொண்டாட்டங்கள்
தொகுவிஷ்ணு/கிருஷ்ணருடன் நடக்கும் துளசியின் திருமணம் பாரம்பரிய இந்து திருமணத்தை ஒத்திருக்கிறது. திருமண விழாவானது வீடுகளிலும் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. திருமண நாளில் சடங்கு தொடங்கும் மாலை வரை விரதம் அனுசரிக்கப்படுகிறது. வீட்டின் முற்றத்தைச் சுற்றி ஒரு மண்டபம் கட்டப்படுகிறது, அங்கு துளசி செடி பொதுவாக முற்றத்தின் மையத்தில் துளசி பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் செங்கல் பூச்சுடன் நடப்படுகிறது. பிருந்தாவின் ஆன்மா இரவில் தாவரத்தில் தங்கியிருப்பதாகவும், காலையில் வெளியேறுவதாகவும் நம்பப்படுகிறது. மணமகள் துளசிக்கு புடவை, காதணிகள், அணிகலன்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது. பொட்டு, மூக்குத்தியுடன் கூடிய மனித காகித முகம் துளசியுடன் இணைக்கப்படுகிறது. மணமகனாக ஒரு பித்தளை உருவம் அல்லது விஷ்ணு அல்லது கிருஷ்ணரின் படம் அல்லது சில நேரங்களில் பலராமன் அல்லது அடிக்கடி சாளகிராமம் கல் இருக்கும். திருமணத்திற்கு முன் விஷ்ணு, துளசி இருவருக்கும் பூக்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்படுகிறார்கள். விழாவில் பருத்தி நூல் (மாலை) மூலம் இவருவரையும் இணைக்கிறார்கள்.[2]
இந்தியாவில்
தொகுஇந்தியாவின் சௌஞ்சாவில் உள்ள பிரபு தாமில், திருவிழா முழு கிராமமும் கூட்டாக கொண்டாடப்படுகிறது, இது ஒரு குறிப்பிடத்தக்க ஈர்ப்பு புள்ளியாக அமைகிறது. கார்த்திகை ஏகாதசி முதல் திரயோதசி வரை மூன்று நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ராமசரிதமானஸ் அல்லது இராமாயணத்தின் வேத கோஷங்களுடன் கிராமவாசிகளால் திருவிழா தொடங்கப்படுகிறது. இரண்டாவது நாள் சோபா யாத்திரையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்புப் பிரசாதமான பொங்கல் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மூன்றாவது நாள் "திலகோத்சவம்" என்றும் விஷ்ணு மற்றும் தேவி பிருந்தாவின் "விவாகோத்சவம்" என்று கொண்டாடப்படுகிறது. கிராம மக்கள் 'சப்பான் போக்' எனப்படும் 56 வகையான பிரசாதங்களை தயாரித்து அனைவருக்கும் விநியோகிக்கின்றனர். அதன்படி அனைத்து சாதியினரும் இந்தக் கல்யாணத்தில் பங்கேற்கின்றனர். இந்த பண்டிகையை கொண்டாட பீகாரிலிருந்து துறவிகள், மகான்கள் உட்பட பல பக்தர்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள்.
திருமணச் செலவுகளை பொதுவாக மகள் இல்லாத தம்பதியினர் ஏற்கிறார்கள். அவர்கள் இந்தத் திருமணத்தில் துளசியின் பெற்றோராக செயல்படுகிறார்கள். மகள் துளசியை கிருஷ்ணருக்கு கன்யாதானம் கொடுப்பது தம்பதியருக்குப் புண்ணியமாகக் கருதப்படுகிறது. துளசிக்கு மணமக்கள் அளிக்கப்படும் காணிக்கைகள் சடங்குக்குப் பிறகு ஒரு பிராமண பூசாரி அல்லது பெண் துறவிகளுக்கு வழங்கப்படுகின்றன.[2]
இவற்றையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 R. Manohar Lall (1933). Among the Hindus: A Study of Hindu Festivals. Asian Educational Services. pp. 184–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1822-0.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Emma Tarlo. Clothing Matters: Dress and Identity in India. University of Chicago Press. pp. 184–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-78976-7.
- ↑ 3.0 3.1 M.M. Underhill (1991). The Hindu Religious Year. Asian Educational Services. pp. 129–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0523-7.
- ↑ Shubhangi Pawar. Ethnobotany of Jalgaon District, Maharashtra. Daya Publishing House. p. 400. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7035-515-1.
- ↑ Manish Verma (2005). Fasts & Festivals Of India. Diamond Pocket Books. pp. 58–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7182-076-4.
- ↑ "Tulsi Vivah, Tulsi Vivah Date 2021, Tulsi Vivah Vidhi, Tulsi Vivah Story". Astroved Astropedia. பார்க்கப்பட்ட நாள் 2021-11-15.
- ↑ Deshpande 2005, ப. 203.