தேற்றா

தாவர இனம்
(தேற்றாங்கொட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேற்றா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
பேரினம்:
Strychnos
தேற்றா கொட்டைகள்

தேற்றா அல்லது தேத்தா (Strychnos potatorum) என்பது ஒருவகை மரம். இது தமிழிலக்கியத்தில் இல்லம் என்றும் தேத்தாங்கொட்டை, தேறு போன்ற வேறு பெயர்களும் உள்ளன. இதன் இலைகள் பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையும் உடைய குறுமரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும், சமவெளிகளில் ஒவ்வோர் இடத்தில் காணப்படுகிறது. இதன் பழம், விதை, ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை.[1] திருக்குவளை என்னும் திருக்கோளிலி தலத்தின் தலமரமாக விளங்குவது தேற்றா மரமாகும்.[2] தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தேற்றா மரத்தின் விதை ஆகும்.

குளம், ஊருணிகளில் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி நேரங்களுக்குப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்.

பெயர்க்காரணம்

தொகு

தேற்றா மரத்தின் கொட்டை, தேற்றாங்கொட்டை என அழைக்கப்படுகிறது. இந்த கொட்டையை கலங்கிய நீரில் சிறிதே உரைப்பதால் நீர் தெளிந்துவிடும். நீரைத் தெளிவிப்பதாலும் உடலை தேற்றுவதாலும் இது தேற்றான் கொட்டை எனப் பெயர் பெற்றுள்ளது. தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது[3].இதனைப் பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள்.

 தேறு + அம் + கொட்டை
 தேறு - தெளிவு
 அம் - நீர்
 கொட்டை - விதை

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தேற்றாமரம்

தொகு
 
தேற்றாங்கொட்டைகள்

தேற்றா மரத்திற்கு இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களைக் குறிப்பிடுகிறது பிங்கல நிகண்டு. தொல்காப்பியத்திலும் இது குறிக்கப்பட்டுள்ளது.

   "இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே (தொல். 313)"

தேற்றாமரத்தின் மலர்களை கண்ணியாகக் கட்டி தலையில் அணிந்ததாக நற்றிணைப் பாடல் கூறுகிறது.

   "குல்லை குளவி கூதளம் குவளை
     இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்  (நற். 376:5-6)"

கலங்கிய நீரைத் தேற்றாங்கொட்டை தெளிய வைப்பது பற்றி கலித்தொகை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

"இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து" ( கலித்தொகை 142:64),

பிற பயன்பாடுகள்

தொகு

சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள்

தொகு

தேற்றா மரத்தின் அனைத்து உறுப்புகளும் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கியத்துவம் கொண்டவை. உடல் இளைக்கவும், தேறாத உடம்பைத் தேற்றவும் தேத்தாங்கொட்டை லேகியம் பயன்படுகிறது. இதன் பழம், விதை இரண்டுமே சளியை நீக்கும், கபத்தைப் போக்கும், சீதபேதி - வயிற்றுப்போக்கைக் குணமாக்கும், புண்கள் - காயங்களை ஆற்றும், கண் நோய் போக்கும், சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும், பெண் இனப்பெருக்க உறுப்புக் கோளாறுகளை அகற்றும்; இதன் கொட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.[4]

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Strychnos potatorum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.65
  2. http://www.shaivam.org/sv/sv_therra.htm
  3. தமிழரின் மரபுச் செல்வங்கள் - அறிவியல் தொழில்நுட்பம் - 1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113
  4. "கிழக்கில் விரியும் கிளைகள்: நீருக்குச் சுவை தரும் தேத்தாங்கொட்டை". தி இந்து தமிழ். 9 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2016.

உசாத்துணை

தொகு
  • பசுமை விகடன், மார்ச் 25, 2008 பக்கம் 26
  • தமிழரின் மரபுச் செல்வங்கள் - அறிவியல் தொழில்நுட்பம் - 1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113, கட்டுரை:பண்டைத் தமிழர் வாழ்வில் தேற்றாங்கொட்டை - அ. சரசுவதி, திட்டக் கல்வியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேற்றா&oldid=3849540" இலிருந்து மீள்விக்கப்பட்டது