தைமூரியப் படையெடுப்புகள் மற்றும் வெற்றிகள்

தைமூரியர்களின் போர்களும், படையெடுப்புகளும்

தைமூரின் படையெடுப்புகள் 14ஆம் நூற்றாண்டின் 7வது தசாப்தத்தில் தொடங்கின. இவை சகதாயி கானரசின் கட்டுப்பாட்டைத் தைமூர் பெற்றதிலிருந்து தொடங்கின. 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தைமூரின் இறப்பின்போது இந்தப் படையெடுப்புகள் முடிவுக்கு வந்தன. தைமூரின் போர்கள் மற்றும் அவர் பொதுவாக எந்தப் போரிலும் தோற்கடிக்கப்படாத தன்மை ஆகிய காரணங்களால் அனைத்து காலத்திலும் மிகுந்த வெற்றிகரமான இராணுவத் தலைவர்களில் ஒருவராகத் தைமூர் கருதப்படுகிறார். இப்போர்களின் காரணமாக நடு ஆசியா, பாரசீகம், காக்கேசியா, லெவண்ட், மற்றும் தெற்காசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பகுதிகள் மீது தைமூர் ஆதிக்கம் செலுத்தினார். மேலும் குறுகிய காலத்திற்கு நீடித்திருந்த தைமூரியப் பேரரசையும் நிறுவினார்.[1] அறிஞர்களின் மதிப்பீட்டின்படி, தைமூரின் இராணுவப்படையெடுப்புகளால் 1.7 கோடி மக்கள் இறந்தனர். இது அந்நேரத்தில் உலகின் மொத்த மக்கள் தொகையில் 5% ஆகும்.[2][3]  

சகதாயி கானரசைப் பிரதிநிதியாக ஆட்சி செய்து வந்த அமீர் உசைனைப் பல்கு யுத்தத்தில் தோற்கடித்த பிறகு தைமூர் மேற்கு சகதாயி கானரசின் (திரான்சாக்சியானா) கட்டுப்பாட்டைப் பெற்றார். ஆனால் செங்கிஸ் கானால் உருவாக்கப்பட்ட விதிகள் தைமூரைக் ககானாக விடாமல் தடுத்தன. ஏனெனில், தைமூர் செங்கிஸ் கானின் நேரடி வழித்தோன்றல் கிடையாது.[4] பதிலாகத் தைமூர் ஒகோடி கானின் வழிவந்த சூர்கத்மிசை ஒரு கைப்பாவைக் கானாக் ஆட்சியில் அமர்த்தினார். இதற்குப் பிறகு தைமூர் அனைத்து திசைகளிலும் பெரும் இராணுவப் படையெடுப்புகளைத் தொடங்கினார். பெரும்பான்மையான மத்திய கிழக்கு மற்றும் நடு ஆசியாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.[5] இவர் ஒருபோதும் பேரரசன் அல்லது கலீபா என்ற பட்டத்தை பயன்படுத்தவில்லை. அமீர் என்ற பட்டத்தை மட்டுமே பயன்படுத்தினார்.[6] 

தனது ஆட்சி மற்றும் இராணுவப் படையெடுப்புகளைப் சட்டப்படி முறையாக்குவதற்காக உசேனின் விதவையான சராய் முல்க் கனும் என்ற இளவரசியைத் தைமூர் திருமணம் செய்து கொண்டார். இந்த இளவரசி செங்கிஸ்கானின் நேரடி வழித்தோன்றல் ஆவார்.[7] இவ்வாறாகத் தைமூர் தன்னை தெமூர் குர்கான் என்று அழைத்துக் கொண்டார். இதன் பொருள் மகா கானின் மாப்பிள்ளை என்பதாகும். அதாவது செங்கிஸ் கானின் மாப்பிள்ளை.[8][9] திரான்சாக்சியானா மற்றும் நடு ஆசியாவில் தைமூர் வெற்றிகொண்ட நிலப்பரப்புகள், மற்றும் அடிமை வம்சத்தவர்கள், உதுமானியப் பேரரசு, தில்லி சுல்தானகம் மற்றும் தங்க நாடோடிக் கூட்டம் ஆகியவற்றின் மீது இவர் பெற்ற கட்டுப்பாடு ஆகியவை இவரது இறப்புக்குப் பிறகு பலவீனமடைந்தன. இதற்குக் காரணம் இவரது மகன் மற்றும் பேரன் சாருக்கு மிர்சா மற்றும் கலீல் சுல்தான் இடையே நடைபெற்ற வாரிசுரிமைப் போர் ஆகும்.[10] எனினும், இந்தியத் துணைக்கண்டத்தில் தைமூரின் எள்ளுப் பேரனாகிய பாபர் நிறுவிய ஒரு தைமூரிய அரசானது முகலாயப் பேரரசு என்ற வடிவத்தில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை எஞ்சிப் பிழைத்திருந்தது.[11]

உசாத்துணை

தொகு
  1. Manz, Beatrice Forbes (1999-03-25). The Rise and Rule of Tamerlane (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521633840.
  2. "The Rehabilitation Of Tamerlane". Chicago Tribune. 17 January 1999. http://articles.chicagotribune.com/1999-01-17/news/9901170256_1_uzbek-islam-karimov-tashkent. 
  3. J.J. Saunders, The history of the Mongol conquests (page 174), Routledge & Kegan Paul Ltd., 1971, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0812217667
  4. Marozzi, Justin (2004).
  5. Marozzi, Justin (2004).
  6. InpaperMagazine, From (2011-01-01). "Past present: Emperor's new names". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-13.
  7. Shterenshis, Michael (2013). Tamerlane and the Jews. Hoboken: Taylor and Francis. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1136873669.
  8. Sonbol, Amira El-Azhary (2005). Beyond the Exotic : Women's Histories in Islamic Societies (1. ed.). Syracuse Univ. Press. p. 340. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8156-3055-5.
  9. Shterenshis, Michael (2002). Tamerlane and the Jews. RoutledgeCurzon. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-1696-8.
  10. Marozzi, Justin (2004).
  11. "Mirza Muhammad Haidar". Silk Road Seattle. University of Washington. பார்க்கப்பட்ட நாள் 2019-02-12. On the occasion of the birth of Babar Padishah (the son of Omar Shaikh)