தொண்டியா வா

தொண்டியா வா (Dhondia Wagh) (செப்டம்பர் 10, 1800 இல் இறந்தார்) 18 ஆம் நூற்றாண்டின் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இராணுவ வீரும், சாகசக்காரும், கொள்ளைக்காரருமாவார். இவர், மைசூரின் ஆட்சியாளரான ஐதர் அலியின் சேவையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போரின் போது, இவர் அலியின் வாரிசான திப்பு சுல்தானை விட்டு வெளியேறினார். பின்னர் மராட்டிய- மைசூர் எல்லையில் உள்ள பகுதிகளை கொள்ளையிட்டார். மராட்டியர்கள் இவரை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்திய பின்னர், இவர் திப்புவிடம் தஞ்சம் புகுந்து இஸ்லாமிற்கு மாறினார். இவரது பெயரை மாலிக் ஜஹான் கான் என்றும் மாற்றிக் கொண்டார். நான்காவது ஆங்கிலேய-மைசூர் போரில் திப்பு இறந்த பிறகு, முன்னாள் மைசூர் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களைக் கொண்ட ஒரு படையை இவர் எழுப்பினார். மேலும் மைசூர் இராச்சியத்தின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றினார். இவர் தன்னை உபய-லோகாதீசுவரர் ("இரண்டு உலகங்களின் ராஜா") என்று அழைத்துக் கொண்டார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் மராட்டிய பேஷ்வாவும் இவரது சக்தியை அடக்க படைகளை அனுப்பினர். ஆர்தர் வெல்லசுலி தலைமையிலான பிரித்தானிய படையால் இவர் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

தொண்டியா வா
பிறப்புசென்னகிரி
இறப்பு10 செப்டம்பர் 1800
கொங்கல் (தற்போதைய ராய்ச்சூர் மாவட்டம், இந்தியா)
தேசியம்மைசூர் அரசு
மற்ற பெயர்கள்தோண்ட்ஜி வா, தோண்டி வா, துண்டியா, தூண்டியா வா, தூந்தாஜி வா, தூண்டியா வா, துந்தியா வா, தண்டியா வா, தோண்டியா வா, தூண்டியா வா, டூண்டியா வா, ஷேக் அஹ்மத், மாலிக் ஜஹான் கான்
பணிஇராணுவ வீரர், கொள்ளைக்காரர்
செயற்பாட்டுக்
காலம்
18ஆம் நூற்றாண்டு
அறியப்படுவதுanti-British insurgency in northern மைசூரின் வடக்குப் பகுதியில் பிரித்தானியர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் மைசூர் ராச்சியத்தின் (இன்றைய கர்நாடகம்) சென்னகிரி. என்ற ஊரில் பிறந்தார். [1] இவர் பவார் குலத்தைச் சேர்ந்த மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவராவார். ஐதர் அலியின் ஆட்சிக் காலத்தில், பிஷ்ணு பண்டிட் தலைமையில் மைசூர் இராணுவத்தில் ஒரு சிப்பாயாகச் சேர்ந்தார். படிப்படியாக, திப்பு சுல்தானின் ஆட்சியில் இவர் ஒரு குதிரைப்படை அதிகாரியாக பதவிக்கு உயர்ந்தார். [2]

மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போருக்குப் பிறகு

தொகு

மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரின் போது, இவர், திப்புவின் சேவையை விட்டு வெளியேறினார். பல வீரர்களையும் கணிசமான செல்வத்தையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். இவர் இலட்சுமேசுவரப் பகுதியைச் சேர்ந்த மராட்டிய வருவாய் சேகரிப்பாளரான தேசாய் என்பவரின் கீழ் தஞ்சமடைந்தார்.1792 இல் போர் முடிவடைந்த பின்னர், மராட்டிய-மைசூர் எல்லையில் உள்ள பகுதிகளின் ஆட்சியாளராக தன்னை அறிவித்தார். இவர் கிராமங்களை சூறையாடத் தொடங்கினார். மேலும், தார்வாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரி விதித்தார். சனவரி 1793 இல், இவர் ஆவேரியைக் கைப்பற்றி, சாவனூரை ஆக்கிரமித்தார். சிறீரங்கபட்டின உடன்படிக்கையின்படி மைசூர் மராட்டியர்களுக்கு வழங்கிய பிற பகுதிகளையும் இவர் கொள்ளையிடத் தொடங்கினார். [1]

1794 ஆம் ஆண்டில், மராட்டியத் தளபதி பரசுராம் பாவ், இவரது வளரும் சக்தியைச் சரிபார்க்க தோண்டோபந்த் கோகலே (தோண்டு பந்த் என்றும் அழைக்கப்படுபவர்) தலைமையில் ஒரு இராணுவத்தை அனுப்பினார். சூன் 1794 இல் திப்பு தப்பி ஓடிய இவர் திப்புவிடம் சரணடைந்தார். ஒரு போர்வீரனான இவரது திறனை உணர்ந்த திப்பு, கடந்த காலச் செயல்களை மன்னித்து, இஸ்லாத்திற்கு மாறும்படி கேட்டுக்கொண்டதின் பேரில் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் இவருக்கு "சேக் அகமத்" என்ற புதிய பெயர் வழங்கப்பட்டது. இருப்பினும் இவர் "மாலிக் ஜகான் கான்" என்றப் பெயரை விரும்பினார். இவருக்கு மைசூர் ராணுவத்தில் ஒரு உயர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், சிறிது காலம் கழித்து, இவர் திப்புக்கு எதிராகத் திரும்பியதால் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில், திப்பு இவரை விடுவிக்க எண்னினார். ஆனால் அவரது மந்திரி மிர் சாதிக் திப்புவைத் தடுத்தார். [1]

நான்காவது ஆங்கிலேய-மைசூர் போருக்குப் பிறகு

தொகு

1799 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் திப்பு சுல்தானை சீரங்கப்பட்டிண முற்றுகையில் தோற்கடித்தப் பிறகு, தொண்டியாவும் மற்றும் பிற கைதிகளும் பிரித்தானியத் துருப்புக்களால் விடுவிக்கப்பட்டனர். இவர், ஷிகாரிப்பூரை அடைந்தார். அங்கு அவர் திப்புவின் முன்னாள் இராணுவத்திலிருந்து ஒரு படையினரை திரட்டினார். பாலாமின் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆதரவையும் பெற்றார். மேலும் தன்னை உபய-லோகாதீசுவரர் (இரண்டு லோகங்களின் இறைவன்) என்று அறிவித்துக் கொண்டார். பிட்னூரின் நாயக்கர் பட்டத்தையும் இவர் ஏற்றுக்கொண்டார். மைசூர் மீதான தங்கள் பிடியை வலுப்படுத்துவதில் ஆங்கிலேயர்கள் மும்முரமாக இருந்தபோது, இவர் சிவமோகாவிலும் அதைச் சுற்றியுள்ள வர்த்தகர்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் வரி வசூலிக்கத் தொடங்கினார். ஹங்கல், ஹர்பனஹள்ளி, ரானெபென்னூரு, சவனூர், சோதே மற்றும் விட்டல் ஆகியப் பகுதிகளின் பாளையக்காரர்கள் இவரது அதிகாரத்தை ஒப்புக்கொண்டனர். இவரது அதிகாரத்தின் உச்சத்தில், இவர் 90,000 குதிரைப்படைகளையும் 80,000 காலாட்படைகளையும் கொண்ட ஒரு படையை வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. [3] இவரால் ஏற்பட்ட தொல்லையை அடக்க சூலை 1799 வாக்கில், இவருக்கு எதிராக ஆங்கிலேயர்கள் வெல்லசுலி தலைமையில் ஒரு படையை அனுப்பினர்.

வெல்லசுலி முற்றுகை

தொகு

இவரது சக்தியைக் கண்டு பீதியடைந்த ஆங்கிலேயர்கள் இவருக்கு எதிராக ஒரு வலுவான படையை அனுப்ப முடிவு செய்தனர். மே 1800 இல், மைசூருக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரித்தானிய ஆளுநர் ஆர்தர் வெல்லசுலி தலைமையில் ஒரு படை அனுப்பப்பட்டது. சூன் 1800 இல், வெல்லசுலி சித்ரதுர்காவில் இவரை முற்றுகையிட்டார். ஆங்கிலேயர்கள் தன்னை நோக்கி முன்னேறும்போது, இவர் மராட்டிய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு தப்பி ஓடினார். தளபதி வெல்லசுலி மராட்டிய பிரதேசத்தில் இவரைத் தொடர மராட்டிய பேஷ்வாவிடம் அனுமதி பெற்றார். இவருக்கெதிராக சிந்தமராவ் பட்வர்தன் தலைமையிலான மராட்டியப் படையையும் பேஷ்வா அனுப்பினார். வெல்லெசுலியின் படை ஹரிஹர் பகுதியை 16 சூனில் அடைந்தது. இதற்கிடையில், இவர், தப்பி ஓடி சூன் 19 அன்று ஹூப்ளியை அடைந்தார். சூன் 20 அன்று, வெல்லசுலியின் வீரர்கள் ஐரானி கோட்டையை கைப்பற்றினர். அடுத்த வாரத்தில், ராணிபென்னூர் கோட்டையை கைப்பற்றினர். இந்த கோட்டைகள் அனைத்தையும் ஆங்கிலேயர்கள் பட்வர்தனிடம் அவரது உதவிக்காக ஒப்படைத்தனர். [3] சூன் 27 அன்று ஆங்கிலேயர்கள் பிட்னூர் தொண்டியா இன்னும் மறைந்தே இருந்தார்.

இதற்கிடையில், தோண்டோபந்த் கோகலே, தனது இரண்டு மருமகன்களான அப்பாஜி கணேசு மற்றும் பாபுஜி கணேசு ஆகியோருடன் பட்வர்தனின் மராட்டிய படையில் சேர்ந்தார். 30 சூன், மராட்டியர்கள் தவாங்கி நாலா அருகே கிட்டூர் அருகே தொண்டியாவைத் தாக்கினர். பிரதான இராணுவத்திலிருந்து பிரிந்த தோண்டோபந்த் கோகலேவும் அவரது சில வீரர்களும் இவரிடம் சிக்கினர். இவர்,கோகலேவையும் அவரது மருமகன் அப்பஜியையும் கொன்றார். பின்னர், பட்வர்தன் இவர் மீது தாக்குலைத் தொடர்ந்தார். ஆனால் போரில் பலத்த காயமடைந்தார். பாபுஜி கோகலே மற்றும் பிற மராட்டியர்களுடன் சேர்ந்து, அவர் பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள ஹலியாலில் கோட்டையில் தஞ்சம் புகுந்தார்

செப்டம்பர் 9 அன்று, கர்னல் ஸ்டீவன்சன் தலைமையிலான ஒரு படை இவரை தடுப்பதில் வெற்றி பெற்றது. [4] மறுநாள் காலையில், ஜெனரல் வெல்லசுலியின் படையினரால் கொனகல் அல்லது கொனகள்ளி (இன்றைய ராய்ச்சூர் மாவட்டம் ) அருகே நடந்த போரில் தொண்டியா வா கொல்லப்பட்டார். [5] வெல்லசுலி இவரது 4 வயது மகன் சலபாத் கானுக்கு பாதுகாப்பு அளித்தார். மேலும் தான் ஐரோப்பாவுக்குச் செல்வதற்கு முன்பு சலாபத் கானின் பராமரிப்புக்காக பணம் செலுத்தினார். பின்னர் சலாபத் கான் வளர்ந்து மைசூர் மன்னரால் பணியமர்த்தப்பட்டார். 1822 இல் வாந்திபேதியால் இறந்தார். [6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Mohibbul Hasan (2005). History of Tipu Sultan. Aakar. pp. 271–272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187879572.
  2. Dattatray Balwant Parasnis (1917). The Sangli state. Lakshmi Art. pp. 24–37.
  3. 3.0 3.1 "Dharwad District Gazetteer" (PDF). Government of Karnataka. Archived from the original (PDF) on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 29 திசம்பர் 2015.
  4. Charles Lethbridge Kingsford. The Story of the Duke of Cambridge's Own (Middlesex Regiment).
  5. D C Bakshi (10 April 2012). "He kept the British guessing". Deccan Herald. http://www.deccanherald.com/content/240779/he-kept-british-guessing.html. 
  6. Dattatray Balwant Parasnis. The Sangli state.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டியா_வா&oldid=3921744" இலிருந்து மீள்விக்கப்பட்டது