தொல்லியல் அருங்காட்சியகம், கோல் கும்பாசுத் தொகுதி

தொல்லியல் அருங்காட்சியகம், கோல் கும்பாசுத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பீசப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் ஆகும். பீசப்பூர், சோலாப்பூருக்குத் தெற்கே 110 கிலோமீட்டர் தொலைவிலும், தார்வாடுக்கு 204 கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது. கிபி 1489 முதல் 1686 வரையான காலப்பகுதியில் அரசாண்ட ஆதில்சாகியினரின் தலைநகரமாக விளங்கியது பீசப்பூர். மதம் சார்ந்ததும், மதம் சாராததும், பாதுகாப்புத் தொடர்பானதுமான பல கட்டிடங்கள் இக் காலத்தில் பீசப்பூர்ப் பகுதியில் அமைக்கப்பட்டன.

அருங்காட்சியகம், கோல் கும்பாசுத் தொகுதியில் அமைந்துள்ள "நாக்குவார் கானா" (எக்காள இல்லம்) என்னும் கட்டிடத்தில் அமைந்துள்ளது. 1892 ஆம் ஆண்டில் இது ஒரு மாவட்ட அருங்காட்சியகமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டில் இது ஒரு கள அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டது. இக்கட்டிடம் ஆதில்சாகிக் கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்டது. உயரமான மேடையில், பருமனான தூண்களின் மீது தாங்கப்பட்ட உயரமான வளைவுகளுடன் இது அமைந்துள்ளது. ஆறு காட்சிக்கூடங்களைக் கொண்டு அமைந்த இந்த அருங்காட்சியகத்தின் மூன்று காட்சிக்கூடங்கள் நிலத் தளத்திலும் மற்றவை மேல் தளத்திலும் உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில், அரபி, பாரசீகம், கன்னடம், சமசுக்கிருதம் ஆகிய மொழிகளிலான கல்வெட்டுக்கள்; இந்து, சமண சமயங்களைச் சேர்ந்த சிற்பங்கள்; நடுகற்கள்; படங்களுடன் கூடியதும், இல்லாததுமான கையெழுத்துப்படிகள்; நாணயங்கள்; மரச்செதுக்கு வேலைகள்; தளவிரிப்புகள்; நிலப்படங்கள்; சிற்றோவியங்கள் போன்ற பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக் காட்சிப் பொருட்கள் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்தவை.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு