இடையமெரிக்கக் கட்டிடக்கலை

(நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இடை-அமெரிக்கக் கட்டிடக்கலை (Mesoamerican architecture) என்பது, நடு அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பசுக்கு முற்பட்ட பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களுடைய கட்டிடக்கலை மரபுகளினது தொகுதியைக் குறிக்கும். இக் கட்டிடக்கலை மரபுகள், பொதுக் கட்டிடங்கள், நகர்ப்புறக் கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்கள் வாயிலாக அறியப்படுகின்றன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்கள் பல்வேறுபட்ட பிரதேச மற்றும் வரலாற்றுப் பாணிகளைத் தழுவியவையாக இருப்பினும் அவை ஒன்றுக்கொன்று குறிப்பிடத்தக்க அளவு தொடர்புகளைக் கொண்டவையாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக நடு-அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியைச் சேர்ந்த பண்பாடுகளுக்கு இடையே நடைபெற்றுவந்த பண்பாட்டுப் பரிமாற்றங்கள் காரணமாக இப் பாணிகள் பல வரலாற்றுக் கட்டங்களூடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை, பெரும்பாலும் அதன் பிரமிட்டுகளுக்காகவே அறியப்படுகின்றது.

மெக்சிக்கோவில் உள்ள பலெங்கு (Palenque) என்னும் நகரத்தின் பிளாசாவின் தோற்றம். இது செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த இடை-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

நடு-அமெரிக்காவில், அண்டவியல், சமயம், புவியியல், கட்டிடக்கலை என்பவற்றுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிப் பரந்த அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் இயல்புகள் பல சமயம் மற்றும் தொன்மவியல் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக இவ்வாய்வுகளிற் பல எடுத்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, நடு-அமெரிக்க நகரங்கள் பலவற்றின் தள அமைப்புகள், முதன்மைத் திசைகளையும், நடு-அமெரிக்கப் பண்பாட்டில் அவை கொண்டுள்ள தொன்மவியல் மற்றும் குறியீட்டுப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

நடு அமெரிக்கக் கட்டிடக்கலையின் இன்னொரு முக்கிய அம்சம் அதன் படிமவியல் ஆகும். நடு-அமெரிக்காவின் கட்டிடக்கலை, சமயம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புடைய சிற்பங்களால் அழகு செய்யப்பட்டிருப்பதுடன், பல வேளைகளில் அவற்றுடன்கூட நடு-அமெரிக்க எழுத்து முறைமைகளிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. கட்டிடங்களிலுள்ள சிற்பங்கள் மற்றும் எழுத்துக்கள், கொலம்பசுக்கு முற்பட்ட நடு-அமெரிக்கச் சமூகம், அதன் வரலாறு, சமயம் என்பவைபற்றி நாம் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவியாக உள்ளன.

காலவரிசை

தொகு

பின்வரும் பட்டியல், நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையினதும் தொல்லியலினதும் பல்வேறு காலகட்டங்களைத் தருவதுடன், ஒவ்வொரு காலகட்டத்திலுமான குறிப்பிடத்தக்க பண்பாடுகள், நகரங்கள், பாணிகள் மற்றும் தனிப்பட்ட கட்டிடங்கள் என்பவற்றோடு அவற்றின் தொடர்புகளையும் எடுத்துக் காட்டுகிறது.

காலம் காலப்பகுதி முக்கிய பண்பாடுகள், நகரங்கள், அமைப்புக்கள் மற்றும் பாணிகள்
முன்-செந்நெறிக் காலம்(உருவாக்கம்) B.C.2000-100 குடாக்கரைப் பண்பாடுகள், ஒல்மெக், மொண்ட்டே ஆல்டோ பண்பாடு
தொடக்க முன்-செந்நெறிக் காலம் BC 2000-1000 ஒல்மெக் மையங்கள் சான் லாரென்சோ தெனோச்தித்லான், Chalcatzingo, சான் ஒசே மொகோட்டே, லா மொஜாரா ஸ்டெலா 1
இடை முன்-செந்நெறிக் காலம் கி.மு 1000-400 பிந்திய ஒல்மெக் மற்றும் தொடக்ககால மாயன், இஸப்பா, லா வெண்டா, ட்ரெஸ் சப்போட்டெஸ், உசுலுத்தான் சுட்டாங்கல், நாக்பே, லமானை, Xunantunich நாஜ் துனிச் குகை, எல் மிராடோர், Kaminaljuyú
பிந்திய முன்-செந்நெறிக்காலம் கிமு 400-200 கி.பி மாயன், Teotihuacan மற்றும் சப்போட்டெக் தொடக்க காலங்கள், தியோத்திவாக்கன், Uaxactún, திக்கல், Edzná, மொண்டே அல்பான் I & II, சூரியப் பிரமிட்டு
செந்நெறிக்காலம் 200-900 கி.பி செந்நெறிக்கால மாயன் மையங்கள், Teotihuacan, சப்போட்டெக்ஸ்
தொடக்க செந்நெறிக்காலம் கி.பி 200-600 Teotihuacan apogee, மொண்டே அல்பான் III, பாலெங்க், கோபான், செந்நெறிக்கால வெராகுரூஸ் பண்பாடு, தாலுட்-தப்லேரோ, Hieroglyphic stairs of Copan, மகா பாகால் சமாதி,
பிந்திய செந்நெறிக்காலம் கிபி 600-900 க்சோசிகால்கோ, காகாக்ஸ்த்லா, கான்குவென், குயிரிகுவா, உக்ஸ்மால், தோனினா, செந்நெறிக்கால வெராகுரூஸ் பண்பாடு, பூக் பாணி, ரியோ பெக் பாணி, கோபா, யக்ஸ்சிலான் லிண்டெல் 24
பின்-செந்நெறிக் காலம் கி.பி 900-1519 Maya Itzá, சிச்சென் இட்சா, மாயாபான், தயாசால், மற்றும் கோவோஜ் டொபோக்ஸ்ட்டே, தோல்டெக், தாராஸ்கன், மிக்ஸ்டெக், டோடோனாக்
தொடக்க பின்-செந்நெறிக் காலம் கி.பி 900-1200 சோலுலா, துலா, மித்லா,எல் தாஜின், துலும், கமினல்ஜுயு
பிந்திய பின்-செந்நெறிக் காலம் கி.பி 1200- 1519 அஸ்டெக்,தெனோச்தித்லான், டெம்ப்ளோ மாயோர், Tzintzuntzan, Quiché, உதாத்லான், கக்சிகேல் இக்சிம்சே மற்றும் மாம் ஸாக்குலேயு, மாயன், உதத்லான், செம்போவாலா

நகரத் திட்டமிடலும், அண்டவியல் நோக்கும்

தொகு
 
தியோதிஹுவாக்கன் (Teotihuacan) நகரின் தள வடிவம். இது முழு நகரமும் வடக்கு/தெற்குத் திசைக்கு 15 பாகை விலகியுள்ள ஒரு அச்சை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதைக் காட்டுகிறது. இந்த அச்சு இறந்தோர் சாலை என்னும் சாலையால் குறிக்கப்படுகிறது. இயற்கையான குகையின்மேல் அமைக்கப்பட்ட சூரியப் பிரமிட்டு இதன் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தென்பகுதி குடியிருப்புக்களும், வடக்குப் பகுதி மனிதப் பலி உட்பட்ட பிற தேவைகளுக்கான சடங்கு சார்ந்த மையமும் ஆகும்.

சமூகத்தில் நிலவிய நம்பிக்கைகளைத் திடமான, புலனாகக்கூடிய வடிவங்களாக வெளிப்படுத்தும் பண்பு நடு-அமெரிக்கச் சமய முறைமைகளின் முக்கிய அம்சம் ஆகும். இதன் மூலம், நடு-அமெரிக்கப் பண்பாட்டினரின் உலகம் அவர்கள் நம்பிக்கைகளின் வெளிப்பாட்டு வடிவமாக விளங்கியது[1]. அதாவது, நடு-அமெரிக்க நகரம் ஒரு நுண்ணண்டமாக (microcosm) இருக்கும்படி அமைக்கப்பட்டது. இது அவர்களின் சமய மற்றும் தொன்மப் புவியியலில் காணப்பட்ட அதே, மனித மற்றும் பாதாள உலகப் பிரிவுகளை வெளிப்படுத்தியது. பாதாள உலகம் வடக்குத் திசையினால் குறிக்கப்பட்டது. இறந்தோர் நினைவிடங்கள் போன்ற பாதாள உலகுடன் தொடர்புடைய பல அமைப்புக்கள் இத்திசையிலேயே காணப்படுகின்றன. தென்பகுதி வாழ்வு, வாழ்வாதாரம், மறுபுறப்பு போன்றவற்றைக் குறிப்பதுடன், நகர அரசின் தொடர்ச்சி, அன்றாட வாழ்க்கை என்பன தொடர்பான பிரபுத்துவ மரபுவழிகளைக் குறிக்கும் நினைவுச் சின்னங்கள், குடியிருப்புக்கள், சந்தைகள் என்பன இப்பகுதியில் காணப்படுகின்றன.

  1. Mary Miller and Karl Taube, introduction to "The Gods and Symbols of Ancient Mexico and the Maya" pp. 30.