நற்கருணை ஆராதனை
நற்கருணை ஆராதனை (Eucharistic adoration) என்பது கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் லூதரனிய கிறிஸ்தவ பிரிவுகளில், இயேசுவின் திருவுடலாக மாறிய அப்பத்தை இறைமக்கள் ஆராதிக்கும் வழிபாடு ஆகும்.[1][2]
திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பத்தில், இயேசு கிறிஸ்து தனது உடலோடும், இரத்தத்தோடும், ஆன்மாவோடும், இறைத்தன்மையோடும் பிரசன்னமாகிறார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. எனவே, நற்கருணை ஆராதனை என்பது அப்பத்தில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவை ஆராதிப்பது ஆகும்.[3][4][5]
திருப்பலிக்கு வெளியே, நற்கருணை முன்பாக இயேசுவின் இறைப் பிரசன்னத்தை தியானிப்பது நற்கருணை தியானம் ஆகும். புனிதர்களான பீட்டர் ஜூலியன் ஐமார்ட், ஜான் வியான்னி மற்றும் லிசியே நகரின் தெரேசா ஆகியோர் இந்த பக்திக்கு சிறப்பிடம் அளித்தனர்.[6][7][8][9][10] வணக்கத்துக்குரிய கான்செப்சியன் டி அர்மிடா, அருளாளர் நற்கருணையின் மரிய கேன்டிடா ஆகியோர் நற்கருணை தியானத்தைப் பற்றி விரிவான புத்தகங்களை எழுதி உள்ளனர்.[11][12][13]
ஆராதனைச் சிற்றாலயத்தில், 24 மணி நேரமும் இறைமக்களின் ஆராதனைக்காக எழுந்தேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும் நற்கருணையை ஆராதிப்பது தொடர் ஆராதனை என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் துறவற மடங்களில் மட்டும் இருந்த இந்த பழக்கம், 20ஆம் நூற்றாண்டில் பொதுவான பங்கு ஆலயங்களுக்கும் பரவியது.[14][15][16]
அமைப்பும் நடைமுறையும்
தொகுநற்கருணை பேழை முன்பாகவும், எழுந்தேற்றம் செய்யப்பட்ட நற்கருணை முன்பாகவும் நற்கருணை ஆராதனை நடைபெறுகிறது.[17] ஆலயப் பீடத்தில் எழுந்தேற்றம் செய்யப்படும் நற்கருணை கதிர் பாத்திரத்தில் வைக்கப்படுகிறது; அதன் முன்பாக மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருக்கும் அல்லது மின்விளக்குகள் ஒளி வீசும். நற்கருணை ஆசீர் அளிப்பதற்காக பொதுவாக நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்படுகிறது.[1][2][18] இறைமக்களின் பொது ஆராதனைக்காக 24 மணி நேரமும் நற்கருணை எழுந்தேற்றம் செய்து வைக்கப்படுவதும் உண்டு.[18]
பீடத்தின்மீது அப்ப பாத்திரத்தில் இருக்கும் போதும், நற்கருணை பேழையினுள் வைக்கப்பட்டிருக்கும் போதும் மக்கள் நற்கருணை ஆராதனை செய்கிறார்கள்.[2][19]
அதிகாரப்பூர்வ கத்தோலிக்க போதனையின்படி நற்கருணையை எழுந்தேற்றம் செய்து ஆராதிப்பது, "இயேசு கிறிஸ்துவின் அதிசயமான பிரசன்னத்தை உணரவும், அவரோடு ஆன்மீக ஒன்றிப்பில் பங்குபெறவும் இறைமக்களைத் தூண்டுகிறது."[18][20]
பல தருணங்களில் இறைமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் தொடர்ந்து நற்கருணையை ஆராதிப்பது, திருமணி ஆராதனை என்று அழைக்கப்படுகிறது.[21] இயேசு தனது சிலுவை மரணத்துக்கு முந்திய நாள் இரவு, கெத்சமனி தோட்டத்தில் துயருற்று மனக்கலக்கம் அடைந்தபோது பேதுருவிடம், "ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?" Matthew 26:40 என்று கேட்ட நிகழ்வே திருமணி ஆராதனைக்கு தூண்டுதலாக அமைகிறது.[22]
நற்கருணை ஆராதனையின்போது, விவிலிய வாசகங்கள், திருப்பாடல்கள், திருஇசை ஆகியவை இடம்பெறுகின்றன; சில வேளைகளில் மறையுரைகளும், அமைதியான தியானமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.[17] திருத்தந்தை 2ம் ஜான் பால் அடிக்கடி அமைதியான நற்கருணை ஆராதனையில் ஈடுபட்டார்; "இந்த ஆராதனை அருளின் ஊற்றாக இருப்பவரோடு தொடர்புகொள்ளச் செய்கிறது" என்று அவர் கூறுவார்.[23][24]
புராட்டஸ்டான்ட் சீர்திருத்தத்திற்கு பிறகு, பலர் நற்கருணை ஆராதனையை சிலை வழிபாடாக கருதுகின்றனர். ஆனால் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றிலே நடைபெற்ற நற்கருணை அற்புதங்களின் அடிப்படையில், நற்கருணையில் இயேசு கிறிஸ்துவின் உண்மையான பிரசன்னத்தை உணர்ந்து, தொடர்ந்து அவரை நற்கருணையில் ஆராதித்து வருகிறது.
வரலாறு
தொகுதொடக்க காலம்
தொகுதிருப்பலிக்கு பிறகும் நற்கருணையை பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் தொடக்க காலம் முதலே இருந்து வருகிறது; இதை மறைசாட்சியான ஜஸ்டின் மற்றும் தெர்த்தூலியன் ஆகியோரின் குறிப்புகளில் இருந்து அறிகிறோம். ஆனால் நற்கருணையை ஆராதிக்கும் பழக்கம் பிற்காலத்தில்தான் தோன்றியது.[19]
ஆராதனைக்காக நற்கருணையை பத்திரப்படுத்தியது பற்றிய ஆதாரம் புனித பேசில் (-கி.பி.379) வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகிறது. பேசில் துறவற மடத்தில் நடைபெற்ற இறை வழிபாட்டின்போது நற்கருணை அப்பத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார்; முதல் பகுதியை அவர் உண்டார்; இரண்டாவது பகுதியை துறவிகளுக்கு அளித்தார்; மூன்றாவது பகுதியை பலிபீடத்தின் மீது தொங்கவிடப்பட்டு இருந்த தங்கப் புறாவின் மேல் வைத்தார்.[25] இது திருவழிபாட்டில் கலந்துகொள்ள இயலாதோருக்காக நற்கருணையை பத்திரப்படுத்துவதற்கு பழங்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட பழக்கமாகவே இருந்தது.
கீழைத் திருச்சபையில் புனித பேசில் பின்பற்றிய முறை மேலைத் திருச்சபையில் தோன்றிய திருவழிபாட்டுக்கு வெளியேயான ஆராதனை போன்று இல்லை என்றாலும், பீடத்தின் மேல் மூடிய தட்டில் வைக்கப்பட்டிருந்த நற்கருணையை திருப்பாடல்களைப் பாடி ஆராதிக்கும் பழக்கமாக இருந்தது. மனிதக் கண்களுக்கு புனிதமானவற்றை மறைக்கும் வகையில் இத்தகைய கீழை வழக்கம் தோன்றியது.[26]
இடைக் காலம்
தொகுஅசிசி புனித பிரான்சிஸ் (-கி.பி.1226), நற்கருணை ஆராதனை முறையை இத்தாலியில் தொடங்கிவைத்ததாக பிரான்சிஸ்கன் ஆவணங்கள் கூறுகின்றன. இது, பிறகு அம்ப்ரியாவில் இருந்து இத்தாலியின் மற்றப் பகுதிகளுக்கு பிரான்சிஸ்கன் சபையினர் மூலம் பரவியது.[27][28] பிரான்சிஸ் நற்கருணைமீது ஆழ்ந்த பக்தி கொன்டிருந்தார்; மேலும் அவர் நற்கருணையைப் பெற்றவுடன் பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார் என்று புனித பொனவெந்தூர் குறிப்பிடுகிறார். பிரான்சிசைப் பொறுத்தவரை நற்கருணையை ஆராதிப்பது இயேசுவைக் காண்பதாகும்.[29]
நற்கருணை ஆராதனைக்கான இறையியல் அடிப்படை, திருத்தந்தை ஏழாம் கிரகோரியால் தயார்செய்யப்பட்டது; இவரே திருஅப்பத்தில் கிறிஸ்துவின் இருக்கிறார் என்ற கருத்தை உறுதி செய்தார். இவரது கருத்தை 1965ல் திருத்தந்தை ஆறாம் பவுல் தனது "விசுவாசத்தின் மறைபொருள்" என்ற சுற்றுமடலில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.[4]
"பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் அப்பமும் இரசமும், புனித இறைவேண்டல் மற்றும் மீட்பரின் வார்த்தைகளின் மறைபொருள் வழியாக, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உண்மையான இயல்பில் வாழ்வளிக்கும் சதையாகவும், இரத்தமாகவும் மாறுகின்றன; புனிதப்படுத்தப்பட்ட பிறகு அவை கிறிஸ்துவின் உண்மையான உடலாக இருக்கின்றன என்பதை நான் எனது உள்ளத்தில் நம்பி, வெளிப்படையாக அறிவிக்கிறேன்."[30]
இந்த விசுவாச அறிக்கை ஐரோப்பிய ஆலயங்களில் "நற்கருணை மறுமலர்ச்சி" தோன்ற வழிவகுத்தது.[4] பதினோறாம் நூற்றாண்டின் மேலைத் திருச்சபை பக்தி முயற்சிகள், உயிர்த்த இயேசுவை காட்டும் கொடையாக நற்கருணையை மையப்படுத்தின; மேலும் திருவழிபாட்டில் திருஅப்பத்தை ஆராதனைக்காக உயர்த்திக் காண்பிக்கும் பழக்கமும் தோன்றியது.[4]
பொதுநிலையினர் நற்கருணையை ஆராதிக்கும் வழக்கம், பிரான்சின் அவிக்னன் நகரில் 1226 செப்டம்பர் 11 அன்று தொடங்கியது. ஆல்பிஜென்சியருக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடி, கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருச்சிலுவை சிற்றாலயத்தில் நற்கருணையை எழுந்தேற்றம் செய்து வைக்குமாறு பிரான்ஸ் அரசர் எட்டாம் லூயிஸ் கேட்டுக்கொண்டார்.[31] நற்கருணை ஆராதனை செய்பவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், பய்ரி டி கார்பியின் ஆயர் நற்கருணையைத் தொடர்ந்து எழுந்தேற்றம் செய்துவைக்கப் பரிந்துரை செய்தார்; திருத்தந்தை மூன்றாம் ஹனோரியஸ் அனுமதியுடன் இந்த நற்கருணை ஆராதனை 1792ல் பிரெஞ்சு புரட்சியால் தடைபடும்வரை தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.
13ஆம் நூற்றாண்டில், நற்கருணைக்கு சிறப்பளிக்கும் விதத்தில் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா ஏற்படுத்தப்பட்டது. இதன் வழியாக திருப்பலிக்கு உள்ளேயும், வெளியேயும் மேலைக் கிறிஸ்தவர்களின் மையமாக நற்கருணை பக்தி உருபெற்றது.
16-18 நூற்றாண்டுகள்
தொகு16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த புராட்டஸ்டான்ட் சீர்திருத்தம் நற்கருணைக்கு எதிராகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது; திரெந்து பொதுச்சங்கம் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தையும், நற்கருணை ஆராதனைக்கு இறையியல் அடிப்படையையும் உறுதிபடுத்தும் விதத்தில் அதற்கு பதில் அளித்தது. திரெந்து பொதுச்சங்கத்தின் பிரகடனம், திருத்தூதர் காலம் முதல் இருந்து வரும் நற்கருணை படிப்பினையின் முக்கிய அம்சமாகும்.[4] அதன் போதனைப் பின்வருமாறு:
"மற்ற அருட்சாதனங்களை ஒருவர் பயன்படுத்தும்வரை அவற்றுக்கு புனிதப்படுத்தும் ஆற்றல் இல்லை, ஆனால் நற்கருணையைப் பொறுத்தவரை இந்த அருட்சாதனத்தைப் பயன்படுத்தும் முன்னரே புனிதத்தின் ஊற்றானவர் இதில் பிரசன்னமாகி இருக்கிறார். ஏனெனில், திருத்தூதர்கள் நம் ஆண்டவரின் கரங்களில் இருந்து நற்கருணையைப் பெற்றுக்கொள்ளும் முன்பே, அது அவருடைய உடல் என்று கூறி அவர்களிடம் கொடுத்தார்."
இப்பொதுச்சங்கம் கடவுளை ஆராதிக்கும் முறைகளில் ஒன்றாக நற்கருணை ஆராதனையைப் பிரகடனப்படுத்தியது:
"கடவுளின் ஒரேப் பேறான மகன் திவ்விய நற்கருணையில், கடவுளுக்குரிய முறையில் வெளிப்படையாக ஆராதிக்கப்படுகிறார். எனவே இந்த அருட்சாதனம் ஆடம்பரக் கொண்டாட்டங்களுடன் மரியாதையுடனும், பயபக்தியுடனும் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாட்சிக்குரிய வகையில் திருச்சபையின் உலகளாவிய வழிமுறைக்கு ஏற்ப பவனியாக கொண்டுசெல்லப்பட வேண்டும். இந்த அருட்சாதனம் பொதுவில் வெளிப்படையாக மக்களின் ஆராதனைக்காக வைக்கப்பட வேண்டும்."
பொதுச்சங்கத்தைத் தொடர்ந்து, புனிதர்களான சார்லஸ் பொரோமியோ, அலைன் டி சால்மினிஹக் ஆகியோர் நற்கருணை ஆராதனை மற்றும் பக்தியை வளர்த்தனர்.[32] ஆலய உட்புறங்களை எளிமைப்படுத்துவதன் ஒரு பகுதியாக, நற்கருணைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் முதன்மைப் பீடத்தின் உயர்ந்த மையப்பகுதியில் நற்கருணை பேழையை வைக்கும் பழக்கத்தை சார்ல்ஸ் பொரோமியோ தொடங்கி வைத்தார். 17ஆம் நூற்றாண்டில் நற்கருணை ஆராதனையும், நற்கருணை ஆசீரும் பல இடங்களுக்கும் பரவியதால், ஆலய பீடம் திவ்விய நற்கருணையின் இருப்பிடமாக ஏற்கப்பட்டு ஆராதனை நடைபெற்றது.[33]
முற்காலத்தில் பொதுவானதாக இருந்த நாற்பது மணி நேர நற்கருணை ஆராதனை 16ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த பக்தி முயற்சியில், எழுந்தேற்றம் செய்யப்பட்ட நற்கருணை முன்பாக நாற்பது மணி நேரம் தொடர் செபம் நடைபெறும். இந்த பழக்கம் 1530கள், 1540களில் கியுஸ்பே டா ஃபெர்மோ உள்ளிட்ட கப்புச்சின் துறவிகளால் மிலான் நகரில் தோன்றியது. வடக்கு இத்தாலியில் இருந்து, இயேசு சபையினரும், கப்புச்சின் சபையினரும் இதை ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.[34][35]
நற்கருணை தொடர் ஆராதனை பழக்கம், அதற்காக நற்கருணையின் மெக்தில்த் என்பவரால் உருவாக்கப்பட்ட பெனடிக்டைன் சமூகத்தில் பாரிஸ் நகரில் 1654 மார்ச் 25 அன்று தோன்றியது.[36]
18ஆம் நூற்றாண்டில், பெருமளவிலான மக்கள் நற்கருணை ஆராதனை செய்வதில் ஆர்வம் காட்டினர்; அல்போன்சுஸ் லிகோரி போன்ற குருக்கள் இப்பழக்கத்தை ஊக்குவித்தனர்.[37] நற்கருணை மீதான அன்புக்கு இக்காலத்தில் ரோமில் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் புனித பெனடிக்ட் ஜோசப் லாப்ரே ஆவார். பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சார்ந்த இவர், புனித பேதுரு பேராலய நற்கருணை சிற்றாலயத்தில் பல மணி நேரங்கள் தியானத்தில் நற்கருணை ஆராதனையை மேற்கொண்டு "நாற்பது மணி நேர ஆராதனையின் புனிதர்" என்ற பெயரையும் பெற்றார்.[37]
19, 20ஆம் நூற்றாண்டுகள்
தொகுபிரெஞ்சு புரட்சியின்போது கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களால் நற்கருணை ஆராதனை பழக்கம் தடைபட்டது. இருந்தாலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நற்கருணை பக்தியும், ஆராதனையும் புத்துயிர் பெற்றன. நற்கருணை பக்தியை மையப்படுத்தாத 19ஆம் நூற்றாண்டு புனிதர்கள் எவரையும் பார்க்க முடிவதில்லை.[37]
1829ல், பாவப் பரிகார சபையினரின் (Confraternity of Penitents-Gris) முயற்சியால் மீண்டும் பிரான்சில் நற்கருணை ஆராதனை நடைமுறைக்கு வந்தது.[25] இருபது ஆண்டுகளுக்கு பிறகு, வணக்கத்துக்குரிய லியோ டுப்பன்ட் 1849ல் தூர்ஸ் நகரில் இரவு நேர நற்கருணை ஆராதனையைத் தொடங்கி வைத்தார்; இந்த பக்தி பிரான்ஸ் முழுவதும் பரவியது.[38] கிளரேசிய சபையின் நிறுவனரும் ஒப்புரவாளருமான புனித அந்தோனி மரிய கிளாரட், நற்கருணை பக்தியையும், ஆராதனையையும் வளர்ப்பதில் ஆர்வமாக செயல்பட்டார்; கியூபாவிற்கு பேராயராக சென்ற இவர், அங்கும் நற்கருணை ஆராதனை பக்தியை அறிமுகம் செய்தார்.[39]
இக்காலத்தில் நற்கருணை ஆராதனை பக்தி பிரான்சில் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக லியோ டுப்பன்ட், புனித ஜான் வியான்னி மற்றும் 1858ல் திவ்விய நற்கருணையின் சபையை ஏற்படுத்திய புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட் ஆகியோர் நற்கருணை பக்தியைப் பரப்புவதில் ஆர்வமாக செயல்பட்டனர்.[40] 1858ல், நற்கருணையின் திருத்தூதர் என்றழைக்கப்படும் ஐமார்ட், அருட்சகோதரி மார்கரெட் குய்லோட் ஆகியோர் இணைந்து திவ்விய நற்கருணையின் பணியாளர்கள் சபையை உருவாக்கினர். தற்காலத்தில் இவர்கள் பல கண்டங்களில் உள்ள தங்கள் துறவற இல்லங்களில் நற்கருணை ஆராதனையை நடத்தி வருகின்றனர்.[41]
முதல் அதிகாரப்பூர்வமற்ற நற்கருணை மாநாடு 1874ல், தூர்ஸ் நகர் மரி-மார்த்தே தமிசியர் முயற்சியால் பிரான்சில் நடைபெற்றது.[42] லூயிஸ்-காஸ்டன் செகர் ஒருங்கிணைப்பில் பிரான்சின் லில்லெ நகரில் 40 ஆயிரம் மக்கள் கலந்துகொண்ட நற்கருணை மாநாட்டை, 1881ல் திருத்தந்தை 13ம் லியோ முதல் அதிகாரப்பூர்வ நற்கருணை மாநாடாக அங்கீகரித்தார். அதற்கு அடுத்த நற்கருணை மாநாட்டை 1905ல் திருத்தந்தை 10ம் பயஸ் நடத்தினார்.[42]
19ஆம் நூற்றாண்டில், தொடர் நற்கருணை ஆராதனை பக்தி அமெரிக்காவுக்கு பரவியது. ஃபிலடெல்ஃபியா பேராயர் புனித ஜான் நியூமன் நாற்பது மணி நேர நற்கருணை ஆராதனையை தொடங்கிவைத்தார்; அது இன்றளவும் தொடர்கிறது.[43]
கத்தோலிக்க மரபு
தொகுகத்தோலிக்க போதனைகளின்படி, திருப்பலியில் அப்பமும் இரசமும் ஒப்புக்கொடுக்கப்படும் வேளையில் அவை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் பொருள் மாற்றம் அடைகின்றன; அதாவது அப்பத்தின் பொருள் கிறிஸ்துவின் உடலாகவும், இரசத்தின் பொருள் கிறிஸ்துவின் இரத்தமாகவும் உண்மையாகவே மாற்றம் அடைகின்றன; எனவே, நற்கருணையில் இயேசு கிறிஸ்து உடலோடும், இரத்தத்தோடும், ஆன்மாவோடும், இறைத்தன்மையோடும் மெய்யாகவே பிரசன்னமாகி இருக்கிறார். கத்தோலிக்கரின் இத்தகைய நம்பிக்கையே அவர்கள் நற்கருணையை ஆராதிக்க அடிப்படைக் காரணமாக அமைகிறது. கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி (எண் 1377) பின்வருமாறு கூறுகிறது: "திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் வேளையில் நற்கருணையில் நிகழும் கிறிஸ்துவின் பிரசன்னம் நற்கருணை அப்பம் நிலைத்திருக்கும் வரை நீடித்திருக்கும்."[44][45] கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ திருப்பலன் (Raccolta) புத்தகம் நற்கருணை ஆராதனை வேளைகளில் மக்களுக்கு கிடைக்கும் ஆன்மீக பலன்களை எடுத்துரைக்கிறது.[21]
தொடர்ந்து நடைபெறும் நற்கருணை ஆராதனை கத்தோலிக்க திருச்சபையின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது. புனித ஃபாஸ்டீனா கொவல்ஸ்கா, ஏழு வயதில் நற்கருணை ஆராதனையில் பங்கேற்ற வேளையில்தான் தனது துறவற அழைப்பைப் பெற்றார்.[46] நற்கருணை ஆராதனையில் பங்கேற்ற பிறகுதான் புனித எலிசபெத் ஆன் செட்டன், அருளாளர் ஜான் ஹென்றி நியூமன் ஆகியோர் கத்தோலிக்கர்களாக மனந்திரும்பினர்.[37]
தினமும் "திருமணி ஆராதனை" செய்யும் வழக்கம் கத்தோலிக்க திருச்சபையில் ஊக்குவிக்கப்படும் மரபாக உள்ளது. எடுத்துக்காட்டாக கொல்கத்தாவின் அன்னை தெரேசா நாள்தோறும் திருமணி ஆராதனையில் ஈடுபட்டார்; பிறரன்பு பணியாளர்கள் (Missionaries of Charity) சபையின் அனைத்து உறுப்பினர்களும் அவரைப் பின்பற்றி வருகிறார்கள்.[47][48]
இடைக் காலம் முதலே திருப்பலிக்கு வெளியே நற்கருணை ஆராதனை செய்யும் வழக்கம் திருத்தந்தையரால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.[49] சான்றாக, ஆண்டவரின் இரவுணவு பற்றி (Dominicae Cenae) என்ற மடலில் திருத்தந்தை 2ம் ஜான் பால் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"நற்கருணை பக்தி திருச்சபைக்கும் உலகத்துக்கும் முக்கிய தேவையாக இருக்கின்றது. இந்த அன்பின் அருட்சாதனத்தில் இயேசு நமக்காக காத்திருக்கிறார். நமது நேரத்தை தாராளமாக ஒதுக்கி, முழு நம்பிக்கையுடன் ஆராதனையிலும் தியானத்திலும் அவரை சந்திக்க செல்வோம்."[50]
நற்கருணை மீது திருச்சபை (Ecclesia de Eucharistia) என்ற சுற்றுமடலில் திருத்தந்தை 2ம் ஜான் பால் பின்வருமாறு கூறி இருக்கிறார்:
"திருப்பலிக்கு வெளியே நிகழும் நற்கருணை வழிபாடு திருச்சபை வாழ்வுக்கு நிகரற்ற மதிப்பீடாகும்.... நற்கருணை அருட்சாதனத்தை எழுந்தேற்றம் செய்வதும், நற்கருணை ஆராதனைக்கு சாட்சிகளாக திகழ்வதும், இதை ஊக்குவிப்பதும் மேய்ப்பர்களின் கடமை ஆகும்."[51]
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆரம்ப காலம் முதலே தனது இறையியலில் நற்கருணையை மையமாக கொண்டிருந்தார். திருத்தந்தையாக அவர் வெளியிட்ட நம் அருகில் கடவுள்: நற்கருணை, வாழ்வின் இதயம் (God Is Near Us: The Eucharist, the Heart of Life) என்ற நூலில் நற்கருணை ஆராதனையை சிறப்பாக ஊக்குவித்திருக்கிறார்.[52][53]
நற்கருணை தியானம்
தொகுநற்கருணை ஆராதனையோடு கூடிய கிறிஸ்தவ தியான முறை நற்கருணை தியானம் என்று அழைக்கப்படுகிறது; இதன் பின்னணியில் கத்தோலிக்க எழுத்தாளர்களின் தூண்டுதலும் உள்ளது.
புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட் நற்கருணை முன்பாக தியானம் செய்யும் முறையை ஊக்குவித்தார். நற்கருணையைப் பற்றி அவர் எழுதியவற்றின் தொகுப்பாக உண்மை பிரசன்னம் (The Real Presence) என்ற புத்தகம் வெளிவந்தது.[6] அவர் காலத்தைச் சார்ந்த, புனித ஜான் வியான்னியும் நற்கருணை தியானத்தை மேற்கொண்டார்; அதைப் பற்றிய நூல்களும் வெளிவந்துள்ளன.[7][8]
குழந்தை இயேசுவின் புனித தெரேசாவும் நற்கருணை தியான பக்தியை மேற்கொண்டார். 1895 பிப்ரவரி 26 அன்று, இவர் நற்கருணை தியானத்தில் எழுதிய "அன்பின் வழி வாழ்வதற்கு" என்ற கவிதை, அவரது வாழ்நாளிலேயே பல்வேறு துறவற சமூகங்களுக்கு அனுப்பப்பட்டது.[9][10]
வணக்கத்துக்குரிய கன்செப்சியன் காப்ரெரா டி அர்மிடா எழுதியவற்றில் குறிப்பிடத்தகுந்த அளவு அவரது நற்கருணை ஆராதனைகளைப் பற்றியதாக உள்ளது.[11] காப்ரெரா டி அர்மிடா தனது தியானங்கள் மற்றும் நற்கருணை ஆராதனையின்போது பெற்ற தூண்டுதலால் இவற்றை எழுதியதாக குறிப்பிடுகிறார்.
இத்தாலிய மறைபொருளாளர் மரிய வால்டோர்ட்டாவின் நற்கருணை தியானங்கள் இயேசுவின் புனித நேரம் என்ற பெயரில் அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக படுக்கையில் இருந்தே நற்கருணை பெற்றபோது எழுதப்பட்டன.[54]
அருளாளர் நற்கருணையின் மரிய கேன்டிடா, நற்கருணை: நற்கருணை ஆன்மீகத்தின் அணிகலன் (Eucharist: true jewel of eucharistic spirituality) என்ற புத்தகத்தில் தனது சொந்த அனுபவங்களையும் நற்கருணை தியானம் பற்றிய சிந்தனைகளையும் எழுதியுள்ளார்.[12][13]
தொடர் ஆராதனை
தொகுபழங்காலம் முதலே செபங்கள் மற்றும் திருப்பாடல்கள் மூலம் கடவுளைத் தொடர்ந்து ஆராதிக்கும் வழக்கம் கிறிஸ்தவர்களிடையே இருந்து வருகிறது. சான்றாக, கி.பி.400ஆம் ஆண்டிலிருந்தே கீழைத் திருச்சபையின் அக்கொமேட்டே துறவிகள் பகலும் இரவும் இறை வழிபாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவ்வாறே மேலைத் திருச்சபையில் அகாவ்னம் மடத் துறவிகள் கி.பி.552ல் அம்மடம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடர் செபங்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.[36]
தொடர் ஆராதனை என்பது ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரமும் எழுந்தேற்றம் செய்யப்பட்டிருக்கும் நற்கருணையை ஆராதிக்கும் வழக்கம் ஆகும். "பொது செபமாலை" செபிக்கப்படும் பொழுது வெவ்வேறு குழுவினரால் தொடர்ந்து செய்யப்படுவது போன்றே, இந்த ஆராதனையும் தொடர்ந்து நடைபெறுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் பிரபலமான இந்த பக்தி முயற்சி, காலப்போக்கில் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மக்களிடையே பரவியது.[14][55]
தொடர் ஆராதனை வேளையில், ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பங்கேற்பர்; எனவே, பகலிலும் இரவிலும் பல நபர்கள் இந்த நற்கருணை ஆராதனையை மேற்கொள்வர். திருப்பலி நடைபெறும் குறிப்பிட்ட நேரத்திற்கு இந்த ஆராதனை நிறுத்திவைக்கப்படும்.[18] புனித வெள்ளி மாலை முதல் உயிர்ப்பு பெருவிழா திருவிழிப்பு வரை இத்தகைய தொடர் ஆராதனை நடைபெறாது.[14]
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 An introductory dictionary of theology and religious studies by Orlando O. Espín, James B. Nickoloff 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8146-5856-7 page 163
- ↑ 2.0 2.1 2.2 The Holy Eucharist by Francis A. n2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87973-978-2 page 110
- ↑ The seven sacraments by Anselm Grün, John Cumming 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-6704-1 pages 82-83
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 The History of Eucharistic Adoration by John A Hardon 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9648448-9-6 pages 4-10
- ↑ Encyclopedia of World Religions by Johannes P. Schadé 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60136-000-7, see entry under Eucharistic adoration
- ↑ 6.0 6.1 The Real Presence: eucharistic meditations by Saint Pierre Julien Eymard, Sentinel Press, 1938 ASIN B00087ST7Q
- ↑ 7.0 7.1 The eucharistic meditations of the Curé d'Ars by Saint Jean Baptiste Marie Vianney Carmelite Publications (1961) ASIN B0007IVDMY
- ↑ 8.0 8.1 Eucharistic Meditations: Extracts from the Writings and Instructions of Saint John Vianney by H. Convert, Jean Baptiste Marie, Saint Vianney, and Mary Benvenuta 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-940147-03-4
- ↑ 9.0 9.1 Therese and Lisieux by Pierre Descouvemont, Helmuth Nils Loose, 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-3836-0 page 245
- ↑ 10.0 10.1 Collected poems of St Thérèse of Lisieux by Saint Thérèse (de Lisieux), Alan Bancroft 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85244-547-1 page 75
- ↑ 11.0 11.1 Concepción Cabrera de Armida. I Am: Eucharistic Meditations on the Gospel பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8189-0890-3
- ↑ 12.0 12.1 Our Sunday Visitor's Catholic Almanac by Matthew Bunson 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59276-441-9 page 255
- ↑ 13.0 13.1 Vatican Website
- ↑ 14.0 14.1 14.2 In the presence of our Lord by Benedict J. Groeschel, James Monti 1997 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87973-920-1 pages 167-171
- ↑ Vatican website
- ↑ Vatican website
- ↑ 17.0 17.1 101 questions and answers on the Eucharist by Giles Dimock 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8091-4365-8 pages 88-90
- ↑ 18.0 18.1 18.2 18.3 Peter Stravinskas, 1998, Our Sunday Visitor's Catholic Encyclopedia, OSV Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87973-669-9 page 409
- ↑ 19.0 19.1 Theology at the eucharistic table by Jeremy Driscoll 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85244-469-6 pages 237-244
- ↑ "Sacred Congregation of Rites, INSTRUCTION ON EUCHARISTIC WORSHIP item 60". Archived from the original on 2011-09-14. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ 21.0 21.1 The Raccolta by Joseph P. Christopher 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9706526-6-9 pages 107-108
- ↑ Peter Stravinskas, 1998, Our Sunday Visitor's Catholic Encyclopedia, OSV Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87973-669-9 page 498
- ↑ Church and society: the Laurence J. McGinley lectures, 1988-2007 by Avery Dulles, Laurence J. McGinley 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8232-2862-1 page 465
- ↑ Ecclesia de Eucharistia, Chapter 2, item 25
- ↑ 25.0 25.1 நற்கருணை ஆராதனையின் வரலாறு ஜான் A. ஹார்டன், S.J.
- ↑ 'Byzantine Daily Worship'; Archbishop Joseph Raya, Baron Jose de Vinck
- ↑ Franciscan Archives[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ St Francis of Assisi: The Legend and the Life by Michael Robson 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-6508-5 pages 83-84
- ↑ A Eucharistic Vision and the Spirituality of St Francis of Assisi by Mark Elvins 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85244-663-8 pages 71-72
- ↑ Vatican website: Mysterium Fidei
- ↑ McMahon, Joseph H. (1913). "Perpetual adoration". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ John Paul II's book of saints by Matthew Bunson 1999 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87973-934-8 page 88
- ↑ Architecture in communion by Steven J. Schloeder 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89870-631-4 page 98
- ↑ Franciscans at prayer by Timothy J. Johnson 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-15699-9 pages 444-445
- ↑ Italian Confraternities in the Sixteenth Century by Christopher F. Black 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-53113-9 page 99
- ↑ 36.0 36.1 A Catholic Dictionary by William E. Addis, Thomas Arnold 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7661-9380-2 page 656
- ↑ 37.0 37.1 37.2 37.3 In the presence of our Lord by Benedict J. Groeschel, James Monti 1997 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87973-920-1 pages 132-134
- ↑ Dorthy Scalan. The Holy Man of Tours. (1990) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89555-390-4
- ↑ 101 questions and answers on the Eucharist by Giles Dimock 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8091-4365-8 page 125
- ↑ Joan Carroll Cruz, OCDS, Saintly Men of Modern Times. (2003) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-931709-77-4
- ↑ Catholic encyclopedia
- ↑ 42.0 42.1 OSV's encyclopedia of Catholic history by Matthew Bunson 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59276-026-8 page 334
- ↑ The Catholicism Answer Book: The 300 Most Frequently Asked Questions by John Trigilio, Kenneth Brighenti 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4022-0806-5 page 153
- ↑ Vatican website catechism item 1377
- ↑ Celebrating the Holy Eucharist by Francis Cardinal Arinze 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58617-158-2 page 103
- ↑ The encyclopedia of saints by Rosemary Guiley 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-4134-3 page 106
- ↑ A Drama of Reform by Benedict J. Groeschel 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58617-114-8 page 30
- ↑ My Daily Eucharist II Joan Carter McHugh 1997 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9640417-5-2 page 14
- ↑ Ann Ball, 2003 Encyclopedia of Catholic Devotions and Practices பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87973-910-2 page 11
- ↑ Vatican website: Dominicae Cenae
- ↑ Vatican website Ecclesia de Eucharistia
- ↑ Christ, Our Joy: The Theological Vision of Pope Benedict XVI by Joseph Murphy 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58617-182-7 page 180
- ↑ God Is Near Us: The Eucharist, the Heart of Life by Joseph Ratzinger 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89870-962-9 pages 88-91
- ↑ The Notebooks 1944 by Maria Valtorta and David G. Murray பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-7987-042-9
- ↑ Peter Stravinskas, 1998, Our Sunday Visitor's Catholic Encyclopedia, OSV Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87973-669-9 page 776
வெளி இணைப்புகள்
தொகு- நற்கருணையைப் பாதுகாத்தல் மற்றும் வணங்குதல் (கத்தோலிக்க திருச்சபையின் சட்டத் தொகுப்பு)
- பொது ஆராதனை (நியூ அட்வென்ட்)
- Location of Eucharistic Adoration sites
- Directory of Eucharistic Adoration Chapels பரணிடப்பட்டது 2011-02-02 at the வந்தவழி இயந்திரம்
- Roger Oakland - The New Evangelization and the Coming Eucharistic Reign of Jesus
- The History of Eucharistic Adoration by Fr. John A. Hardon, S.J. பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் in PDF format
- St. Martin of Tours Roman Catholic Church, Louisville, Kentucky's online perpetual adoration. பரணிடப்பட்டது 2011-10-03 at the வந்தவழி இயந்திரம்
- Savior.org Online Eucharistic Adoration