நவ விலாச வானதூதர்கள்

கிறித்தவத்தில் நவ விலாச வானதூதர்கள் என்போர் கடவுளுக்கு பணிவிடை செய்யும், ஒன்பது குழுக்களைச் சார்ந்த உடலற்ற ”தூய அரூபிகள்” ஆவர்.[1] வானதூதர்கள் கிறிஸ்தவ கலைகளில் பொதுவாக, சிறகுகளுடன் கூடிய மனித உருவத்தில் சித்தரிக்கப்படுகின்றனர். கிரேக்க யூத மரபின்படியும், அதைப் பின்பற்றும் கிறிஸ்தவ மரபிலும் வானதூதர்கள் அவர்களது பணிகளின் அடிப்படையில் ஒன்பது பிரிவுகளில் அடக்கப்படுகின்றனர். அவர்கள் நவ விலாச சபையினர் என்று அழைக்கப்படுகின்றனர்.

பிரான்செஸ்கோ பாட்டிசினி வரைந்த மரியாவின் விண்ணேற்பு ஓவியத்தில்
நவ விலாச வானதூதர்கள்
நவ விலாச வானதூதர்களை சித்தரிக்கும் கிழக்கு மரபுவழி திருச்சபையின் ஓவியம்

ஒன்பது குழுக்கள் தொகு

வானதூதர்களின் ஒன்பது குழுக்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன:

  • முதல் வட்டம்
    • பத்திசுவாலகர் (சுடரொளி வீசுவோர்)
    • நாதகிருத்தியர் (புகழ்ந்தேற்றுவோர்)
    • பத்திராசனர் (அரியணையில் அமர்வோர்)
  • இரண்டாம் வட்டம்
    • ஞானாதிக்கர் (ஒழுங்கு செய்வோர்)
    • சத்துவகர் (புனிதத்தில் மிகுந்தோர்)
    • பலவத்தர் (அதிகாரம் கொண்டோர்)
  • மூன்றாம் வட்டம்
    • பிராதமிகர் (ஆட்சியாளர்)
    • அதிதூதர் (தலைமை தாங்குவோர்)
    • தேவதூதர் (இறைசெய்தி அளிப்போர்)

முதல் வட்டம் தொகு

முதல் வட்டத்தின் வானதூதர்கள் கடவுளை புகழ்ந்து போற்றி வணங்குவோராக உள்ளனர்.

 
பத்திசுவாலகர்

பத்திசுவாலகர் தொகு

பத்திசுவாலகர் அல்லது சேராபீன்கள் (Seraphim) என்னும் வானதூதர்கள் பற்றி திருவிவிலியத்தின் எசாயா 6:1-7ல் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இவர்கள் கடவுளாகிய ஆண்டவரின் அரியணையை சூழ்ந்து நிற்கின்றனர்; சேராபீன்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருக்கின்றன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டிருக்கின்றனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்திருக்கின்றனர்; மற்ற இரண்டால் பறக்கின்றனர்.

இவர்கள், "படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" என்று உரத்த குரலில் கடவுளைப் புகழ்ந்து கூறிக் கொண்டேயிருக்கின்றனர். சேராபீன் என்பதற்கு எரிந்து சுடரொளி வீசுவோர் என்பது பொருள். இவர்கள் கடவுள் மீதான அன்பாலும், ஆர்வத்தினாலும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றனர்.

 
நாதகிருத்தியர்

நாதகிருத்தியர் தொகு

நாதகிருத்தியர் அல்லது கெருபுகள் (Cherubim) என்னும் வானதூதர்கள் பற்றி திருவெளிப்பாடு 4:6-8ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஆண்டவரின் அரியணையை சுற்றி நான்கு புறமும் நிற்கும் நான்கு உயிர்கள் ஆகும். அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம்போலும், இரண்டாவது இளங்காளை போலும், மூன்றாவது மனிதன் போலும், நான்காவது பறக்கும் கழுகைப் போலும் முக அமைப்பு கொண்டிருக்கின்றன.

 
எசேக்கியேலின் காட்சியில் பத்திராசனர்

இவ்வுயிர்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ளும் புறமும் கண்கள் நிறைந்த ஆறு சிறகுகள் இருக்கின்றன. "தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே" என்று இந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்கின்றன.

பத்திராசனர் தொகு

பத்திராசனர் (Thrones or Ophanim) என்னும் வானதூதர்கள் பற்றி திருவெளிப்பாடு 11:16-8ல் குறிப்பிடப்பட்டுள்ளது. புனித பவுலும் (Colossians 1:16 பரணிடப்பட்டது 2013-02-04 at the வந்தவழி இயந்திரம்) இவர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். இவர்கள் அரியணையில் அமர்ந்து கடவுளின் நீதிக்கும், ஆட்சியுரிமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றனர்.

இவர்கள் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கிக்கொண்டே இருக்கின்றனர். இவர்களின் உருவம், வளையத்தில் பல கண்கள் கொண்ட நெருப்பு சக்கரம் போன்று இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இரண்டாம் வட்டம் தொகு

இரண்டாம் வட்டத்தின் வானதூதர்கள் விண்ணகப் பணிகளை கவனிப்போராக உள்ளனர்.

ஞானாதிக்கர் தொகு

ஞானாதிக்கர் (Dominions or Hashmallim) என்னும் வானதூதர்கள் பிரபுத்துவம் கொண்டவர்கள் ஆவர். இவர்கள் தங்களின் கீழுள்ள வானதூதர்களின் பணிகளை ஒழுங்குபடுத்துகின்றனர். அரிதாக சில தருணங்களில் இவர்கள் மனித உருவில் தங்களை வெளிப்படுத்துவது உண்டு. இவர்கள் உலக நாடுகளின் பொறுப்பாளர்களாகவும் செயல்படுகின்றனர்.

ஞானாதிக்கரின் உருவம் இரண்டு சிறகுகளைக் கொண்ட மனிதரைப் போன்று இருக்கும்; மேலும், இவர்கள் செங்கோலில் அல்லது வாளின் கைப்பிடியில் அதிகாரத்தைக் குறிக்கும் ஓர் ஒளி வட்டமும் காணப்படுகிறது.

சத்துவகர் தொகு

சத்துவகர் (Virtues or Strongholds) என்னும் வானதூதர்கள் விண்ணகப் பொருட்களை கண்காணிக்கும் அதிகாரம் கொண்டவர்கள் ஆவர். பிரபஞ்சத்தின் இயக்க முறைமைகளை இவர்களே ஒழுங்குபடுத்தி பராமரிக்கின்றனர்.

புனைவு-டையோனைசியஸ் நூல் பின்வருமாறு கூறுகிறது: "சத்துவகரின் பெயர் அவர்களின் அசைக்க முடியாத வல்லமையை, கடவுளை ஒத்த ஆற்றல்களைக் குறிக்கிறது. இறை வாழ்வில் இருந்து தம் பலவீனத்தால் விலகாமல், புண்ணியத்தின் அதிமிகத் தேவையில் நிலைத்து வளர்கின்றனர். இவர்கள் புண்ணியத்தின் ஊற்றாகவும், மிகை நிறைவாகவும் திகழ்கின்றனர்."[3]

பலவத்தர் தொகு

பலவத்தர் (Powers or Authorities) என்னும் வானதூதர்கள், பிராதமிகரோடு இணைந்து அதிகாரம் செலுத்துவோர் (எபேசியர் 3:10) ஆவர்.

பலவத்தர் மனச்சான்றைத் தாங்குவோராகவும், வரலாற்றைக் காப்போராகவும் இருக்கின்றனர். இவர்கள் கடவுளுக்காகப் பிரமாணிக்கத்துடன் போரிட உருவாக்கப்பட்ட வானதூதர்கள். இவர்கள் மனிதரிடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்வதாலேயே இப்பெயரைப் பெறுகின்றனர்.

மூன்றாம் வட்டம் தொகு

 
மிக்கேல் அதிதூதர் சாத்தானை வீழ்த்தல்

மூன்றாம் வட்டத்தின் வானதூதர்கள் விண்ணகத் தூதுவர்களாகவும், வீரர்களாகவும் உள்ளனர்.

பிராதமிகர் தொகு

பிராதமிகர் (Principalities or Rulers) என்னும் வானதூதர்கள், பலவத்தரை இணைத்து ஆட்சி புரிவோர் ஆவர்.

பிராதமிகர் தலையில் மகுடமும், கையில் செங்கோலும் கொண்டிருப்பர். ஞானாதிக்கரின் கட்டளைகளை நிறைவேற்றுவதும், பூவுலகுக்கு குறிக்கப்பட்ட ஆசிகளை வழங்குவதும் இவர்களின் பணி ஆகும். இவர்கள் மக்கள் குழுக்களை கண்காணித்து, கற்பிப்பவர்களாகவும் பாதுகாப்பவர்களாகவும் இருக்கின்றனர். மனிதரின் அறிவியல் மற்றும் கலை ஆர்வத்தை இவர்களே தூண்டுகின்றனர்.

அதிதூதர் தொகு

அதிதூதர் (Archangel, கிரேக்கம்: Greek αρχάγγελος (archangělǒs), எபிரேயம்: רב־מלאך (rav-mal'ákh)) என்னும் சொல்லுக்கு தலைமை வானதூதர் என்பது பொருள்.[4] புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் ஒரே அதிதூதர் மிக்கேல் ஆவார்.[5]

 
இயேசுவைத் தேற்றும் தேவதூதர்

தலைமை வானதூதர்களின் எண்ணிக்கை ஏழு என்பது பொதுவான நம்பிக்கை. இவர்கள் கடவுளின் திருமுன் நின்று பணி செய்கின்றனர். இவர்கள் உண்மையுள்ள போர் வீரர்களாக இருக்கின்றனர். கத்தோலிக்க மரபின்படி மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகிய மூவரும் முக்கியமான அதிதூதர்களாக கருதப்படுகின்றனர்.

தேவதூதர் தொகு

தேவதூதர் (Angels or Malakhim) என்னும் வானதூதர்கள் மனிதருக்கு இறைசெய்தியை வழங்கும் தூதுவர்களாக செயல்படுகின்றனர். உயிருள்ளவற்றின் நலன்களுக்கு பொறுப்பானவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் மனிதர்களின் பாதுகாவலர்களாகவும் செயல்படுகின்றனர்.

ஆதாரங்கள் தொகு

  1. Chase, Steven (2002). Angelic spirituality. பக். 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780809139484. 
  2. "Isaiah 6 - NET Bible". Bible.org. பார்க்கப்பட்ட நாள் 2007-03-13.
  3. http://www.esoteric.msu.edu/VolumeII/CelestialHierarchy.html
  4. Strong, J, Strong's Exhaustive Concordance of the Bible, Riverside Books and Bible House, Iowa Falls (Iowa), ISBN 0-917006-01-1.
  5. திருவெளிப்பாடு 12:7-8 'விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று.'

துணை நின்றவை தொகு

  1. Copeland, Mark. Ministering Spirits: Angels In The Old Testament. Executable Outlines. 2004.
  2. Copeland, Mark. Terms And Descriptions Of Angels. Executable Outlines. 2004.
  3. Fares, Aymen. Angelics and the Angelic Realm பரணிடப்பட்டது 2011-08-22 at the வந்தவழி இயந்திரம். Spiritual.com.au Pty. Ltd. 2000.
  4. Tatum, Johnny. The Hierarchy of Angels: Hierarchical Chart of Angels. Worldnet Grace Ministries.
  5. Tatum, Johnny. The Hierarchy of Angels: Distinguishing the Higher Ranked. Worldnet Grace Ministries.
  6. The Bible (Searchable online version)
  7. Pseudo-Dionysus the Areopagite. The Celestial Hierarchy.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ_விலாச_வானதூதர்கள்&oldid=3307884" இலிருந்து மீள்விக்கப்பட்டது