நாம்ட்ரோலிங்


நாம்ட்ரோலிங் நிய்ங்மபா மடம் (Namdroling Nyingmapa Monastery) பத்மசம்பவர் நிறுவிய திபெத்திய பௌத்தக் கோட்பாடான 'நியிங்மபா'வை போதிக்கும் பெரிய அமைப்பாகும். இந்திய மாநிலமான கருநாடகத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள பைலக்குப்பே எனும் சிற்றூரில் அமைந்துள்ள இந்த நாம்ட்ரோலிங் மையம் ஏறத்தாழ 5000 லாமாக்களுக்கு (இருபால் துறவியருக்கும்) வாழ்விடமாகவும் மதக்கல்வி அளிக்கும் இடமாகவும் விளங்குகிறது. திபெத் பாரம்பரிய முறையில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையையும் இது கொண்டுள்ளது.[1]

பத்மசம்பவர், கௌதம புத்தர் மற்றும் அமிதாப புத்தர்களின் சிலைகள் உள்ள நாம்ட்ரோலிங் மடாலயம், மைசூர், இந்தியா
நாம்ட்ரோலிங் புத்தவிகாரையில் புத்த பிக்குகள் (2006 இல்).

வரலாறு

தொகு

சீன-திபெத் இணைப்புக்கு முன்பாக திபெத்தில் இருந்த 'பல்யுல்' புத்தமதக் கல்வி நிலையத்தின் இரண்டாம் நிலைப் பொறுப்பில் இருந்த 'பெனார் ரின்போச்' (Penor Rinpoche) என்பவரால் 1963 இல் இவ்விகாரை தோற்றுவிக்கப்பட்டது. இந்த புத்தமதப் பல்கலைக்கழகத்தின் முழுப்பெயர் ‘தெக்சோக் நாம்ட்ரோல் ஷெத்ருப் டர்கியிலிங்’ என்பதாகும் ; சுருக்கமாக – நாம்ட்ரோலிங். எட்டு சதுர அடி பரப்பளவே கொண்ட, மூங்கிலினால் செய்யப்பட்ட ஒரு சிறு கோயில் போன்ற அமைப்புதான் நாம்ட்ரோலிங்கின் முதல் அமைவிடம். இந்திய அரசு வழங்கிய நிலத்தில், இக்கல்வி நிலையத்தை கட்டும் பணி தொடங்கிய போது, காட்டு யானைகளாலும், இன்னபிற காரணங்களாலும், மிகுந்த இடர்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது.

கட்டப்பட்ட கட்டிடங்கள் – காலவரிசை

தொகு

• 1978 ஃபிப்ரவரி 17 ஆம் தேதி புத்தக் கல்லூரி (ஷேத்ரா) கட்டி முடிக்கப்பட்டது.

• 1999 செப்டம்பர் 24 ஆம் தேதி ‘பத்மசம்பவா புத்த விகாரை’ என்னும் புதிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் இதைப் ‘பொற்கோயில்’ என்று அழைக்கின்றனர். இது ஆயிரக்கணக்கான புத்தபிக்குகள் ஒரேசமயத்தில் வழிபட விசாலமாக உள்ளது.• ‘சோக்யால் ஷெத்ருப் டர்கியிலிங்’ எனப்படும் பெண் துறவிகளுக்கான மடம் 1993 நவம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது.

• குரு ‘ரின்போச்’க்காக ஒரு கோயில், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு வரையில் உள்ள நிலவரப்படி, நாம்ட்ரோலிங் கல்லூரியில் தங்குவதற்காக 150 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்நிலையத்தில் உள்ள துறவிகளின் எண்ணிக்கை மாறுபட்டுக்கொண்டிருக்கும். சமீபத்திய கணக்கெடுப்பின்படி 4000 க்கும் மேற்பட்ட பிக்குகளும், 800 பெண் துறவிகளும் இருப்பதாக அறியப்படுகிறது.

விழாக்கள்

தொகு

ஃபிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரும் திபெத்திய புது வருடம் (லோசர்) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய லாமா நடனங்கள், கட்டிடங்களின் பக்கவாட்டில் ‘தங்கா’ எனப்படும் பெரிய அளவு சீலைகள் தொங்கவிடுதல், கட்டுப்பாடான ஊர்வலங்கள் என்று இரண்டு வாரங்கள் புத்தவிகாரையில் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Namdroling Monastery". Archived from the original on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2014-02-23.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்ட்ரோலிங்&oldid=3560494" இலிருந்து மீள்விக்கப்பட்டது