பன்னாட்டுத் தமிழ் இதழியல் நூலகம்

பன்னாட்டுத் தமிழ் இதழியல் நூலகம் திருச்சி மாவட்டம் திருச்சியில் சுப்பிரமணியபுரத்தில் பன்னீர்செல்வம் தெருவில் அமைந்துள்ள தனியார் நூலகமாகும்.

துவக்கம்

தொகு

பொதுப்பணித்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற திரு க.பட்டாபிராமன் என்பவரால் அவருடைய 12 வயதில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் நூற்களை மட்டுமே கொண்டிருந்த இந்நூலகத்தில் தமிழ் இதழ்களுக்கென்ற தனித்துவமான நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. [1] இவருடைய வீட்டின் மாடியில், கொட்டகை போன்ற அமைப்பில் உள்ள இடத்தில் இந்த நூலகம் இயங்கி வருகிறது.[2]

வரலாறு

தொகு

அறந்தாங்கியில் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கும்போது இவருக்கு இதழ்களைச் சேகரிக்க ஆரம்பித்த ஆர்வமானது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டிப்ளமா நிறைவு செய்து, பொதுப் பணித்துறையில் பணியில் சேர்ந்த பின்னரும் தொடர்ந்தது. பேராசிரியர்கள் தந்த ஊக்கத்தின் அடிப்படையில் 1964இல் 650 இதழ்களைக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு கண்காட்சி நடத்தியுள்ளார். அதிக எண்ணிக்கையிலான மாணவர்களும், ஆசிரியர்களும் அதனைப் பார்வையிட்டுள்ளனர். அந்தகாலகட்டத்தில் உதவி கேட்டபோது பொள்ளாச்சி மகாலிங்கம் ரூ.200 பணவிடை அனுப்பியுள்ளார். படிக்கும் காலத்தில் இவர் உரக்கப் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்ற நிலையில், பெரியார் அறந்தாங்கி வந்தபோது, பெரியார் முன்பாக இவரை ஒரு இதழிலிலிருந்து உரக்க வாசிக்கக் கூறியுள்ளனர். அவர் வாசித்தபோது அவர் பாராட்டியுள்ளார். அப்போது அவரிடம் தன் சேகரிப்பினைப் பற்றிக் கூற பெரியார் தான் கையில் வைத்திருந்த இதழை அவரிடம் தந்துள்ளார். குன்றக்குடி அடிகளார், திருக்குறள் முனுசாமி, கே.அப்பாத்துரையார், தீபம் பார்த்தசாரதி, ஜெயகாந்தன், குமரி அனந்தன் உள்ளிட்டோர்களிடம் இருந்து நாளிதழ்களையும், நூல்களையும் பெற்று தன் சேகரிப்பில் சேர்த்துள்ளார். சுப்பிரமணிய பாரதியாரின் நெருக்கமான நண்பரான பரலி சு.நெல்லையப்பரிடம் சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர்களால் கொணரப்பட்ட பல சேகரிப்புகள் இருந்ததைக் கேள்விப்பட்டு, சென்னைக்குச் சென்று அங்கு தங்கியிருந்து அவரிடமிருந்து சுதந்திரத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட 'லோபோகபாரி' இதழின் ஒரு படியைப் பெற்றுள்ளார். இவருடைய சேகரிப்புகளில் குறிப்பிடத்தக்கன 'பிரம்ம வித்யா' (1887), 'கலா நிலையம்' (1929), 'விவேக போதினி' (1915), 'வேதாந்த தீபிகை' (1926), 'ஆனந்த போதினி' (1939), மற்றும் 'லோபோகபாரி' (1934) போன்றவை ஆகும். பல நிலைகளில் தி.மு.க.வின் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட இதழ்கள் இவருடைய சேகரிப்பில் உள்ளன.[2]

இதழ்கள்

தொகு

தொடரும் இதழ்கள், நாளிதழ்கள், அயலக இதழ்கள் 3,000உம், தொடராத இதழ்கள் 3,200உம், 2000க்கும் மேற்பட்ட அரிய இதழ்களும், வெளிநாடுகளிலிருந்து வெளியான 4,000 இதழ்களும் இந்நூலகத்தில் உள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட தொடராத இதழ்கள், தொடரும் இதழ்கள் தொகுப்புகள் 50,000க்கும் மேல் உள்ளன. [1] இந்நூலகத்தில் 160 ஆண்டுக்கு முன்னர் வெளிவந்த நெல்லை அத்தியாச்சாதீன நற்போதகம், 110 ஆண்டு பழமையான 'ஞானத்தூதன்', பாரதியாரின் 'இந்தியா', திரு விகவின் 'தேசபக்தன்', 'குடியரசு', 'பகுத்தறிவு', 'லோகோபகாரி', 'ஆனந்த போதினி' உள்ளிட்ட பழமையான இதழ்கள் உள்ளன. [3] மேலும் மூத்த காங்கிரஸ் கட்சியின் தலைவரான குமரி அனந்தனின் 'குமரி', கருமுத்து தியாகராஜனின் 'தமிழ் நாடு', ஜெயகாந்தனின் 'ஜெயக்கொடி', 'ஜெய பேரிகை' ஆகியவையும் உள்ளன. பல வகையான 7,000 நாளிதழ்கள் உள்ளன. அவற்றில் சில இதழ்களில் ஒரு படி மட்டும் உள்ளன. [2]

நூல்கள்

தொகு

நூல்கள் பிரிவில் கவிதை, இலக்கியம், மரம்-சுற்றுச்சூழல், தமிழ் இதழியல், சான்றோர் வரலாறு, நகைச்சுவை, கணினி, பொது அறிவு, சுய முன்னேற்றம், மாணவர் நூல்கள், கிறித்தவம், சமணம், இஸ்லாம், ஆன்மீகம், சுற்றுலா வழிகாட்டி, வெளிநாடுகளைச் சேர்ந்த படைப்பாளிகளின் நூல்கள், உலகத்தமிழ் மாநாடுகளின் மலர்கள் உள்ளிட்ட 3,400க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இத்துடன் அரிய சங்கங்கள் வெளியிட்ட மலர்களும், ஆங்கில நூல்களும், 120 தமிழ் இதழ்களின் வகைப்பாடுகளும், அரிய நூல்களாகக் கருதப்படும் 900க்கும் மேற்பட்ட நூல்களும் உள்ளன. [1]

வாசிப்பு

தொகு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 3000 நூல்கள், 2000 பத்திரிக்கைகள் இந்நூலகத்தில் வாங்கப்பட்டுள்ளன. இதுவரை 3,000 பேர் நூலகத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலகத்தில் 125க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், ஆய்வாளர்கள் இங்கு வந்து பயன்பெறுகின்றனர். [1]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு