பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு
பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு (Pathur Nataraja statue recovered cases) என்பது தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம் (அப்போது தஞ்சாவூர் மாவட்டம்) பாத்தூர் சிவன் கோயிலுக்கு சொந்தமான கொள்ளையடிக்ககபட்ட நடராசர் சிலையை இலண்டனில் இருந்து மீட்டுவந்த வழக்கு ஆகும். இந்த வழக்கில் தடய அறிவியல் நிபுணராக பி. சந்திரசேகரன் பணியாற்றினார்.[1]
பின்னணி
தொகுதமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம் (அப்போது தஞ்சாவூர் மாவட்டம்) கொடாரச்சசேரி அருகில் உள்ள பாத்தூர் (இ்ந்த ஊர் பத்தூர் என்றும் எழுததப்படுகிறது[2]) என்னும் ஊரில் உள்ள விசுவநாத சுவாமி கோயில் என்ற சிவன் கோயிலுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகளை அந்நியர் படையெடுப்புகள் போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் கோயிலுக்கு அருகேயே புதைத்துவைக்கபட்டுள்ளன. 1976இல் கோயில் காவலாளி குடிசை போடுவதற்காக பள்ளம் தோண்டியபோது நடராசர், நடராசர் உடனுறை அம்மனான சிவகாமி, சோமாசுகந்தர், பிட்சாடனர், தனி அம்மன், பிள்ளையார், முருகன், அப்பர், சுந்தரர் ஆகியோரின் ஒன்பது சிலைகள் கிடைத்துள்ளன. சிலைகள் கிடைத்த செய்தியை யாருக்கும் சொல்லாமல் அருகிலேயே இன்னொரு குழியை வெட்டி அதில் சிலைகளை இட்டு அதன்மீது வைக்கோலைப் பரப்பி மீண்டும் மூடிவிடுகிறார். பின்னர் அந்த சிலைகளில் இருந்த நடராசர் சிலையை மட்டும் ரூபாய் 500க்கு விற்றுவிட்டார். பின்னர் 1986இல் மீதமுள்ள சிலைகளை விற்பதற்காக மூடுந்தில் கொண்டு சென்றபோது காவல் துறையினரின் சோதனைச் சாவடியில் அகப்பட்டுக் கொண்டனர்.[3] விசாரணையில் ஏற்கனவே நடராசர் சிலையை எடுத்து விற்றுவிட்டதை காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. அந்த நடராசர் சிலை பம்பாய் வரை சென்றது தெரியவந்தது. அதன் பிறகு எங்கே சென்றது என்று தெரியாததால் பன்னாட்டு காவல் துறை வரை தகவல்கள் அளிக்கபட்டன.
வழக்கு
தொகுசிலகாலம் கழித்து பன்னாட்டு காவல் துறையிடமிருந்து சிலை குறித்த தகவல் ஒன்று வந்தது. கனடாவைச் சேர்ந்த எண்ணை நிறுவனம் ஒன்றின் 'ஆர்ட் கேலரி' நடராசர் சிலையை இலண்டன் அருங்காட்சியகக் காப்பாளரிடம் தூய்மைப்படுத்த கொடுதுள்ளது என்பது ஆகும். பின்னர் அது பாத்தூர் நடராசர்தான் என தமிழக அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொண்டனர். இந்த சிலையானது 11 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்திய கலை நேர்த்தி மிக்க சிலையாகும். பஞ்சலோக நடராசர் சிலையானது 100 செமீ உயரமும் 65 கிலோ எடையும் கொண்டது.[4]
இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்து சட்டப்படி கடவுள்கள் உயிருள்ளவர்களாக கருதப்படுவர். அவர்கள் சார்பாக வழக்குத் தொடரலாம். எனவே நடராசரை மீட்க அவரது துணைவியார் சிவகாமி சார்பில் இலண்டன் உயர்நீதிமன்றத்தில் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வழக்கு போடப்பட்டது.[5] மேலும் அந்த நடராசருடன் தோண்டி எடுக்கப்பட்ட மற்ற எட்டு சிலைகளும் இலண்டன் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வழக்கானது இராயல் ஐகோர்ட் ஆப் லண்டன் நீதியரசர் கென்னடியிடம் வழக்கு விசாரணை சென்றது. பாத்தூர் கோயிலுக்கு சொந்தமான பிற எட்டு சிலைகளுடன் சேர்ந்தது இந்த நடராசர் சிலை என்று நிரூபிக்க இந்த நடராசர் சிலையின் அளவையும், கோயிலின் சிவகாமி உள்ளிட்ட சிலைகளின் அளவையும் கொண்டு அவற்றை அவை சிற்ப சாஸ்திரத்தின்படி எவ்வாறு பொருந்துகின்றன என்பது குறிப்பிடப்பட்டது.[3]
அடுத்து நடராசர் சிலையின் மேல் படிந்துள்ள மண் மாதிரியும், பாத்தூரில் உள்ள பிற சிலைகளின்மேல் பதிந்துள்ள மண் மாதிரிகளையும் ஆய்வு மேற்கொண்டு அவை ஒரே மாதிரியான மண் என உறுதிபடுத்தினர்.[6] மேலும் நடராசர் சிலையில் இருந்து எடுக்கப்பட உலோக மாதிரி, பிற சிலைகளின் உலோக மாதிரிகளையும் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியான உலோகம் என்று நிரூபிக்கபட்டன. மேலும் அந்த நடராசர் சிலையானது சிலகாலம் குழிவெட்டி வைக்கோல் இட்டு மீண்டும் மண்ணால் மூடப்பட்டதால் அந்த வைக்கோலினால் சிலைகளின் மேல் கரையான் கூடு கட்டப்பட்டிருந்த அடையங்கள் காணப்பட்டன. நடராசர் சிலையின் மேல் உள்ள கரையான் கூடுகளின் தடையங்களும், பாத்தாரில் இருந்து கொண்டுவரப்பட்ட பிற சிலைகளின்மேல் உள்ள கரையான் கூடுகளின் தடையங்களும் ஒரே மாதிரியானவை என்றும் நிரூபிக்கப்படன.[7] மேலும் அந்தமாதிரியான கரையான் கூடுகள் நெல் விளையும் சதுப்பு நிலப் பகுதியில் காணக்கூடிய கரையான் கூடுகளே என குறிப்பிடும் கரையான் ஆய்வாளரின் அறிக்கையும் நீதியரசரின் பார்வைக்கு அளிக்கப்பட்டது.[3]
பாத்தூரில் சிலைகள் கண்டெடுக்கபட்ட இடத்தில் இருந்த மண் மாதிரியையும் நடராசர் சிலையில் ஒட்டி இருந்த மண் மாதிரியையும் ஆய்வுக்கு நீதிமன்றம் அனுப்பியது. ஆய்வின் முடிவில் இரண்டும் வெவ்வேறானவை என எதிர் பாராத முடிவை ஆய்வு சொன்னனது. இந்த ஆய்வு முடிவைக் கொண்டு இது பத்தூர் நடராசர் இல்லை என வாதிட்டது கனடா ஆர்ட் கேலரி. இதற்கு விளக்கமளித்த தமிழக தொல்லியல் துறை ‘பேரிடர் காலங்களில் குழி வெட்டி அதில் மணல் பரப்பி அதன் மீது சுவாமி சிலைகளை வைத்து மீண்டும் அவற்றின் மீது மணலைப் போட்டு மூடி, அதன் மீது மண்ணைத் தள்ளி மூடி சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ஆகம விதி. அவ்வாறு மூடப்பட்டதால்தான் சிலையில் இருக்கும் மணலும் சிலை இருந்த இடத்தில் எடுக்கப்பட்ட மண் மாதிரியும் வெவ்வேறாக இருக்கின்றன’ என்று தொல்லியல் ஆய்வாளர் இரா. நாகசாமி விளக்கம் அளித்தார்.[8]
மேலும் கனடா எண்ணை நிறுவனமானது இந்த நடராசர் சிலையானது இந்தியப் பிரிப்புக்கு முன்னர் பஞ்சாப் பகுதியில் ஒரு இந்து குடும்பத்திடமிருந்து வாங்கப்பட்டது என்று மறுத்தது. இதற்கு தமிழக அரசு தரப்பினர் ஒரு அடிக்கு மேல் உள்ள எந்த சிலையையும் இந்து குடும்பத்தினரும் வீட்டில் வைத்து வழிபட மாட்டார்கள். ஏனெற்றால் ஒரு அடிக்கு மேலுள்ள சிலைக்கு ஆகம விதிப்படி பூசை செய்வது அவசியம் என்று அவர்களது வாதத்தை உடைத்தனர்.[3]
வழக்கு விசாரணை முடிவில் நடராசர் சிலை கடத்தி வரப்பட்டதுதான். அது எந்தக் கோயிலில் இருந்து கொண்டு வரப்படதோ அங்கே கொண்டு செல்லவேண்டும் என்று தீர்பளிக்கப்பட்டது.[3] ஆனால், இந்தத் தீர்ப்பை பிரிவி கவுன்சிலின் மேல்முறையீட்டுக்கு கனடா ஆர்ட் கேலரி கொண்டு சென்றது. ஆனால் அங்கே பழைய நீதிமன்றத் தீர்ப்பே உறுதி செய்யப்பட்டது.[8] அதன்பிறகு பாத்துர் நடராசர் 1992 இல் தமிழகம் கொண்டுவரப்பட்டார்.
குறிப்புகள்
தொகு- ↑ மின்னம்பலம். "சிறப்புக் கட்டுரை : தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன்! - ப்ரியன்". மின்னம்பலம். பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
- ↑ "சிலை சிலையாம் காரணமாம் - 5: பத்தூர் நடராஜர் வந்த கதை!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 கிரிமினல்கள் ஜாக்கிரதை -6, கட்டுரைத் தொடர், தடய அறிவியல் நிபுணர் டாக்டர் பி. சந்திரசேகரன், கல்கி, 10.செப்டம்பர், 2000
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ கடம்பூர் விஜயன், B. (2019-03-27). "பத்தூர் சிவன் கோயில் பற்றி தெரியுமா?". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
- ↑ "திக் திக் துறை..விறு விறு தகவல்கள்!". chenaitamilulaa.forumta.net. பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
- ↑ Kolappan, B. (2012-08-27). "When destroyers proved to be the saviours". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
- ↑ 8.0 8.1 "சிலை சிலையாம் காரணமாம் - 6: உ.பி. யோகினி சிலை தெரியுமா?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.