பிரதாபசிம்மன்

தஞ்சாவூர் மராத்திய அரசர்

பிரதாபசிம்மன் அல்லது பிரதாப்சிங் போன்சலே (Pratap Singh Bhonsle or Pratapsinha (மராத்திய மொழி: तंजावरचे प्रतापसिंह) என்பவர் போன்சலே மரபின் தஞ்சாவூர் மராட்டிய மன்னராக 1739 முதல் 1763 வரை இருந்தவராவார். இவர் அரியணையில் அமர்ந்ததைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உள்நாட்டுப் போரும், குழப்பமும் நீடித்தது. அதன் பிறகு நாடு மீண்டு பழைய உன்னத நிலையை அடைந்தது. இவருடைய ஆட்சிக் காலமானது கர்நாடகப் போர்கள் மற்றும் ஏழு ஆண்டுகாலப் போர்களைக் கண்டது.

பிரதாப்சிங் போன்சலே
தஞ்சாவூர் அரசர்
பிரதாப்சிங் போன்சலே
ஆட்சி1739 - 1763
முடிசூட்டு விழா1739, தஞ்சாவூர் கோட்டை அரசவை
முன்னிருந்தவர்இரண்டாம் சாகுஜி
பின்வந்தவர்துளஜேந்திர ராஜா
துணைவர்ஐந்து மனைவிகள் மற்றும் ஏழு வைப்பாட்டிகள்
வாரிசு(கள்)துளஜேந்திர ராஜா
அமர்சிங்
அரச குலம்போன்சலே
தந்தைதுக்கோஜி
இறப்பு16 திசம்பர் 1763
தஞ்சாவூர் கோட்டை
சமயம்இந்து

முன்வாழ்கை தொகு

தஞ்சாவூர் அரசர் துக்கோஜிக்கும் அவரது வைப்பாட்டியான அன்னபூர்ணாவுக்கும் மகனாக பிரதபசிம்மன் பிறந்தார். இவர் மன்னரின் சட்டபூர்வமான மகனாக இல்லாதபடியால் இவர் துக்கேஜிக்குப் பிறகு ஆட்சியில் அமர விரும்பவில்லை. துக்கேஜியின் மரணத்துக்குப்பிறகு தஞ்சாவூர் அரசராக அவரது மூத்த மகன் ஆட்சியில் அமர்ந்து ஓர் ஆண்டில் இறந்து போனார். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிரதாபசிம்மனை சிலகாலம் அரண்மனை சூழ்ச்சிகள் அலைகழித்தன.

குழப்பக் காலம் 1736–1739 தொகு

1736 ஆம் ஆண்டில் துக்கேஜியின் மரணத்தைத் தொடர்ந்து, உள்நாட்டுக் குழப்பங்கள் தோன்றின. மன்னரின் மூத்த மகனான வெங்கோஜியும், பிற வாரிசுகளும், அரியணையேற போட்டியிட்டனர். அரியணையை இரண்டாம் வெங்கோஜி கைப்பற்றினார் என்றாலும் அவர் ஓராண்டு காலம் ஆட்சிபுரிந்த பிறகு இறந்தார். அவர் ஆட்சியின்போது, ஆரோக்கியமற்ற உடல் நிலையில் இருந்தபோதும், தஞ்சாவூரின் மீது படையெடுத்துவந்த சந்தா சாகிப்பை கடுமையாக எதிர்த்து அவர் திருச்சிராப்பள்ளிக்கு பின்வாங்கும்படி செய்தார்.

1737 இல் வெங்கோஜி இறந்த பிறகு அவரது மனைவியான சுஜான்பாயி அரியணை ஏறினார். அப்போது தஞ்சாவூர் கோட்டையின் தளபதியாக சயீத் என்பவர் இருந்தார். தன் அதிகாரத்தைப் பெருக்கிக்கொண்ட சயீத், தன் சூழ்ச்சிகளால் 1738 இல் அரசி சுஜான்பாயியை சிறையிலடைத்து கைப்பாவை அரசராக காட்டுராஜா என்பவரை சாகுஜி என்ற பெயரில் சிம்மாசனத்தில் அமரவைத்தார். அவரும் ஓராண்டு காலத்தில் ஆட்சில் இருந்து அகற்றப்பட்டு, பிரதாபசிம்மன் அரசனாக்கப்பட்டார்.

ஆட்சிகாலம் தொகு

1739 ஆம் ஆண்டு பிரதாபசிம்மன் அரியணை ஏறினார். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரப்பூர்வ பதிவுகளில் " மாட்சிமை தாங்கிய" (His Majesty) என்று குறிப்பிடப்பட்ட தஞ்சாவூர் மன்னர்களில் இவர்தான் கடைசி மன்னர்.

பிரதாபசிம்மன் அரியணை ஏறியபிறகு, மன்னருக்கு எதிரான சூழ்ச்சிக் கூட்டணியில் தளபதி சயீதும் இருப்பதை மன்னர் அறிந்தார்.[1] இதை ஆதாரத்துடன் மன்னர் அறிந்த உடனே சயீதை கைது செய்து கொல்ல உத்தரவிட்டார்.

1748 இல் சாகுஜி தனக்கு ஆதரவு திரட்டும்விதமாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு தூதரை அனுப்பினார். முதலில் புதுச்சேரிக்கும்,[2] பின்னர் புனித டேவிட் கோட்டைக்கு பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியானது துவக்கத்தில் பிரதாப்சிங்கிற்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் கொல்லிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள தீவுகோட்டையை சாகுஜி அவர்களுக்கு வழங்குவதாக கூறியதால் அவர் பக்கம் மாறினர்.[3] 5,000 வீரர்களால் பாதுகாக்கப்பட்ட அக் கோட்டையை கைப்பற்ற பிரித்தானியர் இருமுறை படைகளை அனுப்பினர். முதல் முயற்சி முற்றிலும் தோல்வியில் முடிந்தது, இரண்டாவது முயற்சியின்போது போர் நிறுத்தத்தம் ஏற்பட்டது. இந்த இரண்டாவது போரில் ஸ்ட்ரிங்கர் லாரன்சு மற்றும் ராபர்ட் கிளைவ் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.[4] பிரதாப்சிங்கிற்கும் கம்பெனிக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு ஒப்பந்தத்தின் வழியாக போர் முடிவடைந்தது. ஒப்பந்தத்தின்படி தீவுகோட்டை ஆங்கிலேயருக்கு வழங்கப்பட்டது.

பிரதாபசிம்மனின் ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் ஆற்காடு நவாப்பான தோஸ்த் அலிகானின் முற்றுகையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. தஞ்சாவூரின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட தோஸ்த் அலிகான் விரைவில் பிரதாப்சிங்கை பதவி நீக்கம் செய்தார். ஆனால் வடக்கில் இருந்து பிரதாபசிம்மனுக்கு ஆதரவாக வந்த ஒரு மராத்திய படையானது தோஸ்த் அலிகானின் படைகளை தோற்கடித்து. திருச்சிராபள்ளியை முரார்ஜி ராவ் என்பவரின் பொறுப்பில் வைத்துவிட்டு, தோஸ்த் அலிகானையும் அவரது தம்பியையும் கைது செய்தது வடக்குக்கில் உள்ள அவர்கள் பகுதிக்கு கொண்டு சென்றது. இதன்பிறகு பிரதாப சிம்மனும்மனுக்கு சோதனை ஏற்பட்டது. விரைவில் ஐதராபாத் நிசாம் தன்படைகளை தஞ்சாவூர் நோக்கி அனுப்பினார். இதன் காரணத்தினால் இரண்டு போர்களை பிரதாப சிம்மனின் படைகள் எதிர்கொண்டன.

1742இல் ஐதராபாத் நிசாமின் மூன்றாவது மற்றும் இறுதிப் படையெடுப்பு நிகழ்ந்தது. முரார்ஜி ராவ்வை வீழ்த்தி திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றின. இந்த படையெடுப்பின் காரணமாக ஐதராபாத்தின் அடிமையாக தஞ்சாவூர் இருக்கவேண்டும், ஆண்டுதோறும் கப்பம் செலுத்தவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது.

ஏழாண்டுப் போர் தொகு

ஏழாண்டுப் போரில், பிரதாப்சிங் ஆங்கிலேயரின் அணியில் இருந்து போருக்கு உதவினார்.[5]

இறைமையை இழத்தல் தொகு

துவக்கத்திலிருந்தே, ஆற்காடு நவாப்பான முகமது அலி பிரதாப்சிங்கோடு நல்ல உறவில் இல்லை, தஞ்சாவூரை தன் ஆட்சிப் பகுதியுடன் இணைக்கவே விரும்பினார். இருப்பினும், பிரதாபசிம்மன் தனது நலன்களுக்காக முகமது அலியுடன் சங்கடமான கூட்டணியைக் கொண்டிருந்தார். ஏழாண்டு போருக்குப் பிறகு இருவருக்கும் இடையிலான உறவு கொதிநிலையை அடைந்தது. இருப்பினும், இந்த இருவரின் பொதுவான நட்பு சக்தியான, பிரித்தானிய கிழக்கு இந்திய நிறுவனம், இருவருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தியது. இறுதியில் ஆற்காடு நவாபிற்கு ஆண்டுதோறும் இருபது லட்சத்தை கப்பமாக செலுத்த அரசர் ஒப்புக்கொண்டார். அதற்கு பதிலாக, கோயிலடி மற்றும் எல்லங்காடு ஆகியன தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டன. இதன்காரணமாக தஞ்சாவூரின் இறைமை பறிபோனது.

இராமனாநாதபுரத்துடனான எல்லைச் சிக்கல் தொகு

அறந்தாங்கி எல்லைப்பகுதியில் இராமநாதபுரம் சமஸ்தானத்துடன் அடிக்கடி எல்லை மோதல்கள் ஏற்பட்டன. புதுக்கோட்டை தொண்டமானின் உதவியுடன் மானோஜி தலைமையில் ஒரு பெரிய படையானது ராம்நாதபுரம் சேதுபதிக்கு எதிராக சென்று அறந்தாங்கி கைப்பற்றப்பட்டது.

இறப்பு தொகு

24 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த பிரதாபசிம்மன் 1763 திசம்பர் 16 அன்று இறந்தார்.[6] இவரது மூன்றாவது மனைவியும், ஐந்தாவது மனைவியும் உடன்கட்டை ஏறினர். இதையடுத்து இவரது மூத்த மகன் துளஜேந்திர ராஜா அரியணை ஏறினார்.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. K. R. Subramanian(1928). The Maratha Rajas of Tanjore
முன்னர்
இரண்டாம் சாகுஜி
தஞ்சாவூர் மராத்திய மன்னர்
1739–1763
பின்னர்
துளஜாஜி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாபசிம்மன்&oldid=2770020" இலிருந்து மீள்விக்கப்பட்டது