பி. டி. ரணதிவே

பி. டி. ஆர். என்றும் பி. டி. ரணதிவே என்றும் அழைக்கப்பட்ட பாலச்சந்திர திரியம்பக் ரணதிவே (டிசம்பர் 19, 1904 – ஏப்ரல் 6, 1990) ஒரு இந்திய பொதுவுடைமைவாதியும், தொழிற்சங்கத் தலைவருமாவார்.

தோழர்
பி. டி. ரணதிவே
4வது பொதுச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
பதவியில்
1948–1950
முன்னவர் புராண சந்த் ஜோஷி
பின்வந்தவர் சந்திர ராஜேசுவர ராவ்
தனிநபர் தகவல்
பிறப்பு (1904-12-19)19 திசம்பர் 1904
தாதர், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 6 ஏப்ரல் 1990(1990-04-06) (அகவை 85)
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (1964–1990),
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (1964 க்கு முன்)
பணி விடுதலை வீரர், தலைவர்

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை தொகு

பம்பாயில் சாதி, மத, பேதங்களை கடந்த சமூக சீர்திருத்தக் குடும்பத்தில் 1904ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் பிறந்தார். பள்ளியில் படிக்கும்பொழுதே தனது குடும்பத்தினர் அன்றாடச் செலவுகளுக்காக தனக்கு தரும் காசுகளை சேர்த்து வைத்து தன்னுடன் படித்த சக தலித் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கும், எழுதுபொருள் வாங்குவதற்கும் செலவிட்டார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் முதுகலையில் பொருளாதாரப் படிப்பில் அந்த மாகாணத்திலேயே முதல் மாணவராக விளங்கி தங்கப் பதக்கப் பரிசு பெற்றார். அவரது படிப்பிற்கும் திறமைக்கும் பொருளாதாரப் பேராசிரியராகவோ அல்லது அரசாங்கத்தின் உயர் பதவியிலோ அமர்ந்திருக்க முடியும். ஆனால் அவற்றையெல்லாம் உதறித்தள்ளி கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக ஆனார்.

தொழிற்சங்கத் தலைவர் தொகு

1929ம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்திற்கு வழிகாட்டிய தலைவர்களுள் அவரும் ஒருவராவார். அவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்ட அவர் செப்டம்பர் மாதத்தில் விடுதலையானார். அக்டோபர் மாதத்தில் ஆங்கிலேய அரசாங்கம் இந்து- முஸ்லிம் கலவரங்களை தூண்டிவிடுவதை கண்டித்து ரயில்வே தொழிலாளர் பத்திரிகையில் கட்டுரை எழுதினார். அதற்காக அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1934ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பஞ்சாலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம் துவங்கியது. இதையொட்டி ரணதிவேயும், பல தோழர்களும் கைது செய்யப்பட்டனர். அவர் சிறையில் இருக்கும்பொழுது அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் (சிந்து) சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தச் சிறையில் விளக்குகள் கிடையாது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருட்டில்தான் இருக்க வேண்டும். மிக மோசமான உணவு தரப்பட்டது. சிரமங்களை தாங்கிக் கொண்டு ரணதிவே கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் மூன்று பகுதிகளையும், மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கடிதப் போக்குவரத்து நூலையும் படித்து முடித்தார். 1936ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார்.[1]

இரண்டாம் உலகப் போர் தொகு

1939ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி துவங்கிய இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கம் ‘நேஷனல் பிரண்ட்’ ஏட்டை தடை செய்தது. தலைமறைவான ரணதிவே சில மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் தியோலி முகாம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அரசியல் கைதிகள் உரிமைக்காக உண்ணாவிரதங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தினார். 1941ம் ஆண்டு சூன் மாதம் 22ம் தேதியன்று பாசிச ஜெர்மனியின் ஹிட்லர் சோவியத் நாட்டின் மீது படையெடுத்தான். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தும் சோவியத் நாடும் கூட்டு ஒப்பந்தம் செய்தன. ஹிட்லரை எதிர்த்து இரு நாடுகளும் கூட்டாகப் போரிடுவது என்று முடிவு செய்தன. இது இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ‘மக்கள் யுத்தம்’ என்று அழைக்கப்பட்ட இந்த யுத்தத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. சிறையிலிருந்த ரணதிவே இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து மக்கள் யுத்தம் குறித்து ஒரு ஆவணம் எழுதினார். அது தலைமறைவாயிருந்த கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டது. தலைமை அதை ஏற்றுக்கொண்டு “மக்கள் யுத்தத்தில் இந்திய மக்கள் தங்கள் பங்கை ஆற்றச்செய்க” என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கம் அவ்வாண்டு சூலை 21ம் தேதி சிறையில் இருந்த அனைத்து கம்யூனிஸ்ட் கைதிகளையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் தொகு

1943ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு பம்பாயில் நடைபெற்றது. இதில் ரணதிவே கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஏராளமான கட்டுரைகள் எழுதினார். நாடு முழுவதும் சென்று ஏராளமான கூட்டங்களில் ஆவேசகரமான உரை நிகழ்த்தினார். 1946ம் ஆண்டில் இந்திய கடற்படை வீரர்கள் பெரும் எழுச்சியில் இறங்கினர். ரணதிவே அந்த வீரர்களுக்கு பம்பாய் தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவை திரட்டுவதற்கு பெரிதும் பாடுபட்டார். இரவு பகலாக கட்சி அலுவலகத்திலேயே தங்கியிருந்து போராடும் வீரர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டி அனுப்பினார். பிப்ரவரி 22ம் தேதியன்று பம்பாயில் 35 லட்சம் தொழிலாளிகள் பெரும் வேலை நிறுத்தம் செய்தனர். இதற்கு ஏற்பாடு செய்வதில் ரணதிவே முன்னின்றார். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பி. சி. ஜோஷி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற தவறான நிலைப்பாட்டை எடுத்ததால் 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது மாநாட்டில் அவர் அப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு பி. டி. ரணதிவே கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். ஆனால் அவர் நாட்டின் எதார்த்த அரசியல் நிலைமையைக் கணக்கில் எடுக்காமல் அதிதீவிர வழியை மேற்கொண்டார். இது கட்சிக்கும் வெகுஜன இயக்கத்திற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தோழர்கள் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு, வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. எனவே 1950ம் ஆண்டில் பி. டி. ரணதிவே பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் கட்டுப்பாடான உறுப்பினர் என்ற முறையில் அவர் அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு தனது தவறுகளை திருத்திக்கொண்டார். 1955ம் ஆண்டில் கட்சியின் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ரணதிவே, சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்திற்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தார். அந்த இயக்கமானது மொழி வழி அடிப்படையில் மகாராஷ்டிரம் பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையையும் கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் வெற்றி பெற்று தனி மகாராஷ்டிர மாநிலம் பிறந்தது. 1956ம் ஆண்டில் பாலக்காட்டில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அவர் மீண்டும் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் வார ஏடான ‘ நியூ ஏஜ்’ பத்திரிகையின் ஆசிரியரானார். ஏராளமான சிறந்த கட்டுரைகளை எழுதினார். 1962ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இந்திய-சீன எல்லை மோதல் ஏற்பட்டது. இச்சமயத்தில் ரணதிவே ‘நவ்கால்’ என்ற பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்தார். இதைத் தொடர்ந்து அவரும்அவர் துணைவியார் விமலா ரணதிவேயும், ரணதிவேயின் சகோதரி அகல்யா ரங்கனேகரும், அவருடைய கணவர் பி. பி. ரங்கனேகரும் கட்சியின் முக்கியத் தலைவரான எஸ். வி. பருலேக்கரும் அவருடைய துணைவியார் கோதாவரி பருலேக்கரும் கைதுசெய்யப்பட்டு பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் எஸ். வி. பருலேக்கர் சிறையிலேயே மரணமடைந்தார். ரணதிவே நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1966ம் ஆண்டில்தான் விடுதலையானார்.[2][3]

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தொகு

1964ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது. அதன் மாநாட்டில் ரணதிவே கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966ம் ஆண்டில் விடுதலையான ரணதிவேக்கு நாடு முழுவதிலும் கட்சித் தோழர்கள் உற்சாகமான வரவேற்பளித்தனர். அவர் எழுதிய “இரண்டு திட்டங்கள்-மார்க்சிஸ்ட் மற்றும் திரிபுவாத திட்டங்கள்” என்ற தலைப்பில் எழுதிய பிரசுரம் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு பெரிய வழிகாட்டுதலை கொடுத்தது. இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் புரட்சிகர அமைப்பான சிஐடியு என்ற இந்திய தொழிற்சங்க மையம் 1970ம் ஆண்டு மே மாதத்தில் தோன்றியது. ரணதிவே இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எழுதிய நூல்கள், கட்டுரைகள் தொகு

தனது வாழ்நாளில் அவர் பல நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.[4][5] 1937ம் ஆண்டில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் ‘நேஷனல் பிரண்ட்’ என்ற வார இதழை வெளியிட ஆரம்பித்தது. அந்த ஆசிரியர் குழுவில் பங்கேற்ற பி. டி. ரணதிவே ‘இந்திய தொழிலாளிகளுக்கு புதிய கைவிலங்குகள்’, ‘ஒரு பதாகையின் கீழ் தொழிற்சங்கங்கள் முன்னேறுகின்றன’ போன்ற கட்டுரைகளை எழுதினார்.1950 முதல் 1952 வரை அவர்‘இந்தியாவின் ஐந்தாண்டு திட்டம்- அது தருவதென்ன?’ [6] என்ற புத்தகத்தையும், ‘இந்தியப் பொருளாதார நெருக்கடி’ என்ற புத்தகத்தையும் எழுதினார். இவ்விரு நூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவருடைய கட்டுரைகளான “6 கோடி தீண்டாதவர்கள்” சாதி, வர்க்கம் மற்றும் சொத்துடமை,’’ “தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுவது குறித்து’’ போன்றவை ஆழ்ந்த சிந்திக்கத் தூண்டும் கட்டுரைகளாகும். அவை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைக்கப்படும் சமூக ஒடுக்குமுறை மற்றும் அட்டூழியங்கள் குறித்து விளக்கியிருந்தது. அவருடைய “மார்க்சியப் போதனைகள்” என்ற புத்தகமானது எட்டு கட்டுரைகளைக் கொண்டது. “அதில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 125 ஆண்டுகள்”, “உலகை மாற்றிய மார்க்சின் போதனைகள்”, “சமூக மாற்றம் குறித்த மார்க்சிய கோட்பாட்டில் தத்துவத்தின் பங்கு”, “மார்க்சியம் 100 ஆண்டுகள்”, “மார்க்சியம் நவீன புரட்சியின் விஞ்ஞானம்” ஆகிய கட்டுரைகள் அடங்கும். சிஐடியு வெளியிட்ட‘ பி. டி. ஆரின் தேர்வு நூல்கள்’ மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் உள்ள 20 அற்புதமான கட்டுரைகள் வலது மற்றும் இடது திரிபுகளை முற்றிலும் அம்பலப்படுத்தின. “சுதந்திரப் போராட்டமும், அதற்குப்பின்னரும்’’ என்ற அவருடைய புத்தகமானது மூன்று முக்கிய கட்டுரைகளைக் கொண்டிருந்தது. “சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய பங்கு’’, “ இந்திய சுதந்திரத்தின் 40 ஆண்டு” ஆகியவை ஆகும். அவருடைய முந்தைய எழுத்துக்களான “இந்தியாவின் ஸ்டெர்லிங் கையிருப்பு”, “சாதி, வர்க்கம், சொத்து உறவுகள்”, “தொழிலாளி வர்க்கமும், தேசிய பாதுகாப்பும்”, “ஐரோப்பிய கம்யூனிசம்”, “முரண்பாடுகள் குறித்து”, “இரண்டு திட்டங்கள் குறித்து” போன்றவை, இப் பிரச்சனைகள் குறித்து மார்க்சிய-லெனினிய நிர்ணயிப்பை பலப்படுத்துவதாகும். அவருடைய கடைசிக் கட்டுரையானது வேலை செய்யும் உரிமை இயக்கத்துக்காக வழிகாட்டுதல் கொடுக்கும் ஒரு சிறந்த கட்டுரையாகும். அதை அவர் துர்காபூரில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டிற்காக தயாரித்தார்.

இறப்பு தொகு

பம்பாய் டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் கடுமையான புற்றுநோய் காரணமாக 1989ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டார். அங்கேயும் அவர் ஓய்வெடுக்கவில்லை. ஒரு தட்டச்சு இயந்திரம் கொண்டுவரச் சொல்லி ஒரு ஆவணத்தை தட்டச்சு செய்தார். ‘சோவியத் நாடு மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு’ என்ற அந்த ஆவணம் தான் அவர் கடைசியாக எழுதியது. அந்த மருத்துவமனையில் அவருக்கு சிறந்த சிகிச்சையளிக்கப்பட்டபோதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. 1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி அதிகாலையில் அமைதியாக உயிர் நீத்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Life and Teachings of Com. B.T. Ranadive". CITU இம் மூலத்தில் இருந்து 2015-08-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150812035638/http://citucentre.org/index.php/documents/item/33-life-and-teachings-of-com-b-t-ranadive. பார்த்த நாள்: 2 ஏப்ரல் 2015. 
  2. Chandra, Bipan & others (2000). India after Independence 1947-2000, New Delhi:Penguin, ISBN 0-14-027825-7, p.204
  3. "The Swing Back - Tridib Chaudhuri". https://www.marxists.org/archive/chaudhuri/1950/swing-back/ch01.htm. பார்த்த நாள்: 2 ஏப்ரல் 2015. 
  4. "Bhalchandra Trimbak Ranadive". https://www.google.co.in/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22Bhalchandra+Trimbak+Ranadive%22&gws_rd=ssl. பார்த்த நாள்: 2 ஏப்ரல் 2015. 
  5. "B.T. Ranadive". http://www.amazon.com/s?ie=UTF8&page=1&rh=n%3A283155%2Cp_27%3AB.T.%20Ranadive. பார்த்த நாள்: 2 ஏப்ரல் 2015. 
  6. "Book Review". Pacific Affairs. http://www.jstor.org/discover/10.2307/2753029?sid=21106328531393&uid=2129&uid=2134&uid=2&uid=70&uid=4. பார்த்த நாள்: 2 ஏப்ரல் 2015. 

வெளி இணைப்புகள் தொகு

அரசியல் கட்சி பதவிகள்


முன்னர்
புராண சந்த் ஜோஷி
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
1948 — 1950
பின்னர்
சந்திர ராஜேசுவர ராவ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டி._ரணதிவே&oldid=3701857" இருந்து மீள்விக்கப்பட்டது