போர்ட்டே
போர்ட்டே உஜின் கதுன் (சிரில்லிக்: Бөртэ үжин; 1161–1230) என்பவர் பிற்காலத்தில் செங்கிஸ் கானாகியத் தெமுசினின் மனைவி ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பேரரசியாக இருந்தார். இவரது இளமைக் காலம் பற்றி அதிகம் தெரியவில்லை. இவர் தெமுசினைத் தன் 17ஆம் அகவையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மெர்கிடு பழங்குடியினரால் கடத்தப்பட்டார். இவரை மீட்கத் தெமுசின் தைரியமாக முயன்றதே, அவரது உலகை வெல்லும் முயற்சியின் ஆரம்பமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் பிறந்தனர்.
போர்ட்டே கதுன் | |
---|---|
போர்ட்டே குறித்த ஒரு முகலாய ஓவியம். | |
மங்கோலியப் பேரரசு மற்றும் கமக் மங்கோலின் கதுன் | |
Tenure | 1189–1230 |
பின்னையவர் | மோக் |
பிறப்பு | 1161 கென்டீ, மங்கோலியா |
இறப்பு | 1230 (அகவை 68–69) அவர்கா, மங்கோலியா |
புதைத்த இடம் | |
துணைவர் | செங்கிஸ் கான் |
குழந்தைகளின் பெயர்கள் | சூச்சி செச்செயிகென் |
மரபு | கொங்கிராடு |
தந்தை | தாய் செயிச்சென் |
தாய் | தசோதன் |
மதம் | தெங்கிரி மதம் |
இளமைக் காலம்
தொகுபோர்ட்டே 1161ஆம் ஆண்டு கொங்கிராடு இனத்தின் ஒலகோனுடு பிரிவில் பிறந்தார். இந்த இனத்தினர் போர்சிசின் இனத்துடன் நட்பாக இருந்தனர். இவரது தந்தை தாய்-செயிச்சென், தாயார் தசோதன் ஆவர்.[1] இவர் வெளிர் நிறம் உடையவராகவும், "முகத்தில் வெளிச்சமும் கண்களில் நெருப்பும்" (பொருள்: அறிவில் சிறந்தவர்) உடையவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.[2]
இவரது திருமணம் தாய் செயிச்சென் மற்றும் எசுகெயால் நிச்சயிக்கப்பட்டது. அப்போது இவருக்கு அகவை 10 மற்றும் தெமுசினுக்கு அகவை 9 ஆகும். இதன் பிறகு தெமுசின் இவரது குடும்பத்துடன் தங்கினார். எசுகெயைத் தாதர்கள் உணவு உண்ண அழைத்து நயவஞ்சகமாக விடம் வைத்துக் கொன்றனர்.[3] ஆண் இல்லாத குடும்பம் என்ற காரணத்தால் இவரது குடும்பத்தை இவரது நாடோடிக் கூட்டம் ஒதுக்கி வைத்தது. ஆதரவற்ற தன் குடும்பத்தைக் காப்பாற்றத் தெமுசின் புறப்பட்டார். பின் 1178ஆம் ஆண்டில் போர்ட்டேயைக் காணத் தெமுசின் பயணம் செய்தார். தாய் செயிச்செனின் அனுமதியுடன் தெமுசின் போர்ட்டேயையும், அவரது தாயையும் தன் கூடாரத்திற்கு அழைத்துச் சென்றார். தெமுசினின் கூடாரம் செங்குர் ஆற்றின் அருகிலே இருந்தது.[4] போர்ட்டேவுக்கு வரதட்சணையாகக் கருப்பு சேபில் சட்டை கொடுக்கப்பட்டது.[5]
கடத்தல்
தொகுஇவர் தெமுசினைத் திருமணம் செய்த பிறகு, மூன்று மெர்கிடுகள் எனப்படும் பழங்குடியினர் விடியற்காலையில் தாக்குதல் நடத்தினர். தெமுசினும், மற்ற ஆண்களும் குதிரைகளில் ஏறித் தப்பினர். குதிரைகள் பற்றாக்குறையால் பெண்களால் தப்ப முடியவில்லை. போர்ட்டே மெர்கிடுகளால் கடத்தப்பட்டார். கி.பி. 1159இல் எசுகெய் ஓவலுனைக் கடத்தியதற்குப் பழிவாங்க இவர் கடத்தப்பட்டார்.[6] பல மாதங்களுக்குப் பிறகு தெமுசின் தன் கூட்டளிகள் சமுக்கா மற்றும் வாங் கானின் உதவியுடன் மீட்டார். சில அறிஞர்கள் தெமுசினின் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இதைக் கருதுகின்றனர். ஏனெனில் பிற்காலத்தில் உலகமே நடுங்கிய ஒரு செங்கிஸ் கானாக மாறியதன் ஆரம்பம் இது தான்.
தெமுஜின் தனது மனைவி கடத்தப்பட்டதால் பெரும் கவலை அடைந்து இருந்தார். தன்னுடைய படுக்கை "வெற்றிடமாக்கப்பட்டது", தன்னுடைய மார்பானது "வெட்டிப் பிரிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.[7] போர்ட்டேவுக்கு வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட கருப்பு ஆடையை பரிசாகப் பெற்ற ஓங் கான் மூன்று மெர்கிடு பழங்குடியினத்திடமிருந்து போர்ட்டேயை மீட்கத் தெமுஜினுக்கு உதவுவதாக உறுதியளித்தார். அனைவரும் சேர்ந்து போர்ட்டேயை மீட்கும் ஒரு திட்டத்துடன் வந்தனர்.[8] பர்குஜின் நிலப்பரப்புக்குள் எட்டு மாதங்கள் கழித்து இவர்கள் ஒரு தாக்குதலை நடத்தினர். இவர்கள் வந்த போது மெர்கிடு மக்கள் ஏராளமானோர் செலங்கே ஆற்றைக் கடந்து ஓடினர். போர்ட்டே மற்றும் தெமுஜின் இறுதியாக இணைந்தனர் என மங்கோலியர்களின் இரகசிய வரலாறு பின்வருமாறு குறிப்பிடுகிறது:
சூறையாடல் நடந்து கொண்டிருந்த போது வேகமாக தப்பித்து ஓடும் மக்கள் மத்தியில் தெமுஜின் 'போர்ட்டே, போர்ட்டே!' என்று அழைத்தார். ஓடிக் கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் சீமாட்டி போர்ட்டே இருந்தார். போர்ட்டே தெமுஜினின் குரலைக் கேட்டார். அதை அடையாளம் கண்டு கொண்டார். வண்டியில் இருந்து இறங்கினார். ஓடி வந்தார். அது இன்னும் இரவாக இருந்த போதும் சீமாட்டி போர்ட்டேயும், கோவக்சினும் தெமுஜினின் குதிரையின் கடிவாளத்தை இறுகப் பற்றினர். அந்நேரத்தில் நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தது; தெமுஜின் அவர்களைக் கண்டார். சீமாட்டி போர்ட்டேயை அடையாளம் கண்டு கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்.[7]
பிந்தைய ஆண்டுகளில் கான் ஆகிய பிறகு தெமுஜின் மெர்கிடு மக்களைப் பூண்டோடு அழித்தார்.[9]
போர்ட்டே எட்டு மாதங்கள் கழித்து மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட பின் போர்ட்டே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அக்குழந்தையின் தந்தை யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் இவர் இன்னொருவருக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டிருந்தார். ஆனால் தெமுசின் அக்குழந்தைக்கு சூச்சி (மொங்கொலிய மொழியில் விருந்தாளி என்று பொருள்) என்று பெயரிட்டுத் தன் குடும்பத்துடன் தங்க வைத்தார். தன் மகனாக வளர்த்தார். சூச்சியே செங்கிஸ் கானின் வாரிசாக வேண்டியது. ஆனால் இவரது தந்தை யார் என்ற குழப்பத்தால் இவரது சகோதரர்கள் இவரை ஏற்க மறுத்தனர். சூச்சி உருசியாவை சுமார் 250 வருடங்கள் ஆண்ட தங்க நாடோடிக் கூட்டத்தின் மன்னன் ஆனார்.
அழகுடைய பேரரசி
தொகுசெங்கிஸ் கான் பேரரசராக ஆன பிறகு போர்ட்டே பேரரசியானார். செங்கிஸ் கான் போர்களுக்குச் செல்லும்போது அவரது தம்பி தெமுகே மங்கோலியாவை ஆண்டார். போர்ட்டே அவருக்கு ஆலோசனைகள் வழங்கினார். இவரும் ஒரு சில பகுதிகளை ஆண்டார்.[10] கெர்லென் ஆற்றுப் பகுதிகள் இவருக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. இப்பகுதி முதலில் தாதர்கள் வசம் இருந்தது.[11]
போர்ட்டே வெள்ளை நிற ஆடையுடன், தலைமுடிகளில் தங்க நாணயங்களால் அலங்கரிக்கப்பட்டு, கையில் வெள்ளை நிற ஆட்டுக்குட்டியுடன் உள்ளவராகக் காட்டப்படுகிறார். மேலும் இவர் ஒரு வெள்ளைக் குதிரையில் வருபவராகவும் காட்டப்படுகிறார்.
குறிப்புகள்
தொகு- ↑ Onon, Urgunge (ed.). The secret history of the Mongols; The life and times of Chinggis Khan (Chapter 1) (PDF). section 65.
- ↑ Onon, Urgunge (ed.). The secret history of the Mongols; The life and times of Chinggis Khan (Chapter 1) (PDF). section 65-66.
- ↑ Onon, Urgunge (ed.). The secret history of the Mongols; The life and times of Chinggis Khan (Chapter 1) (PDF). section 61,66,68.
- ↑ Onon, Urgunge (ed.). The secret history of the Mongols; The life and times of Chinggis Khan (Chapter 2) (PDF). section 94.
- ↑ Onon, Urgunge (ed.). The secret history of the Mongols; The life and times of Chinggis Khan (Chapter 2) (PDF). section 96.
- ↑ Onon, Urgunge (ed.). The secret history of the Mongols; The life and times of Chinggis Khan (Chapter 2) (PDF). section 98-102.
- ↑ 7.0 7.1 Rachewiltz, Igor de (December 2015). "The Secret History of the Mongols: A Mongolian Epic Chronicle of the Thirteenth Century". Western Washington University.
- ↑ de Rachewiltz 2006, ப. 34.
- ↑ May 2016, ப. 135.
- ↑ Ratchnevsky, Paul (1991). Genghis Khan: His Life and Legacy. Blackwell Publishing. pp. 164–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-16785-4.
- ↑ Weatherford. The Secret History of the Mongol Queens. p. 28.
ஆதாரங்கள்
தொகு- René Grousset. Conqueror of the World: The Life of Chingis-khan (New York: The Viking Press, 1944) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-00343-3.
- Ratchnevsky, Paul. Genghis Khan: His Life and Legacy. (Blackwell Publishing 1991) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-16785-4.
- Man, John. Genghis Khan: Life, Death and Resurrection (London; New York : Bantam Press, 2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-593-05044-4.
- Onon, Urgunge, tr. and ed. and introduction. The Secret History of the Mongols: The Life and Times of Chinggis Khan. (Taylor & Francis e-Library, 2005) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-98876-0
- Weatherford, Jack. (2010). The Secret History of the Mongol Queens. Broadway Paperbacks, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-40716-0