மண்டலக் கல்வியியல் நிறுவனம்

மண்டலக் கல்வியியல் நிறுவனம் (Regional Institute Education) என்பது இந்தியாவில் புது தில்லியில் உள்ள தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் ஒரு கூட்டு அலகாகும். முன்னர் இது பிராந்தியக் கல்வியியல் கல்லூரி என அறியப்பட்டது. மண்டலக் கல்வியியல் நிறுவனங்கள் பல்வேறு மண்டலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைக்க இந்திய அரசாங்கத்தால் 1963 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டன. தரமான பள்ளிக் கல்வியை அடைய புதுமையான பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடைப்பயிற்சியின் மூலம் ஆசிரியர் கல்வித் திட்டங்கள், ஆராய்ச்சிகள், மேம்பாடு மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு மண்டலக் கல்வியியல் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.பள்ளிக் கல்வி மற்றும் ஆசிரியக் கல்வியின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களாக மண்டலக் கல்வியியல் நிறுவனங்கள் தங்களை நிறுவியுள்ளன.நாட்டின் கல்விச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான சவால்களைத் தீர்க்க இந்த நிறுவனங்கள் பொறுப்பேற்று முயற்சிக்கின்றன.

மண்டலக் கல்வியியல் நிறுவனம் - அமைவிடங்கள் தொகு

அமைவிடம் அடங்கியுள்ள இந்திய மாநிலங்கள்
அஜ்மீர் சண்டிகர், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், தேசியத் தலைநகரப் பகுதி, தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், உத்தரகண்ட்
போபால் சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தமன் மற்றும் தியூ, கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம்
புபனேஷ்வர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், பீகார், ஜார்கண்ட், ஒரிசா, மேற்கு வங்காளம்
மைசூர் ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு
சில்லாங் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா

அஜ்மீர், போபால், புபனேஷ்வர் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மண்டலக் கல்வியியல் நிறுவனங்கள்(RIEs), மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்களின் கல்வித் தேவைகளுக்கு ஏற்ப பணிமுன்பயிற்சி மற்றும் பணியிடைப்பயிற்சியை வழங்குகின்றன. வெவ்வேறு பள்ளிப் பாடங்களை கற்பிப்பதற்காக பள்ளி ஆசிரியர்களைத் தயார்படுத்துவதற்கு பணிமுன்பயிற்சி, தொழில்முறைப் பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவை பள்ளிகள் மற்றும் ஆசிரியர் கல்விக்கான மண்டல ஆதார நிறுவனங்களாகும், மேலும் அவை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், மத்திய நிதியுதவியளிக்கப்பட்ட திட்டங்களைக் கண்காணித்து, மதிப்பீடு செய்யவும் உதவுகின்றன. வடகிழக்கு மண்டலக் கல்வியியல் நிறுவனம் (NERIE), ஷில்லாங் வடகிழக்கு மண்டலங்களின் பணியிடைப்பயிற்சித் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. எனினும், வடகிழக்கு மண்டலத்திற்கான பணிமுன்பயிற்சி ஆசிரியத் தயாரிப்புத் திட்டங்கள் இன்னும் புவனேஸ்வர் மண்டலக் கல்வியியல் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அஜ்மீர், போபால், புபனேஷ்வர் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் ஆசிரியர்களைத் தயாரிப்பதற்காகவும், பள்ளி கல்வி மற்றும் ஆசிரியக் கல்வியில் புதுமையான நடைமுறைகளை அமுல்படுத்துவதற்காகவும் செயல்முறை பல்நோக்குப் பள்ளி (ஆங்கிலத்தில்: A Demonstration Multipurpose School (DMS)) ஒன்று செயல்பட்டு வருகிறது. இவை அந்தந்த மண்டலங்களில் மாதிரிப் பள்ளிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு பள்ளி முன்பருவக்கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை கற்றல் கற்பித்தல் வசதி உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள் தொகு

  • நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த B.Sc., B.Ed படிப்பு
  • நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த B.A., B.Ed படிப்பு
  • இரண்டு ஆண்டு முதுகலை கல்வியியல் படிப்பு
  • இரண்டு ஆண்டு இளங்கலை கல்வியியல் படிப்பு
  • எம்.பில் கல்விப் படிப்பு

பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் தேவைப்படும் படிப்புகளில் படிப்பதற்காக இந்த மண்டலக் கல்வியியல் நிறுவனங்கள் அருகிலுள்ள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலக் கல்வியியல் நிறுவனத்திற்கும் ஒரு நிர்வாகக் குழு உள்ளது. இதன் தலைவராகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளார். பல்கலைக்கழகங்கள் மண்டலக் கல்வியியல் நிறுவனக் கல்வியாளர்களுடன் இணைந்து கல்வி விவகாரங்களைக் கண்காணிக்கின்றது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் அனைத்து மண்டலக் கல்வியியல் நிறுவனங்களின் உச்ச அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இது நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் அமைந்துள்ள கல்வியியல் நிறுவனங்களின் நிர்வாக விவகாரங்களையும் கட்டுப்படுத்துகிறது.

வெளி இணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. http://www.riemysore.ac.in/index.php/about-us/rie-mysore பரணிடப்பட்டது 2016-11-13 at the வந்தவழி இயந்திரம்
  2. http://www.ncert.nic.in/departments/rie.html