மனிதகுலத்திற்கான உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை
மனிதகுலத்திற்கான உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை (ஆங்கில மொழி: World Scientists' Warning to Humanity) என்பது 1992-ல் என்றி டபிள்யூ. கெண்டல் என்பவரால் எழுதப்பட்டு ஏறத்தாழ 1,700 முன்னணி அறிவியல் அறிஞர்களால் கையெழுத்திடப்பட்ட ஓர் ஆவணமாகும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, 2017 நவம்பரில், 15,364 அறிவியல் அறிஞர்கள் வில்லியம் ஜே. ரிப்பிள் உள்ளிட்ட ஏழு இணை ஆசிரியர்களால் எழுதப்பட்ட "மனிதகுலத்திற்கான உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை: இரண்டாவது அறிவிப்பு" என்ற ஆவணத்தைக் கையொப்பமிட்டு அங்கீகரித்தனர். இந்த ஆவணம் மனித மக்கட்தொகை திட்டமிடல்; புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு, இறைச்சி தயாரித்தல் மற்றும் நுகர்வு, பிற வளங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட தனிநபர் நுகர்வுகளை மிக வெகுவாகக் குறைக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.[a] இந்த இரண்டாவது அறிவிப்பானது உலகில் இதுவரை வெளியிடப்பட்ட வேறு எந்த ஆய்விதழ்க் கட்டுரையை விடவும் அதிகமான அளவில் அறிவியல் மற்றும் இதர அறிஞர்களின் அங்கீகரிப்பைப் பெற்றதாகத் திகழ்கிறது.[1]
முதல் வெளியீடு
தொகு1992-ன் பிற்பகுதியில், "அக்கறைகொண்ட அறிவியல் அறிஞர்களின் கூட்டமைப்பு" (Union of Concerned Scientists [UCS]) என்ற அமைப்பின் இயக்குநர்கள் குழுவின் முன்னாள் தலைவரான மறைந்த ஹென்றி டபிள்யூ. கெண்டல், "மனிதகுலத்திற்கான உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை" என்ற தலைப்பில் முதல் எச்சரிக்கை ஒன்றை எழுதினார். "மனிதகுலமும் இயற்கை உலகமும் ஒரு மாபெரும் மோதல் போக்கில் உள்ளன" என்பதாகத் துவங்கிய அந்த எச்சரிக்கை ஆவணமானது அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பாலோரால் கையெழுத்திடப்பட்டது. இதில் உலகின் முன்னணி அறிவியல் அறிஞர்கள் சுமார் 1,700 பேர்கள் அடங்குவர்.[2]
இதற்கு முன்னர் அதே ஆண்டு இதுபோலவே பல அறிவியல் அறிஞர்களாலும் நோபல் பரிசு பெற்றவர்களாலும் கையெழுத்திடப்பட்டு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்க்கும் வண்ணம் அவற்றை "பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைத் தடுக்க முயலும் அறிவியல் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு எதிரான ஒரு பகுத்தறிவற்ற சித்தாந்தம்" என்று விமர்சிக்கும் வகையில் தொடங்கும் ஹைடெல்பெர்க் முறையீடு என்ற தலைப்பில் இயற்றப்பட்ட ஆவணத்திற்கு எதிராக இந்த எச்சரிக்கை ஆவணமானது முன்வைக்கப்பட்டது. அதன் பின்னரும் அந்த ஹைடெல்பெர்க் ஆவணமானது காலநிலை மாற்றம் தொடர்பான கோட்பாடுகளை மறுப்பவர்களாலும் எதிர்ப்பவர்களாலும் பலமுறை மேற்கோள் காட்டப்பட்டு வந்தது.[2][3][4]
இருப்பினும், ஹைடெல்பெர்க் ஆவணமானது குறிப்பிட்ட எந்த பரிந்துரைகளையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அது சுற்றுச்சூழல் அறிவியல் பற்றிய குற்றச்சாட்டுமல்ல. "வளங்கள் கணக்கெடுக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் இருப்பது பிரபஞ்சத்தின் அறிவியல் சூழலியலுக்கு அவசியம் என்ற சிந்தனையை நாங்கள் முழுமையாக ஏற்கிறோம். ஆனால் இவையனைத்தும் அறிவியல் அளவுகோல்களின் அடிப்படையில் செய்யப்பட வேண்டுமேயன்றி பகுத்தறிவற்ற யூகங்களின் அடிப்படையில் அல்ல என்றே நாங்கள் கோருகிறோம்" என்று அந்த ஆவணத்தில் கோரப்படுகிறது.[2]
இதற்கு நேர்மாறாக, UCS தலைமையிலான மனு குறிப்பிடத்தக்க பரிந்துரைகளைக் கொண்டுள்ளது: "உதாரணமாக, பைங்குடில் வளிமங்களைக் குறைக்க வேண்டியும் நீர், காற்று ஆகியவற்றின் மாசுக்களைக் குறைக்கும் நோக்கிலும் புதைபடிவ எரிபொருட்களை விடுத்து தீங்கற்ற, வற்றாத ஆற்றல் மூலங்களுக்குச் செல்ல வேண்டும். ... நாம் நம் மக்கட்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்" என்பதாக அது கூறுகிறது.[5]
இரண்டாம் அறிவிப்பு
தொகுநவம்பர் 2017-ல், 15,364 அறிவியல் அறிஞர்கள் ஓரிகான் மாநில பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பேராசிரியர் வில்லியம் ஜே. ரிப்பிள் மேலும் ஏழு இணையறிஞர்களோடு சேர்ந்து இயற்றிய மனிதகுலத்திற்கான உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை: இரண்டாவது அறிவிப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டனர். இந்த எச்சரிக்கை ஆவணம் ஏனைய பரிந்துரைகளோடு முதன்மையாக மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல், புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துதல், இறைச்சித் தயாரித்தல் மற்றும் நுகர்தல், பிற வளங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட தனிநபர் நுகர்வுகளை மிக வெகுவாகக் குறைக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.[a] இந்த இரண்டாம் அறிவிப்பு 1992-ல் வெளியிடப்பட்ட முதலாம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பிரச்சனைகளின் 9 வகையான காலமாற்ற வரைபடங்களை உள்ளடக்கியது. இவ்வரைபடங்கள் 1992-ல் குறிப்பிட்டது முதல் அப்போது வரையிலான அப்பிரச்சனைகளின் ஏற்றங்களைச் சுட்டின. இவற்றில் பல பிரச்சனைகள் தங்களது அதிகரிப்பு வேகத்தில் மாற்றமேதுமின்றி இருந்ததையும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தவறான திசையில் வேகமெடுப்பதையும் இவற்றால் காணமுடிந்தது. மனிதகுலத்தின் நிலைத்தன்மைக்கு தேவையான 13 குறிப்பிட்ட பரிந்துரைகளை இந்த ஆவணம் உள்ளடக்கியிருந்தது.
இந்த இரண்டாவது அறிவிப்பினை உலகில் இதுவரை வெளியிடப்பட்ட வேறு எந்த ஆய்விதழ்க் கட்டுரையையும் விட அதிகமான அளவில் அறிவியல் அறிஞர்களும் துறை நிபுணர்களும் அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1] இந்த முழு எச்சரிக்கை ஆவணமும் பயோசயின்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. இன்றும் இந்த ஆவணம் "சயின்டிஸ்டு வார்னிங்" ("Scientists Warning") எனப்படும் அறிவியலாளர்கள் எச்சரிக்கை இணையதளத்தில் தொடர் அங்கீகரிப்புக்கு உட்பட்டுத் திகழ்கிறது.
காலநிலை மாற்றம் குறித்த 2019 எச்சரிக்கையும் 2021 புதுப்பிப்பும்
தொகுநவம்பர் 2019-ல், 153 நாடுகளைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்களைக் கொண்ட குழு ஒன்று காலநிலை மாற்றத்தை "அவசரநிலை" என்று அறிவித்து, இதற்கு எதிரான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாவிடில் இது "சொல்லொண்ணா மனிதத் துன்பங்களுக்கு" வழிவகுக்கும் என்று எச்சரித்தது:[6][7][8]
“ | நமது பூமி ஒரு காலநிலை அவசரநிலையை எதிர்கொண்டுள்ளது என்பதை நாங்கள் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் அறிவிக்கிறோம். ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமானால், நாம் நம் வாழும் முறையினை மாற்ற வேண்டும். [இது] நமது உலகளாவிய சமூகத்தின் செயல்பாடுகளிலும் இயற்கைச் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் அது தொடர்பு கொள்ளும் விதங்களிலும் மிகப்பெரிய மாற்றங்களை உள்ளடக்கியது. | ” |
பொருளாதார வளர்ச்சியும் மக்கள்தொகை வளர்ச்சியும் தான் "புதைபடிவ எரிபொருள் எரிப்பிலிருந்து ஏற்படும் கரியமில வாயு உமிழ்வு அதிகரிப்பதற்கான இயக்கிகளில் மிக முக்கியமானவை" என்றும் "பொருளாதார மற்றும் மக்கள்தொகை கொள்கைகள் தொடர்பாக நம்மிடையே துணிச்சலானதும் கடுமையானதுமான மாற்றங்கள் தேவை" என்று அந்த அவசரகால அறிவிப்பு வலியுறுத்தியது.[6]
2019 காலநிலை அவசர அறிவிப்புக்கான 2021 புதுப்பிப்பு, பைங்குடில் வளிமங்கள் மற்றும் வெப்பநிலை, உயரும் கடல் மட்டங்கள், ஆற்றல் பயன்பாடு, உறைபனி, கடல் வெப்ப உள்ளடக்கம், அமேசான் மழைக்காடுகளின் இழப்பு விகிதம் உள்ளிட்ட புவியின் 31 முக்கிய அறிகுறிகளிலும் அவற்றில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களிலும் கவனம் செலுத்துகிறது. இவற்றில் 18 அறிகுறிகள் ஆபத்தான நிலையை எட்டியுள்ளன. போக்குவரத்து மற்றும் நுகர்வு அளவுகளைக் உலகளவில் குறைத்த கோவிட்-19 பெருந்தொற்று முடக்கங்களால் கூட இந்தப் போக்குகளை பெரிதாகத் தணிக்கவோ மாற்றியமைக்கவோ செய்ய இயலவில்லை. மனித நடத்தையில் மிகப்பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே இவற்றைத் தணிக்க முடியும் என்று இவ்வறிவிப்பை இயற்றிய அறிஞர்கள் கூறுகின்றனர். இவையாவும் உலகளாவிய வெப்பமயமாதல் என்பது ஒரு தனிப்பட்ட அவசரநிலை என்று கருதும் போக்கினைக் கைவிட்டு உண்மையில் அது மோசமடைந்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சனையின் ஒரு அம்சம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக இவ்வறிஞர்கள் சுட்டுகின்றனர். இது புவியையும் அதன் வளங்களையும் மனிதன் அபரிமிதமாகச் சுரண்டுவதே இப்பிரச்சனைகளுக்கு ஆணிவேர் என்ற உண்மையை உரைப்பதோடல்லாமல், வெறும் மேலோட்டமாக இதை அணுகாமல் இந்த ஆணிவேரைக் களைந்து அதற்கேற்ப நம் சமூக அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் வரவேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய ஆறு பகுதிகளை இந்த அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது:[9]
- ஆற்றல் — புதைபடிவ எரிபொருட்களை நீக்கிப் புதுப்பிக்கத்த ஆற்றல்களுக்கு மாறுதல்;
- குறுகிய கால காற்று மாசுபடுத்திகள் — கறுப்பு கரித் துகள்கள் (புகைக்கரி), மீத்தேன், ஹைட்ரோஃப்ளூரோகார்பன்கள் ஆகியவற்றைக் குறைத்தல்;
- இயற்கை — கரிமத்தைச் சேமித்துக் குவிப்பதற்கும் பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுப்பதற்கும் ஏதுவாக பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்து நிரந்தரமாகப் பாதுகாத்தல்;
- உணவு — பெரிதும் தாவர உணவுமுறைகளுக்கு மாறுதல், உணவுக் கழிவுகளை குறைத்தல், பயிர் சாகுபடி முறைகளை மேம்படுத்துதல்;
- பொருளாதாரம் — வரையறையற்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, செல்வந்தர்களின் அதிகப்படியான நுகர்வு ஆகியவற்றிலிருந்து விலகி சூழலியல் பொருளாதாரத்திற்கும் ஒரு வட்டப் பொருளாதாரத்திற்கும் நகர்தல்; இதில் பொருட்களின் விலைகளானது பொருட்கள் மற்றும் சேவைகளின் முழு சுற்றுச்சூழல் செலவுகளையும் பிரதிபலிப்பதாக இருக்கும்;
- மனித மக்கட்தொகை — தன்னார்வ குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம் மக்கட்தொகையை நிலைப்படுத்தி படிப்படியாக அதைக் குறைத்தல், அனைத்து சிறுமிகளுக்கும் இளம் பெண்களுக்கும் கல்வியையும் உரிமைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் (இதன் மூலம் கருவுறும் விகிதங்கள் வெகுவாகக் குறைந்து விடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது).
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள் தரவுகள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 Ripple 2017, ப. 1026–1028: "கென்டல் உள்ளிட்ட அறிவியலாளர்களது முன்வைப்பின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவில் அவர்கள் விடுத்த எச்சரிக்கையை நாங்கள் நினைவு கூர்ந்து அதற்கான மனித சமூகத்தின் பதிலைத் தற்போது கிடைக்கக்கூடிய நேரத்தொடர் தரவுகளை ஆராய்வதன் மூலம் மதிப்பிடுகிறோம். 1992 முதல் பொதுவாக இந்த முன்னறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் சவால்களைத் தீர்க்கும் முயற்சியில், அடுக்கு மண்டல ஓசோன் படலத்தை உறுதிப்படுத்துவதைத் தவிர, மற்ற அனைத்திலும் மனிதகுலம் போதுமான முன்னேற்றம் அடையத் தவறிவிட்டது. சொல்லப்போனால் அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தான வகையில் மிகவும் மோசமாகி வருகின்றன (படம் 1, கோப்பு S1). புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் விளையும் பைங்குடில் வளிம (GHG) வெளிப்பாடுகள் அதிகரித்து வருவதால் ஏற்படும் காலநிலை மாற்றப் பேரழிவு (Hansen et al. 2013), காடழிப்பு (Keenan et al. 2015), மற்றும் விவசாய உற்பத்தி, அதிலும் குறிப்பாக இறைச்சி நுகர்வுக்காக செய்யப்படும் விவசாயம் (Ripple et al. 2014) ஆகியவற்றின் தற்போதைய வளர்ச்சிப் பாதை குறிப்பாக கவலையளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒரு மாவெரும் பேரழிவு நிகழ்வை கட்டவிழ்த்துவிட்டுள்ளோம். ஹோலோசீன் பேரழிவு எனப்படும் இது தோராயமாகக் கடந்த 540 மில்லியன் ஆண்டுகளில் ஆறாவதும் மனிதனால் ஏற்பட்டுள்ள ஒரே பேரழிவுமாகும். இதன் மூலம் தற்போதைய எண்ணிலடங்கா வாழுயிர்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அழிக்கப்பட்டுவிடும் அல்லது குறைந்தபட்சம் அருகிவிடும். இந்த ஆபத்தான போக்குகள் (படம் 1) மூலம் விளக்கப்பட்டுள்ளது போல், மனிதகுலத்திற்கு இப்போது இரண்டாவது எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படுகிறது. புவியியல் மற்றும் மக்கட்தொகை ரீதியில் நமது தீவிரமான சீரற்ற பொருள் நுகர்வும் தொடர்ச்சியான, விரைவான மக்கள்தொகை வளர்ச்சியுமே பல சுற்றுச்சூழல் மற்றும் சமூக அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் முதன்மையான இயக்கிகளாக இருப்பதை நாம் உணராமல் இருப்பதன் வாயிலாக நமது எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்துகிறோம் (Crist et al. 2017). மக்கள்தொகை வளர்ச்சியை போதுமான அளவில் கட்டுப்படுத்தத் தவறுதல், வளர்ச்சியில் வேரூன்றிய பொருளாதாரத்தின் பங்கை மறுபரிசீலனை செய்யத் தவறுதல், பைங்குடில் வளிம வெளிப்பாட்டைக் குறைக்காதிருத்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்காதிருத்தல், வாழ்விடத்தைப் பாதுகாக்காதிருத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்காதிருத்தல், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறுதல், விலங்குயிரிகள் அருகிவருவதை தடுக்காதிருத்தல், ஆக்கிரமிக்க வல்ல மாற்றிட இனங்களைக் கட்டுப்படுத்தத் தவறுதல் ஆகியவற்றால் மனிதகுலம் தனது பாதிப்படைந்த உயிர்க்கோளத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருக்கிறது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அழுத்தத்திற்கு மட்டுமே அடிபணிவதால், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் சாதாரண குடிமக்கள் தற்போதைய சந்ததியினருக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பிற உயிர்களுக்காகவும் தார்மீகப் பொறுப்புடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் அரசாங்கங்களை வலியுறுத்த வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட அடிமட்ட முயற்சிகளின் அடித்தளத்துடன் எந்தவிதமான பிடிவாதமான எதிர்ப்பையும் சமாளிக்க முடியும் என்பதை நாம் உணரவேண்டும். அரசியல் தலைவர்கள் சரியானதைச் செய்ய வேண்டி நிர்பந்திக்கப்படவேண்டும். நமது சொந்த இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது (குறைந்த பட்சம் கட்டுக்குள்ளாவது வைத்திருக்கும் படியாக) மற்றும் புதைபடிவ எரிபொருள்கள், இறைச்சி நுகர்வு, பிற வளங்களின் தனிநபர் நுகர்வு ஆகியவற்றை வெகுவாகக் குறைப்பது உள்ளிட்ட நமது தனிப்பட்ட நடத்தைகளை மறுபரிசீலனை செய்து மாற்றுவதற்கான நேரமிது."
தரவுகள்
தொகு- ↑ இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 Suzuki 2018.
- ↑ இங்கு மேலே தாவவும்: 2.0 2.1 2.2 Kendall 1992.
- ↑ Powell, James Lawrence (2011). The Inquisition of Climate Science. Columbia University Press. p. 56.
- ↑ Singer, Siegfried Fred (2000). Climate policy--from Rio to Kyoto. Hoover Institution on War, Revolution and Peace. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780817943738. பார்க்கப்பட்ட நாள் 12 November 2024.
- ↑ கெண்டல் 1992.
- ↑ இங்கு மேலே தாவவும்: 6.0 6.1 Ripple 2019.
- ↑ Carrington 2019.
- ↑ Weston 2019.
- ↑ Ripple 2021.
தரவு நூல்கள்
தொகு- Carrington, Damian (November 5, 2019), "Climate crisis: 11,000 scientists warn of 'untold suffering'", தி கார்டியன், பார்க்கப்பட்ட நாள் November 8, 2019
- Kendall, Henry W. (18 November 1992), World Scientists Warning To Humanity (PDF), ucsusa.org, பார்க்கப்பட்ட நாள் 2011-08-26
- Ripple, William J.; et al. (13 November 2017), "World Scientists' Warning to Humanity: A Second Notice" (PDF), BioScience, 67 (12): 1026–1028, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/biosci/bix125, archived from the original (PDF) on 15 டிசம்பர் 2019, பார்க்கப்பட்ட நாள் 17 மே 2022
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - Ripple, William J.; et al. (November 5, 2019), "World Scientists' Warning of a Climate Emergency", BioScience, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/biosci/biz088, hdl:1808/30278, பார்க்கப்பட்ட நாள் November 8, 2019
- Ripple, William J.; et al. (July 28, 2021), "World Scientists' Warning of a Climate Emergency 2021", BioScience, 71 (9): 894–898, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/biosci/biab079, hdl:1808/30278, பார்க்கப்பட்ட நாள் July 29, 2021
- Suzuki, David (January 6, 2018), "15,000 Scientists Issue Urgent Warning: Humanity Is Failing to Safeguard the Planet", AlterNet, பார்க்கப்பட்ட நாள் January 15, 2018
- Weston, Phoebe (2019-11-05), "11,000 scientists declare global climate emergency and warn of 'untold human suffering'", The Independent (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-11-07
வெளி இணைப்புகள்
தொகு- மனிதகுலத்திற்கான உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை (2017)
- மனிதகுலத்திற்கான உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை (1992)
- Our Best Point the Way பரணிடப்பட்டது 2008-02-19 at the வந்தவழி இயந்திரம் (2001)
- ScientistsWarning.org (2018 முதல் இன்று வரை)
- ScientistsWarning.TV (2014 முதல் இன்று வரை)
- புகழ்பெற்ற "உலக அறிவியலாளர்களின் எச்சரிக்கை" ஆவணத்தின் புதிய உரையொன்று உலகளாவிய சமமற்ற தன்மையை வெளிக்கொண்டு வருகிறது. Phys.org. ஏப்ரல் 8, 2019.