மலாயா புதுக்கிராமங்கள்
புதுக்கிராமங்கள் அல்லது மலாயா புதுக்கிராமங்கள் (மலாய்: Kampung Baru; ஆங்கிலம்: New Villages அல்லது Chinese New Villages; சீனம்: 华人新村) என்பது பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றத் திட்டமாகும். இவற்றைத் தடுப்பு முகாம்கள் (Internment Camps) என்று அழைப்பதும் உண்டு.
1950-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் திட்டத்தின் (Briggs Plan) ஒரு பகுதியாக இந்த முகாம்கள் உருவாக்கப்பட்டன. கிராமப்புறக் குடிமக்களுக்குள் மறைந்து இருந்த மலாயா தேசிய விடுதலை படையினரின் (Malayan National Liberation Army) ஆதரவாளர்களைத் தனிமைப்படுத்த இந்தப் புதுக்கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பெரும்பாலான புதுக்கிராமங்கள், முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களால் சூழப்பட்டு இருந்தன. தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிச் செல்பவர்களையும்; ஊரடங்குச் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் வெளியேற முயற்சிக்கும் எவரையும் சுட்டுக் கொல்லவும் கட்டளையிடப்பட்டது.[1]
பிரித்தானியர்கள் மலாயாவை விட்டு வெளியேறிய பின்னர், பல புதுக்கிராமங்கள்; சாதாரண குடியிருப்பு நகரங்களாகவும் மற்றும் சில புதுக்கிராமங்கள் சாதாரண கிராமங்களாகவும் மாற்றம் கண்டன.
வரலாறு
தொகுமலாயா புதுக்கிராமங்கள் அமைக்கப் பட்டதின் அசல் நோக்கம், சீன இனத்தைச் சேர்ந்த அனுதாபிகளை (Sympathizers); மலாயா தேசிய விடுதலை படையின் கொரில்லாக்களுடன் தொடர்பு கொள்ளாமல் பிரித்து வைப்பதாகும். அதற்காகவே 1950-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் திட்டம் உருவாக்கப்பட்டது.[2]
அத்துடன் மலாயா தேசிய விடுதலை படையினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருள் உதவிகளைத் துண்டிப்பது; மலாயாக் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிப்பது; இவையே பிரிக்ஸ் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.[3]
பிரிக்ஸ் திட்டம்
தொகுபிரிக்ஸ் திட்டத்தை உருவாக்கியவர் எரோல்டு பிரிக்ஸ் (General Sir Harold Briggs). இவர் அப்போது மலாயா பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார். புறநகர்களிலும் கிராமங்களிலும் வாழும் பொது மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உதவி செய்கின்றனர் என்பதை பிரித்தானியர்கள் அறியத் தொடங்கினர். [4].
அந்த வகையில் சிதறிக் கிடக்கும் பொதுமக்களை ஒரு புது குடியிருப்பில் குடியேற்றம் செய்தால் கம்யூனிஸ்டுகளுக்கு உதவி கிடைக்காது. அதன் மூலம் கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் தோற்கடிக்கப் படும் என்று பிரிட்டிஷார் கருதினர்.
தஞ்சோங் மாலிம் புதுக் கிராமம்
தொகுபிரிக்ஸ் திட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட இந்த புதிய கிராமங்கள் முள்வேலிகள் சூழப்பட்டு இருந்தன. மற்றும் 24 மணி நேரம் காவலர்கள் கண்காணிப்பில் இருந்தன. சில சமயங்களில் 22 மணி நேர ஊரடங்குச் சட்டமும் போடப்பட்டது. இப்படி ஒரு நிகழ்ச்சி தஞ்சோங் மாலிம் புதுக் கிராமத்தில் (Tanjong Malim New Village) நடந்தது.[5]
பிரிக்ஸ் திட்டத்தின் கீழ் மலாயா முழுமைக்கும் 450 புதுக்கிராமங்கள் உருவாக்கப் பட்டன. அந்தப் புதுக்கிராமங்களில், பொதுமக்கள் மறுக் குடியேற்றம் செய்யப் பட்டனர்.
ஒராங் அஸ்லி மக்கள்
தொகுஒராங் அஸ்லி (Orang Asli) மக்கள் கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பதாக பிரித்தானியர்கள் நம்பினார்கள். அதனால் ஒராங் அஸ்லி பழங்குடி மக்களும் கட்டாய இடமாற்றத்திற்கு உள்ளாயினர்.[6]
இருப்பினும், புதிய இடமாற்றத்தின் போது ஒராங் அஸ்லி மக்கள் பலர் நோய்களால் இறக்கத் தொடங்கினர். அதனால் அவர்களுக்கான இடப் பரிமாற்றத் திட்டம் நிறுத்தப்பட்டது.[7]
மலாயா கம்யூனிஸ்டு கட்சி
தொகு"புதிய கிராமங்களில்" மக்களைத் தனிமைப் படுத்தியதன் மூலம், மலாயா தேசிய விடுதலை படையினரின் ஆட்சேர்ப்பு செயல்பாட்டைக் கட்டுப்படுத்த முடிந்தது; உணவுப் பொருள், தகவல் பரிமாற்றம் போன்ற முக்கியமான நடவடிக்கைகளைத் தடுக்க முடிந்தது.
இந்தப் புதிய தடுப்பு முகாம்களைச் சிப்பாய்கள், காவல் துறையினர் பாதுகாத்தனர். மேலும் மக்கள் தப்பிச் செல்வதும் ஓரளவிற்கு கட்டுப் படுத்தப்பட்டன. மக்கள் தானாக முன்வந்து கொரில்லாக்களுக்கு உதவுவதும் தடுக்கப்பட்டன.
கிராமப்புற விவசாய நிலங்கள்
தொகுமற்றும் கம்யூனிஸ்டு கெரில்லாக்கள் (Communists Guerrillas) ஊடுருவுதல்; மக்களை வற்புறுத்துதல் அல்லது முரட்டுத்தனமாக உதவிகளைப் பெறுதல் போன்றவை முற்றிலுமாகத் தடுக்கப்பட்டன.
அதன் பின்னர் பிரித்தானியர்கள் ஒரு பட்டினி திட்டத்தையும் (Starvation Campaign) தொடங்கினர். அந்த வகையில் முகாம்களுக்குள் உணவுப் பொருட்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டது. அளவு முரையில் உணவுகள் வழங்கப் பட்டன. இறுதியாகக் கிராமப்புற விவசாய நிலங்கள் எரிக்கப்பட்டன.[8]
இந்தத் திட்டத்தின் கீழ், மலாயாவின் மக்கள் தொகையில் 10% விழுக்காட்டினர்; வலுக்கட்டாயமாக அவர்களின் குடியிருப்பு நிலங்களில் இருந்து, புதுக்கிராமங்கள் என்று அழைக்கப்படும் கட்டுப்பாட்டு முகாம்களுக்கு மாற்றப் பட்டனர்.
கம்யூனிஸ்டு அனுதாபிகள்
தொகுபெரும்பாலான இந்த மறுக் குடியிருப்புகளில் சீன வம்சாவளியினர்தான் மிகுதியாகக் குடி அமர்த்தப்பட்டனர். 470,509 கிராமப்புற மக்கள் மறுக் குடியேற்றம் செய்யப் பட்டனர்.[9]
1949-இல், மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது; கம்யூனிஸ்டு அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்பட்ட 10,000மலேசிய சீனர்கள், சீன மக்கள் குடியரசுக்கு (People's Republic of China) நாடு கடத்தப் பட்டனர்.[10]
பிரபலமான புதுக்கிராமங்கள்
தொகு- கூட்டரசு பிரதேசம் - ஜிஞ்சாங்
- ஜொகூர் - கம்போங் தெங்கா
- சிலாங்கூர் - ஸ்ரீ கெம்பாங்கான்
- சிலாங்கூர் - கோம்பாக்
- சிலாங்கூர் - அம்பாங்
- ஜொகூர் - லாபிஸ்
- சிலாங்கூர் - செஞ்சாரோம்
- பினாங்கு - மாச்சாங் பூபோக்
- பேராக் புந்தோங்
- பேராக் அவுலோங்
- பேராக் பொக்கோக் அசாம்
- மலாக்கா - மாச்சாப் பாரு
மேற்கோள்கள்
தொகு- ↑ Peng, Chin; Ward, Ian; Miralor, Norma (2003). Alias Chin Peng: My Side of History. Singapore: Media Masters. p. 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-04-8693-6.
- ↑ Hale, Christopher (2013). Massacre in Malaya: Exposing Britain's My Lai. Brimscombe Port: The History Press. p. 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7524-8701-4.
- ↑ Hale, Christopher (2013). Massacre in Malaya: Exposing Britain's My Lai. Brimscombe Port: The History Press. p. 326. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7524-8701-4.
- ↑ During the Emergency, Lieutenant-General Sir Harold Briggs, as the Director of Operations, conceived an ambitious resettlement programme, known as 'The Briggs Plan'.
- ↑ "Malaya (Anti-Terrorist Measures)". hansard.parliament.uk. Hansard. 2 April 1952. பார்க்கப்பட்ட நாள் 22 January 2020.
- ↑ D. Leary, John (1995). Violence and the Dream People: The Orang Asli in the Emergency 1948–1960. Athens: Ohio University Press. pp. 42–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89680-186-1.
- ↑ Newsinger, John (2015). British Counterinsurgency. Basingstoke: Palgrave Macmillan. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-29824-8.
- ↑ Burleigh, Michael (2013). Small Wars Faraway Places: Global Insurrection and the Making of the Modern World 1945-1965. New York: Viking - Penguin Group. pp. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-02545-9.
- ↑ Newsinger, John (2015). British Counterinsurgency. Basingstoke: Palgrave Macmillan. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-29824-8.
- ↑ Newsinger, John (2013). The Blood Never Dried: A People's History of the British Empire. London: Bookmarks Publications. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-909026-29-2.