மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்

மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த கம்யூனிச இராணுவம்

மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் (ஆங்கிலம்: Malayan Peoples' Anti-Japanese Army (MPAJA); மலாய்: Tentera Anti-Jepun Penduduk Tanah Melayu; சீனம்: 馬來亞人民抗日軍) என்பது 1941-ஆம் ஆண்டு தொடங்கி 1945-ஆம் ஆண்டு வரை மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பை (Japanese occupation of Malaya) எதிர்த்த பொதுவுடைமை இராணுவம் (Communist Guerrilla Army) ஆகும். சப்பானியர்கள் மலாயாவில் ஆதிக்கம் செலுத்திய நான்கு ஆண்டுகளுக்கும்; இந்த இராணுவம் மலாயாவில் இயங்கி வந்தது.

மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்
Malayan Peoples' Anti-Japanese Army
Tentera Anti-Jepun Penduduk Tanah Melayu
馬來亞人民抗日軍
தலைவர்கள்லாய் தெக், சின் பெங்
செயல்பாட்டுக் காலம்திசம்பர் 1941 (1941-12) – திசம்பர் 1945 (1945-12)
பின் வந்தவைமலாயா தேசிய விடுதலை இராணுவம்
செயல்பாட்டுப் பகுதி(கள்)சப்பானிய ஆட்சியில் மலாயா & சிங்கப்பூர்
சித்தாந்தம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
அளவு~6,500 - 10,000 (கணிப்பு)
கூட்டாளிகள் ஐக்கிய இராச்சியம் (சப்பானிய ஆக்கிரமிப்பு)
எதிரிகள்
யுத்தங்கள் மற்றும் போர்கள்இரண்டாம் உலகப்போர்

இந்த இராணுவம் சீனர் இனத்தைச் சேர்ந்த போராளிகளை அதிகமாகக் கொண்டு இருந்தது. அத்துடன் மலாயா வரலாற்றில் மிகப்பெரிய சப்பானிய எதிர்ப்புக் குழுவாகவும் (Anti-Japanese Resistance Group in Malaya) அறியப்படுகிறது.

மலாயா மீது சப்பானிய படையெடுப்பின் போது அந்தச் சப்பானிய ஆக்கிரமைப்பை எதிர்ப்பதற்காக, பல்வேறு சிறிய குழுக்களும், மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவமும் (MPAJA) ஒன்றிணைந்தன. இந்தக் கூட்டு முயற்சி அப்போதைய பிரித்தானிய மலாயா காலனித்துவ அரசாங்கத்தின் (British Colonial Government) ஒருங்கிணைந்த முயற்சியாகும். அந்த வகையில்தான் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவமும் (MPAJA) உருவானது.

பொது

தொகு
 
1942-ஆம் ஆண்டு மலாயாவில் வெளியிடப்பட்ட சப்பானிய பத்து டாலர் பணத்தாள்.

மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவமும் (MPAJA); மற்றும் மலாயா பொதுவுடைமை கட்சியும் (Malayan Communist Party); அதிகாரப்பூர்வமாக வேறுபட்ட அமைப்புகளாக இருந்தன. இருப்பினும், மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் என்பது மலாயா பொதுவுடைமை கட்சியின் நடைமுறை ஆயுதப் பிரிவாகக் கருதப்பட்டது. ஏனெனில் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் தலைமைத்துவம் பெரும்பாலும் சீனர்களால் இயக்கப்பட்டது.[2]

மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் வீரர்களில் பலர் பின்னர் மலாயா தேசிய விடுதலை இராணுவத்தை (Malayan National Liberation Army) (MNLA) உருவாக்கினார்கள். அதன் பின்னர் மலாயா அவசரகாலத்தின் (1948-1960) போது மலாயாவின் பிரித்தானிய ஆட்சியையும் எதிர்த்தார்கள்.[2]

பின்னணி

தொகு

சப்பானியர்களுக்கு எதிரான உணர்வுகள்

தொகு
 
1945-ஆம் ஆண்டில் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் 4-ஆவது படைப்பிரிவு ஜொகூர் பாருவில் கலைக்கப்படும் விழாவின் போது

மலாயாவில் வாழ்ந்த சீனர் சமூகத்தினரிடையே சப்பானிய எதிர்ப்பு உணர்வுகள் முதன்முதலில் 1931-ஆம் ஆண்டில் மஞ்சூரியாவின் மீதான சப்பானிய படையெடுப்பில் (Japanese invasion of Manchuria) தொடங்கியது.

1937-ஆம் ஆண்டில் முழு அளவிலான இரண்டாம் சீன-சப்பானியப் போர் (Second Sino-Japanese War) அறிவிக்கப்பட்டபோது சப்பானிய எதிர்ப்பு உணர்வுகள் மீண்டும் புதிய உச்சத்தை அடைந்தன.

சீனர்களின் ஆதரவு

தொகு

மலாயா பொதுவுடைமை கட்சியின் வலுவான சப்பானிய எதிர்ப்பு உணர்வுகள்; மற்றும் அந்தக் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகள் (Anti-Imperialist Sentiments); ஆகிய இருவகை உணர்வுகளும் கலந்து, மலாயாவில் உள்ள சீனர் சமூகத்தின் பெரும் ஆதரவைப் பெறுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தன.

அவற்றின் பின்னணியில் மலாயாவில் வாழ்ந்த இளம் சீனர்கள் பலர் அப்போதைய மலாயா பொதுவுடைமை கட்சியின் கொள்கைக்குள் ஈர்க்கப் பட்டனர். மேலும் காரணங்கள் உள்ளன. சப்பானையும் அதன் ஏகாதிபத்திய விரிவாக்கத்தையும் (Imperialist Expansionism) எதிர்க்கும் ஒரு பொதுவுடைமைத் தன்மையை மலாயா பொதுவுடைமை கட்சி பெற்று இருப்பதாக அந்த இளைஞர்கள் நம்பினர்.

ஐக்கிய முன்னணி உருவாக்கம்

தொகு
 
1945-ஆம் ஆண்டு மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் 4-ஆவது படைப்பிரிவை பிரித்தானிய தளபதி மெக் குலி (British Brigadier J J McCully) பார்வையிடுகிறார்.

சப்பானியர்களுக்கு எதிரான நிலையில், மலாயா பொதுவுடைமை கட்சி மலாயாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உள்ளூர்ப் போராட்டத்தில் (Anti-Japanese) ஈடுபட்டது. அறிந்த தகவல்.

இருப்பினும், 1941-இல் ஏற்பட்ட அரசியல் திடீர்த் திருப்பங்கள்; எதிர்பாரா விளைவுகள் போன்றவை; மலாயா பொதுவுடைமை கட்சியின் பிரித்தானியர்களுக்கு எதிரான பகைமையைத் தற்காலிகமாக நிறுத்தத் தூண்டியது. அதற்குப் பதிலாக பிரித்தானியர்களின் ஒத்துழைப்பை நாடிச் செல்ல வழிவகுத்தது.

இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்

தொகு

சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையிலான போரினால், சோவியத் ரஷ்யா; அச்சு நாடுகளுக்கு (Axis Powers) எதிராக இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுடன் (Allies of World War II) கூட்டுச் சேர வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. அச்சு நாடுகளில் சப்பானிய நாடும் ஒன்றாகும்.[3]

அத்துடன், சீனாவின் பிரதான நிலப் பகுதியில், குவோமின்டாங் (Kuomintang) மற்றும் சீனப் பொதுவுடமைக் கட்சி (Chinese Communist Party) ஆகிய இரு எதிர்முனைகளும் ஒன்றிணைந்தன. அதன் விளைவாக, சீனாவின் மீதான சப்பானிய படையெடுப்பிற்கு எதிராக ஓர் ஐக்கிய முன்னணியையும் உருவாக்கிக் கொண்டன.[3]

பிரித்தானிய அதிகாரிகளின் நிராகரிப்பு

தொகு

சோவியத் ரஷ்யாவும் சீனப் பொதுவுடமைக் கட்சியும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுடன் போர்க்கால நண்பர்களாக மாறியதால், மலாயா பொதுவுடைமை கட்சி பிரித்தானியர்கள் மீதான தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டி இருந்தது.[3]

இருப்பினும், மலாயா பொதுவுடைமை கட்சியை அங்கீகரிப்பது என்பது, அதன் தேசியவாதக் கொள்கையை (National Communism) சட்டப்பூர்வமாக்குவது போலாகும் என்றும்; அந்தக் கட்சிக்குத் தேவையற்ற ஊக்கத்தை அளிப்பது போலாகும் என்றும்; பிரித்தானிய அதிகாரிகள் கருதியதால், அந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்டது.[4]

மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு

தொகு
 
1945-இல் போர் முடிவடைந்த பின்னர் கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் கலைக்கப்பட்ட விழாவின் போது.

1941 டிசம்பர் 8-ஆம் தேதி, மலாயா மீதான ஜப்பானிய படையெடுப்பு (Japanese invasion of Malaya) நிகழ்ந்தது. அந்த நிகழ்வு பிரித்தானியர்களுடன் ஒத்துழைக்க மலாயா பொதுவுடைமை கட்சிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியது.

மலாயாவில் சப்பானியப் படைகள் விரைவான வெற்றிகளை அடுக்கடுக்காய்ப் பெற்று வந்தன. அதன் பிறகு, பிரித்தானிய மலாயா அரசாங்கத்தின் போர் முயற்சிகளை மலாயா பொதுவுடைமை கட்சி பகிரங்கமாக ஆதரிக்கத் தொடங்கியது. மலாயாவில் உள்ள சீனர்கள், பிரித்தானியர்களுக்குத் தங்களின் முழு உதவியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டனர்.

பிரித்தானிய போர்க் கப்பல்கள் மூழ்கடிப்பு

தொகு

இந்தக் கட்டத்தில் பிரித்தானியரின் போர்க் கப்பல்களான பிரின்சு ஆப் வேல்சு (HMS Prince of Wales) மற்றும் ரிபல்சு (HMS Repulse) ஆகிய இரு கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டதால், பிரித்தானியர்கள் மேலும் இராணுவப் பின்னடைவை எதிர்கொண்டனர்.[3]

இறுதியாக 1941 டிசம்பர் 14-ஆம் தேதி மலாயா பொதுவுடைமை கட்சியை பிரித்தானிய மலாயா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. சிங்கப்பூரில் பிரித்தானிய அதிகாரிகளுக்கும் இரண்டு மலாயா பொதுவுடைமை கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே ஓர் இரகசிய சந்திப்பு நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் மலாயா பொதுவுடைமை கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளரான லாய் தெக் (Lai Teck). அந்தச் சந்திப்பின் போது ஓர் உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது.[3]

இரு தரப்பு உடன்படிக்கை

தொகு

அந்த உடன்படிக்கையின்படி மலாயா பொதுவுடைமை கட்சியின் உறுப்பினர்களுக்குப் பிரித்தானிய இராணுவம் பயிற்சி அளிக்கும் என்றும்; அதே வேளையில் மலாயா பொதுவுடைமை கட்சி ஆட்சேர்ப்பு செய்யும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

பயிற்சி பெற்ற மலாயா பொதுவுடைமை கட்சியின் போராளிகளில் யார் பொருத்தமானவர்கள் என்பதைப் பிரித்தானிய இராணுவம் (British Military Command) முடிவு செய்யும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[5]

இடதுசாரி அரசியல் கைதிகள்
தொகு
 
1953-ஆம் ஆண்டு தெமங்கோர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள மலாயா காவல்துறை

1941 டிசம்பர் 15-ஆம் தேதி மலாயாவிலும் சிங்கப்பூரிலும் இருந்த இடதுசாரி அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் மலாயா பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளர்களாகும்.

1941 டிசம்பர் 19-ஆம் தேதி, மலாயா பொதுவுடைமை கட்சியினால் பல்வேறு சப்பானிய எதிர்ப்புக் குழுக்கள்; குவோமின்டாங் (Kuomintang) மற்றும் சீன வர்த்தக சம்மேளனம் (Chinese Chamber of Commerce) போன்ற அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டன. அந்த அமைப்புகள் வெளிநாட்டு சப்பானிய எதிர்ப்புச் சீனர் கூட்டமைப்பு ("Overseas Chinese Anti-Japanese Mobilization Federation") (OCAJMF) என்ற ஒரு முன்னணியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன் தலைவராக டான் கா கீ (Tan Kah Kee) என்பவர் நியமிக்கப்பட்டார்.[6][3]

101-ஆவது இராணுவச் சிறப்புப் பயிற்சி பள்ளி

தொகு

பின்னர் 1941 டிசம்பர் 20-ஆம் தேதி, இலண்டனை தளமாகக் கொண்டு சிங்கப்பூரில் இயங்கி வந்த 101-ஆவது இராணுவச் சிறப்புப் பயிற்சி பள்ளி (101st Special Training School); அவசரம் அவசரமாகத் திறக்கப்பட்டது. மலாயா பொதுவுடைமை கட்சியின் உறுப்பினர்களுக்கு கொரில்லா போர் பயிற்சிகள் வழங்கப்பட்டன.[3]

இந்தப் பயிற்சியாளர்களில் சிலர், இந்தப் பயிற்சிக்கு முன்னர் மிகக் குறைந்த ஆயுதங்களைக் கொண்டு பிரித்தானியரையே எதிர்த்தவர்கள். சிங்கப்பூரில் சப்பானியருக்கு எதிரான பிரித்தானியப் பாதுகாப்பு அரண் சரிவதற்கு முன்னர், ஏறக்குறைய 165 மலாயா பொதுவுடைமை கட்சியின் உறுப்பினர்கள், கெரில்லா போரில் பயிற்சி பெற்று விட்டனர்.

போராளிக் குழுவின் முதல் வெற்றி

தொகு

பயிற்சி பத்து நாட்கள் மட்டுமே நீடித்தது. மொத்தம் 7 வகுப்புகள். அடிப்படைப் பயிற்சியை மட்டுமே பெற்ற இந்தப் போராளிகள் தீபகற்ப மலேசியா முழுவதும் சுயேச்சைக் குழுக்களாக அனுப்பப்பட்டனர்.

இராணுவச் சிறப்புப் பள்ளியில் பயிற்சி பெற்ற போராளிகள், அவசரம் அவசரமாகக் கலைந்து சென்று, சப்பானிய இராணுவத்தை எதிர்க்க முயற்சி செய்தனர். அதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டன.

15 பேர் கொண்ட முதல் குழு கோலாலம்பூர் நகருக்கு அருகே அனுப்பப்பட்டது. அங்கு அந்தக் குழு வடக்கு சிலாங்கூர் சப்பானிய தகவல் தொடர்புகளைச் (Japanese Communication Lines) செயல் இழக்கச் செய்வதில் ஓரளவு வெற்றி பெற்றது.

இருப்பினும், போரின் முதல் சில மாதங்களில் பல போராளிகள் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் தான் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் எனும் முதனமை இராணுவத்தை உருவாக்கினார்கள். மேலும் அவர்கள் புதிய போராளிகளுக்கு பயிற்சியும் அளித்தனர். மார்ச் 1942-இல், மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் முதல் சுதந்திரப் படை உருவாக்கப்பட்டது.

நான்கு ஆயுதப் படையணிகள்

தொகு
 
மலாயா அவசர காலத்தில் பிரித்தானிய துருப்புகள்.

1942 பிப்ரவரி 15-ஆம் தேதி, சிங்கப்பூர் சப்பானியர்களிடம் விழுவதற்குச் சில தினங்களுக்கு முன்னர், மலாயா பொதுவுடைமை கட்சி, ஜொகூர் மாநிலத்தில் ஓர் ஆயுத எதிர்ப்பிற்கு ஏற்பாடு செய்தது.

1942 பிப்ரவரி 21-ஆம் தேதி, அதற்காக 'படையணி' (Regiment) என்று அழைக்கப்படும் நான்கு ஆயுதப் படையணிகளை மலாயா பொதுவுடைமை கட்சி உடனடியாக உருவாக்கியது. ஏற்கனவே 101-ஆவது இராணுவச் சிறப்புப் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள் (101st STS Trainees) அந்தப் படையணிகளுக்குத் தலைமை தாங்கினார்கள்.

சப்பானியர்களின் பழிவாங்கும் திட்டம்

தொகு

1943 மார்ச் மாதத்தில் இந்தப் படையினர் சப்பானியர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை பெரிய அளவில் தொடங்கினார்கள். இந்தக் குழுக்கள் மறைந்து இருந்து தாக்கியதால் சப்பானியர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு சப்பானியர்கள் ஒரு மாற்றுவழியைக் கண்டுபிடித்தனர். மலாயா சிங்கப்பூரில் வாழ்ந்த சாதாரண சீனர்களைப் பழிவாங்கத் தொடங்கினார்கள். அதுதான் சப்பானியர்களுக்கு அப்போது தெரிந்த எளிய மாற்றுவழி.

மலாயா சீனர்களின் சிரமங்கள்

தொகு
 
மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட்ட சப்பானிய கவச தகரிகள்.

ஏராளமான மலாயா சீனர்கள் ஜப்பானியர்களால் தொடர்ந்து பழிவாங்கப் பட்டனர். அதனால் பெரும்பாலான சீனர்களுக்குப் பொருளாதார சிரமங்கள். நகரங்களை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் குன்றுகள் அல்லது மலைகளின் காட்டு விளிம்புகளில் (Forest Margins) குழுக்களாக வாழத் தொடங்கினார்கள்.

அங்கு இருந்தவாறு அவர்கள் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு, உணவு மற்றும் பிற உதவிகள் வழங்குவதில் முக்கியப் பின்னணியாக மாறினார்கள்.

பெண் போராளிகளின் பங்களிப்பு

தொகு

1942-ஆம் ஆண்டின் நடுப் பகுதியில், மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் வலிமை கூடியது. முதல் படையணியில் ஏறக்குறைய 100 பேர்; இரண்டாம் படையணியில் ஏறக்குறைய 160 பேர்; மூன்றாம் படையணியில் ஏறக்குறைய 360 பேர்; நான்காம் படையணியில் ஏறக்குறைய 250 பேர்.[7]

இந்தக் கட்டத்தில் 5-ஆவது; 6-ஆவது; மற்றும் 7-ஆவது படையணிகளும் உருவாக்கப்பட்டன. அத்துடன், மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் பெண்களையும் உள்ளடக்கியது. சீனர்ப் பெண்கள் அதிகமாக இருந்தனர். மாவோயிச வழிகளில் இந்த இராணுவம் செயல்பட்டது. பெண்களின் பங்களிப்பு இருந்ததால், இந்த மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம், ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் விளங்கியது.

பத்துமலை குகையில் இரகசிய மாநாடு

தொகு
 
ஈப்போ கெப்பாயாங் பகுதியில் பொதுவுடைமை கும்பலின் தலைவி லீ மின் (1951)

1942 பிப்ரவரி 15-ஆம் தேதி சப்பானியர்களிடம் சிங்கப்பூர் வீழ்ந்தது. மலாயா பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் இலாய் தெக் கைது செய்யப்பட்டார். சப்பானியர்களின் ஆதரவாளராக மாறிய இலாய் தெக், மலாயா பொதுவுடைமை கட்சி மற்றும் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் பற்றிய தகவல்களை சப்பானியர்களுக்கு வழங்கும் இரட்டை முகமாக மாறினார்.

1942 செப்டம்பர் 1-ஆம் தேதி கோலாலம்பூருக்கு வடக்கே பத்துமலை குகைகளில் ஒன்றில் மலாயா பொதுவுடைமை கட்சித் தலைவர்கள்; மற்றும் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத் தலைவர்களின் இரகசிய மாநாடு நடைபெற்றது. ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட பொதுவுடைமைத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இலாய் தெக் மூலமாக சப்பானியர்களுக்கு அந்த இரகசியம் தெரிய வந்தது.

சப்பானியர்களின் அதிரடித் தாக்குதல்

தொகு

விடியல் காலையில் சப்பானியர்கள் அதிரடித் தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதலில் பொதுவுடைமை தலைவர்கள் பெரும்பாலோர் கொல்லப் பட்டார்கள். உயர்மட்டத் தலைவர்களின் இழப்பு, மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தைப் பெரிதும் பாதித்தது. கட்சியின் இராணுவத் தளபதிகளாக இருந்தவர்கள் படைப் பிரிவுகளின் தலைவர்களாக மாற்றம் செய்யப் பட்டார்கள்.[8]

இந்தப் பின்னடைவைத் தொடர்ந்து, மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் தன் ஈடுபாடுகளைத் தவிர்த்தது. கட்சியின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தியது, 1943-ஆம் ஆண்டு இடைப் பகுதியில் அந்த இராணுவத்தில் 4,500 வீரர்கள் இருந்தார்கள். [9]

தென்கிழக்கு ஆசியா இராணுவக் கூட்டணி

தொகு
 
மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தினரால் எரிக்கப்பட்ட சப்பானிய கவச தகரி.

1943 மே மாதம் தொடங்கி, பிரித்தானிய அதிரடிப் படையினர் (Commandos) மலாயாவில் ஊடுருவினார்கள். மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவத்துடன் தொடர்பு கொண்டார்கள். 1944-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.

அதன் மூலம் தென்கிழக்கு ஆசியா இராணுவக் கூட்டணியின் (Allied South East Asia Command) கட்டளைகளை மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் ஏற்றுக் கொண்டால், ஆயுதங்களையும் பொருட்களையும் வழங்குவது எனும் உடன்பாடு.

அந்த வகையில் 1945-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்திற்கு ஆயுதங்கள் கிடைக்கத் தொடங்கின.

சப்பானியர் சரண்

தொகு
 
1955-ஆம் ஆண்டில் மலாயா காட்டில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் பிரித்தானிய துருப்புகள்.

1945 ஆகத்து 15-ஆம் தேதி சப்பான் சரண் அடைந்தது. சப்பானிய படைகள் கிராமப் புறங்களில் இருந்து பின்வாங்கின. மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்திற்கு அதிர்ச்சி கலந்த வியப்பு. எதிர்பாராத முடிவு. 1945 செப்டம்பர் 3-ஆம் தேதி வரையில் பிரித்தானியத் துருப்புகள் மலாயா; சிங்கப்பூருக்கு வந்து சேரவில்லை. செப்டம்பர் 8-ஆம் தேதி தான் வந்தன.

சப்பானிய படைகள் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தின. அந்த இடத்தை மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் நிரப்பியது. பல இடங்களில், குறிப்பாக சீனர்கள் வாழும் பகுதிகளில், மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவ வீரர்கள் காட்டில் இருந்து வெளிவந்த போது அவர்களைப் பொது மக்கள் சாதனையாளர்களாக வரவேற்றனர். மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் அதிகாரத்தை ஆங்கிலேயர்கள் அங்கீகரித்தனர்.

8-ஆவது படைப் பிரிவு

தொகு

இதற்கிடையில், மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தினர் சப்பானிய ஆயுதங்களைக் கைப்பற்றினார்கள். சுதந்திரமாக ஆட்சேர்ப்பு செய்தார்கள். தங்கள் இராணுவத்தில் 8-ஆவது படைப் பிரிவை உடனடியாக உருவாக்கினார்கள். 6,000-க்கும் அதிகமானோர் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தில் சேர்ந்து கொண்டார்கள்.[10]

அதே நேரத்தில் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தினர், மலாயா போலீஸ் படையில் இருந்த கூட்டுப் பணியாளர்களையும் பொதுமக்களையும் பழிவாங்கல்களைத் தொடங்கினார்கள்.[10][11]

கோலாலம்பூரில் பிரித்தானிய இராணுவ நிர்வாகம்

தொகு
 
மலாயா அவசர காலத்தில் போலீஸ் நிலையத்திற்கும் பாதுகாப்பு.

1945 செப்டம்பர் 12-ஆம் தேதி கோலாலம்பூரில் பிரித்தானிய இராணுவ நிர்வாகம் (British Military Administration) நிறுவப்பட்டது.[12] அந்த ஆண்டின் பிற்பகுதியில் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் தயக்கத்துடன் தன் இராணுவத்தைக் கலைக்க ஒப்புக்கொண்டது. ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.[13]

மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவ வீரர்கள் 6800 பேர் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப் பட்டனர். ஆயுதங்களில் கைத் துப்பாக்கிகளை மட்டும் வைத்துக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப் பட்டார்கள்.[14] அந்தக் கட்டத்தில் மலாயா பொதுவுடைமை கட்சி சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் பிரித்தானிய இராணுவ நிர்வாகத்தின் அடக்குமுறை இல்லாமல் செயல்பட முடிந்தது.

லாய் டெக் மீது அவநம்பிக்கை

தொகு

1946-ஆம் ஆண்டில், மலாயா பொதுவுடைமை கட்சியின் தலைமைத்துவத்தின் மீது கட்சி உறுப்பினர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. பொதுச் செயலாளர் லாய் தெக் துரோகம் செய்து இருக்கலாம் எனும் வதந்திகள் பரவத் தொடங்கின. ஆக அது குறித்து விசாரணைகள் தொடங்கின.[15]

1946-ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு நாள் குறிக்கப் பட்டது. ஆனால் அதற்குள் அவர் கட்சி நிதிகளுடன் நாட்டை விட்டு ஓடி விட்டார். இலாய் தெக் தப்பி ஓடிய விசயத்தை மத்திய செயற்குழு ஒரு வருட காலம் இரகசியமாக வைத்து இருந்தது.

மலாயாவில் பிரித்தானிய இராணுவ நிருவாகம்

தொகு

இலாய் தெக்கிற்குப் பதிலாக 26 வயதான சின் பெங் புதிய பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் பேராக் மாநிலத்தில் இயங்கிய மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் 5-ஆவது படைப் பிரிவில் ஒரு மூத்த அதிகாரியாகப் பணியாற்றியவர்.

பிரித்தானிய மலாயாவில் இராணுவ நிருவாகம் (British Military Administration (Malaya) (BMA) 1945 செப்டம்பர் 12-ஆம் தேதி மலாயாவை முறையாக ஏற்றுக் கொண்டது. மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம், 1945 டிசம்பர் 1-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. ஒவ்வோர் உறுப்பினருக்கும் $ 350 ஒரு பணிக்கொடைத் தொகையாக வழங்கப்பட்டது. அவர்கள் அரசு பொதுச் சேவையில் அல்லது காவல்துறையில் சேருவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.[16]

மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் கலைக்கப்பட்ட போது அதன் மொத்த பலம் 6,000 முதல் 7,000 வீரர்கள் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Sani, Rustam (2008). Social Roots of the Malay Left. SIRD. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9833782444.
  2. 2.0 2.1 Lee, T. H. (1996). The Basic Aims or Objectives of the Malayan Communist Movement. In T. H. Lee, The Open United Front: The Communist Struggle in Singapore (pp. 2–29). Singapore : South Seas Society.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Cheah, B. (1983). Red Star Over Malaya. Singapore: Singapore University Press.
  4. Ban, K. C., & Yap, H. (2002). Rehearsal for War: The Underground War against the Japanese. Singapore: Horizon Books.
  5. Chapman, Spencer (2003). The Jungle Is Neutral. Guilford, Connecticut: Globe Pequot Press.
  6. Cooper, B. (1998). The Malayan Communist Party (MCP) and the Malayan People's Anti-Japanese Army (MPAJA). In B. Cooper, Decade of Change: Malaya and the Straits Settlements 1936–1945 (pp. 426–464). Singapore: Graham Brash.
  7. O'Ballance, p. 44. The Anti-Japanese army of the Malayan people included women. There were more Chinese women.
  8. O'Ballance, p. 49. At dawn, the Japanese launched an attack. Most of the communist leaders were killed in that attack.
  9. O'Ballance, p. 50. By mid-1943 the army had 4,500 soldiers.
  10. 10.0 10.1 O'Ballance, p. 61. (Malayan People's Anti-Japanese Army) soldiers were greeted as 'heroes' when they emerged from the jungle.
  11. See Cheah, pp. 252, 253, 261, 262. Cheah, Boon Kheng (2003). Red Star over Malaya: resistance and social conflict during and after the Japanese occupation of Malaya, 1941–1946.
  12. O'Ballance, p. 63. British Military Administration in Kuala Lumpur
  13. O'Ballance, p. 65. The Malayan People's Anti-Japanese Army agreed to disband its army.
  14. Short, p. 36. They kept pistols in their weapons.
  15. Short, p. 39. Rumors that General Secretary Lai Teck may be treasonous
  16. Tie, Y., & Zhong, C. (1995). An Account of the Anti-Japanese War Fought Jointly by the British Government and MPAJA. In C. H. Foong, & C. Show, The Price of Peace: True Accounts of the Japanese Occupation (pp. 45–63). Singapore: Asiapac Books.

நூல்கள்

தொகு

மேலும் காண்க

தொகு