மலாயா தேசிய விடுதலை இராணுவம்
மலாயா தேசிய விடுதலை இராணுவம் (ஆங்கிலம்: Malayan National Liberation Army (MNLA) அல்லது (Malayan Races Liberation Army); மலாய்: Tentera Pembebasan Rakyat Malaya; சீனம்: 马来亚民族解放军) என்பது 1949-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மலாயாவில் உருவாக்கப்பட்ட ஒரு கம்யூனிச கெரில்லா இராணுவம் ஆகும். 1989-ஆம் ஆண்டு வரையில் மலேசியாவில் இயங்கி வந்தது.
மலாயா தேசிய விடுதலை இராணுவம்
Malayan National Liberation Army | |
---|---|
馬來亞民族解放軍 Tentera Pembebasan Rakyat Malaya | |
மலாயா தேசிய விடுதலை இராணுவத்தின் கொடி | |
தலைவர்கள் | |
செயல்பாட்டுக் காலம் | 1949 | –1960; 1968–1989
முன்னோடி |
|
செயல்பாட்டுப் பகுதி(கள்) | வடக்கு மலாயா; தெற்கு தாய்லாந்து |
சித்தாந்தம் |
|
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி அரசியல் |
அளவு | 8,000[1][2][3] |
பற்று | மலாயா கம்யூனிஸ்டு கட்சி |
குழு(க்கள்) | 10-ஆவது மலாய் படையணி |
எதிரிகள் | ஐக்கிய இராச்சியம்
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் |
இந்த இராணுவ அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவை ஆக்கிரமித்த சப்பானியர்களுக்கு எதிராக முயற்சிகளை மேற்கொண்ட தன்னார்வ இராணுவ அமைப்பாகவும் செயல்பட்டது..
மலாயா அவசரகாலத்தின் (1948-1960) (Malayan Emergency) போது ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா விடுதலை (Malayan Independence) பெறுவதற்காக தேசிய விடுதலைப் போரை நடத்தியது. பின்னர், இதே இராணுவ அமைப்பு, மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989) எனும் கம்யூனிச கிளர்ச்சியிலும் ஈடுபட்டது.
பொது
தொகுஇரண்டாம் உலகப் போரின் போது மலாயாவை ஆக்கிரமித்த சப்பானியர்களுக்கு எதிராகப் போராடியதற்காக; இந்த இராணுவத்தின் தலைவர் சின் பெங்கிற்கு (Chin Peng) பிரித்தானிய பேரரசு விருது (Order of the British Empire) (OBE) எனும் உயரிய விருது வழங்கப்பட்டது. பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.[4]
மலாயா தேசிய விடுதலை இராணுவம் என்பது மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் போர்ப் படை ஆகும். மலாயா காலனித்துவ பிரித்தானியர்கள், மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மீது தொடுத்த போர்க் காலத்தை மலாயா அவசரகாலம் என்று அழைத்தனர். ஆனால், மலாயா தேசிய விடுதலை இராணுவத்தினர் அந்தக் காலக் கட்டத்தை பிரித்தானிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போர் (Anti–British National Liberation War) என்று அழைத்தனர்.
பொதுவாகவே, பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது, மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பொதுநலவாயப் படையினருக்கும் இடையே நடைபெற்ற போரை மலாயா அவசரக் காலப் போர் என்றும் அழைக்கிறார்கள்.[5][6]
மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்
தொகுசப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது, மலாயா கம்யூனிஸ்டு கட்சி சப்பானியர்களை எதிர்த்து கொரில்லா போர் முறையில் களம் இறங்கியது. அப்போது அந்த இராணுவத்தின் பெயர் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் (Malayan Peoples' Anti-Japanese Army) (MPAJA). இதற்கு முன்னர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியும் மலாயா தேசிய விடுதலை இராணுவமும், பிரித்தானியர்களால் தடை செய்யப்பட்டு இருந்தன.
மலாயா தேசிய விடுதலை இராணுவம் மீதான தடை அகற்றப் பட்டதும், புதிதாக உருவான மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தினருக்கு பிரித்தானியர்கள் ஆயுதங்களை வழங்கினார்கள்; சப்பானியர்களை எதிர்க்கச் செய்தார்கள். அத்துடன் மலாயா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பிரித்தானியர்கள் இரகசியமான முறையில் இராணுவப் பயிற்சிகளையும்; நிதியுதவிகளையும் வழங்கி வந்தார்கள்[7]
இரண்டாம் உலகப் போர் முடிவு அடைந்ததும்; மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தினரிடம் வழங்கப்பட்ட ஆயுதங்ளை மீண்டும் பிரித்தானியரிடமே ஒப்படைக்குமாறு பிரித்தானிய மலாயா அரசாங்கம் கட்டளையிட்டது. இருப்பினும் அந்த ஆயுதங்களில் பெருவாரியான ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவமே வைத்துக் கொண்டது. பின்னர், அதே ஆயுதங்கள்தான் பிரித்தானியர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப் பட்டன.[8]
சுங்கை சிப்புட் தாக்குதல்
தொகு1948 சூன் 16-ஆம் தேதி, மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தை சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர்; பேராக், சுங்கை சிப்புட்டில் மூன்று பிரித்தானிய தோட்ட நிர்வாகிகளைச் சுட்டுக் கொன்றனர். மலாயாவை ஆட்சி செய்து வந்த பிரித்தானியர்களை நிலை தடுமாறச் செய்தது.[9]
அந்தக் கொலைகளுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில், பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இடதுசாரிக் கட்சிகள் சட்டவிரோதமாக்கப் பட்டன; தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிரித்தானிய மலாயா அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்
தொகுமேலும் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில்; உள்நாட்டில் பிறக்காத முக்கிய கம்யூனிஸ்டு தலைவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பிரித்தானிய அரசாங்கம் பயன்படுத்தியது. இதன் விளைவாக, மலாயா கம்யூனிஸ்டு கட்சி, மலாயாவின் தொழிற்சங்க அமைப்புகளை ஆதரிக்க வன்முறையைப் பயன்படுத்தியது. அதே தீரா பகையாக மாறியது. 1948-இல் ஆயுதமேந்திய கிளர்ச்சியுடன் உச்சக் கட்டத்தை அடைந்தது.
இதன் தொடர்ச்சியாக 1948 சூன் மாதம் மலாயா அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது. நகரங்களையும் கிராமங்களையும் விட்டு வெளியேறிய மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஆர்வலர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் (சின் பெங் உட்பட) மலாயா காடுகளில் அடைக்கலம் அடைந்தனர்.
மீண்டும் ஒருங்கிணைந்து, பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிராக கெரில்லா போரை நடத்துவதற்காக மலாயா தேசிய விடுதலை இராணுவத்தை (Malayan National Liberation Army) (MNLA) நிறுவினார்கள்.
கெரில்லா போர்
தொகுமலாயா தேசிய விடுதலை இராணுவத்தினர் (MNLA) கொரில்லா போர்த் தந்திரங்களைக் கையாண்டனர். மின்நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றைச் சேதம் அடையச் செய்தல், ரப்பர் தோட்டங்களில் தாக்குதல் நடத்துதல், பொது போக்குவரத்திற்கு குந்தகம் விளைவித்தல் போன்றவையே மலாயா தேசிய விடுதலை இராணுவத்தினர் கையாண்ட கொரில்லா போர் தந்திரங்களாகும்.[10]
அப்போது மலாயாவில் 3.12 மில்லியன் சீனர்கள் இருந்தனர். இவர்களில் ஏறக்குறைய 500,000 பேர் மலாயா தேசிய விடுதலை இராணுவத்தினருக்கு ஆதரவாக இருந்தனர். மலாய்க்காரர்களில் சிலரும் இந்தியர்கள் சிலரும் ஆதரவு வழங்கினர்.
சீனர்களின் ஆதரவு
தொகுசீனர்களைப் பொறுத்தவரையில் அதிக அளவில் ஆதரவு வழங்கினர். தவிர சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்தாங்காலி, களும்பாங், பேராங், பத்து ஆராங், உலு சிலாங்கூர் மாவட்டம், முவாலிம் மாவட்டம்; பேராக் மாநிலத்தைச் சேர்ந்த சிம்மோர், தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், பீடோர், துரோலாக், சுங்கை சிப்புட் போன்ற இடங்களில் வாழ்ந்த இந்தியர்களும் ஓரளவிற்கு ஆதரவுகளை வழங்கி உள்ளனர்.[11]
மலாயா தேசிய விடுதலை இராணுவத்தினர் சீனர்களின் ஆதரவைப் பெற்றதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களிக்க சீனர்கள் மறுக்கப்பட்டனர்; சீனர்களுக்கு நில உரிமைகள் இல்லாமல் போனது; போர்க் காலத்தில் பெருவாரியான சீனர்கள் ஏழைகளாக இருந்தது போன்ற காரணங்கள் சொல்லப் படுகின்றன.
மார்க்சிய லெனினிச சித்தாந்தங்கள்
தொகுமலாயா தேசிய விடுதலை இராணுவத்தினருக்கு ’மின் யுவான்’ (Min Yuen) எனும் பொருளுதவி துணை அமைப்பு இருந்தது. இந்த மின் யுவான் துணை அமைப்பு பொதுமக்களுடன நெருக்கமான தொடர்புகளைக் கொண்டு இருந்தது. மலாயா தேசிய விடுதலை இராணுவத்தினருக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருட்களை 'மின் யுவான்' வழங்கி வந்தது.[12]
மலாயா தேசிய விடுதலை இராணுவத்தினர் அடர்ந்த காடுகளில் இராணுவ முகாம்களை அமைத்து வைத்திருந்தனர். அந்த முகாம்களில் அவர்களுக்கு மார்க்சிய-லெனினிச சித்தாந்தங்கள் சொல்லித் தரப்பட்டன. இராணுவ போர்ப் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டன. தவிர, பொதுமக்களிடம் விநியோகம் செய்யச் சொல்லி அரசியல் செய்தி சுற்றறிகைகளும் வழங்கப்பட்டன.
பிரிக்சு திட்டம்
தொகுமலாயா தேசிய விடுதலை இராணுவத்தின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சில முக்கிய நடவடிக்கைகளை பிரித்தானிய மலாயா அரசாங்கம் மேற்கொண்டது. ஈயச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈட்டுபட்டது.[13]
பிரிக்ஸ் திட்டம் (Briggs Plan) எனும் ஒரு திட்டத்தையும் அமல் செய்தது. மலாயா தேசிய விடுதலை இராணுவத்னருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருளுதவிகளைத் துண்டிப்பதுதான் ’பிரிக்சு’ திட்டத்தின் தலையாய நோக்கமாகும். ’பிரிக்சு’ திட்டத்தை உருவாக்கியவர் எரோல்டு பிரிக்ஸ் (General Sir Harold Briggs). இவர் அப்போது மலாயாவின் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார்.
மலாயா புதுக்கிராமங்கள்
தொகுபிரிக்ஸ் திட்டத்தின் கீழ் மலாயா முழுமைக்கும் 450 புதுக்கிராமங்கள் உருவாக்கப் பட்டன. அந்தப் புதுக் கிராமங்களில், பொதுமக்கள் மறுக் குடியேற்றம் செய்யப் பட்டனர்.[14]
இந்தத் திட்டத்தின் கீழ், மலாயாவின் மக்கள் தொகையில் 10% விழுக்காட்டினர்; வலுக்கட்டாயமாக அவர்களின் குடியிருப்பு நிலங்களில் இருந்து, புதுக்கிராமங்கள் என்று அழைக்கப்படும் கட்டுப்பாட்டு முகாம்களுக்கு மாற்றப் பட்டனர். பெரும்பாலான இந்த மறுக் குடியிருப்புகளில் சீன வம்சாவளியினர்தான் மிகுதியாகக் குடி அமர்த்தப்பட்டனர் (400,000 பேர்).[15]
என்றி கர்னி
தொகுமலாயா அவசரகாலம் நடைமுறைக்கு வந்து ஒரு மாதத்திற்குள், மலாயாவிற்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஆணையர் (Britain's High Commissioner in Malaya) எட்வர்ட் ஜென்ட் (Edward Gent) ஒரு விமான விபத்தில் காலமானார். அவருக்குப் பதிலாக சர் என்றி கர்னி (Henry Gurney) என்பவர் பதவி ஏற்றார்.
சர் என்றி கர்னி மலாயா கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தங்களையும் தீவிரவாதத்தையும் முறியடித்த பெருமைக்கு உரியவர். அவர் மலாயாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். மலாயா கம்யூனிச ஆதரவாளர்களை அழிப்பதில் உறுதிபூண்டு போராடினார்.
ஆனால், மலாயா தேசிய விடுதலை இராணுவத்தினரால் 1951-ஆம் ஆண்டு பிரேசர் மலையில் (Fraser's Hill) சுட்டுக் கொல்லப்பட்டார். சர் என்றி கர்னியின் கல்லறை கோலாலம்பூர் செராஸ் சாலையில் இருக்கிறது.
பரவலான வெறுப்புணர்வு
தொகுசர் என்றி கர்னி கொல்லப்பட்ட நிகழ்ச்சி; மலாயா மக்களிடையே, மலாயா தேசிய விடுதலை இராணுவத்தினர் மீது ஒரு பரவலான வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் உயர் ஆணையருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன எனும் ஒரு கேள்விக்குறி மக்களிடையே தோன்றியது. அதனால், மலாயா கம்யூனிச சித்தாந்தங்களில் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
சர் ஹென்றி கர்னியின் பின்னவராக வந்த ஜெரால்ட் டெம்ப்ளர் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார். மலாயாவில் வாழும் சீனர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகளை உடனடியாக வழங்கினார். ’பிரிக்ஸ்’ திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்தினார். மலாயா இராணுவம் எனும் ஒரு புதிய இராணுவப் படையையும் உருவாக்கினார்.
கம்யூனிஸ்டு கொரில்லாக்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானத் தொகையையும் கூட்டி பொதுமக்களை உற்சாகப் படுத்தினார். காவல் துறையின் புலான்ய்வுத் துறையையும் விரிவாக்கம் செய்தார்.
பொது மன்னிப்பு
தொகு1955 செப்டம்பர் 8ஆம் தேதி மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப் படுவதாக மலாயாக் கூட்டரசு அரசாங்கம் அறிவித்தது.[16] இதே போன்ற ஓர் அறிவிப்பை சிங்கப்பூர் அரசாங்கமும் அறிவித்தது. ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினருடன் எவ்வித பேரமும் பேச முடியாது என்று அப்போதைய மலாயாவின் முதலமைச்சர் துங்கு அப்துல் ரகுமான் அறிவித்தார்.
பொதுமன்னிப்பின் மூல கூறுகள்
தொகு- அவசரகாலம் தொடர்பான தவறுகளைச் செய்தவர்கள் உடனடியாக சரண் அடையலாம். அவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
- இப்போதே அவர்கள் விரும்பும் நபரிடம் சரண் அடையலாம். பொது மக்களிடமும் சரண் அடையலாம்.
- பொதுவான சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு படையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.
- சரண் அடைந்தவர்களிடம் அரசாங்கம் விசாரண நடத்தும்.
- ஒருவர் சரண் அடைந்து நாட்டிற்கு விசுவாசமாக நடந்து கொள்ள விரும்பினால் அவருக்கு அரசாங்கம் எல்லா வகைகளிலும் உதவி செய்யும்.
- சமுதாயத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்படுவார். அவருடைய குடும்பத்தாருடன் இணைத்து வைக்கப்படுவார்.
- சரண் அடைந்த பின்னர் அவர்களுடைய நடமாட்டம் தொடர்ந்து கவனிக்கப்படும்.
- சீனாவிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.[17]
பாலிங் பேச்சுவார்த்தை
தொகுதன்னுடைய நோக்கம் வெற்றி பெறவில்லை என்பதை உணர்ந்த சின் பெங், ஆளும் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்த அழைப்பு விடுத்தார். அந்தப் பேச்சு வார்த்தை மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது. 1955 டிசம்பர் 28ஆம் தேதி கெடா, பாலிங்கில் உள்ள பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்றது.
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின் பெங், அதன் தலைமைச் செயலாளர் ரசீட் மைடின், மத்திய பிரசார அமைப்பின் தலைவர் சென் தியென் கலந்து கொண்டனர். மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான், டத்தோ டான் செங் லோக், சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
தொகுசண்டை சச்சரவுகளுக்கு ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு ஆகும். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் சின் பெங்கின் கோரிக்கைளை மலாயா தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
இறுதியில் பாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தக் கட்டமாக நியூசிலாந்து தன்னுடைய இராணுவப்படையை அனுப்பியது. பொதுநலவாய உறுப்பு நாடுகள் தத்தம் படைகளையும் மலாயாவுக்கு அனுப்பி வைத்தன.
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் இறுதி முயற்சி
தொகுபாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததினால், 1956 பிப்ரவரி 8ஆம் தேதி முதலமைச்சர் துங்கு பொது மன்னிப்பை மீட்டுக் கொண்டார். மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு ஐந்து மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் உறுதியாகச் சொன்னார்.[18]
எனினும், மலாயா கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்த தன்னால் இயன்ற வரை முயற்சிகள் செய்து பார்த்தது. ஆனால், அனைத்தும் வெற்றி பெறவில்லை. மலாயா சுதந்திரம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கூட, ஆகக் கடைசியாக மலாயா கம்யூனிஸ்டு கட்சி இன்னொரு முயற்சி செய்து பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு கேட்டது. ஆனால், மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் இணக்கம் தெரிவிக்கவில்லை.
மலாயா விடுதலை
தொகு1957 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி மலாயா சுதந்திரம் அடைந்தது. மறு ஆண்டில் பேராக், தெலுக் இந்தானில் கம்யூனிஸ்டு கெரில்லாக்கள் கடைசியாக ஒரு தாக்குதல் நடத்தினர். அதுதான் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் கடைசி தாக்குதல்.
அந்தத் தாக்குதலில் வெற்றி பெற முடியாமல் போகவே, தாக்குதல் நடத்திய அனைவரும் அரசாங்கக் காவல் துறையிடம் சரண் அடைந்தனர். மலாயாவில் ஆங்காங்கே எஞ்சியிருந்த கம்யூனிச கெரில்லாக்கள் தென் தாய்லாந்து எல்லையில் தஞ்சம் அடைந்தனர். 1960 ஜுலை 31-இல் அவசரகாலம் முடிவிற்கு வந்ததாக மலாயா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அவசரகாலம் முடிவு
தொகு- இந்த அவசரகாலப் போரில் 6,710 கம்யூனிச கெரில்லாக்கள் கொல்லப்பட்டனர்.
- 1,287 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 2,702 கெரில்லாக்கள் சரண் அடைந்தனர்.
- அரசு தரப்பில் 1,345 மலாயா இராணுவத்தினரும் காவல் துறையினரும் கொல்லப்பட்டனர்.
- 519 பொதுநலவாய அதிகாரிகளும், பொதுமக்களில் 2,478 பேரும் உயிர் துறந்தனர்.
அதன் பின்னர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளரான சின் பெங், மலேசியாவுக்குத் திரும்பி வருவதற்கான அனுமதி கேட்டார். ஆனாலும் மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. அதன் பின்னர் அவர் தென் தாய்லாந்தில் இருந்து சீனா, பெய்ஜிங்கிற்குச் சென்றார். அவருடன் முக்கியமான சிலரும் சென்று சீனாவில் அடைக்கலம் அடைந்தனர்.
சின் பெங்கிற்கு தடை
தொகு1989-ஆம் ஆண்டு மலேசியா – தாய்லாந்து இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட அட் யாய் ஒப்பந்தத்தின் படி, கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பலர் மலேசியாவிற்குத் திரும்பினர். ஆனால் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளரான சின் பெங்கை மட்டும் மலேசியாவிற்குள் நுழைவதற்கு மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அதனால் அவர் தன்னுடைய வாழ்நாளில் பல வருடங்களைத் தாய்லாந்திலேயே கழித்தார்.[19]
இவர் 2013 செப்டம்பர் 16-ஆம் திகதி தாய்லாந்து தலைநகரமான பாங்காக் நகரிகில் காலமானார். பாங்கோக் போஸ்ட் நாளிதழின் செய்திகள் படி, அன்றைய தினம் அதிகாலை மணி 6.20 மணியளவில் சின் பெங் வயது மூப்பு காரணமாகக் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 88.[20]
மேற்கோள்கள்
தொகு- ↑ Tourism Malaysia http://www.spiritofmalaysia.co.uk/page/malaya-emergency பரணிடப்பட்டது 8 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Terrorism in Southeast Asia: Implications for South Asia from The New Delhi International Workshop on International Terrorism in Southeast Asia and its Likely Implications for South Asia April 2004 – Pub. Pearson Education India, 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8129709988 p. 203
- ↑ "The Myth Of Ethnic Conflict" by Beverly Crawford & Ronnie D. Lipshutz University of California at Berkeley 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0877251989 p. 3
- ↑ Burleigh, Michael (2013). Small Wars, Faraway Places: Global Insurrection and the Making of the Modern World 1945–1965. New York: Viking – Penguin Group. pp. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-02545-9.
- ↑ Siver, Christi L. "The other forgotten war: understanding atrocities during the Malayan Emergency." In APSA 2009 Toronto Meeting Paper. 2009., p.36
- ↑ My Side of History by Chin Peng (Media Masters; Singapore, 2003)
- ↑ Newsinger, John (2015). British Counterinsurgency (2nd ed.). Basingstoke: Palgrave Macmillan. pp. 34–35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-29824-8.
- ↑ Some units were trained by the British. The equipment and skills gained in guerrilla warfare against the Japanese served the MPAJA in good stead when it fought Commonwealth forces during the postwar Malayan Emergency.
- ↑ Peng, Chin; Ward, Ian; Miraflor, Norma (2003). Alias Chin Peng: My Side of History. Singapore: Media Masters. pp. 214–215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-04-8693-6.
- ↑ Rashid, Rehman (1993). A Malaysian Journey. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-99819-1-9.
- ↑ Burleigh, Michael (2013). Small Wars Faraway Places: Global Insurrection and the Making of the Modern World 1945–1965. New York: Viking – Penguin Group. pp. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-02545-9.
- ↑ Newsinger, John (2013). The Blood Never Dried: A People's History of the British Empire. London: Booksmarks Publications. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-909026-29-2.
- ↑ Postgate, Malcolm; Air Historical Branch, Ministry of Defence (1992). Operation Firedog : air support in the Malayan emergency, 1948-1960. London: H.M.S.O. pp. 4–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780117727243.
- ↑ Newsinger, John (2013). The Blood Never Dried: A People's History of the British Empire. London: Bookmarks Publications. p. 219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-909026-29-2.
- ↑ Newsinger, John (2015). British Counterinsurgency. Basingstoke: Palgrave Macmillan. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-29824-8.
- ↑ Memorandum from the Chief Minister and Minister for Internal and Security, No. 386/17/56, 30 April 1956. CO1030/30
- ↑ Prof Madya Dr. Nik Anuar Nik Mahmud, Tunku Abdul Rahman and His Role in the Baling Talks
- ↑ MacGillivray to the Secretary of State for the Colonies, 15 March 1956, CO1030/22
- ↑ CC, Chin; Hack, Karl, eds. (2005), Dialogues with Chin Peng : New light on the Malayan Communist Party, Singapore: Singapore Univ. Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971-69-287-2
- ↑ Chin, Peng (2003), Alias Chin Peng : My Side of History : Recollections of a Revolutionary Leader, Singapore: Media Masters, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-04-8693-6