பிரேசர் மலை

பிரேசர் மலை (மலாய் மொழி: Bukit Fraser; ஆங்கிலம்: Fraser's Hill சீனம்: 福隆港) என்பது ஓர் உல்லாசப் பொழுதுபோக்கு இடமாகும். இது மலேசியா, பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு குளிர்மையான தட்ப வெட்ப நிலை நிலவுகிறது. மலேசியாவின் மலைகளில் இளவரசியாக விளங்கும் கோடை வாசத்தலம் பிரேசர் மலை ஆகும். கோலாலம்பூர் மாநகரில் இருந்து 103 கி.மீ. தொலைவில் கோலா குபு பாரு பட்டணத்திற்கு அருகாமையில் உள்ளது.[1] பிரேசர் மலையைச் சுற்றிலும் ஏழு மலை உச்சிகள் உள்ளன.

பிரேசர் மலை
Fraser's Hill
Bukit Fraser
பிரேசர் மலை மணிக்கூண்டு
உயர்ந்த புள்ளி
உயரம்1,524 m (5,000 அடி)
ஆள்கூறு3°42′34.00″N 101°44′0.00″E / 3.7094444°N 101.7333333°E / 3.7094444; 101.7333333
பெயரிடுதல்
சிறப்புப்பெயர்மலேசியாவின் குட்டி இங்கிலாந்து
புவியியல்
அமைவிடம்தீபகற்ப மலேசியா
பகாங்
ஏறுதல்
முதல் மலையேற்றம்லூயிசு ஜேம்சு பிரேசர்
எளிய வழிகோலா குபு பாருவில் இருந்து ரவுப் நகருக்குச் செல்லும் வழி

இந்த இடம் ஒரு மாசற்ற, தூய்மையான காட்டுப் பகுதி ஆகும். லூயிஸ் ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) எனும் ஸ்காட்லாந்துகாரர் 1890-ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தைக் கண்டுபிடித்தார்.[2]

வரலாறு

தொகு

பிரித்தானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது, கோடை கால வெப்பத்தைத் தவிர்க்க இங்கு வந்து தங்கினர். நாளடைவில் இந்த இடம் ஓர் உல்லாச மையமாக மாறியது. 1951-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, சர் என்றி கர்னி எனும் மலாயா உயர் ஆணையர், மலாயா பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளர்களால் இங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.[3]

1970-ஆம் ஆண்டுகளில் பல குழிப்பந்தாட்டத் திடல்கள் உருவாக்கப்பட்டன. புதுக் கட்டடங்கள் கட்டப்பட்டன. பிரேசர் மலையின் இயற்கை அழகு சிதையத் தொடங்கியது. இதை அறிந்த பகாங் மாநில அரசு, 2010-ஆம் ஆண்டில் இருந்து பிரேசர் மலையில், எந்த ஒரு நிலையான கட்டடத்தையும் எழுப்பக் கூடாது என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.[4]

காலநிலை

தொகு

பிரேசர் மலையின் சுற்றுப் பகுதிகளில் ஏழு மலை உச்சிகள் உள்ளன. இவை 1,220 - 1,524 மீட்டர் உயரத்தில் உள்ளன. பிரேசர் மலை 1280 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கோடை காலங்களில் அதிக பட்ச வெப்பநிலை 25 டிகிரி சென்டிகிரேடு. குறைந்த பட்ச வெப்ப நிலை 17 டிகிரி சென்டிகிரேடு.

பொதுவாக எல்லாக் காலங்களிலும் மழை பொழியும். ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையில் குறைந்த அளவில் மழை. அந்த மாதங்களில் பிரேசர் மலைக்குச் செல்வது சிறப்பாக அமையும்.[5]

வரலாறு

தொகு

மலேசியாவில் அரிதாகக் காணப்படும் மாசு மருவற்ற, தூய்மையான பல்லுயிர்மக் காடுகளில் பிரேசர் மலையும் ஒன்று.[6] இப்படி ஒரு தூய்மையான பச்சைக் காடுகள் இருப்பதை முதன்முதலில் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியவர் எச்.என்.ரிட்லி. ‘ரப்பர் ரிட்லி’ என்று அன்பாக அழைக்கப்படும் சர் என்றி ரிட்லி, மலேசிய ரப்பரின் தந்தை என்றும் புகழாரம் செய்யப் படுகிறார்.[7]

லூயிஸ் ஜேம்சு பிரேசர் (Louis James Fraser) எனும் ஸ்காட்லாந்துகாரரின் பெயரில் இருந்து பிரேசர் மலையின் பெயர் உருவகம் பெற்றது. 1890-இல் இவர் ஈயக் கனிம வணிகத் தளத்தை உருவாக்கினார்.[8][9] அதற்கு முன்னர் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள், தித்திவாங்சா மலைத்தொடரை நிலஆய்வு செய்யவில்லை. எனவே, தித்திவாங்சா மலைத்தொடரின் மேல் மடுக்களை ஆய்வு செய்வதற்காக உள்ளூர்வாசிகள் சிலரைத் தேர்வு செய்தார்.

அழகான காடுகள்

தொகு
 
பிரேசர் மலை குழிப்பந்தாட்ட கூடலகம்

தங்கம் அல்லது விலையுள்ள கனிமங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே பிரேசரின் தலையாய நோக்கமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் பேராக் மாநிலத்தின் தைப்பிங், ஈப்போ, கம்பார் போன்ற இடங்களில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு நில ஆய்வு செய்யும் போது, அங்கே மிகப் பழமையான மிக அழகான காடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். எங்கு பார்த்தாலும் அழகிய பெரணிகள், மலைப்பாசிகள் மண்டிய மரங்கள். அத்துடன் அவை மேக மூட்டங்களால் சூழப்பட்டு எப்போதுமே ஈரப்பசையுடன் காட்சி அளித்தன.

கேப் பாறைப் பிளவுகள்

தொகு

சில இடங்களில் ஈயப் படிவங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தார். சீனத் தொழிலாளர்களைக் கொண்டு ஒரு ஈயச் சுரங்கத்தையும் திறந்தார். பிரேசர் மலைக்கு கீழே பாறைப் பிளவுகள் உள்ளன. இவற்றை இப்போது கேப் (The Gap) என்று அழைக்கிறார்கள். இது ஒரு குறுகலான பாதையாகும். ஒரே ஒரு வாகனம் மட்டுமே செல்ல அந்தப் பாதையில் வசதி இருந்தது, இப்போது புதிதாக மேலும் ஒரு பாதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த கேப் பாறைப் பிளவுகளின் வழியாக ரவுப் நகரைச் சென்று அடையலாம். தொடக்கக் காலத்தில், மேலே இருந்து இந்த கேப் பாறைப் பிளவுகளுக்கு வந்து சேர ஒரு செங்குத்தான பாதை வெட்டப்பட்டது. அந்தப் பாதையின் வழியாக எருமை மாடுகள், காளை மாடுகள், குதிரைகள், யானைகள் போன்ற விலங்குகளைப் பயன்படுத்தி, ஈயக் கனிமங்களைக் கொண்டு வந்தார்கள்.[10] ஈயக் கனிமங்கள் சாக்குகளில் கட்டப்பட்டு, பின்னர் ரவுப் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டன.

ஈயப் பள்ளங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சூதாட்டம் அறிமுகமானது. அடுத்து அபின் பழக்கம் பரவலானது. அந்த வகையில் ஜேம்ஸ் பிரேசருக்கு வருமானமும் பெருகியது.[11]

காணாமல் போன ஜேம்ஸ் பிரேசர்

தொகு
 
பிரேசர் மலை அஞ்சலகம்

அதன் பின்னர், ஜேம்ஸ் பிரேசரின் பெயர் மலாயா வரலாற்றில் இருந்து காணாமல் போனது. அவருக்கும் அவருடைய தொழிலாளர்களுக்கும் என்ன ஆனது என்பதும், இதுவரையில் இன்னும் மர்மமாகவே உள்ளது. 1900-ஆம் ஆண்டு அவர் காணாமல் போனார்.[12]

1917-இல், சிங்கப்பூரைச் சேர்ந்த சி.ஜே.பெர்குசன் டேவி (C. J. Ferguson-Davie) எனும் பாதிரியார் ஜேம்ஸ் பிரேசரைத் தேடிச் சென்றார். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும், அந்த இடம் ஒரு சுகவாசத்தளம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக அமையும் என்று அறிவித்தார். கோடை கால வெப்பத்தைத் தணிப்பதற்கு ஏற்ற நல்ல இடமாக இருப்பதாகவும் சொன்னார்.[13]

பிரேசர் மலையைப் பற்றி பிரெஞ்சு நாவல்

தொகு

1919-இல் அங்கே ஓர் அணுகு சாலை அமைப்பதற்கான வேலைகள் தொடங்கின. 1922-இல் ஒரு குறுகிய சாலை அமைக்கப்பட்டது. அதே ஆண்டு பிரேசர் மலை சுகவாசத்தளம் பொது மக்களுக்கு திறந்துவிடப் பட்டது. பிரேசர் மலை சுகவாசத்தளம் 140 எக்டர் பரப்பளவைக் கொண்டது. 50 கி.மீ. காட்டுப் பாதைகள் உள்ளன.

1927-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி அங்கே 9 வளமனைகள், 4 அரச வீடுகள், 3 தனியார் வீடுகள், ஒரு குழிப் பந்தாட்ட கூடலகம், ஓர் அஞ்சலகம் இருந்தன. அஞ்சலகம் 1923-இல் கட்டப்பட்டது. இதற்கு அருகில் ஒரு போலீஸ் நிலையம் உள்ளது. இது 1919-இல் கட்டப்பட்டது.[14]

1951-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, சர் என்றி கர்னி எனும் மலாயா உயர் ஆணையர், கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளால் இங்கு தான் சுட்டுக் கொல்லப் பட்டார். பிரேசர் மலையைப் பற்றி என்றி பாகோனியர் எனும் பிரெஞ்சு நாவலாசிரியர் மலாயாவின் உயிர் (The Soul of Malaya) எனும் நாவலை எழுதி, உலக மக்களுக்குப் பரவலாகத் தெரிய வைத்தார். அந்த நாவலுக்குப் பரிசுகளும் கிடைத்து உள்ளன.[15]

படத் தொகுப்பு

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "About 103km from Kuala Lumpur is an area of seven hills originally named Ulu Tras just coming down the Titiwangsa Range". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2014-12-29.
  2. Fraser's Hill is named after Louis James Fraser, a Scotsman who prospected for gold in Australia but eventually struck tin here instead in the 1890s.
  3. On 6th October 1951, on a lonely stretch of winding road between Kuala Lumpur and Fraser’s Hill, Sir Henry Gurney, the High Commissioner for the Federation of Malaya was murdered by communist terrorists (CTs).
  4. The Pahang state government has sensibly ruled out further encroachment into the surrounding virgin forest having seen the damage caused in Cameron Highlands.
  5. Visitors and tourists can visit Fraser's Hill throughout the year, but expect heavy mist and ocassional rainfall most times.
  6. Fraser’s Hill encompasses pristine highland forests on steep terrain.
  7. He conducted experiments with Para rubber trees (Hevea brasiliensis) that convinced him of the enormous economic potential of rubber as a plantation crop.
  8. Fraser's Hill பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம், JourneyMalaysia.com
  9. Fraser's Hill, Pahang Tourism
  10. Louis James Fraser, operated a primitive mule train and embarked on the lucrative trade in tin ore.
  11. To supplement his income, and recycle his workers wages Fraser operated a gambling and opium den at the workers’ camp.
  12. "Fraser's legacy came to an abrupt end when he went missing in 1900. Fraser's fate still remains a mystery till today". Archived from the original on 2015-02-12. பார்க்கப்பட்ட நாள் 2014-12-29.
  13. History பரணிடப்பட்டது 2010-07-03 at the வந்தவழி இயந்திரம் (2 pages), Fraser's Hill Development Corporation (FHDC)
  14. [http://www.fraserssilverpark.com/generalinfo.html In the Fraser's Hill Town Center is the Post Office which dates back to 1923. Beside the Post Office is the Police Station which was built in 1919.
  15. "Henri Fauconnier, a reknown novelist even mentioned the Gap resthouse in his 1930's prize winning novel, 'The Soul of Malaya'". Archived from the original on 2014-12-30. பார்க்கப்பட்ட நாள் 2014-12-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசர்_மலை&oldid=4091774" இலிருந்து மீள்விக்கப்பட்டது