மவூ, உத்தரப் பிரதேசம்
மவூ (Mau) தற்போது மவூனத் பஞ்சன் என்றும் அழைக்கப்படும் இது, ஓர் தொழில்துறை நகரமும் மவூ மாவட்டத்தின் தலைமையகமுமாகும். இது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரம் புடவைத் தொழிலுக்கு பெயர் பெற்றது. இது இந்த நகர மக்களின் பாரம்பரிய வணிகமாகும். மேலும், பல நூற்றாண்டுகள் பழமையான கலை ஆகும். [2]
மவூ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°56′30″N 83°33′40″E / 25.94167°N 83.56111°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மவூ |
அரசு | |
• வகை | நகராட்சி நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 20 km2 (8 sq mi) |
ஏற்றம் | 63 m (207 ft) |
மக்கள்தொகை (2011)[1] | 2,78,745 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, உருது |
• பிராந்திய மொழி | போச்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 275101 |
தொலைபேசி இணைப்பு எண் | +0547 |
வாகனப் பதிவு | உபி-54 |
பாலின விகிதம் | 978 (2011ன்படி) ♀/♂ |
இணையதளம் | www |
வரலாறு
தொகுவரலாற்று மற்றும் தொல்லியல் பார்வையில், மவூ இப்பகுதியில் உள்ள பழமையான இடங்களில் ஒன்றாகும். பழங்கால கலாச்சார மற்றும் தொல்லியல் எச்சங்கள் இப்பகுதியில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது இப்பகுதியில் மனித வாழ்விடத்தின் நீண்ட வரலாற்றின் போதுமான ஆதாரங்களை அளிக்கிறது. மவூவின் அறியப்பட்ட தொல்லியல் வரலாறு சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. முழுப் பகுதியும் அடர்ந்த காடுகளின் கீழ் இருந்தது. தம்சா ஆற்றோரம் வாழ்ந்தவர்கள், பழமையான குடிமக்களாகவும், இப்பகுதியின் ஆட்சியாளர்களாகவும் கருதப்படுகின்றனர். [3]
மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் உள்ள பதிவுகளின்படி, கி.பி. 1028இல் மன்னர் சையத் சலர் மசூத் காசி ஒரு பெரிய இராணுவத்துடன் இப்பகுதியை கைப்பற்ற வந்தான். ஆனால் அவன் ஆப்கானித்தானுக்குத் திரும்பிச் சென்றார். மேலும் அவன் தனது அதிகாரிகளில் சிலரை இப்பகுதியில் விட்டுச் சென்றான். ஒரு சூபி துறவி பாபா மாலிக் தாகிர் என்பவரும், அவரது சகோதரர் மாலிக் காசிம் ஆகியோர் மீதமுள்ள குழுவில் இருந்தனர். மவூ நகரில் இந்த இரண்டு புனிதர்களின் பெயரில் மாலிக் தாகிர் புரா, காசிம் புரா போன்ற இடங்கள் உள்ளன. மாலிக் தாகிரின் கல்லறை மாலிக் தாகிர் புராவிலும் உள்ளது, இது மசார் மாலிக் தாகிர் பாபா என்று உள்ளூரில் அறியப்படுகிறது. [4]
1540-1545 ஆம் ஆண்டில், உமாயூனைத் தோற்கடித்த புகழ்பெற்ற பேரரசர் சேர் சா சூரி, தனது ஆட்சியின் போது சிறந்த சூபி துறவி சையத் அகமத் வாத்வாவைச் சந்திக்க கொழுவவன் (மதுபன்) சென்றார்.
[5] சேர் சாவின் மகள்களில் ஒருவரான மக்வானி சையத் வாத்வாவின் தர்காவுக்கு அருகில் நிரந்தரமாக குடியேறினார். முகலாயப் பேரரசர் அக்பர் அலகாபாத்திற்குச் செல்லும் வழியில் மவூ வழியாகச் சென்றதாக ஜியாவுதீன் பர்னியின் வரலாற்றுப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அப்போது, முகலாயப் படையுடன் வந்த ஈரான், ஆப்கானித்தான், துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளிகளும், கைவினைக் கலைஞர்களும் நிரந்தரமாக இங்கு குடியேறினர். இந்த கைவினைஞர்கள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் கலையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். மேலும், கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் கைத்தறி தொழில் படிப்படியாக அழிந்த போதிலும், மவூவின் புடவைத் தொழில் இன்னும் அப்பகுதியில் கைவினைப்பொருட்களின் கடைசி கோட்டையாக உள்ளது. இது கடந்த நூற்றாண்டின் இறுதி வரை செழித்தோங்கிய பகுதியாக இருந்தது. அக்பரின் மகள்களில் ஒருவரான ஜஹானாரா பேகமும் ஒரு பள்ளிவாசலைக் கட்டி அந்தப் பகுதியில் குடியேறியதாக நம்பப்படுகிறது. பள்ளிவாசலின் அசல் அமைப்பு இப்போது எதுவும் எஞ்சியிருக்கவில்லை. ஆனால் அந்த இடம் சாகி கத்ரா என்று அழைக்கப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் அதன் கடந்த கால பெருமையை நினைவூட்டும் வகையில் ஒரு சாகி பள்ளிவாசல் உள்ளது. [6]
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, மவூ மக்கள் இயக்கத்திற்கு முழு ஆதரவை வழங்கினர். மேலும் மகாத்மா காந்தியும் 1939இல் மாவட்டத்தின் தோகாரிகாட் பகுதிக்கு வந்திருந்தார். [4]
1932 ஆம் ஆண்டில், அசம்கர் தனி மாவட்டமாக மாற்றப்பட்டது. 1988ஆம் ஆண்டு வரை மவூ பகுதி அதன் ஒரு பகுதியாக இருந்தது. 1988ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி மவூ மாவட்டத்தின் தற்போதைய பகுதி அசம்கரிலிருந்து பிரிக்கப்பட்டு, மவூ தனி மாவட்டமாக மாற்றப்பட்டது. அதில் அப்போதைய மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சராக இருந்த கல்பநாத் ராய் ஒரு முக்கியப் பங்கு வகித்தார். புதிய தொடருந்து நிலையம், மைதானம் உள்ளிட்ட நகரின் வளர்ச்சிப் பணிகளையும் நகரத்தில் தொடங்கினார். [7]
பொருளாதாரம்
தொகுமவூ கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் தொழில் நகரமாகும். வாரணாசி, முபாரக்பூர் போன்ற இடங்களின் நெசவுத் தொழிலின் மறைவுக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தின் துணி மையங்களின் கடைசி கோட்டையாக மவூ உள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் 1998-99 கணக்கெடுப்பின்படி, 58,381 விசைத்தறிகள் இங்கிருப்பதாகத் தெரியவருகிறது.[8]
புள்ளிவிவரம்
தொகு2011இன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மவூவின் மக்கள் தொகை 278,745 ஆகும். இதில் 142,967 ஆண்களும், 135,778 பெண்களும் இருக்கின்றனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 42216 ஆகும். இது மவூவின் மொத்த மக்கள் தொகையில் 15.15% ஆகும். பெண் பாலின விகிதம் மாநில சராசரி 912 க்கு எதிராக 950 ஆகவும், குழந்தை பாலின விகிதம் 952 ஆகவும், உத்தரப் பிரதேச மாநில சராசரி 902 உடன் ஒப்பிடும்போது 952 ஆகவும் உள்ளது. நகரின் கல்வியறிவு விகிதம் 77.13% ஆகும். இது மாநில சராசரியான 67.68% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 82.37% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 71.60% ஆகவும் உள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Uttar Pradesh (India): State, Major Agglomerations & Cities – Population Statistics, Maps, Charts, Weather and Web Information". citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
- ↑ "UP's silk saree sector gets a raw deal". Business Standard India. Press Trust of India. 29 June 2005. https://www.business-standard.com/article/markets/up-s-silk-saree-sector-gets-a-raw-deal-105062901045_1.html.
- ↑ "History | District Mau, Uttar Pradesh Government | India".
- ↑ 4.0 4.1 "History | District Mau, Uttar Pradesh Government | India"."History | District Mau, Uttar Pradesh Government | India".
- ↑ "Sufi saint's abode now Uttar Pradesh don's den". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012-02-10. Archived from the original on 2013-09-13. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
- ↑ "Sufi saint's abode now don's den | Lucknow News - Times of India".
- ↑ Kumar, Vinay (10 February 2012). "In Mau, a complex tapestry of caste and religion". The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/in-mau-a-complex-tapestry-of-caste-and-religion/article2879547.ece.
- ↑ "GI Tag: Varanasi-Mau-Bhadohi leading in UP". Smetimes.in. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
- ↑ "Maunath Bhanjan Nagar Palika Parishad City Population Census 2011-2021 | Uttar Pradesh". Census 2011. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.