மிசேல் ஆனந்தராஜா
மிசேல் ஆனந்தராஜா (Michelle Ananda-Rajah) ஆத்திரேலிய மருத்துவரும், அரசியல்வாதியும் ஆவார். இலங்கைத் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட இவர் 2022 ஆத்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.[1][2] அரசியலில் நுழைவதற்கு முன்பு, இவர் ஒரு மருத்துவ-அறிவியலாளரும், தொற்று நோய் மருத்துவராகவும் பணியாற்றினார்.[3] ஆத்திரேலிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவான இலங்கைத் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட முதலாமவர் இவராவார்.
மிசேல் ஆனந்தராஜா Michelle Ananda-Rajah | |
---|---|
இகின்சு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மே 2022 | |
முன்னையவர் | கேட்டி அலன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | தொழிற்கட்சி |
முன்னாள் கல்லூரி | மெல்பேர்ண் பல்கலைக்கழகம் (முனைவர்) சிட்னி பல்கலைக்கழகம் (மருத்துவப் பட்டம் (சிறப்பு)) |
தொழில் | மருத்துவர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇங்கிலாந்தில் பிறந்த மிசேல், இலங்கைத் தமிழ்ப் பின்னணியைக் கொண்டவர்.[4] இவரது பதினோராவது அகவை வரை சாம்பியாவில் பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். தந்தை ஒரு பட்டயக் கணக்காளர். தாயார் ஐநாவின் நமீபியா நிறுவனத்தில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியவர்.[4] அங்கிருந்து குடிவரவாளர்களாக பெற்றோருடன் ஆத்திரேலியாவிற்குக் குடி பெயர்ந்தார். சிட்னி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1997 இல் மருத்துவப் பட்டம் பெற்றார்.[4] பின்னர் 2004 இல் மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[4] 25 ஆண்டுகளாக நாட்டின் பெரிய பொது மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், 2020-21 கோவிடு பெருந்தொற்றுக் காலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்குச் சிறந்த உடல்நலம் மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கான நியமங்கள் குறித்து வாதிட்ட ஒரு செயற்பாட்டாளராகவும் இருந்திருக்கிறார்.[4]
இவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆவார்.[4]
அரசியலில்
தொகுமிசேல் ஆனந்தராஜா 2022 ஆத்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் விக்டோரியா மாநிலத்தின் மெல்பேர்ணின் தென்கிழக்குப் புறநகர்ப் பகுதியான இகின்சு (Higgins) தொகுதியில் ஆத்திரேலியத் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். 1949 இல் உருவாக்கப்பட்டதில் இருந்து லிபரல் கட்சி வசம் இருந்த இத்தொகுதியில் முதல் தடவையாக தொழிற்கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர்கள் ஹரல்ட் ஹோல்ட், சேர் ஜோன் கோர்ட்டன், முன்னாள் கருவூலக் காப்பாளர் பீட்டர் கொஸ்டெல்லோ ஆகியோர் இத்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முக்கிய லிபரல் கட்சி அரசியல்வாதிகள் ஆவர். 2022 தேர்தலில் மிசேலுக்கு 53.03% வாக்குகளும், லிபரல் கட்சி வேட்பாளரான கேட்டி அலனுக்கு 46.97% வாக்குகளும் பதிவாயின.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Labor on track to win marginal seats of Chisholm and Higgins from Liberal Party" (in en-AU). ABC News. 21 May 2022. https://www.abc.net.au/news/2022-05-21/chisholm-higgins-2022-federal-election-result-labor-liberal/101079678.
- ↑ "Too little too late: voters turn on Morrison in affluent seat of Higgins" (in en). the Guardian. 19 May 2022. https://www.theguardian.com/australia-news/2022/may/20/federal-electorate-seat-higgins-too-little-too-late-voters-turn-on-morrison-in-affluent-melbourne-seat-2022-australian-election.
- ↑ https://amavic.com.au/about-us/ama-victoria-board/2021-director-elections/dr-michelle-ananda-rajah
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Melbourne Doorstop Interview with Labor Candidate for Higgins Dr Michelle Ananda-Rajah". 13 நவம்பர் 2021. https://anthonyalbanese.com.au/media-centre/melbourne-doorstop-interview.
- ↑ Higgins, VIC பரணிடப்பட்டது 2022-05-21 at the வந்தவழி இயந்திரம், 2022 Tally Room, Australian Electoral Commission.