முதனெடுங்கோடு

(முதன்மை நிரைக்கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முதனெடுங்கோடு அல்லது முதன்மை நெடுங்கோடு (prime meridian) புவியியல் ஆள்கூற்று முறையில் 0°ஆக வரையறுக்கப்பட்டுள்ள நிலநிரைக்கோடு ஆகும். இதற்கு நேரெதிராக 180வது நிரைக்கோடு அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து 360°-பாகைகள் கொண்ட பெரு வட்டத்தை முழுமையாக்குகின்றன. இந்தப் பெருவட்டம் புவியின் கோளத்தை இரண்டு அரைக்கோளங்களாகப் பிரிக்கின்றன. ஒரு வரையறுக்கப்பட்ட முதனெடுங்கோட்டிலிருந்து கிழக்கிலிருந்து மேற்காகச் சென்றால் இந்த அரைக்கோளங்களை கிழக்கு அரைக்கோளம் என்றும் மேற்கு அரைக்கோளம் என்றும் பிரிக்கலாம்.

Line across the Earth
Prime Meridian
1595ஆம் ஆண்டு மெர்கேடர் வடிவமைத்த நிலப்படத்தில் (அட்லாசு காசுமோகிராபிகே) அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள சான்டா மாரியா தீவுகளுக்கு அண்மித்து சென்ற, தற்போதைய 25°மே நெட்டாங்குகளை இணைக்கும் நெடுங்கோட்டை, முதன்மை நெடுங்கோடாக வரையறுத்திருந்தார்; தொடர்புள்ள எதிர்நெட்டாங்கு பேரிங் நீரிணை வழியாகச் சென்றது.

இந்த முதன்மை நெடுங்கோடு, நிலநடுக் கோடு போலன்றி முழுதும் தன்னிச்சையானது. சுழற்சி அச்சினாலும் பல மரபுநெறிகளாலும் உலக வரலாற்றில் பல்வேறு மண்டலங்களால் பல்வேறாக வரையறுக்கப்பட்டு வந்துள்ளது.[1] தற்போது மிகவும் பரவலாக பின்பற்றப்படும் நெடுங்கோடு பன்னாட்டு புவிச் சுழற்சி மற்றும் உசாக்குறிப்பு அமைப்புச் சேவையின் உசாக்குறிப்பு நெடுங்கோடாகும். இது 1884இல் பன்னாட்டு சீர்தரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரீன்விச் நெடுங்கோட்டிலிருந்து சற்றே வேறுபடுகிறது.

வரலாறு

தொகு
 
தொலெமியின் முதல் முன்மொழிவு, 1300இல் மாக்சிமசு பிளாநூட்சால் மீள வரையப்பட்டது - ஆபிரிக்காவின் கிழக்கே முதன்மை நெடுங்கோடு வரையறுக்கப்பட்டுள்ளது.

நெடுங்கோடுகளைக் குறித்த கருதுகோளை அலெக்சாந்திரியாவில் கிரேக்கர் எரடோசுதெனீசும் (c. 276 கிமு – c. 195 கிமு) ரோட்சில் ஹிப்பார்க்கசும் (c. 190 கிமு – c. 120 கிமு) முன்வைத்தனர். இதனை பல நகரங்களுக்குப் பயன்படுத்தியவர் புவியியலாளர் இசுட்ராபோ (64/63 கிமு – c. 24 கிபி) ஆவார். ஆனால் தொலெமி தான் (c. கிபி 90 – c. கிபி 168) முதலில் ஒரேசீராக தனது உலக நிலப்படங்களில் பயன்படுத்தியவராவார்; தனது ஜியோக்ராபியா என்ற நூலில் ஒரேபோல பயன்படுத்தியுள்ளார்.

அத்திலாந்திக்குத் தீவுகளான "நற்பேறு தீவுகளை" அடிப்படையாக தொலமி பயன்படுத்தினார்; இத்தீவுகள் வழமையாக கேனரி தீவுகளுடன் (13° முதல் 18°மே வரை) தொடர்பு படுத்தப்படுகின்றன. ஆனால் அவரது நிலப்படத்தில் இவை கேப் வெர்டி தீவுகளுள்ள (22° முதல் 25° மே வரை) இடத்தைக் காட்டுகின்றன. இருப்பினும் முதன்மையாக இந்த நெடுங்கோட்டை ஆப்பிரிக்காவின் மேற்கு முனைக்கு மேற்கில் (17.5° மே) பயன்படுத்தத் துவங்கினர். இதனால் எதிர்ம எண்கள் தவிர்க்கப்பட்டன. தொலமியின் முதன்மை நெடுங்கோடு 18° 40' ஆக வரையறுக்கப்பட்டது. இது தற்போதைய வின்செஸ்டருக்கு மேற்கில் (கிட்டத்தட்ட 20°மே) உள்ளது.[2] அக்காலகட்டத்தில் அந்தந்த நாடுகளில் நிலவு மறைப்புகள் நடைபெற்ற நேரத்தைக் கொண்டு நெடுங்கோடுகள் முடிவுசெய்யப்பட்டன.

தொலமியின் ஜியோக்ராபியா முதலில் 1477ஆம் ஆண்டில் போலோக்னாவில் அச்சடிக்கப்பட்டன. 16ஆம் நூற்றாண்டின் பல உலக நிலப்படங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டே வெளியிடப்பட்டன. இருப்பினும் முதன்மை நெடுங்கோட்டை வரையறுக்க "இயற்கையான" அடிப்படை உள்ளதென்று பலரும் நம்பினர். 1493இல் கொலம்பசு அத்திலாந்திக்கின் நடுவே திசைமானி மெய்வடக்கை காட்டியதாக அறிவித்தார். இது எசுப்பானியாவிற்கும் போர்த்துகல்லிற்கும் இடையே புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தீவுகளைப் பகிர்வதில் எழுந்த பிணக்குகளை தீர்க்கப் பயன்படுத்தப்பட்டது. தோர்தெசில்லாசு கோடு கடைசியில் கேப் வெர்டேக்கு மேற்கே முடிவு செய்யப்பட்டது. இது 1529ஆம் ஆண்டு டியோகோ ரிபைய்ரோ வெளியிட்ட நிலப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. சாவோ மிகுவல் தீவு (25.5°மே) இதே காரணத்திற்காக (சுழிய காந்த விலகல்) 1594 இலும் கூட பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் அக்காலகட்டத்தில் சுழிய காந்த விலகல் இருக்கும் கோடு நெடுங்கோடாக இருக்க வேண்டியதில்லை என்பது அறியப்பட்டிருந்தது.[3]

1541இல் மெர்கேட்டர் தனது புகழ்பெற்ற 41 செமீ புவிக்கோளத்தை வெளியிட்டார். இதில் முதன்மை நெடுங்கோடு கேனரித் தீவுகளில் புயுர்ட்டாவென்டுரா வழியாக (14°1'மே) வரைந்துள்ளார். இவரது பிந்தைய நிலப்படங்களில் காந்தக் கருதுகோளைப் பின்பற்றி அசோர்சை பயன்படுத்தினார். 1570இல் அபிரகாம் ஓர்டெலியசு தயாரித்த முதல் நவீன நிலப்படத்தில் கேப் வெர்டே பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் 180°மேற்கு முதல் 180°கிழக்கு வரையாக எண்ணப்படுகின்றன; ஆனால் அவருடைய நிலப்படங்களில் நெடுங்கோடுகள் 0° முதல் 360° வரை எண்ணப்பட்டன. இந்த முறையே 18ஆம் நூற்றாண்டுவரை பின்பற்றப்பட்டது.

1634இல் கர்தினால் ரிச்லியூ கேனரித் தீவுகளின் மிக மேற்கத்திய தீவான பெர்ரோ தீவை பயன்படுத்தினார். புவியியலாளர் டெலிசுலே இதனை முழுமைப்படுத்தி 20°யை பயன்படுத்த முன்மொழிந்தார். இது மறைமுகமாக பாரிசின் நெடுங்கோடு ஆகும்.[4]

18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கடலில் நெடுங்கோட்டை அறிவதற்கான துல்லியத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக யோன் அரிசன் கடற் காலமானியைக் கண்டுபிடித்தார். ஆனால் துல்லியமான விண்மீன் படங்கள் மேம்படுத்த வேண்டியிருந்தது. 1680க்கும் 1719க்கும் இடையே பிரித்தானிய வானியலாளர் ஜான் பிளேம்சுடீடும் தொடர்ந்து அவரது வாரிசு எட்மண்டு ஏலியும் நிலவின் நிலைகளை பட்டியலிட்டனர். நிலவுடனான தொலைவைக் கொண்டு கடலில் நெடுங்கோடுகளை துல்லியமாக அறிய முடிந்தது. இதற்கு தாமசு காட்பிரேயும் ஜான் ஆட்லியும் உருவாக்கிய அரைக்காற்கோளம் கருவி பயனுள்ளதாக இருந்தது. [5] 1765க்கும் 1811க்கும் இடையே நெவில் மசுகெலினே கடல்சார் நாட்கோள் குறிப்பை (பஞ்சாங்கம்) 49 பதிப்புகள் வெளியிட்டார். இதில் அரச வானாய்வகம் உள்ள கிரீன்விச் முதன்மை நெடுங்கோடாக பயன்படுத்தப்பட்டிருந்தது. "மசுகெலினேயின் அட்டவணைகள் நிலவைக் கொண்டு இருப்பிடத்தை அறிவதை நடப்பு முறையாக்கியதோடன்றி கிரீன்விச்சை முதன்மை நெடுங்கோடாக்கியது. பாரிசின் நெடுங்கோட்டை முதன்மை நெடுங்கோடாக ஏற்றுக்கொண்ட பிரான்சிய மொழிபெயர்ப்புகள் கூட மசுகெலினேயின் கிரீன்விச்சை ஏற்றுக்கொண்டன." [6]

1884இல் வாசிங்டன், டி. சி.யில் நடந்த பன்னாட்டு நெடுங்கோடு மாநாட்டில் 22 நாடுகள் கிரீன்விச்சை முதன்மை நெடுங்கோடாக ஏற்று வாக்களித்தன.[7] பிரெஞ்சு நடுநிலையான கோடாக அசோரசு அல்லது பெரிங் நீரிணைக்குப் போராடியபோதும் இறுதியில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது விலகியிருந்தது. 1911 வரை பிரான்சு மட்டும் பாரிசை முதன்மை நெடுங்கோடாக பாவித்து வந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Prime Meridian, geog.port.ac.uk
  2. Norgate & Norgate 2006
  3. Hooker 2006
  4. Speech by Pierre Janssen, director of the Paris observatory, at the first session of the Meridian Conference.
  5. Sobel & Andrewes 1998, ப. 110–115
  6. Sobel & Andrewes 1998, ப. 197–199
  7. "The Prime Meridian at Greenwich". Royal Museums Greenwich. n.d. பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.

மேற்கோளிட்ட நூல்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதனெடுங்கோடு&oldid=3225182" இலிருந்து மீள்விக்கப்பட்டது