மொகிந்தர் சிங் ரந்தவா

கலை மற்றும் கலாச்சார ஊக்குவிப்பாளர், தாவரவியலாளர்

மொகிந்தர் சிங் ரந்தவா (Mohinder Singh Randhawa) அல்லது எம். எஸ். ரந்தவா (2 பிப்ரவரி 1909 - 3 மார்ச் 1986) ஓர் பஞ்சாபி அரசு ஊழியரும், தாவரவியலாளரும், வரலாற்றாசிரியரும், கலை மற்றும் கலாச்சார ஊக்குவிப்பாளரும், முக்கிய எழுத்தாளரும் ஆவார். இந்தியாவில் விவசாய ஆராய்ச்சியை நிறுவுதல், இந்தியாவில் பசுமைப் புரட்சி, இந்தியப் பிரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பஞ்சாபியர்களை மறுவாழ்வுக்கான குடியமர்த்துதல், சண்டிகர் நகரத்தை நிறுவுதல், பஞ்சாபின் கலைகள், இந்தியாவின் விவசாய வரலாற்றை ஆவணப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகித்தார். ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியரான குல்சார் சிங் சந்து, இவருக்கு பஞ்சாபின் ஆறாவது நதி என்ற பொருளில் பஞ்சாப் தா செவான் தாரியா என்ற பெயரைக் கொடுத்தார்.[1]

எம். எஸ். ரந்தவா
சண்டிகர் சாகீர் உசேன் ரோசாத் தோட்டத்திலுள்ள ரந்தவாவின் மார்பளவு சிலை.
பிறப்பு(1909-02-02)2 பெப்ரவரி 1909
சிரா, பஞ்சாப், இந்தியா
இறப்பு3 மார்ச்சு 1986(1986-03-03) (அகவை 77)
கரார் , பஞ்சாப் , இந்தியா
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்பஞ்சாப் பல்கலைக்கழகம்
பணி
வாழ்க்கைத்
துணை
இக்பால் கௌர் ரந்தவா
பிள்ளைகள்ஜதீந்தர் சிங் ரந்தவா

சுயசரிதை தொகு

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் தொகு

மொகிந்தர் சிங் ரந்தவா 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்திலுள்ள சிராவில் ரந்தவா ஜாட் குடும்பத்தில் கோசியார்பூர் மாவட்டத்திலுள்ள போட்லான் கிராமத்தைச் சேர்ந்த செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்த சேர் சிங் ரந்தவா - பச்சிந்த் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் 1924இல் முக்த்சரில் உள்ள கல்சா உயர்நிலைப் பள்ளியில் தனது மெட்ரிகுலேசனையும், 1926, 1929இல் இளம் அறிவியல் பட்டமும், 1930இல் முதுநிலை அறிவியல் பட்டமும் இலாகூரிலிருந்து பெற்றார். அல்காவில், குறிப்பாக ஜிக்னெமேடேசியில் (பச்சை பாசிகளின் குடும்ப இழை) இவர் செய்த பணிக்காக, பஞ்சாப் பல்கலைக்கழகம், 1955 ஆம் ஆண்டில் இவருக்கு அறிவியலில் டாக்டர் பட்டம் வழங்கியது.

தொழில் தொகு

ரந்தவா 1934இல் இந்திய குடிமைப் பணியில் சேர்ந்தார். பின்னர் சகாரன்பூர், பைசாபாத், அல்மோரா, அலகாபாத், ஆக்ரா, இராய் பரேலி ஆகிய இடங்களில் பல்வேறு பதவிகளில் 1945 வரை பணியாற்றினார். இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் செயலாளராக ஒரு வருடம் பணியாற்றினார். அந்நிறுவனத்துடன் அதன் ஆரம்ப ஆண்டுகளில் தொடர்புடையவர். மேலும், இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குக் காரணமான இந்த முன்னோடி நிறுவனத்திற்கு பெரும் பங்களிப்புகளை வழங்கினார்.

1946ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடையும் தருவாயில் இருந்தபோது, தில்லியின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். 1947ஆம் ஆண்டில், ஜவகர்லால் நேரு தனது புகழ்பெற்ற "விதியுடன் முயற்சி செய்" (Tryst with destiny) என்ற உரையை நிகழ்த்திய முழு விழாவிற்கும் இவர் பொறுப்பேற்றார். துணை ஆணையராகப் பணியாற்றியபோது இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களை மீள்குடியேற உதவினார். பின்னர் 1949 இல் இவர் கூடுதல் தலைமை இயக்குநராக (புனர்வாழ்வு) அனுப்பப்பட்டார். பின்னர், பஞ்சாப் பகுதியின் தலைமை இயக்குநராக ஆனார். பின்னர் பஞ்சாபில் உள்ள அம்பாலா பிரிவுக்கு ஆனையராகப் பணியாற்றச் சென்றார். 1953 ஆம் ஆண்டில், பஞ்சாப், மேம்பாட்டு ஆணையர் மற்றும் மறுவாழ்வு ஆணையர் மற்றும் பாதுகாவலராக மக்களை மறுவாழ்வு செய்யும் பணிக்கு இவர் மீண்டும் கொண்டு வரப்பட்டார். இக்காலத்தில் பாக்கித்தானில் நிலங்களை விட்டுச் சென்றவர்களுக்கு நிலம் வழங்குவதும், இந்திய பஞ்சாபில் அவர்களுக்கு நிலம் வழங்குவதும் இவர் பொறுப்பில் இருந்தது .

1955 ஆம் ஆண்டில், புது தில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைவராகவும், இந்திய அரசின் விவசாயத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும் ஆனார். பின்னர் இவர் 1961-1964 வரை இந்திய அரசின் இயற்கை வளத் திட்டக் குழுவின் ஆலோசகராகவும், உணவு மற்றும் வேளாண் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராகவும் பணியாற்றினார். பின்னர் இவர் சூலை 1966 முதல் அக்டோபர் 1966 வரை பஞ்சாப் மூலதனத் திட்டத்தின் நிதி ஆணையராக ஆனார். பின்னர் இவர் நவம்பர் 1966இல் சண்டிகரின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டு 1968 வரை அப்பணியில் தொடர்ந்தார். 1970களில் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தராகப் பணியாற்றினார்.

1955இல் சண்டிகர் நகரத்தைத் திட்டமிடும் குழுவின் தலைவராக ராந்தவா இருந்தார். மேலும் அதன் இயற்கையை ரசிப்பதற்கு முக்கியப் பங்காற்றினார். அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும், சண்டிகார், பஞ்சாப் கலைக் கழகம், பஞ்சாபின் கலாச்சார பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகியவற்றை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார். மேலும் இவர் சண்டிகரில் பல வகையான அவென்யூ மரங்களை அறிமுகப்படுத்தினார். சண்டிகரின் சாகீர் உசேன் ரோசாத் தோட்டம்[2][3] , லூதியானாவில் பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம், பிப்ரவரி 1976இல் கட்டி முடிக்கப்பட்ட பிரோஸ்பூருக்கு அருகிலுள்ள ஆங்கிலோ சீக்கியப் போர் நினைவுச்சின்னம் ஆகியவற்றையும் நிறுவினார்.

மரணமும் அதற்குப் பிறகும் தொகு

முனைவர் ரந்தவா, மொகாலியின் கராரிலுள்ள தனது பண்ணை வீட்டில் மார்ச் 1986 மே 3 அன்று இறந்தார் பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள ஒரு நூலகத்துக்கு இவரது நினைவாக பெயரிடப்பட்டது. மேலும், இந்த நூலகம் இவரது படைப்புகளையும், இவர் பயன்படுத்திய ஆய்வக கருவிகளின் தொகுப்பையும் பராமரிக்கிறது.[4]

சான்றுகள் தொகு

  1. http://www.tribuneindia.com/2006/20060311/saturday/main1.htm
  2. "2014 Directory" (PDF). World Federation of Rose Societies. p. 194. Archived from the original (PDF) on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  3. "City of Gardens". Chandigarh City. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  4. "M.S. Randhawa Library". Punjab Agricultural University.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகிந்தர்_சிங்_ரந்தவா&oldid=3569020" இலிருந்து மீள்விக்கப்பட்டது