யோசப் வாசு

(யோசேப்பு வாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனித யோசப் வாசு (Saint Joseph Vaz, CO, கொங்கணி மொழி: Bhagivont Zuze Vaz, டச்சு: José Vaz, 21 ஏப்ரல் 1651 - 16 சனவரி 1711), இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இவர் கண்டி இராச்சியத்தில் தங்கியிருந்து இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையை மீளமைத்தார்.

புனித யோசப் வாசு
Saint Joseph Vaz, C.O.
இலங்கையின் திருத்தூதர்
கத்தோலிக்க குரு, மறைபணியாளர்
பிறப்பு(1651-04-21)21 ஏப்ரல் 1651
பெனோலிம், கோவா, போர்த்துகேய இந்தியா
இறப்பு16 சனவரி 1711(1711-01-16) (அகவை 59)
கண்டி, கண்டி இராச்சியம்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
(இந்தியா, இலங்கை)
அருளாளர் பட்டம்21 சனவரி 1995, கொழும்பு, இலங்கை by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
புனிதர் பட்டம்14 சனவரி 2015, காலிமுகத் திடல் பூங்கா, கொழும்பு, இலங்கை by திருத்தந்தை பிரான்சிசு
முக்கிய திருத்தலங்கள்புனித யோசப் வாஸ் வணக்கத்தலம்,
முடிப்பு, பந்த்வால், கருநாடகம், இந்தியா
திருவிழா16 சனவரி
பாதுகாவல்இலங்கையும் அந்நாட்டு மக்களும்

கத்தோலிக்கர்களுக்கு இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்பட்டார். 1995 சனவரி 21 ஆம் நாள் கொழும்பு நகரில் இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார். 2015 சனவரி 14 அன்று திருத்தந்தை பிரான்சிசு காலிமுகத் திடலில் வைத்து புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.[1]

யாழ்ப்பாணம் வருகை

தொகு

கி.பி. 1685 ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு ஏப்ரலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒல்லாந்தர் கால்வினிசத்தைப் பின்பற்றியவர்கள். எனவே கத்தோலிக்கரையும், குருமாரையும் கொலை செய்தனர். பாடசாலைகளைத் தரைமட்டமாக்கினர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால்நடையில், 24 ஆண்டுகளாகப் வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார்.

கண்டிக்கு விஜயம்

தொகு

1692 இல் கண்டிக்குச் சென்ற வாஸ் அடிகளார், அங்கு றோமன்-கத்தாலிக்க மதத்தை மீளத் தாபிக்கப் பெருமுயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த வாஸ் அடிகள் 1696 இல் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார். 1710 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பரி. வியாகுலமாதா கோயில் வளவில் சிறு ஓலைக் கோயில் கட்டிப் பலி ஒப்புக் கொடுக்கும் போது காட்டிக் கொடுக்கப்பட்டு மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார்[2]. 1711 ஆம் ஆண்டில் கண்டியில் காலமானார்.

தமிழருக்கும் சிங்களவருக்கும் பணி

தொகு

வாஸ் அடிகளார் இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் நடுவிலும் சிங்கள மக்கள் நடுவிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திருவிவிலியத்தை தமிழிலும் சிங்களத்திலும் பெயர்த்தார்.[3]. அந்த இருமொழிகளிலும் மக்கள் கடவுளை வழிபடுவதற்கான நூல்களையும் இயற்றினார்.

மடு நகரில் அமைந்துள்ள அன்னை மரியா கோவிலைப் புதுப்பித்துக் கட்டுவதற்கு வாஸ் அடிகளார் துணைபுரிந்தார். மேலும், கிறிஸ்தவ நம்பிக்கையை இலங்கையில் பரப்புகையில், அந்தந்த மக்களின் பண்பாட்டுப் பாணிகளை மதிக்க வேண்டும் என்பதிலும் அவர் கருத்தாயிருந்தார். மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து, கடவுள் நம்பிக்கையில் மக்கள் வளர வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருந்தது.

அருளாளர் பட்டம்

தொகு

இன்று "இலங்கையின் அப்போஸ்தலர்" என அழைக்கப்படும் யோசப் வாஸ் அடிகளார், 1995, சனவரி 20 இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கொழும்பு வந்திருந்த போது சனவரி 21 இல் காலிமுகத்திடலில் இடம்பெற்ற திருச்சடங்கின் போது யோசப் வாஸ் அருளாளர் பட்டம் பெற்றவராக அறிவிக்கப்பட்டார்[4]

புனிதர் பட்டம்

தொகு

திருத்தந்தை பிரான்சிசு 2015, சனவரி 14 அன்று, தனது இலங்கை திருப்பயணத்தின்போது காலி முகத்திடலில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் வாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். வழக்கமாக புனிதர்பட்டமளிப்புக்கு தேவைப்படும் இரண்டாம் புதுமையினை வேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிசு வாஸ் அடிகளாருக்குப் விதிவிலக்கு அளித்தார் என்பது குறிக்கத்தக்கது. இவர் இலங்கையில் முதலாவது புனிதர் பட்டம் பெறுபவர் அவராவார். இந்த நிகழ்வில் திருத்தந்தையிடம் ஆசிபெறுவதற்காக (4 இலட்சத்திற்கு மேற்றபட்ட) பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Goan-born Joseph Vaz granted sainthood by Pope Francis in Sri Lanka". First Post. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2015.
  2. பிரான்சிஸ், எஸ்., நூறு வருட மட்டுநகர் நினைவுகள், அன்பு வெளியீடு, ஆரையம்பதி, 1994
  3. தமிழருக்கும் சிங்களவருக்கும் பணியாற்றிய அடிகளார்
  4. EUCHARISTIC CELEBRATION FOR THE BEATIFICATION OF FATHER JOSEPH VAZ, Libreria Editrice Vaticana

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசப்_வாசு&oldid=3226404" இலிருந்து மீள்விக்கப்பட்டது