ராக்கி மலைத்தொடர்

வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலுள்ள ஒரு மலைத்தொடர்

ராக்கி மலைத்தொடர் (Rocky Mountains) பொதுவாக ராக்கீசு என்று அழைக்கப்படுகிறது. இம் மலைத்தொடர் வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள ஓர் பெரும் மலைத்தொடர் ஆகும். கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தின் வடக்கில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம் வரை 3,000 மைல்களுக்கு (4,300 கிமீ) நீண்டுள்ளது. சில இடங்களில் இதன் அகலம் 300 மைல்களுக்கும் அதிகம். அலாசுக்கா, கனடாவிலுள்ள புரூக் மலைத்தொடர் இதன் நீட்சியாகவும் பார்க்கப்படுகிறது. கொலராடோ மாநிலத்திலுள்ள 14,433 அடி உயரமுடைய எல்பர்ட் மலை ராக்கி மலைத்தொடரின் மிக உயரமான மலையாகும்.[1] இன்று இம்மலைத்தொடர் பூங்காக்களாவும் மிகப்பெரிய பொழுதுபோக்கு சுற்றுலா தலங்களாகவும் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மலையேற்றம், பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய மலைத்தொடர் இதுவாகும். வட அமெரிக்க மலையடுக்குத் தொடருக்குள் ராக்கீசு மலைத்தொடர், பசிபிக் கரையோரப் பகுதிகள் மற்றும் காசுகேட் தொடர் மற்றும் சியரா நெவாடா ஆகிய மலைத் தொடர்களிலிருந்து சற்று வித்தியாசமாக சற்று வேறுபட்டு காணப்படுகிறது. இவை அனைத்தும் மேலும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன.

ராக்கி மலைத்தொடர்
ராக்கீசு
Mountain range
நாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா
பகுதிகள் பிரிட்டிசு கொலம்பியா, ஆல்பர்ட்டா, யடகோ, மொன்டானா, வயோமிங், யூட்டா, கொலராடோ, நியூ மெக்சிகோ
பகுதி பசிபிக் பெரும் மலைத்தொடர்
மிகவுயர் புள்ளி எல்பர்ட் மலை
 - உயர்வு 14,440 அடி (4,401 மீ)
 - ஆள்கூறுகள் 39°07′03.90″N 106°26′43.29″W / 39.1177500°N 106.4453583°W / 39.1177500; -106.4453583
Geology தீப்பாறை, படிவுப்பாறை,
Period கேம்பிரியாவுக்கு முந்தைய பாறை, களிமண்ணாய காலம்

சுமார் 55-80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு லாராமைடு மலையாக்கச் செயல்முறையில் ராக்கி மலைத்தொடர் உருவாகியிருக்கலாம். இக்காலத்தில் வட அமெரிக்க நில பலகையின் மீது பசிபிக் நிலப்பலகை மோதி ஏற்பட்ட விளைவால் வட அமெரிக்க கண்டத்தில் பல மலைத்தொடர்கள் உருவாகின, இதில் முதன்மையானதும் நீளமானதும் ராக்கி மலைத்தொடர் ஆகும். பசிபிக் பலகை குறைவான ஆழத்தில் வட அமெரிக்க பலகைக்கு கீழ் பல ஆண்டுகளாக சென்றதால் ராக்கி மலைத்தொடர் ஏற்பட்டது, அதனாலாயே கடற்கரைக்கு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கொலராடோ மாநிலத்தில் இம்மலைத்தொடர் உள்ளது. பனியாறுகள் மூலமும் நிலத்தில் ஏற்பட்ட பல்வேறு விசைகள் மூலமும் ஏற்பட்ட அரிப்பால் பாறைகள் உருமாறி பல்வேறு முகடுகளும் வடிவங்களும் தோன்றின. பனிக்காலத்தின் முடிவில் மாந்தர்கள் இப்பகுதியில் வாழ ஆரம்பித்தார்கள். அலெக்சாண்டர் மெக்கன்சி, போன்ற ஐரோப்பியர்களாலும், இலூயிசு மற்றும் கிளார்க் போன்ற அமெரிக்கர்களாலும் இம்மலைத் தொடரில் தனிமங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும் நிறைய மாந்தர்கள் இங்கு குடியேறாததால் இது மக்கள் அடர்த்தி குறைந்த இடமாகவே உள்ளது.

மலைப்பகுதிகளில் பெரும்பாலானவை பொது பூங்காக்கள் மற்றும் வன நிலங்களால் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் ராக்கி மலைத்தொடர் உள்ளது, குறிப்பாக நடைபயணம், முகாம், மலையேறுதல், மீன்பிடித்தல், வேட்டை, மலையேற்றம், பனிச்சறுக்கு போன்ற நடவடிக்கைகள் இதற்கு உதவுகின்றன.

பெயர்க்காரணம் தொகு

அல்கொங்குவானுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு அமெரிக்க இந்தியன் மொழிபெயர்ப்பிலிருந்து ராக்கி மலைத்தொடர் என்ற பெயர் வந்துள்ளது. 1752 ஆம் ஆண்டில் யாக்குவசு லெகார்டியுர் டி செயிண்ட் பியர் என்ற பத்திரிகையில் தற்போதைய பெயரை ஒரு ஐரோப்பியர் முதலில் குறிப்பிட்டார். அங்கு அவர்கள் இம்மலைத் தொடரை மான்டாகன்சு டி ரோச்சே என்று அழைத்தனர் [2][3].

புவியியல் தொகு

பொதுவாக ராக்கி மலைத்தொடர் என்பது கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாலுள்ள லியாட்டு ஆற்றுக்கு தென்புறத்திலிருந்தும் நியு மெக்சிகோவிலுள்ள ரியோ கிராண்டே ஆற்றுக்கு வடபுறமும் உள்ள மலைத்தொடர் என வகை படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு ஆறுகளுக்கும் அப்பால் உள்ள அலாசுக்காவின் பூருக் மலைத்தொடர், யூக்கான் மாகாணத்திலுள்ள செல்வின் மலைத்தொடர், மெக்சிகோவிலுள்ள சியர்ரா மாட்ரே மலைத்தொடர் ஆகியவை ராக்கி மலைத்தொடரில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் அவை வட, நடு, தென் அமெரிக்க கண்டங்களின் மேற்கு புறமுள்ள முதுகெலும்பு போன்ற மலைத்தொடர்களின் பாகமாகும். ஐக்கிய அமெரிக்காவின் வரையரைப்படி மொன்டானாவிலும் ஐடகோவிலும் உள்ள கேபினட் மலைத்தொடரும் சாலிசு மலைத்தொடரும் ராக்கி மலைத்தொடரைச் சார்ந்தவையாகும். இதன் இணையான கனடா பகுதியிலுள்ள கூட்டெனெய் ஆற்றின் வடபுறமுள்ள கொலம்பியா மலைத்தொடர் தனி மலைத்தொடர் ஆகக் கருதப்படுகிறது. அது ராக்கியுடன் சேர்க்கப்படவில்லை. கொலம்பியா மலைத்தொடர் ராக்கி மலைத்தொடரின் பெரும் பள்ளத்தின் மேற்கே அமைந்துள்ளது. இவ்வாழ்பள்ளத்தாக்கு பிரிட்டீசு கொலம்பியா நெடுக்கவும் மோன்டானாவின் பிளாட்கெட் ஆற்றின் நடுப்பகுதியிலிருந்து லியார்டு ஆற்றின் தென்கரை வரை பரவியுள்ளது.[4] ,ராக்கி மலைத்தொடரின் அகலம் 70 முதல் 300 மைல்கள் ஆகும்.

கொலராடோ மாநிலத்தில் டென்வருக்கு அருகிலுள்ள ராக்கி மலைத்தொடர்

ராக்கி மலைத்தொடர் என்பது ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட மலைத்தொடர்களை உடையது என்பதால் இதை ராக்கி பெரு மலைத்தொடர் என்றோ ராக்கி மலைத்தொடர் அமைப்பு என்றோ அழைப்பார்கள். பல இடங்களில் ராக்கி கடல் மட்டத்திலிருந்து 14,000 அடிக்கும் மேல் இருக்கும், இதன் மலைகள் உயரமாக தெரியாததிற்கு காரணம் அவை 4,000 அடியிலிருந்தோ 8,000 அடியிலிருந்தோ தொடங்குவதே. [5] கொலராடோவில் 14,110 அடி உயரத்திலுள்ள புகழ்பெற்ற பைக் உச்சி உலகில் அதிகளவு மக்கள் செல்லுமிடத்தில் இரண்டாவதாக உள்ளதாகும்.

கனடிய ராக்கி யூக்கானிலும் வடமேற்கு நிலப்பகுதிகளிலுமுள்ள மெக்கென்சி மலைத்தொடரையும் செல்வின் மலைத்தொடரையும், மேற்கு ஆல்பரட்டாவிலும் கிழக்கு பிரிட்டிசு கொலம்பியாவிலும் உள்ள மலைத்தொடர்களையும் உடையது, இவை ஆர்ட்டிக் ராக்கி என்றும் அழைக்கப்படும். ராக்கியின் கிழக்கு பகுதி நடு அமெரிக்க பெரும் சமவெளியின் எல்லையாக உள்ளது. மெக்கென்சி மலைத்தொடர் ராக்கி அல்ல என்ற கருத்தும் உள்ளது. அமெரிக்கா ராக்கி மலைத்தொடரில் உள்ள சில மலைத்தொடர்கள் கனடிய ராக்கி வரையறையில் இல்லை அது போலவே கனடிய ராக்கி மலைத்தொடரில் உள்ள சில மலைத்தொடர்கள் அபெரிக்க ராக்கி வரையறையில் இல்லை.

 
வயோமங்கிலுள்ள டெடான் மலைத்தொடர்

மேற்கு மோன்டானாவிலும் வடகிழக்கு யூட்டாவிலும் உள்ள லூவிசு, பிட்டர்ரூட் மலைத்தொடர்கள் ராக்கியின் வடக்கு மலைத்தொடர் பிரிவை சேர்ந்தவை, இந்த மலைத்தொடர்களில் 1 முதல் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மார் 17 மைல்களுக்கு தடிமனான அடுக்குகள் கார்பனேட்டு வண்டல் படிந்ததன் மூலம் அமைந்தன. கொலம்பிய பனிப்பகுதி ஆல்பர்ட்டாவுக்கும் பிரிட்டிசு கொலம்பியாவிற்கும் உள்ள எல்லையிலுள்ள ராக்கியில் 10,000 முதல் 13,000 அடியில் அமைந்துள்ளது. 5 மைல் நீளமும் ஒரு மைல் அகலமும் உள்ள அதாபசுகா பனியாறு இங்கு உள்ளது. கனடிய ராக்கியில் தோன்றும் நீர் பசிபிக் பெருங்கடலுக்கும் ஆர்டிக் கடலுக்கும் தோராயமாக சமமான அளவில் செல்கிறது. நடு ராக்கி என்பது வயோமிங்கிலுள்ள பெரும்கொம்பு (Bighorn) விண்டு ஆறு மலைத்தொடர்களை உள்ளடக்கியது.

தென்கிழக்கு ஐடகோவிலும் வடகிழக்கு யூட்டாவிலும் உள்ள வாசட்ச் மலைத்தொடரும் நடு ராக்கியை சேர்த்தவை. வடமேற்கு வயோமிங்கிலிருத்து மோன்டானா வரை செல்லும் அப்சார்கோகா மலைத்தொடர் வடக்கு ராக்கிக்கும் நடு ராக்கிக்கும் இணைப்பாக உள்ளது. வடக்கு ராக்கியிலும் கனடிய ராக்கியிலும் பழங்காலத்தில் பெருமளவு கார்போனேட் வண்டல் படிந்த போது காலத்தில் நடு ராக்கியிலும் குறிப்பிடத்தக்க அளவு வண்டல் படிந்தது.

 
பிரிட்டிசு கொலம்பியாலிலுள்ள ராப்சன் மலை

தெற்கு மலைத்தொடர் பிரிவு என்பது கொலராடோ, நியு மெக்சிகோ. யூட்டா, அரிசோனா, கொலராடோ, நியு மெக்சிகோ ஆகியமாநிலந்களின் பகுதியை சேர்ந்த கொலராடோ மேட்டு நிலத்தை உள்ளடக்கியது. இந்த நான்கு பிரிவு ராக்கிகளின் தோற்ற காலம், பாறைகளின் தன்மை, தோற்ற மூலம், மண், வடிகால், நிலவமைப்பு ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. மற்ற பிரிவுகளை விட தெற்கு மலைத்தொடர் உயரமான முகடுகளை அதிகம் கொண்டுள்ளது. கொலராடோ மாநிலத்தில் மட்டும் ராக்கி 14,000 அடி உயரமுடைய 53 முகடுகளை கொண்டுள்ளது. ராக்கியின் உயரமான முகடு கொலராடோவில் உள்ள 14,433 அடி உயரமுடைய எல்பர்ட் மலை ஆகும். கனடிய ராக்கியின் உயரமான உச்சி பிரிட்டிசு கொலம்பியாவிலுள்ள 12,972 அடி உயரமுள்ள ராப்சன் மலை ஆகும். அமெரிக்காவின் கண்ட வடிகால் பிரிவு ராக்கி மலைத் தொடரில் அமைந்துள்ளது. அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடல்களுக்கு நீரைக் கொண்டுவரும் வழியை இப்பிரிவு குறிக்கிறது. 8020 அடி உயரமுள்ள முப்பிரிவு உச்சி அமெரிக்காவில் உள்ள கிளேசியர் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது [6]. இவ்வுச்சியிலிருந்து நீரானது அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் மட்டும் விழாமல் அட்சன் வலைகுடாவிலும் விழுகிறது. இதனாலேயே இவ்வுச்சி முப்பிரிவு உச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. அல்பெர்டாவுக்கு வடக்கில் வெகு தொலைவில் அதாபாசுகாவும் பிற நதிகளும் மெக்கன்சி ஆற்று வடிநிலப்பகுதிக்கு தண்ணீரை அளிக்கின்றன. இத்தண்ணீர் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பியூஃபோர்ட் கடலில் [7]இருந்து வெளியேறுகிறது.

ராக்கி மலைத்தொடர்களில் மனிதர்களின் அடர்த்தி மிகுதியாக இல்லை, சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக நான்கு பேர் மற்றும் 50,000 க்கும் அதிகமான மக்களுடன் சில நகரங்கள் உள்ளன. இருப்பினும், 1950 கள் மற்றும் 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ராக்கி மலை மாநிலங்களில் மக்கள்தொகை விரைவாக அதிகரித்தது. 40 ஆண்டுகாலத்தில் மாநில அளவிலான மக்கள் தொகை அதிகரிப்பு வரம்பு மோண்டனாவில் 35% அளவுக்கும், யூட்டா மற்றும் கொலராடோவில் 150% அளவுக்கும் அதிகரித்துள்ளது. பல மலை நகரங்கள் மற்றும் சமூகங்களின் மக்கள் தொகை கடந்த 40 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. யாக்சன் ஓல் வயோமிங் பகுதிகளில் இந்த 40 ஆண்டு காலத்தில் மக்கள் எண்ணிக்கை 1,244 பேர் என்பதிலிருந்து 4,472 மக்கள் என அதிகரித்துள்ளது. இந்த உயர்வு 260% என கணக்கிடப்பட்டுள்ளது [8].

நிலவியல் தொகு

புவிமேலோட்டுப் பேரியக்க விசைகளால் ராக்கி மலைத்தொடர் உருவாக்கப்படுவதற்கு முன்னரே இம்மலைத்தொடரில் உள்ள பாறைகள் உருவாகின. கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய உருமாறிய பாறை மிகவும் பழமையான பாறையாகும். இப்பாறையே வட அமெரிக்க கண்டத்தின் மையத்தை உருவாக்குகிறது. கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய படிவான ஆர்கிலியேட் 1.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக கூறப்படுகிறது. தொல்லூழி காலத்தின் போது, மேற்கு வட அமெரிக்கா ஒரு ஆழமற்ற கடலுக்கு அடியில் அமைந்து இருந்ததாகவும், இது பல கிலோமீட்டர் அளவுக்கு சுண்ணாம்பு மற்றும் டோலமைட் ஆகியவற்றைச் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது[9].

இன்றைய கொலராடோவுக்கு அருகே உள்ள தென் ராக்கி மலைகளில் பென்சில்வேனியன் காலத்தில் இந்த மூதாதையர் பாறைகள் மலைகள் உருவாக்கத்தின் போது பாதிக்கப்பட்டன. இந்த மலையாக்கம் பிந்தைய ராக்கி மலைத்தொடர்களை உருவாக்கியது. அவை பெரும்பாலும் ஆழமற்ற கடலில் அமைக்கப்பட்ட சுண்ணாம்பு அடுக்குகள் வழியாக பிரமாண்டமான உருமாறிய பாறைகளைக் கொண்டிருந்தன [10]. இம்மலைகள் காலப்போக்கில் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அரிக்கப்பட்டு படிவுப்பாறைகளை உருவாக்கின. 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தட்டுகள் மோதி ஆண்ட்லர் ஓரோகமியை உருவாக்கின [11] 270 மில்லியன் ஆண்டுகளாக வட அமெரிக்க நிலத்தட்டு முனைக்கு அருகில் நிலத்தட்டுகளின் ஊராய்வு குவிந்திருந்தது., இது மேற்கு ராக்கி மலைத்தொடர் பகுதிக்கும் அப்பால் தொலைவில் இருந்தது. 80 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்பே ராக்கியில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன. [12]

தற்போதைய ராக்கி மலைத்தொடர் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட லார்மைட் மலைத்தொடராக்கத்தால் உருவானது ஆகும்[12]. கனடிய ராக்கி வட அமெரிக்காவிலுள்ள கனடா பகுதியை மிகப்பழைய பாறைகள் நிலத்தட்டு ஊராய்வினால் தள்ளி ஏற்பட்டது.[9] தென் கோடியிலுள்ள அமெரிக்க ராக்கியின் வளர்ச்சி நிலத்தட்டு உராய்வினாலும் பரல்லான் நிலத்தட்டு வட அமெரிக்க நிலத்தட்டின் அடியில் சொருகியதாலும் ஏற்பட்டது. குறைந்த ஆழத்தில் சொருகியதால் மலைகள் 300-500 கிமீ அப்பாலுள்ள உள் நாட்டு பகுதி ராக்கியை விட விரைவாக தோன்றின. குறைவான ஆழத்தில் நிலத்தட்டு சொருகியதால் உராய்வு அதிகரித்து வட அமெரிக்க கண்டத்தில் பரந்த உயரமான மலைகள் தோன்றியது.[13]

 
கொலராடோவிலுள்ள படிம்ப்பாறைகள்

மேற்கோள்கள் தொகு

  1. "Rocky Mountains". என்சைக்ளோபீடியா ஆப் பிரித்தானிக்கா. பார்க்கப்பட்ட நாள் மே 26, 2017.
  2. Akrigg, G. P. V.; Akrigg, Helen B. (1997). British Columbia Place Names (3rd ). Vancouver, BC: UBC Press. பக். 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0774806362. https://books.google.ca/books?id=AVQ5RZeAFCkC&pg=229. பார்த்த நாள்: 2 September 2015. 
  3. Mardon, Ernest G.; Mardon, Austin A. (2010). Community Place Names of Alberta (3rd ). Edmonton, AB: Golden Meteorite Press. பக். 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781897472170. https://books.google.ca/books?id=jbIYAwAAQBAJ&pg=283. பார்த்த நாள்: 2 September 2015. 
  4. Cannings, Richard (2007). The Rockies: A Natural History. Greystone/David Suzuki Foundation. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781553652854. https://books.google.com/?id=ig4OMokvt-0C&pg=PA5&dq=%22Rocky+Mountain+Trench%22+and+%22Columbia+Mountains%22#v=onepage&q=%22Rocky%20Mountain%20Trench%22%20and%20%22Columbia%20Mountains%22&f=false. 
  5. "Facts About the Rocky Mountain Range". USA Today. பார்க்கப்பட்ட நாள் சூன் 2, 2017.
  6. "Triple Divide Peak, Montana". TopoQuest (USGS Quad). Archived from the original (Map) on 2012-10-13. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
  7. John Wright (30 November 2001). The New York Times Almanac 2002. Psychology Press. பக். 459. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57958-348-4. https://books.google.com/books?id=G81HonU81pAC&pg=PA459. பார்த்த நாள்: 29 November 2010. 
  8.   This article incorporates public domain material from the United States Geological Survey document: T.J. Stohlgren. "Rocky Mountains".{{cite web}}: CS1 maint: postscript (link)
  9. 9.0 9.1 Gadd, Ben (2008). "Geology of the Rocky Mountains and Columbias" (PDF). Archived from the original (PDF) on 2012-04-20. பார்க்கப்பட்ட நாள் 2010-01-01.
  10. Chronic, Halka (1980). Roadside Geology of Colorado. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87842-105-X. 
  11. Blakely, Ron. "Geologic History of Western US". Archived from the original on 2010-06-22. பார்க்கப்பட்ட நாள் 2017-12-11.
  12. 12.0 12.1 English, Joseph M.; Johnston, Stephen T. (2004). "The Laramide Orogeny: What Were the Driving Forces?". International Geology Review 46 (9): 833 838. doi:10.2747/0020-6814.46.9.833. http://web.uvic.ca/~stj/Assets/PDFs/04%20JE%20&%20STJ%20IGR%20Laramide.pdf. பார்த்த நாள்: 2022-01-05. 
  13.   This article incorporates public domain material from the United States Geological Survey document: "Geologic Provinces of the United States: Rocky Mountains". பார்க்கப்பட்ட நாள் 2006-12-10.{{cite web}}: CS1 maint: postscript (link)

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கி_மலைத்தொடர்&oldid=3602561" இலிருந்து மீள்விக்கப்பட்டது