இராபர்ட் தெ நோபிலி

(றொபேட் டீ நொபிலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தத்துவ போதக சுவாமிகள் (1577 - 1656) என அழைக்கப்படும் இராபர்ட் தெ நோபிலி (Robert de Nobile S.J.) உரோமப் பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர். 26 வயதில் இயேசு சபையில் சேர்ந்து கத்தோலிக்கக் குருவாகி, தமிழ் நாட்டில் சமயப்பணியாற்ற விரும்பி, 1605 மே 20இல் கோவா வந்து சேர்ந்தார். 1606-ஆம் ஆண்டில் மதுரையை அடைந்து தமிழ்த்துறவி போல் வாழத்தொடங்கி கத்தோலிக்க மறைபணியாளராகப் பணி புரிந்தார். இறுதியில் மயிலையில் 1656-இல் இறைவன் திருவடி யடைந்தார். இவர் தமிழில் 40 உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இத்தகைய பங்களிப்பால் இவர் தமிழ் உரைநடையின் தந்தை என்று அறியப்படுகிறார்.

இராபர்ட் தெ நோபிலி
பிறப்புசெப்டெம்பர் 1577
Montepulciano
இறப்பு16 சனவரி 1656 (அகவை 78)
பணிமறைப்பணியாளர்

தமிழகத்தில் இவர் காலத்தில் உயர் இனத்தவராகக் கருதப்பட்டு வந்த பிராமணர்களைத் தம் சமயத்தில் ஈடுபடுமாறு செய்வதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டார். காவியுடையும் பூணூலும் அணிந்தார். புறத்தோற்றத்தில் தமிழ்த்துறவியாக மாற்றம் கொண்டாலும் அகவுணர்வில் சமயக்கோட்பாடுகளினின்று சிறிதும் வழுவவில்லை. தாம் அணிந்திருந்த ஐம்புரிகள் தமதிரித்துவத்தையும், இரண்டு வெள்ளிப் புரிகள் கிறிஸ்து பிரானின் உடலையும் உயிரையும் குறித்தனவாகக் கூறினார்.

இவரின் இத்கைய செயல்பாடுகள் பிற இயேசு சபையினருடைய எதிர்ப்பையும், அப்போது கோவாவின் ஆயராக இருந்த கிறிஸ்தவோவுடைய எதிர்ப்பையும் பெற்றது. இது திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியிடம் முறையிடப்பட்டது. அவர் 31 சனவரி 1623இல் வெளியிட்ட மடலில் (Apostalic Constitution-Romanæ Sedis Antistes) இவ்வழக்கங்கள் மூடத்தனமாக பிற மதங்களை பிரதிபலிக்காதவரை எத்தடையும் இல்லை என அறிவித்தார். மேலும் இம்மடலில் இந்திய குருமடத்தில் பயிற்சிபெறுபவர்களிடம் இருத்த சாதி வெறியையும் குறிப்பாக பறையர் இனமக்களிடம் இருந்த வெறுப்பையும் விட்டுவிட வற்புறுத்தியிருந்தார்.

வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றை ஆய்ந்தறிய வடமொழி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தமிழில் நாற்பது உரைநடை நூல்கள், மூன்று கவிதை நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றில் ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிர்ணயம், தத்துவக் கண்ணாடி, சேசுநாதர் சரித்திரம், ஞான தீபிகை, நீதிச்சொல், புனர்ஜென்ம ஆக்ஷேபம், தூஷண திக்காரம், நித்திய சீவன சல்லாபம், கடவுள் நிர்ணயம், அர்ச். தேவமாதா சரித்திரம், ஞானோபதேசக் குறிப்பிடம், ஞானோபதேசம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றைவிட சமஸ்கிருதத்தில் எட்டு நூல்கள், அதிலே ஒன்றுக்குப் பெயர் 'கிறிஸ்து கீதை', நான்கு தெலுங்கு நூல்கள் ஆகியவற்றையும் எழுதினார். இவா் ஒருமுறை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமியுடன் சமய வாதம் செய்தா்ா என்று கூறுவா்.

ஆதார நூல்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_தெ_நோபிலி&oldid=3234482" இலிருந்து மீள்விக்கப்பட்டது