வடக்கு போர்னியோ போர்

வடக்கு போர்னியோவில் நேச நாடுகளுக்கும் சப்பானியப் படைகளுக்கும் இடையே நடந்த போர்

வடக்கு போர்னியோ போர் (ஆங்கிலம்: Battle of North Borneo; மலாய்: Pertempuran di Borneo Utara) என்பது இரண்டாம் உலகப் போரின் போது வடக்கு போர்னியோவில் நேச நாடுகளுக்கும் (Allied Forces); சப்பானியப் படைகளுக்கும் (Japanese Forces) இடையே நடந்த போர் ஆகும்.

வடக்கு போர்னியோ போர்
Battle of North Borneo
இரண்டாம் உலகப் போர்
பசிபிக் போர்
பகுதி

ஆத்திரேலிய 2/43-ஆவது பட்டாளத்தின் 'ஏ' பிரிவின் ரோந்து படை வீரர்கள், சப்பானிய நடவடிக்கைகளை கண்டறிய காடுகள் வழியாகச் செல்லும் காட்சி.
நாள் 10 சூன் - 15 ஆகத்து 1945
இடம் வடக்கு போர்னியோ (இன்றைய சபா மற்றும் புரூணை)
நேச நாடுகள் வெற்றி
பிரிவினர்
 ஆத்திரேலியா
 ஐக்கிய அமெரிக்கா
 சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
ஆத்திரேலியா சார்சு ஊட்டன்
ஆத்திரேலியா செல்வின் போர்ட்டர்
ஆத்திரேலியா விக்டர் விண்டயர்
சப்பானியப் பேரரசு பாபா மாசாவோ
சப்பானியப் பேரரசு தாயிரோ அக்காசி
படைப் பிரிவுகள்
ஆத்திரேலியா 9-ஆவது டிவிசன்
  • 20--ஆவது பிரிகேட்
  • 24--ஆவது பிரிகேட்

ஐக்கிய அமெரிக்கா 727-ஆவது நிலநீர் பட்டாளம் ஐக்கிய அமெரிக்கா 593-ஆவது பட்டாளம்

சப்பானியப் பேரரசு 37-ஆவது சப்பானிய இராணுவப் பட்டாளம்
  • 56-ஆவது கலப்பு இராணுவம்
பலம்
≈29,000–30,000 வீரர்கள் ≈8,800 நேச நாடுகளின் வீரர்கள்
இழப்புகள்
114 இறப்புக்கள் அல்லது காயங்கள்
221 காயம் அடைந்தோர்
1,234 இறப்புக்கள்
130 பிடிபட்டனர்

இந்தப் போர் 1945 சூன் 10-ஆம் தேதி தொடங்கி 1945 ஆகத்து 15-ஆம் தேதி வரையில் நடந்தது. இந்தப் போரில் புரூணை விரிகுடாவை (Brunei Bay) சுற்றியுள்ள நிலப் பகுதிகளிலும்; விரிகுடாவைச் சுற்றியுள்ள தீவுகளிலும்; நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல நீர்நில உந்துகள் மூலமாக (Amphibious Landings) ஆத்திரேலியப் படைகள் தரையிறங்கின.

பொது

தொகு

ஆத்திரேலியப் படைகள் தரையிறங்கும் போது தொடக்கத்தில் சப்பானிய எதிர்ப்புகள் ஆங்காங்கே இருந்தன. இருப்பினும் போர் நடவடிக்கை தீவிரம் அடையும் போது இரு தரப்பினருக்கும் இடையே பல கணிசமான மோதல்கள் ஏற்பட்டன; மற்றும் இரு தரப்பினருக்கும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயிரிழப்புச் சேதங்களும் ஏற்பட்டன.

இருப்பினும் பெரிய அளவிலான போர் பெரும்பாலும் லபுவான் (லபுவான் போர்) (Battle of Labuan) தீவிலும்; பியூபோர்ட் மாவட்டத்திலும் (பியூபோர்ட் போர் 1945) (Battle of Beaufort 1945) நடைபெற்றன.

தயாக்கு மக்களை (Dayak People) குழுவினராகக் கொண்ட கெரில்லா படைகளும் (Guerrilla Forces), குறைந்த எண்ணிக்கையிலான நேச நாட்டுப் படைகளும் (Allied Forces) போர்னியோவின் உள் காட்டுப் பகுதிகளில் போரிட்டன. சில பிராந்தியங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் வெற்றியும் பெற்றன.

இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவை நெருங்கிய நிலையில், இந்தப் போர்னியோ போரும் 1945 ஆகத்து 15-ஆம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது.

பின்னணி

தொகு
 
காயம் அடைந்த பிரித்தானிய இந்தியா போர் வீரர்கள்; சிங்கப்பூரில் இருந்து போர்க் கைதிகளாகப் போர்னியோவிற்கு கொண்டு வரப்பட்ட இவர்கள், சப்பானியர்களின் துப்பாக்கி முனை கத்திக் குத்துக்களுக்கு இலக்கானவர்கள். (28.06.1945)
 
புரூணை விரிகுடா தீவில் ஆத்திரேலிய மாடில்டா தகரி ஊர்தி.

சப்பானிய இராணுவத்தின் துருப்புகள்

தொகு

இந்தப் போருக்கு ’ஓபோ சிக்சு நடவடிக்கை’ (Operation Oboe Six) எனும் குறியீட்டுப் பெயரும் உள்ளது. இந்தப் போர், போர்னியோ தீவைக் கைப்பற்றுவதற்கான நேச நாடுகளின் இரண்டாம் கட்டப் போர் என்றும் அறியப்படுகிறது.[1]

போர்னியோவில் சப்பானிய படையெடுப்பைத் தொடர்ந்து 1942-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடக்கு போர்னியோ சப்பானிய இராணுவப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்தது. இதற்கு முன், இந்தப் பகுதி பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.[2][3]

ஆக்கிரமிப்புக் கொள்கைகள்

தொகு

சப்பானிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, வடக்கு போர்னியோவின் எண்ணெய் வளங்கள், ஒட்டு மொத்தமாகச் சப்பானிய போர் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. போர்னியோ தீவின் மக்களும் கடுமையான ஆக்கிரமிப்புக் கொள்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாயினர்.[4][5]

இவ்வாறான ஆக்கிரமிப்பு கெடுபிடிகள், 1943-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செசல்டன் கிளர்ச்சி (Jesselton Revolt) எனும் ஒரு கிளர்ச்சிக்கும் வழிவகுத்தது. அந்தக் கிளர்ச்சியினால் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டன; பொதுமக்களின் உரிமைகளும் ஒடுக்கப்பட்டன.[6]

1945 மே மாதம், போர்னியோவில் நேச நாடுகளின் முதல் கட்ட போர் நடவடிக்கை போர்னியோவின் வட கிழக்குப் பகுதியில் தொடங்கியது. வடக்கு கலிமந்தான் மாநிலத்தில் உள்ள தாராக்கான் (Tarakan) நகர்ப் பகுதியில் ஒரு படைப்பிரிவு சுலாவெசி கடல் கரையில் நிறுத்தப்பட்ட நிலையில் போர் நடவடிக்கைகள் தொடங்கப் பட்டன. அதற்கு தாராக்கான் போர் (Battle of Tarakan) என்று பெயர்.[7]

அமெரிக்க தளபதி டக்ளசு மக்கார்த்தர்

தொகு
 
1945 சூன் 17-ஆம் தேதி வடக்கு போர்னியோவில் செசல்டன் நகர்ப் பகுதியில் தரையிறங்கிய ஆத்திரேலியா படைகள்

தென்மேற்கு பசிபிக் பகுதிக்கு (South West Pacific Area Command) அமெரிக்க இராணுவத் தலைவராக இருந்த அமெரிக்க இராணுவத் தளபதி டக்ளசு மக்கார்த்தர் (General Douglas MacArthur) கண்காணிப்பில் வடக்கு போர்னியோவில் சப்பானியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கின. அந்த நடவடிக்கைகள் மூன்று கட்டங்களில் வடிவமைக்கப்பட்டன. அவை:[8]

  • முன்னேற்பாடான குண்டுவீச்சு (Preparatory Bombardment)
  • கட்டாயத் தரையிறக்கம் (Forced Landings)
  • கடல்படை நடவடிக்கைகள் (Naval Operations)

புரூணை விரிகுடாவில் பிரித்தானிய பசிபிக் கடற்படைக்கு (British Pacific Fleet) "ஒரு மேம்பட்ட கடற்படை தளத்தை" நிறுவுவதே முதன்மை நோக்கமாகும்.[8] அதைத் தவிர அப்பகுதியில் கிடைக்கும் எண்ணெய் மற்றும் ரப்பர் பொருட்களைக் கைப்பற்றுவது மற்றும் பிரித்தானியப் நிர்வாகத்தை மீண்டும் நிலைநிறுத்துவது; புரூணை விரிகுடாவின் நுழைவாயிலைக் கட்டுப்படுத்துவது; லபுவான் பாதுகாப்பது; அங்கு ஒரு விமானத் தளத்தை உருவாக்குவது; ஆகிய நோக்கங்களும் அடங்கும்.[9]

வான்வழி குண்டுவீச்சுகள்

தொகு
 
ஆத்திரேலிய வான்வழி குண்டுவீச்சுகளில் சேதம் அடைந்த தென்னை மரங்கள்

ஆத்திரேலியா மற்றும் அமெரிக்க வானூர்திகளால் வடக்கு போர்னியோ மீது வான்வழி குண்டுவீச்சுகள் 1945 மே 3-ஆம் தேதி தொடங்கின. வடக்கு போர்னியோவை மீட்டெடுக்க மொத்தம் 29,361 போர் வீரர்கள் நேச நாடுகளினால் களம் இறக்கப் பட்டனர்.

  • 9-ஆவது பிரிவில் இருந்து 14,079 போர் வீரர்கள் (ஆத்திரேலியா)
  • 3,726 உதவித் துருப்புக்கள்
  • 4,730 அடிப்படை துணைத் துருப்புக்கள்
  • 5,729 அரச ஆத்திரேலிய விமானப்படை வீரர்கள்
  • 1,097 அமெரிக்க பிரித்தானிய பணியாளர்கள்

ஆத்திரேலிய இராணுவத் தளபதி சார்சு ஊட்டன் (Major General George Wootten) தலைமையிலான ஆத்திரேலிய இராணுவத்தின் 9-ஆவது தரைப்படை பிரிவுதான் (Australian 9th Division) பெரும்பகுதியான போர்வீரர்களைக் களம் இறக்கியது.[7]

அமெரிக்க இராணுவ விமானப்படை

தொகு

ஆத்திரேலிய தரைப் படைகளுக்கு கூடுதலான கடற்படை ஆதரவை அமெரிக்க கடற்படை (United States Navy) மற்றும் அரச ஆத்திரேலிய கடற்படை (Royal Australian Navy) வழங்கின. அத்துடன் அமெரிக்க இராணுவ விமானப்படையின் (United States Army Air Force) வான்வழி ஆதரவு; மற்றும் அரச ஆத்திரேலிய விமானப்படையின் (Royal Australian Air Force) வான்வழி ஆதரவும்; இந்தப் போரில் ஒருங்கிணைக்கப்பட்டன.[10][11]

சப்பானின் 37-ஆவது இராணுவப் பட்டாளம்

தொகு
 
சப்பானியர்கள் பின்வாங்குவதற்கு முன்னர்; அவர்களின் துப்பாக்கி முனை கூர்க்கத்திகளுக்கு இலக்கான பிரித்தானிய இந்தியா போர் வீரர்; அவருக்கு உதவும் ஆத்திரேலியப் படையினர் (28.06.1945)

இதற்கிடையில், போர்னியோவில் சுமார் 31,000 சப்பானிய துருப்புக்கள் இருப்பதாகவும்; வடக்கு போர்னியோவில் சுமார் 8,800 பேர் இருப்பதாகவும்; நேச நாட்டு உளவுத்துறை (Allied Intelligence) கண்டறிந்தது. அந்தக் கட்டத்தில் சப்பானிய தளபதி மசாவோ பாபா (Lieutenant-General Masao Baba) தலைமையில் சப்பானின் 37-ஆவது இராணுவப் பட்டாளம் (Japanese Thirty-Seventh Army), அதன் தலைமையகத்தை செசல்டன் நகரில் கொண்டு இருந்தது.[12][13][14][15]

சப்பானியப் பிரிவுகளில் ஆறு பட்டாளங்கள் (366 - 371), இராணுவத் தளபதி தைசிரோ அகாசி (Major General Taijiro Akashi) தலைமையில் இருந்தன. உதவிக்கு மற்றோர் ஆதரவுப் பட்டாளமும் இருந்தது.[12]

சப்பானிய படைகளின் பலகீனங்கள்

தொகு

1945 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், போர்னியோவின் வட-கிழக்கு பகுதியில் இருந்து கலிமந்தான் பகுதிக்குள் சப்பானியப் படைகள் முன்னோக்கிச் சென்றதால், அவற்றின் பலம் பெரிதும் குறைந்து போனது. அப்போது சப்பானியப் படைகள் பாதி வலிமையில் இருந்தன. மேலும் சப்பானியப் போர் வீரர்களில் பெரும்பாலோர் வெப்ப மண்டலக் காடுகளில் அனுபவம் இல்லாதவர்களாகவும், இலகுவான ஆயுதங்களைக் கொண்டவர்களாகவும், மோசமான மன உறுதியால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.[16]

ஜாவா மற்றும் சுமத்ராவைத் தவிர, மற்ற பிராந்தியங்களில் சப்பானிய விமானப் படையின் ஆற்றல் பெருமளவில் குறைந்து இருந்தது. சப்பானிய விமான ஆற்றல் பயனற்ற நிலையில் இருந்தது. போர்னியோவில் கெனிங்காவ் மற்றும் கூச்சிங் ஆகிய இடங்களில் மட்டுமே சிறிய எண்ணிக்கையிலான விமானங்கள் இருந்தன.[15] [17]

முடிவு

தொகு
 
செரியா புறநகர்ப் பகுதியில் எரியும் எண்ணெய்க் கிணறுகள்
 
தயாக்கு கெரில்லா படையினர்

புரூணையில் இருக்கும் செரியா (Seria) புறநகர்ப் பகுதியில் 37 எண்ணெய்க் கிணறுகள் கொளுத்தப்பட்டன. சப்பானியர்கள் வெளியேறிய போது, வேண்டும் என்றே அந்த எண்ணெய்க் கிணறுகளைக் கொளுத்தி விட்டுச் சென்றனர். தீயை அணைக்க மூன்று மாதங்களுக்கு மேல் ஆனது.[18]

வடக்கு போர்னியோவில் நடந்த போர்னியோ போரின் போது, ஆத்திரேலியர்கள் 114 பேர் உயிர் இழந்தனர்; அல்லது காயங்களால் இறந்தனர், மேலும் 221 பேர் காயம் அடைந்தனர். இதற்கு முற்றிலும் நேர் மாறாக, சப்பானியர்கள் 1,234 பேர் உயிர் இழந்தனர்; அதே நேரத்தில் 130 பேர் பிடிபட்டனர்.[19]

தயாக்கு கெரில்லா படைகள்

தொகு

மேலும் 1,800 சப்பானியர்கள் உள்நாட்டில் செயல்பட்ட கெரில்லா படைகளால் (Dayak Guerrillas) கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கணிக்கப் படுகிறது; சப்பானிய வீரர்கள் பலர் காட்டில் இருந்து வெளியேறும் போது தயாக்கு கெரில்லா படைகளால் கொல்லப் பட்டனர்.[20][21]

போருக்குப் பிறகு, ஆத்திரேலியர்கள் பிரித்தானிய பொது நிர்வாகத்தை நிறுவுவதற்கான பணிகளைத் தொடங்கினர்; சேதம் அடைந்த உள்கட்டமைப்பை மீண்டும் புனர்ப்பித்தனர்; மற்றும் போரில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர். மருத்துவமனைகளைச் செப்பனிட்டுக் கொடுத்தனர்.[22][23]

மீண்டும் பொது நிர்வாகம்

தொகு

போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, வடக்கு போர்னியோ காடுகளில் அதிக எண்ணிக்கையிலான சப்பானிய வீரர்கள் இருந்தனர். அக்டோபர் 1945-இல் வடக்கு போர்னியோவில் இன்னும் 21,000 ஜப்பானிய வீரர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது. அவர்கள் படிப்படியாக சரண் அடைந்தனர்.[24]

கூச்சிங் பத்து லிந்தாங் முகாமில் (Batu Lintang Camp) தடுத்து வைக்கப்பட்டு இருந்த நேச நாட்டு குடிமக்கள் மற்றும் போர்க் கைதிகள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர்.[25] 1945 அக்டோபர் மாதம் பிரித்தானிய போர்னியோவில் பொது நிர்வாகம் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டது.[26]

மேற்கோள்கள்

தொகு
  1. "British North Borneo was the site of the last operation conducted by the 9th Australian Division during the Second World War. The ultimate objective of the operation, codenamed OBOE 6, was the liberation of British North Borneo, which had been occupied by the Japanese since 1942". Archived from the original on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. Shindo 2016, ப. 67
  3. Pratten 2016, ப. 298–299
  4. Long 1963, ப. 453.
  5. Rottman 2002, ப. 258.
  6. Gin 1999, ப. 56.
  7. 7.0 7.1 Coulthard-Clark 1998, ப. 252
  8. 8.0 8.1 Odgers 1968, ப. 466.
  9. Johnston 2002, ப. 186.
  10. Odgers 1988, ப. 183
  11. Long 1963, ப. 458
  12. 12.0 12.1 Long 1963, ப. 456
  13. Keogh 1965, ப. 447
  14. Bullard 2016, ப. 43.
  15. 15.0 15.1 Keogh 1965, ப. 434.
  16. Pratten 2016, ப. 303–304
  17. Odgers 1968, ப. 473 & 475.
  18. Long 1963, ப. 485
  19. Johnston 2002, ப. 238
  20. Long 1963, ப. 501
  21. Pratten 2016, ப. 309–310
  22. "Battle of North Borneo". Australian War Memorial. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 4 September 2010.
  23. Long 1963, ப. 496
  24. Long 1963, ப. 561
  25. Long 1963, ப. 563
  26. Long 1963, ப. 581

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Battle of North Borneo
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_போர்னியோ_போர்&oldid=4059012" இலிருந்து மீள்விக்கப்பட்டது