வடிநில நீர் வழிமாற்றம்
வடிநில நீர் வழிமாற்றம் (ஆங்கில மொழி: Interbasin transfer) என்பது செயற்கையாக வடிநில நீரை வழிமாற்றும் திட்டமாகும். இதனை நதிநீர் இணைப்பு என்றும் வழங்கப்படுகிறது. இந்த நீரியல் திட்டத்தால் உபரி நீர் கொண்ட நதியிலிருந்து நீர்ப் பற்றாக்குறை உள்ள வடிநிலங்களில் நீரை வழிமாற்றி, வேளாண்மை, குடிநீர், மின்சாரத் தயாரிப்பு போன்ற மானுடத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு அல்லது மேற்பட்ட நீர்நிலைகளைப் புதிய செயற்கையான கால்வாய்கள் மூலம் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது.[1] ஆதிகாலம் தொட்டே இத்தகைய நீர் வழிமாற்றல்கள் இருந்தாலும், ஆத்திரேலியா, இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் சீனம் போன்ற நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வடிநில நீர் வழிமாற்றம் நவீன வளர்ச்சியடைந்தது.[2] பெருநகரங்களான டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் நீர் வழிமாற்றத்தாலேயே இயங்குகின்றன. மேலும் இந்தியாவின் பசுமைப் புரட்சி, கனடாவின் நீர் ஆற்றல் உற்பத்தியெல்லாம் நீர் வழிமாற்றத்தால் சாத்தியமானது.
இந்தியாவில்
தொகு- கேரளாவின் முல்லைப் பெரியாறு நதியிலிருந்து தமிழ்நாடு வைகைக்குக் குழாய்கள் மூலம் சுமார் 40.75 நொடிக்கு கனமீட்டர் அளவு வழிமாற்றப்படுகிறது. 1895 இல் போடப்பட்ட திட்டத்தால் சுமார் 81,000 எக்டர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.[1] காமராஜர் ஆட்சி காலத்தில் முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் திட்டமும் நிறைவேற்றப்பட்டது.
- ஆந்திராவின் கர்னூல் கடப்பா கால்வாய் மூலம் கிருஷ்ணா ஆற்றிலிருந்து பெண்ணாற்றிற்கு 84.9 நொடிக்கு கனமீட்டர் நீர் பாசனத்திற்கு மற்றப்படுகிறது.
- தெலுங்கு கங்கைத் திட்டம் மூலம் கிருஷ்ணா ஆற்றிலிருந்து வரும் நீர் தமிழகத்தின் சென்னைப் பெருநகரின் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
- ராவி ஆறு, பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறு முதலியவற்றை இணைத்து இந்திரா காந்தி கால்வாய் 1960களில் கட்டப்பட்டது. இதன்மூலம் மின்சாரம், பாசனம் போன்றவற்றிற்கு நீர் பயன்படுகிறது.
- தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் மற்றும் தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.
நன்மைகள்
தொகு- நதிகளை இணைப்பதன் மூலம் உபரியான நீரை பாசனத்திற்குப் பயன்படுத்தி வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்யமுடியும்.[3][4] குடிநீர் தேவைகளையும் செய்து கொள்ளமுடியும்.
- கனமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி வறட்சியில் உள்ள பகுதிகளுக்குத் திருப்பி பேரிழப்பைக் குறைக்கமுடியும்.
- புதிய கால்வாய்கள் மூலம் வாய்ப்புள்ள இடங்களில் நீர் மின் ஆற்றல் உற்பத்தி செய்து கொள்ள முடியும்
- சாலைப் போக்குவரத்தைவிட செலவு குறைவான, அதிக பயனுள்ள நீர்வழிச் சாலைகளாகப் பயன்படும்.
இடர்கள்
தொகு- காலங்காலமாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றுநீரின் ஒருபகுதியை வழிமாற்றுவதால் சுற்றுச்சூழல்சார்ந்த பிரச்சினைகள் உருவாகலாம்.[4]
- கடலில் கலக்கும் நன்னீர் குறைவதால் நீர்சார் சூழல் மண்டலம் சீர்கெட்டு, கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்.[4]
- புதிய கால்வாய்கள் அமைக்க வனப்பகுதிகளில் அதிக அளவில் நிலங்களைப் பயன்படுத்துவதால் காடழிப்பு ஏற்படலாம்.[4]
- புதிய அணைகள் அல்லது தடுப்பணைகள் உருவாகும் போது மக்களின் வாழிடங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படலாம் மற்றும் அவர்களின் மறுகுடி பெயர்வும் இடர்களாக அமையலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 National Water Development Agency of India:Existing Experience with Interbasin Transfers
- ↑ "A case for inter-basin transfer of water". தி இந்து. https://www.thehindu.com/thehindu/op/2002/11/19/stories/2002111900130200.htm. பார்த்த நாள்: 4 June 2019.
- ↑ "National River Linking Project: Dream or disaster?". indiawaterportal.org. பார்க்கப்பட்ட நாள் 4 June 2019.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Article at the-south-asian, additional text.